ஆடைக் கட்டுப்பாட்டால் அவதியுறும் ஆசிரியைகள்

ஆடைக் கட்டுப்பாட்டால் அவதியுறும் ஆசிரியைகள்

கட்டுரையாளர்: உமா மகேஸ்வரி   ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை ஆடையை வைத்தும் ஒடுக்கப்படும் நிலைக்கு ஆளாகும் நிலையில்தான் இந்த 2023இலும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வந்த செய்தியொன்று பல தளங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமான செய்தி. ஆம், கோவை மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், புடவைக்குப் பதிலாக சுடிதாரில் பள்ளிக்குச் சென்றிருக்கிறார்.  தலைமையாசிரியரும் கல்வி அலுவலரும் அதற்கு அனுமதி மறுத்திருக்கின்றனர். இவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல ஆசிரியைகள் இந்த உடைப் பிரச்சனையால் அவதியுற்று வரும் நிலையை ஆங்காங்கே காண முடிகிறது.  வளர்ந்த மாணவர்கள் மத்தியில் சங்கடமாக உணரும் பெண் ஆசிரியர்கள் கோவையில் சுடிதார் அணிந்து வந்த அந்த ஆசிரியர் அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். புடவை அணிந்துகொண்டு வந்து வகுப்பில் பாடம் நடத்தும்போது  கிண்டல் கேலிப் பேச்சுகளை அவரது உடையை வைத்து மாணவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.  அவர் தனது சேலையைச் சரிப்படுத்திய பிறகே மீண்டும் கற்பித்தலைத் தொடர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும்  இது தொடர, வசதியான உடையாகக் கருதி, பள்ளிக்கு சுடிதாரில் வந்திருக்கிறார். ஆனால் பள்ளித் தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் அது குறித்து சர்ச்சையைக் கிளப்பியதால் தொடர்ந்து சுடிதாரில் செல்ல முடியவில்லை. மீண்டும் புடவையை அணிந்து வந்த ஆசிரியர் மாணவர் தரும் சங்கடங்களைச் சந்திக்க நேரிட, அது அவருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. சமீப காலங்களில்  பள்ளி மாணவர்களிடையே பல விரும்பத்தகாத நடத்தைகள் வெளிப்படுவதை அவ்வப்போது செய்திகளில் பார்க்கலாம். அவரவர் வீடுகளில், வசிப்பிடங்களில், சமூகத்தில் சற்று உற்று நோக்கினாலே குழந்தைகளிடம் உருவாகியுள்ள நடத்தை மாற்றத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். மேல்நிலை வகுப்புகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களது பணி, கூடுதல் சவால் நிறைந்ததாக இருக்கிறது. அதிலும் ஆசிரியைகள் பல இடங்களில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. ஏனெனில் இந்தச் சமூகத்தில் தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை,  வயதுக்கு ஏற்புடையதாக இல்லாத பலவற்றை உற்றுநோக்கும் குழந்தைகள், தங்கள் வாழ்க்கையில் அவற்றைச் செயல்படுத்த முனைகின்றனர். குறிப்பாக, பள்ளிகள் – வகுப்பறைகள்தான் அதற்கான தளங்களாக அவர்களுக்குத் தோன்றுகிறது. அவர்களது வீடுகளில் சரியான வழிகாட்டுதல் இல்லை; பள்ளிகளிலும் உரையாடல் என்பதே இல்லை. திரைப்படங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால், தங்களை ஹீரோக்களாகவும் ஆன்ட்டி ஹீரோக்களாகவும் எண்ணிக்கொள்ளும் மனோநிலை மாணவர்களிடம் தோன்றுகிறது. அதன் ஒருபகுதியாகவே பள்ளிகளில்  பெண் ஆசிரியர்களது உடலை வைத்துக் கேலி செய்யும் சூழல் உருவாகிறது. அதேபோல் வீடுகளில் பெண்கள் நடத்தப்படும் விதம், மரியாதையற்ற தன்மை இதையெல்லாம்  மாணவர்கள் பார்த்து வளர்கின்றனர். இவற்றின் வெளிப்பாடே பள்ளிகளில் நடக்கும் இப்படியான சில விரும்பத்தகாத விளைவுகள். வீடும் பள்ளியும் மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்தத் தவறியதன் விளைவுதான் இது. ஆகவே வளர்ந்த மாணவர்கள் மத்தியில் உடை விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பதாலேயே பல ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வர விரும்புகின்றனர். அரசாணை 67 கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வெளியிட்ட அரசாணை (GO No.67) அரசு ஊழியர்கள் அணியக்கூடிய உடை குறித்து மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்குத்  தனித்தனியாக  என்ன மாதிரியான உடைகளை அணியவேண்டும் என்று அந்த அரசாணை தெளிவுபடுத்தியுள்ளது.‌ அனைத்துத் தரப்பினரும் கண்ணியமான உடையையே அணிந்து வரவேண்டும் என்று அந்த அரசாணை கூறுகிறது. பெண்களுக்கான உடைகளாக, சல்வார் கமீஸ், சுடிதார், புடவை என அனைத்தும் அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இந்த அரசாணையில் அரசு ஊழியர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளவை ஆசிரியர்களுக்கும் பொருந்துகிறது. ஏனெனில் அவர்களும் அரசு ஊழியர்களே. பள்ளிக்கல்வி இயக்குனர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. பள்ளியில் பெண் ஆசிரியர்களின் நிலை உடல்நிலையில் பிரச்சனைகள் வந்து புடவை அணிய முடியாமல் இன்னலுறும் ஆசிரியர்களும் கல்வித்துறையில்  சுடிதார் அணிய அனுமதி  கேட்டுள்ளனர். ஆனால் துறையில் அனுமதி கிடைக்காததால் வேதனையுடன் புடவையையும் சுமக்கின்றனர். அந்தவகையில்   நம்முடன் பேசிய கூகல் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஜான் பௌலா, “எனக்கு வலது கையில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் ஜாக்கெட் அணிய முடியாது. புடவை அணிவதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. கடந்த கல்வி ஆண்டில் பள்ளியில் தலைமையாசிரியரிடம் அனுமதி  கேட்டால், சுடிதார் அணிந்து வரக்கூடாது என்கிறார். துறையில் வட்டாரக் கல்வி அலுவலருக்கு, மாவட்டக் கல்வி அலுவலருக்கு என, அனைவரிடமும் எனது மருத்துவச் சான்று மற்றும் பரிசோதனைச் சான்றுகளை இணைத்து விண்ணப்பித்து அனுமதிக்காகக் காத்திருந்து மிகுந்த போராட்டத்திற்கிடையே அனுமதி பெற்றேன். ‌மீண்டும் இந்தக் கல்வி ஆண்டில் இதே அனுமதிப் பிரச்சனை. இதற்கெல்லாம் முடிவே கிடையாதா என்று நினைத்து வருந்தினேன். இந்த அரசாணையைப்பற்றி அறிந்துகொண்ட பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார். “மார்பில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேரும் காலம் வந்தபின்னும் இறுக்கமான உள்ளாடை  மற்றும் ஜாக்கெட் அணிய முடியாத காரணத்தால், முழுமையாகக் குணமாகும்வரை சுடிதார் அணிந்து செல்ல மருத்துவர் பரிந்துரைத்தார். ஆனால் பள்ளிக்குச் சென்றபோது உடன் பணிபுரியும் ஆசிரியைகளால் பட்ட இன்னல்களைச் சொல்லி மாளாது. உடன் பணிபுரியும் ஆண் ஆசிரியர், அலுவலகம் சென்று உயரதிகாரியிடம் பேசி அனுமதி வாங்கினார். ஏறத்தாழ ஒரு மாதம் சுரிதாரில் சென்றேன். இன்று இந்த G.O. பார்த்த பிறகு அனைத்தும் ஞாபகம் வருகிறது. இப்படி ஒரு ஆணை இருக்கிறது என்பதையே இன்றுதான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி” என்கிறார் விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் தேன்மொழி. கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் சசிகலா, இந்தக் கல்வி ஆண்டில் முதலில் இருந்தே பள்ளிக்கு சல்வார் கமீஸ் உடை அணிந்து சென்றுகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் தலைமையாசிரியர் கேள்விக்கு உட்படுத்தினாலும் இந்த அரசாணையைக் கூறி ஆசிரியர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசாணைப்படி தாங்கள் விரும்பிய உடையை அணிந்து வரலாம் என்று மாவட்டக் கல்வி அலுவலர் அனுமதித்துள்ளார் என்கிறார். இப்படி, தற்போது இந்த அரசாணையைப் பார்த்தபிறகு பலரும் தாங்கள் சந்தித்த இந்தச் சுடிதார் பிரச்சனைகள் குறித்து மனம் திறக்கின்றனர். அரசாணைக்குப் பிறகும் தடைகள் ஆசிரியைகள் புடவை, சல்வார் கமீஸ் அல்லது சுடிதார்  துப்பட்டாவுடன் அணிந்து வரலாம் என்று அரசாணை கூறிய பிறகு, தமிழ்நாட்டில் ஆங்காங்கே சிலர் அணிந்து செல்லத் தொடங்கினர். ஆனால் சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் சேலையைத் தவிர வேறு உடை அணியக்கூடாது எனச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதும் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வெலக்கல்நத்தம் என்ற பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் இந்த அரசாணைக்குப் பிறகு சுடிதார் அணிந்து பள்ளி சென்றிருக்கிறார். ஆனால்  அப்பள்ளியின் தலைமையாசிரியர் அங்குள்ள மூத்த பெண் ஆசிரியரின் வழியாக இவரிடம் இந்த உடையை அணியக் கூடாது என வற்புறுத்தக் கூறியுள்ள்ர். ஆனால் அதன் பிறகும் இவர் தொடர்ந்து சுடிதார் உடையையே அணிந்து செல்வதால், ‘வழக்குத் தொடர்ந்த ஆசிரியருக்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு பொருந்தும், மற்ற ஆசிரியர்களுக்குப் பொருந்தாது. எனவே உயர் அலுவலர் வழிகாட்டல்படி (Dress Code) உடை அணிந்து வரவேண்டும்’ என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சுற்றுகிறது. அதன்பிறகும் ‘முதன்மைக் கல்வி அலுவலருக்குக் கடிதம் கொடுத்து அனுமதி வாங்குங்கள். பிறகு உங்கள் விருப்பப்படி உடை அணியலாம்’ என்று தொடர்ந்து பள்ளியில் அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம். பெண் ஆசிரியர்களே இந்த மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் பல இடங்களில் நடக்கிறது.  சமூகத்தின் பார்வை – உடை என்பது கலாச்சாரம்  காலம்காலமாக நமது தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் உடையை அவர்கள் தீர்மானிப்பதில்லை. அவர்கள் வாழும் வீடும் குடும்பத்தாரும்  சமூகமும்தான் முடிவு செய்கின்றன. ஒருகாலத்தில்  பெண்கள் பருவம் அடைந்த உடனேயே பாவாடை தாவணி  அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. பதிமூன்று, பதினான்கு வயதுள்ள பெண் குழந்தைகள் பூப்படைந்த பிறகு, தாங்கள் விரும்பவில்லை என்றாலும்  தாவணியைத் தவிர வேறு உடை அணிய வீட்டில் அனுமதி கிடையாது. வீட்டிலேயே இல்லாதபோது, ஒரு பெண் பள்ளிக்கோ அல்லது வெளியிடங்களுக்கோ தான் விரும்பும் உடையை அணிவது சாத்தியமற்ற செயல். ஆனால் சமீபகாலமாக இதில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சேலை அணிந்தவர்கள் சுடிதார், சல்வார் கமீஸ், பேண்ட் சட்டை  மற்றும் பல  நவீன ஆடைகளை அணிய ஆரம்பித்துள்ளனர். பெண் குழந்தைகள் மட்டுமல்ல , வளர்ந்த பெண்களும்கூட எல்லாவிதமான உடைகளையும் அணிய ஆரம்பித்துள்ளனர்.  இன்று பெண்கள் பணிபுரியாத துறைகளே இல்லை எனலாம். அந்தவகையில் பணிக்குச் செல்லும் பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான உடையை அணிய ஆரம்பித்துள்ளனர். பல துறைகளிலும் உடை அணிவது என்பது ஒரு பிரச்சினையாக இல்லை.‌  மத்திய மாநில அரசு அலுவலகளில் பணிபுரியும் பெண்கள், கீழ்நிலையில் இருந்து உயர்பதவிகள்  வரை இந்த அரசு ஆணை 67 வருவதற்கு முன்பிருந்தே புடவை, சுடிதார், சல்வார் என அணிந்து செல்வதைப் பார்க்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியில் இருக்கும் பெண்களும் சல்வார் கமீஸ், சுடிதார் ஆகியவற்றை அணிகின்றனர். பள்ளிக்கல்வித் துறையிலேயேகூட, பல மட்டங்களில் பணிபுரியும் பெண்களும் சுடிதார் அணிந்து பணிக்குச் செல்கின்றனர். இவை மட்டுமல்லாது, கல்வித்துறை அலுவலகங்களில் மாற்றுப் பணியில் ஈடுபட்டு வரும் பெண் ஆசிரியர்களும் தாங்கள் விரும்பும் உடையை அணிந்து செல்கின்றனர். ஆனால் அதே ஆசிரியர்கள், பள்ளிக்குள் பாடம் கற்பிக்கக் கூடியவர்களாக இருந்தால் சேலை மட்டுமே அணியக் கட்டாயப்படுத்துவதன் நோக்கம் என்னவென்று நாம் யோசிக்க வேண்டும். பாரம்பரியம் என்றும் பண்பாடு என்றும் ஆசிரியர்கள் எல்லாரும் கலாச்சாரக் காவலர்களாகவே இருக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கும் சமூகத்தின் போக்கு கவலைப்பட வைக்கிறது. பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் சிந்தனையில், சிறுவயது முதலே ஆசிரியை என்றால் சேலைதான் அணிய வேண்டும் பதிய வைக்கக்கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆண் ஆசிரியர்கள் நமது கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறார்களா? பாரம்பரிய உடையைத்தான் பள்ளிக்கு அணிந்து வருகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். பள்ளி மாணவிகள் உடை மாற்றம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, தாவணி உடையை மாற்றி சுடிதார் உடையைப் பரிந்துரை செய்து 2011ஆம் ஆண்டு சட்டமன்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து

ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு

ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் காந்தி பிறந்ததினத்தை நேற்று நாடே பெருமையுடன் நினைவு கூர்ந்தது. அவரின் அறவழிப் போராட்டங்கள் குறித்து சிலாகித்துப் பேசப்பட்டது. தமிழ்நாட்டில், காந்தி காட்டிய அறவழியில் ஆசிரியர்கள் போராட்டக் களம் கண்டு வருகின்றனர். காந்தி நடத்திய அறப்போராட்டம் ஆங்கிலேயரின் மனத்தையே மாற்றி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டது. ஆனால் ஆசிரியர்களது அறப் போராட்டம் நமது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழர்களின் நெஞ்சையே தொட மறுக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக நடக்கும் பல நிகழ்வுகளைப் பட்டியலிட்டால், அவற்றுள் முதன்மையாக இருப்பது ஆசிரியர்களது போராட்டம். கல்வி கொடுக்கும் பள்ளிகளில் மிக முக்கியமானவர்கள் ஆசிரியர்கள். பிறகுதான் கட்டமைப்பு, வகுப்பறைகள், இன்ன பிற வசதிகள் யாவும். அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஏராளமான சிக்கல்களை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். ஆசிரியர்கள் நியமனமே இல்லாமல் இருக்கும் பள்ளிகளும் இருக்கின்றன. பெயரளவுக்கு நியமனம் செய்து, அவர்களைப் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற பெயரில் வாரத்தில் மூன்று அரை நாட்கள் – அதாவது மொத்தமாக ஒன்றரை நாட்கள் மட்டுமே வரவழைப்பது; ஒரு மாதத்திற்கு 12 நாட்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிப்பது என்று, சுமார் 16000 ஆசிரியர்களது வாழ்க்கையைப் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்தது அரசு. மத்திய அரசின் வழிகாட்டுதல்தான் இந்தப் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்  என்றாலும், நம் குழந்தைகள் கல்வி பெற வேண்டுமெனில் முழு நேரமும் ஆசிரியர்களது தேவை பள்ளிகளுக்கு இருக்கிறது என்று மாநில அரசுக்குத் தெரியாதா? அதைக் குறித்து அப்போது முதல் இப்போது வரை எவருக்கும் அக்கறை இல்லை. இருந்திருந்தால் இத்தனை வருடங்களாகத் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிக் குழந்தைகள் இந்த அவலத்திற்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். ஆம்; ஒரு பள்ளியின் ஒழுங்கைக் கட்டுப்படுத்துவதில் முதன்மையாளர் உடற்கல்வி ஆசிரியர்தான். வகுப்பறை ஒழுங்கை வகுப்பாசிரியர் பார்த்துக்கொள்வார் என்றாலும் பள்ளியின் மொத்த ஒழுங்கை, அனைத்து ஆசிரியர்களது உதவியுடன் உடற்கல்வி ஆசிரியர்கள்தான் கவனிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. அவர்களது பணியும் அதுதான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  மூன்று அரை நாட்கள் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தால், மற்ற மூன்றரை நாட்கள் பள்ளிகளில் ஒழுங்கை யார் கவனிப்பது? அந்த மீதி மூன்றரை நாட்களில் உடற்கல்வி வகுப்புகளுக்கு வரும் குழந்தைகளை விளையாட வைப்பது யார்? விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயார் செய்வது எப்படி? இதையே மற்ற துறை பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம் எனில், நம் குழந்தைகளுக்கு எத்தனை தூரம் கல்வி மறுக்கப்படுகிறது, அவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் என்று நாம் உணர முற்படுதல் அவசியம். படைப்பாற்றல் திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் களம் கலை ஆசிரியர்களது கையில்தான் இருக்கிறது. மற்றபடி அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று நாம் பேசலாம். ஆனால் பாட ஆசிரியர்களுக்குத் தேர்வு மதிப்பெண் என்ற வட்டத்துக்குள் நின்று வாளைச் சுழற்றும் அளவிலான இடமே உள்ளது. ‘வானமே எல்லை; நீ உன் திறமையைக் காட்டு’ என்று மாணவர்கள் பார்வையை விசாலமாக்கும்  உத்தியை ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்களால்தான்  செய்ய இயலும். கணினிச் செயல்பாடு  உள்ளிட்ட பல திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் இந்தச் சிறப்பு ஆசிரியர்கள் பள்ளிக்குள் இருந்தும் இல்லாமல் இருக்கும் ஒரு நிலைமையைக் கடந்த பத்தாண்டுகளில் எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. விளைவு, ஆசிரியர்கள் தேவைப் பட்டியலில்  இவர்கள் பணியாற்றும் எந்தப் பள்ளிக்கும் புதிய ஆசிரியர் நியமனம் கிடையாது. இந்தப் பத்தாண்டு காலமாக எந்தவித ஆசிரியர் நியமனமும் இல்லை என்பது மற்றொரு துக்க வரலாறு. ஆனால், இந்தப் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்தில் மாணவர்கள் நலனுக்கும் கேடு; ஆசிரியர் நலனுக்கும் கேடு. அவர்கள் பெறும் ஊதியம் தற்போது பத்தாயிரம் மட்டுமே.  மாதம் பன்னிரண்டு நாட்களுக்குப் பத்தாயிரம் போதாதா என்ற குரல்களும் இங்கே ஒலிக்கின்றன. அது மிகப்பெரிய தவறு. ஒரு மாதத்தில் மீதி பதினெட்டு நாட்கள் அந்த ஆசிரியர்கள் எங்கே செல்வார்கள்? வேறு இடத்தில் நிரந்தரமாக வேலை செய்ய முடியுமா? வேலை தருவார்களா? இன்றுள்ள விலைவாசியில் இந்த ஊதியத்தை வைத்துக் குடும்பம் நடத்துவது இயலாத காரியம் என்பதை சமூகப் பார்வையுடன் சிந்திக்கும் அனைவராலும் அறிந்துகொள்ள முடியும். ஆனால் ஆட்சியாளர்கள் சிந்திக்க மறுக்கின்றனர். அத்தோடு பதினோரு மாதங்கள் மட்டுமே அவர்களுக்கு ஊதியம்  தரப்படுகிறது. மே மாதத்தில் அவர்களுக்குப் பசி எடுக்காதா? வாடகை வீட்டில் வசிப்போரிடம் வீட்டு உரிமையாளர் வாடகை கேட்க மாட்டாரா? அந்த மே மாதத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் யாருக்கும் எந்தப் பணத் தேவையும் இருக்காதா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். இந்த  ஊதியச் சிக்கலைத் தீர்க்கவும் மாணவர் நலன் கருதியும் எங்களை நிரந்தரப் பணியாளர் ஆக்குங்கள் என்று பகுதி நேர ஆசிரியர்கள் இன்று வரை 52க்கும் மேற்பட்ட முறைகள் போராட்டக் களத்தில் நின்றுள்ளனர். அந்தப் போராட்டங்களின் பலனாக முதலில் ஐந்தாயிரமாக இருந்த அவர்களது ஊதியம் தற்போது பத்தாயிரமாக மாறியுள்ளது; அவ்வளவே. ஊதியத்தைக் கடந்து, பணியாற்றும் பள்ளியிலோ சமூகத்திலோ வீட்டிலோ அவர்களுக்கு மரியாதை கிடையாது என்பது மற்றொரு வகை மன உளைச்சல். கடந்த பத்தாண்டுகளில் இறந்தவர், வேலையை விட்டவர், வேறு வேலைக்குச் சென்றவர், ஓய்வு பெற்றவர் என நான்காயிரம் ஆசிரியர்கள் காணாமல் போக, எஞ்சியுள்ளவர்கள் 12000 சொச்சம் ஆசிரியர்கள்தான். செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வந்தன.  இந்த நேரத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இறங்கி, சில நாட்களில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, தற்போது தொடர் போராட்டத்தில் இன்று ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றனர். இதுவரை ஐந்தாயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் நாட்கள் செல்லச் செல்லப் பெண் ஆசிரியர்களுக்கு அங்கு தங்க, உடைமாற்ற, கழிப்பறை செல்ல என்று எதற்கும் இயலாத சூழல். ஆகவே போராடுவோருக்குக் கடும் சிக்கல்கள் நிலவுகின்றன எனவும் சங்கப் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் தடைகளை மீறி ஒன்பதாவது நாளாக இன்றும் களத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இதற்கிடையே போராட்டம் தொடங்கியது முதல் நேற்று வரையிலான எட்டு நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கணினி ஆசிரியர் உடல்நலக் குறைவால் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்துள்ளார்.  மற்றொரு பகுதி நேர ஆசிரியரான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த மணிகண்டன் என்ற ஓவிய ஆசிரியர், கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிருக்கிறார். இருவருக்கும் பணம்தான் பிரச்சனை. அதற்கு இவர்களது ஊதியம் மிக முக்கியமான காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மனிதாபிமானமற்ற முறையில் இப்படி ஆசிரியர்கள் வஞ்சிக்கப்படுவது கண்டனத்துக்குரியது. இவர்கள் துன்பம் சமூகத்தை அதிர்வுக்கு உள்ளாக்கி இருக்கிறது. கடந்த காலங்களில் 2016 தேர்தலின்போதும், 2021 தேர்தலின்போதும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியை திமுக அளித்தது. அதை நம்பி குடும்பம் குடும்பமாக இவர்களுக்கு வாக்களித்தோம். ‌எங்கள் உறவினர்கள் குடும்பங்களையும் இவர்களுக்கே வாக்களிக்க வைத்தோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் நாங்கள் பலமுறை போராடிவிட்டோம்.  இப்போதும் எட்டு நாட்கள் ஆகியும் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறார்கள் கல்வி அமைச்சரும் முதல்வரும் என்று வெளிப்படையாகப் புலம்பித் தீர்க்கின்றனர் பகுதி நேர ஆசிரியர்கள். இவர்களின் போராட்ட முழக்கமே 181ஆவது கோரிக்கை என்ன ஆயிற்று? என்பதுதான். இந்த நேரத்தில் பல ஆசிரியர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்குச் செல்வது என்ற சூழலும் நிலவுகிறது. கடந்த எட்டு நாட்களில் ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். பள்ளிக்கல்வி இயக்குனர், கல்விச்செயலர், இணை இயக்குநர், சமக்ஷ்ர சிக்ஷா அபியான் திட்ட இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் வெறும் ஊதிய உயர்வு மட்டும் தருவதாகக் கூறிப் போராட்டத்தை முடித்துவிடப் பார்ப்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதியாக நேற்று எட்டாவது நாள் மாலை, கல்வி அமைச்சர் தனது வீட்டிற்குப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் இன்றும் போராட்டம் தொடர்கிறது. பேச்சுவார்த்தை குறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்கள் சங்கதினரிடம் கேட்டபோது, “பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். இந்நிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று மாலை (அக்டோபர் 2) எங்களை அழைத்துப் பேசினார். அப்போது எங்கள் கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் பேசிய வகையில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை பிறந்தது. இதற்கு முன்பும் பலமுறை அமைச்சரைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகள் தொடர்பாகப் பேசியுள்ளோம். அப்போதும் அமைச்சரின் பதில் எங்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எங்கள் கோரிக்கைகள் மீது எந்தவிதமான அறிவிப்பும் வெளிவரவில்லை. அமைச்சருடனான பேச்சுவார்த்தையின்போது உடனிருக்கும் அதிகாரிகள், அமைச்சர் முன்னிலையில் ஒரு மாதிரியும் அவர்களைத் தனியே சந்திக்கும்போது வேறு மாதிரியும் பேசுகின்றனர். அமைச்சர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முனைந்தாலும் அதிகாரிகள் அதற்குத் தடையாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது,  அவர்கள் இந்த அரசுக்கு எதிராகச் செயல்பட எங்களைத் தூண்டி விடுகின்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டால் ‘உங்கள் கோரிக்கையை நிதித்துறைக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நிதித்துறையைக் கை காட்டுகின்றனர். ஆனால் நிதித்துறையிலிருந்து எங்களுக்குச் சாதகமான எந்த பதிலும் வரவில்லை. பள்ளிக் கல்வித்துறையும் நிதித்துறையும் சேர்ந்து அரசுக்கு எதிராக ஆசிரியர்களைத் திசை திருப்புகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. ‘திமுக அரசு ஆசிரியர்களுக்கானது’ என்ற நிலையை ‘ஆசிரியர்களுக்கு எதிரானது திமுக அரசு’ என்று மாற்ற அதிகாரிகள் முயல்கிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார்கள். கல்வித்துறையில் அவுட் சோர்சிங்கில், ஃபெல்லோசிப் நியமனங்களுக்கே அரை லட்சத்திற்கும் அதிகமாக ஊதியம் தரும் கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு ஊதியம் தராமல்  வஞ்சித்து, அவர்களை நிரந்தரமாக்காமல் குழந்தைகளின் வாழ்க்கையையும் சேர்த்து வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது. சம வேலைக்கு சம ஊதியம்  அடுத்து, பகுதி நேர ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்கும் அதே டிபிஐ வளாகத்தின் புதிய கட்டிட வாகன நிறுத்துமிடத்தில் நிரந்தர ஆசிரியர்களும் பல ஆயிரக்கணக்கில் இணைந்து கடந்த ஐந்து நாட்களாக நீர் அன்ன ஆகாரம் இன்றிப் போராடி வருவது மற்றொரு வேதனை. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 2009ஆம் ஆண்டு பணியில்

மரு வைத்து வந்துள்ள மணற்கேணி

மரு வைத்து வந்துள்ள மணற்கேணி

புதிய கண்டுபிடிப்புகளைப் போலவே கல்வித் துறையிலிருந்து ஒவ்வொரு அறிவிப்பும் வெளியிடப்படுவது குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆன்லைன் கல்விக்கு அடிகோலும் முயற்சிகள்தான் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் அனைத்தும். இதற்காகப் பணியாற்றி, கடும் உழைப்பைத் தந்திருக்கும் கல்வித்துறையின் அத்தனை ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக அந்த ஆசிரியர்களின் பணியிடங்களில் வகுப்புகளை கவனிக்க, பாடம் நடத்த, வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் சிறப்பு. இல்லை என்றால் அது குழந்தைகளுக்குச் இழைக்கப்படும் துரோகம்; அநீதி. கல்வித் துறையில் மணற்கேணி என்ற செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மணற்கேணி குறித்து, இரு வழிகளில் நாம் விளக்கலாம்.  முதலாவதாக, இது நாட்டிலேயே  முதன்முதலாக என்பது உண்மை அல்ல. ஆம், தமிழ்நாட்டின் கல்வித்துறையில் பத்தாண்டுகளுக்கும் முன்பாகவே, சபிதா ஐஏஎஸ் அவர்கள் கல்விச் செயலாளராகப் பணியாற்றியபோது, மாநிலக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) டிஜிட்டல் கன்ட்டென்ட் என்ற கோட்பாட்டை முன்னெடுத்தது. பல்வேறு வகையான பயிற்சிகள், பாடப்பொருள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு, அறிவியல் காணொளிகள் என்று, முப்பரிமாண (3D) வரைவில் பலவிதமான வழிகளில் டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிக்கப்பட்டது. SCERTஇல் ICT CELL என்ற ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு SCERTஇன் விரிவுரையாளர் ஒருவரை அதற்குப் பொறுப்பாளராகப் பணியமர்த்தியது. அங்கு ஒருங்கிணைப்பாளராக பள்ளி ஆசிரியர் ஒருவரும் பணியாற்றினார். ICT CELL வழியாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்புப் பணியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2013 முதல் 2016 வரை டிஜிட்டல் கன்ட்டென்ட் சார்ந்த ஏராளமான பணிகள் ICT CELL வழியாக முன்னெடுக்கப்பட்டன. ஆசிரியர்கள் தயாரித்த டிஜிட்டல் கன்ட்டென்ட் அனைத்தும் மாணவர்கள் பயன்பாட்டுக்காக SCERT  வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்காகச் சேகரம் செய்யப்பட்டன. SCERTஇல் பயிற்சி பெறாமல், தனிநபராக ஆர்வமாக டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களிடமிருந்தும்கூட அவை பெறப்பட்டன. சில மாவட்டங்களில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், முதல்வர்கள் தலைமையில், ஆசிரியர்கள்  டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்,  அந்த நேரத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கலாச்சாரமும் பெருகின. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளை நவீனப் பள்ளிகளாக மாற்றம் செய்ய முயற்சி செய்ய ஆரம்பித்து வேகமெடுத்தது என்றும் கூறலாம். பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் உள்ள மனப்பாடப்பகுதியை, பாடல்கள் வழியாக டிஜிட்டல் கன்ட்டென்ட்டுகளாக மாற்றினர். அது மட்டுமல்ல; சிறு வகுப்புகள் முதல், ஒவ்வொரு வகுப்பிற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்ப்பாடம் மட்டுமல்ல; ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்  சமூக அறிவியல் என அனைத்துப் பாடங்களுக்கும் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் நீட்சியாகத்தான் சில வருடங்கள் கழித்து, கல்வித் தொலைக்காட்சி என்ற முயற்சியும் விரிவாக்கம் செய்யப்பட்டது.  கற்றலில் புதுமை செய்யக் கூடிய ஆசிரியர்களது (Innovative  Practicing Teachers)   பணிகளை டிஜிட்டல் ஆவணமாக்கும் வேலையையும் SCERT முன்னெடுத்தது. முதற்கட்டமாக, நூறு ஆசிரியர்களைத் தேர்வு செய்து  அவர்கள் செய்யும் புதுமையான கற்பித்தல் முறைகளைக் காணொளிகளாக  தயார் செய்து, வலைத்தளத்தில் பதிவேற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்காகவும் ஒரு பெரும் தொகையை (ரூபாய் பத்து லட்சம்) SCERT  ஒதுக்கியது. இப்பணியைச் செய்ய முன்வந்தவரும்கூட, சேலம் மாவட்ட ஆசிரியர் ஒருவர்தான்.  இப்பணி நிறைவடைந்ததா என, இன்று வரை தெரியவில்லை. நூறு ஆசிரியர்களில், ஒருசிலரின் காணொளிகளை மட்டும் SCERT சேனலில் பார்க்க முடிகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பாடப்பிரிவுகளுக்கு, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் ஆகுமெண்டேட் ரியாலிட்டி என்ற  என்ற பிரிவிலும் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் தயாரிக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அப்போது முன்னெடுக்கப்பட்ட பணிகளுக்கான ஒரு சில உதாரணங்கள்: இப்படி ஏராளமான முன்னெடுப்புகள் செய்யப்பட்டன.  அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகே அமைந்துள்ள கல்வியியல் இணையக் கழகம், ஆசிரியர்களுக்கு செயலிகள் உருவாக்கும் (App Development) பயிற்சிகளையும்கூட வழங்கியது. அதற்கும் SCERT இன் ICT CELL  தான் ஒருங்கிணைப்பு செய்தது. பாடப்புத்தகங்களை ஃபிலிப் (flip) போல விரலால் புத்தகத்தின் பக்கங்கள் திருப்பும் முறையைப்போல டிஜிட்டல் பக்கங்களை உருவாக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்குத் தரப்பட்டது. இக்குழுவில் இணை இயக்குநர் ஒருவரையும் இணைந்திருந்தது SCERT நிறுவனம். டெல்லியில்  தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) வழியாக இப்பயிற்சியை எடுத்துக் கொண்ட ஆசிரியர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்  (SCERT) ஒருங்கிணைப்பில் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களை flip முறையில் டிஜிட்டல் கன்ட்டென்ட் உருவாக்கம் செய்தனர். இப்படியாக, தொடர்ச்சியான பன்முகத்தன்மையுடன் பல வருடங்களாக, தொடர்ச்சியாக, டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்புப் பணிகளைச் செய்ய ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். அந்தப் பயிற்சிகளில் திறன்பெற்ற ஆசிரியர்கள்தான், மாநில மையத்தில் பெரும்பாலும் டிஜிட்டல் கன்ட்டென்ட் உருவாக்கம் உள்பட, பள்ளிக்கல்வி முன்னெடுக்கும் ICT சார்ந்த தொழில்நுட்பக் கற்றல் – கற்பித்தல்  திட்டங்கள் அனைத்திற்கும் இன்றளவும்  பங்காற்றி வருகின்றனர்.  சில வருடங்களாக அல்லது பல வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள், பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குப்  பாடம் நடத்துவதே இல்லை என்ற விமர்சனமும் பரவலாக உள்ளது. அரசின் முயற்சிகள் கல்வித்துறையை நவீனமாக்கும் பார்வையைக் கொண்டிருக்கலாம். ஆனால் எந்தத் திட்டம் போட்டாலும் ஆசிரியர்களே அதைக் கவனிக்க வேண்டும் என்றால், கற்பித்தல் பணிக்கு யாரை நியமிப்பார்கள்? முதல் பத்தியில் கூறியபடி, இரண்டாவது விளக்கம்: இந்த மணற்கேணி திட்டம் இணையவழிக் கல்வியை ஊக்குவிக்க உருவாகியுள்ளது. இது தேசியக் கல்விக் கொள்கை 2020இன் ஒரு கூறு. ஆம், ஏற்கனவே DHIKSHA செயலி வழியாக ஆசிரியர்கள் செய்யும் டிஜிட்டல் கன்ட்டென்ட் பதிவேற்றம் செய்யப்படும் என செய்தி வெளியானது; பின்னர் அது நடைமுறையிலும் வந்தது. புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020இல் தலைப்பு 24, இணைய மற்றும் டிஜிட்டல் கல்வி என்ற உபதலைப்பின் 3ஆவது பிரிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.  இணைய வழிக் கற்பித்தல் மற்றும் கருவிகள் என்ற தலைப்பில், DHIKSHA குறித்துக் குறிப்பிட்டுள்ளனர். இதைத்தான் அப்போதே நாம் வேண்டாம் என்று கூறினோம். அதாவது, மரு வைத்து மாறுவேடம் பூண்டால் அது மணற்கேணி. மருவை எடுத்துவிட்டால் அது DHIKSHA. DHIKSHA செயலியில் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் பதிவேற்றம் செய்ததும், வகுப்பறையில் ஆசிரியர்கள் ஒருநாளைக்கு ஒருமுறையாவது அதைத் திறந்து பயன்படுத்த வேண்டும் என்றனர். ஆனால் அதில் கற்றல் வளங்கள் (டிஜிட்டல் கன்ட்டென்ட்டுகள்) எல்லாத் தலைப்புகளுக்குள்ளும் காலியாகவே இருக்கும். அது பெயருக்குத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 வளர்க்க நினைக்கும் இணையவழிக் கல்வியையே நாடச் சொல்கின்றன. நேரடிக் கற்பித்தலுக்கு வழிவகுக்காத இவை புறக்கணிக்கத்தக்கவையே. இதுவரை நாம் இங்கு கூறிய பத்தாண்டு கால டிஜிட்டல் வளங்கள் தமிழ்நாட்டின் குழந்தைகளது கல்வித்தரத்தை எந்த விதத்திலும் உயர்த்தவோ தரப்படுத்தவோ இல்லை. தரம் குறையவே செய்திருக்கிறது. அடிப்படையில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக ஆசிரியர்கள் நியமனம், கற்றல் கற்பித்தல் பணி தொய்வின்றி நிகழ்வதற்கான சூழலை உருவாக்குதல், ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மட்டும் மேற்கொள்ளச் செய்தல் என யோசிக்கலாம். அதை விடுத்து, புதிய புதிய பெயர்களில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது – மணற்கேணி என்ற பெயரில் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகளில் ஒன்றான DHIKSHA  செயலியைப்போன்ற செயலியை அறிமுகம் செய்வது அவசியமற்றது. தேவைக்கேற்ற செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டால்தான், கல்வி‌ ஏற்றமிகு வழியில் உயரும். 

தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்

தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்

[குழந்தைகளின் கல்வி நலனில் கவலையும் அக்கறையும் கொண்டு, ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்கான கற்பித்தல் பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களை சுவடு இதழ் மனதாரப் பாராட்டுகிறது. இந்தக் கட்டுரை அவர்களைக் குறித்தது அல்ல.] ‘உலகெங்கும் கொரோனா தாக்கத்தால் கோடிக்கணக்கான குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அதனால் பல வருடங்கள் பின் தங்கிய சூழலுக்குப் போய் விட்டோம்’ என்று யூனிசெஃப் குழந்தைகள் அமைப்பு உட்பட பல தனியார் அமைப்புகள் ஆய்வு செய்து, தங்கள் ஆய்வு முடிவுகளை ஊடகங்கள் வழியே தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இவை தமிழகத்திற்கும் பொருந்தும். கூடுதலாக இங்கு தனியார் மயமும் தலைவிரித்தாடுகிறது. பெண் குழந்தைகள் திருமணம் எல்லா மாவட்டங்களிலும் நடப்பது பற்றிய புள்ளி விபரங்கள் வெளியாவது தொடர்கிறது. அதைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆசிரியைகளைப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. நமது சுவடு இதழ் A3 ஆசிரியர்கள் அமைப்புடன் இணைந்து நடத்திய கருத்தரங்கில், இவற்றையெல்லாம் விரிவாக விவாதித்து அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.  அடித்தட்டு மக்களின்  பிரதிநிதியாகவும், கல்வி வரி, தொழில் வரி, வருமான வரி, சாலை வரி உள்ளிட்ட பலப்பல வரிகளைக் கட்டி வரும் சாதாரண குடிமகன்கள் சார்பாகவும், கல்வி மீதும் எதிர்காலத் தலைமுறை மீதும் அக்கறையும் பொறுப்பும் கொண்டவர்களாகவும் இங்கு சில நியாயங்களைக் கேள்விகளாக முன் வைக்கிறோம்.  அரசுப் பள்ளி ஆசிரியர்களே, வேலையே செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்க வெட்கமாக இல்லையா? தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டு முழுவதுமே ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தும் பணியை மேற்கொள்ளவில்லை. இன்று வரை ஒவ்வொரு அரசுப்பள்ளி ஆசிரியரும் பல லட்சங்களை சம்பளமாகப் பெற்றுள்ளீர்கள். ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ‘உறவினர் வீடே என்றாலும் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது, அது தன்மானத்துக்கு இழுக்கு’ என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி அது. ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களோ  கடந்த 15 மாதங்களாக  சும்மா இருந்து கொண்டே சம்பளம் வாங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  பல்லாயிரம் ஆசிரியர்கள் பணி புரியும் நமது கல்வி அமைப்பில் மிகச் சொற்ப விழுக்காடு ஆசிரியர்கள்தான்  குழந்தைகளுக்காக ஏதாவது ஒரு வகையில் பேசிக்கொண்டும் இயங்கிக்கொண்டும் இருக்கின்றனர். மீதமுள்ள பெரும்பான்மை ஆசிரியர்கள் வேலையே செய்யாமல் அரசு வழங்கும் சம்பளத்தைக் கொஞ்சமும் கூச்சமின்றி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பலர் சொந்தமாக  ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து கொண்டும் விவசாயம் பார்த்துக் கொண்டும்  வேறு ஏதாவது  சொந்தத் தொழில் செய்துகொண்டும் ஏதோ ஒரு வகையில் இன்னும் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு இருப்பதோடு அரசு தரும் மாத ஊதியத்தை ஒரு பைசா குறையாமல் வாங்கி அனுபவித்து வருகிறார்கள்.  ஆனால் மறுபக்கம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பொது மக்கள், வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து, வருமானமே இல்லாமல் வாழ்வா சாவா எனப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பலப்பல சிக்கல்களைச் சந்தித்து வரும் அந்த மக்களின் வரிப்பணத்தையும் உள்ளடக்கியதுதான் நீங்கள் வாங்கும் சம்பளம். ஆனால், அந்த மக்களின் குழந்தைகளது கல்வி குறித்து அக்கறை எதுவுமின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு, ‘அரசு பள்ளியைத் திறக்கவில்லை, அரசாங்கம் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்’ என்று சொல்லி அரசின் மீதே பழியைச் சுமத்தி தப்பித்துக் கொண்டு வருகின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த உணர்வே இல்லாமல் கற்பித்தல் பணியையே அவமதிக்கும் இந்த ஆசிரியர்களுக்கு தங்கள் பணி குறித்த பொறுப்புணர்வும் சொரணையும் என்று வரும்? தண்டச்சோறு தின்னும் ஆசிரியர் சங்கங்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கும், பதவி உயர்வு, சம்பளப் பற்றாக்குறை, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு போன்ற தங்களது சொந்த நலன் சார்ந்து அரசை எதிர்க்கும், போராட்டங்கள் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சமாவது கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம் இந்தக் கல்வியாண்டாவது பள்ளிகளைத் திறக்க எங்காவது குரல் கொடுத்தீர்களா? முதல்வரிடம் நல்ல பேர் வாங்க கொரோனா நிதியை (குழந்தைகளின் கல்விக்காக வாய் திறக்காத ஆசிரியர்களிடம் இருந்து) வசூலித்து அரசிடம் கொடுக்கத் தெரிந்த சங்கங்களுக்கு, தங்கள் வாழ்வதாரத்திற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் பள்ளிக் குழந்தைகளது கல்வி நலன் பேணப்பட வேண்டும் என்று கொஞ்சமும் தோன்றவில்லையா?  குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லையென்றால் உங்களுக்கு வேலை ஏது? சம்பளம் ஏது?  உங்கள் சங்கங்களின் உறுப்பினராக இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வகுப்பறைகளில் பயின்ற லட்சக் கணக்கான குழந்தைகள் இப்போது எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? குழந்தைத் தொழிலார்களாகப் போய்விட்டனரா?  திருமணம் செய்துகொண்டு போய்விட்டனரா? போன்ற தகவல்கள் ஏதாவது தெரியுமா? அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டு வர ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டீர்களா?  கொரோனா சூழல் இப்படியே நீடித்தால், அரசு உங்களுக்கு வாழ்நாள் முழுக்க தண்டச்சோறு போட்டுக்கொண்டிருக்கும் என்ற கனவில் மிதக்கிறீர்களா? இதனால் அரசுப் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்படும்  அபாயம் உள்ளதை உணர முடியவில்லையா? இந்தச் சூழலில் மாற்று வழிகள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கும் பொறுப்பு உங்களுக்குக் கொஞ்சம்கூட இல்லையா? உழைக்காமல் ஓசிச்சோறு தின்ன உங்களுக்குக் கூசவில்லையா?  கல்வி அதிகாரிகளே, நீங்கள் பூம்பூம் மாடுகளா? ஆசிரியர்களாவது கற்பித்தல் பணியைச் செய்கின்றனர். ஆனால் நமது தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை முன்னேற்றத் திட்டமிடும் இடத்தில் இருக்கும் நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குப் பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியை மட்டும் சுற்றறிக்கைகளாக அனுப்பிக்கொண்டு இருப்பீர்கள்? ஆசிரியர்களை விட ஒன்றிரண்டு மடங்கு அதிக ஊதியம் பெறும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்களும் கடந்த 15 மாதமாக வேலை செய்யாமல்தானே சம்பளம் வாங்குகிறீர்கள்? உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லைகளில் எத்தனைக் குழந்தைகள் வேலைக்குப் போய், அவர்களின் கல்வி நாசமாகப் போய்விட்டது என்று தெரியுமா? மாநிலமெங்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை நிர்வகிக்கும் அலுவலுக்காகத்தானே அத்தனை சம்பளமும் பெறுகிறீர்கள்? கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா உங்களுக்கு? இன்னும் எத்தனைக் காலம் கொரோனாவைக் காரணம் காட்டி பள்ளிக்கூடங்களை மூடி வைத்து, குழந்தைகளைக் கற்றலில் இருந்து விலக்கி வைத்து மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? படிக்காத குழந்தைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து புத்தகம் அச்சடிப்பது எதற்காக? கமிஷன் அடிக்கவா? பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளாக மூடிக்கிடக்கின்றன. எப்போது திறக்கப்படும் என்ற எந்த விவரமும் இல்லை. இந்தச் சூழலில் மாற்று வழி குறித்து கொஞ்சமாவது நீங்கள் சிந்திக்க வேண்டாமா? ஆட்சியாளர்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சொல்வதற்குத் தலையாட்டும் பூம்பூம் மாடுகளா நீங்கள்?  லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த ஆண்டு தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு வந்திருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் ஆங்கில வழியில் படித்தவர்கள் அல்லவா? கல்வித் தொலைக்காட்சியில், பாடங்களைத் தமிழ் வழியில் மட்டும்தானே ஒளிபரப்புகிறீர்கள்? எனில், ஆங்கில வழியில் சேர்ந்த மாணவர்களின் நிலை என்ன? இதுகூடத் தெரியாமல்தானே அதிகாரிகளாக அமர்ந்துகொண்டு இருக்கிறீர்கள்? எந்த அடிப்படையில் கல்வித் தொலைக்காட்சி பாடத்திட்டத்தை எழுதச் சொல்லி சுற்றறிக்கை அனுப்புகிறீர்கள்? சம்பளம் பெறுவதற்கு உங்களுக்குப் பதிவேடுகள் வேண்டும். குழந்தைகள் படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? பள்ளிகள் திறந்தால் என்ன? திறக்காவிட்டால் உங்களுக்கு என்ன? 8ஆம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்பது இந்த வருடம்தான் மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. அது கல்வி உரிமைச் சட்டம் 2010-லிருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு முழுமையும் 9 , 10 , 11 வகுப்பு முடித்து,  கல்விக் கட்டணம் கட்ட முடியாததால் தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற முடியாமலும் அரசுப் பள்ளியில் சேர முடியாமலும் தத்தளிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பற்றிய தரவுகள் எடுத்து அரசுக்கு அனுப்பினீர்களா? இந்தப் பிரச்சினை குறித்து அரசுக்கு ஏதேனும் வழிகாட்டினீர்களா?  கொரோனா காலத்தில் எத்தனைக் குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச்சென்றுவிட்டார்கள் என்றும் அவர்களை எப்படி மீட்டு பள்ளிக்குள்  கொண்டுவருவது என்றும் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? இந்தப் பணிகள் எல்லாம் நடக்கிறதா இல்லையா என்று மக்களுக்குத் தெரிய வேண்டாமா? மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்கள் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டாமா? எந்தப் பணியும் செய்யாமல் கல்வித் துறையின் வட்டார, ஒன்றிய, மாவட்ட, மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் எதற்காக இருக்கிறீர்கள்? அரசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகமும் உறங்குகிறதா?  சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்துக்கும் அடிப்படை கல்வி வாய்ப்புகள்தான். ஆனால் அது தற்போது எதிர்த்திசையில் பயணிக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அவர்களே, தமிழக முதல்வர் அவர்களே, கடந்த ஆண்டு நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதே கொரோனா தாக்கம், பள்ளிகள் மூடல் என்ற நிலை இருந்ததே? அது அடுத்த வருடமும் தொடர்ந்தால் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் ஏன் உங்களிடம் இல்லாமல் போனது? அது கூடப் பரவாயில்லை. உழைக்கும் மக்களிடமிருந்து வாங்கும் வரிப்பணத்தில் ஆசிரியர்களை வேலையின்றி உட்கார வைத்து ஓசிச் சம்பளம் கொடுப்பது ஒரு புறம் இருக்கட்டும். இன்னும் எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் கொரானா நீடிக்கும் எனத் தெரியாத சூழலில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் கல்வியிலிருந்து விலகிச் செல்வதைத் தடுக்க வேண்டாமா? இதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டாமா? சிறந்த கல்வியாளர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டாமா?  குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாமல், தங்கள் மன உணர்வுகளை, அழுத்தத்தை வெளிப்படுத்த வழியில்லாமல் தவறான  நடத்தை மாற்றங்களுக்கும் உளவியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். இந்தக் கோணத்தில் பள்ளிக் கல்வித்துறை இப்பிரச்சினைகளை அணுகியதா? சமூகத்தைப் பல வருடங்கள் பின்னுக்கு தள்ளும் ஆபத்தை உருவாக்கும் சூழலையே தற்போது வளர்த்து வருகிறீர்கள் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்? தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை இழந்து தங்கள் உயிரையே இழந்து வரும் செய்திகள் கூட வருகின்றன. இணையவழிக் கல்வி பெருகி வருகிறது. இது நம் எதிர்கால சந்ததிக்கு நல்லதல்ல. பள்ளிகள் மூடல் தொடர்ந்தால் படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகள் அருகிவிடும். பள்ளிகள் வெறும் பாடம் கற்பிக்கும் இடமல்ல, குழந்தைகளின் நடத்தை மாற்றங்களைச் செதுக்கும் சிற்பக் கூடங்கள். தயவு செய்து பள்ளிகள் திறப்பில் மாற்று முறைகளைக் கையாளுங்கள்.  எங்கே போயின எதிர்க்கட்சிகள்?  பள்ளிகள் நிரந்தரமாக மூடிக் கிடக்கின்றன. குழந்தைகளின் வாழ்க்கை வீணாகிறது. ஆசிரியர்கள்  வேலையே செய்யாமல் ஒன்றரை ஆண்டு காலமாக

பள்ளிக் கல்வியில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள்

பள்ளிக் கல்வியில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள்

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவற்றுக்கு அடுத்து முக்கியத் தேவை கல்வியும் சுகாதாரமும்தான். இதில் சுகாதாரமும் கல்வியின் அடிப்படையிலேயே அமைவதால் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான ஒன்றாகவே கல்வி விளங்குகிறது. ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்கு அடித்தளமாக அமைவது கல்வி மட்டுமே. அப்படிப்பட்ட கல்வியானது நம் சமூகத்தில் முற்காலங்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சொந்தமானதாகக் கைக்கொள்ளப்பட்டு, பெரும்பான்மை சமூகத்திற்குக் கல்வி மறுக்கப்பட்டு வந்தது. பலகட்டப் போராட்டங்களை அடுத்து, சமூக நீதிக் கொள்கை நடைமுறைக்கு வந்த காலம் முதல் கல்வி அனைத்து சமூக மக்களுக்கும் உரியதாக மாறி இருப்பினும், அனைத்து மக்களையும் இன்னமும் கல்வி சென்றடையவில்ல என்பது பெருங்குறை. இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டில்கூட பள்ளிக்கல்வியைக்கூடத் தாண்டாத, ஏன், பள்ளிக் கல்வியே கிடைக்காத பல இலட்சம் குழந்தைகள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை அத்தனை எளிதாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. கடந்து சென்றுவிடவும் கூடாது. இந்த சமூகத்திலிருந்து நாம் பெற்றவற்றுக்கான பலனை சிறிதளவேனும் திருப்பிச் செலுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. பள்ளிக்கல்விதான் அனைத்து உயர் கல்விக்கும் அடித்தளமாக இருப்பதால், பள்ளிக் கல்வியை நாம் வலுவானதாகவும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிதாகவும், ஏற்றத்தாழ்வு இல்லாத வகையிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். தற்போதுள்ள கல்வி முறையின் வாயிலாக நாம் குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றம் கண்டிருந்தாலும், காலச் சூழலுக்கேற்ப நமது கல்வி முறையிலும் கல்வித் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அவ்வகையில், பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, கல்வியாளர் உமா அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துகள்: 1. வகுப்புக்கு ஒரு ஆசிரியர்  ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு மொத்தமுள்ள 23 பாடங்கங்களையும் அவர்களே நடத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த இருவரிலும் ஒருவர் தலைமை ஆசிரியராக இருப்பதால், அவருக்குப் பெரும்பாலும் மாவட்டக் கல்வி அலுவலகத்தின்  அல்லது ஏதேனும் ஒரு கல்வி அலுவலகத்தின் கடிதப் போக்குவரத்து, அலுவலகம் செல்லுதல் இப்படியான பணிகள் இருப்பதால் அப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி மறைமுகமாக மறுக்கப்படுகிறது. எனவே, அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமித்தல் மிகவும் அடிப்படையான தேவை. 2. கற்பித்தல் அல்லாத பணிகளுக்கான அலுவலர்களை நியமித்தல் பெரும்பாலான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அலுவலகப் பணிகள், கணினிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், மாணவர்களுக்கான கற்பித்தலில் பெரும் பாதிப்பு உண்டாகிறது. வருடத்தின் பெரும்பான்மை நாட்களோ அல்லது முழுமையும்கூட  ஆசிரியர்கள் வகுப்பிற்குச் செல்வதே இல்லை. வளர்ந்த மாணவர்கள் அவர்களாகவே படித்துக் கொள்வார்கள் என்று விட்டுவிடுகிறார்கள். இதனால் தரமான கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு பள்ளியிலும் கற்பித்தல் அல்லாத பணிகளுக்கான அலுவலர்களைத் தனயே நியமிக்க வேண்டும்.   3. கற்றலை மையப்படுத்தும் கல்வி இன்றைய சூழலில், கற்பித்தல் பணிகள் பெரும்பாலும் தேர்வை மையமாக வைத்தே நடைபெறுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தனியார் பள்ளிகளைப் போலவே தேர்ச்சி சதவீதத்தை மட்டும் கணக்கில் கொண்டு அரசுப் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து கற்பிக்கப்படுகிறது. அந்தக் கற்பித்தலும் பெரும்பான்மையாக பத்தாம் வகுப்பில் 35 மதிப்பெண்கள், பன்னிரண்டாம் வகுப்பில் 70 மதிப்பெண்கள் என்ற கணக்கீட்டின்படி, அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி (கோச்சிங்)  மட்டுமே தரப்படுகிறது என்றே கூறலாம். இந்த நிலை மாறவேண்டும். குழந்தைகளுக்குப் பெரும்பாலும் பாடப்பொருள் அறிவு இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது போல தற்போது கற்பிக்கப்படுவது இல்லை. அதனால், கற்பித்தல் என்பது மதிப்பெண் சார்ந்து இல்லாமல் அறிவு சார்ந்து இருக்க வேண்டும். 4. திறன்சார் கல்வி ஊக்குவிப்பு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாட்டு, ஓவியம், நெசவு, கைத்தொழில் முதலான ஆசிரியர்கள் நியமனம் முன்பு இருந்தது. தற்போது சில காலமாக பணியில் இருப்பவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றால் அவர்களோடு சேர்ந்து பணியிடமும் காணாமல் போய்விடுகிறது. புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. தையல் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர் அதைச் செய்யாமல், அங்கு தமிழாசிரியர் பற்றாக்குறை இருந்தால் அதைச் செய்கிறார். இப்படி அவரவர் பணியை அவரவர் செய்யும் நிலை இல்லை. பாடங்கள் கடந்த இதர திறன்களை மாணவர்களிடம் உருவாக்குவதும் இல்லை. ஊக்குவிப்பதும் இல்லை. இந்தச் சூழல் தமிழக அரசுப் பள்ளிகளில் மாற வேண்டும். 5. கல்வி மதிப்பீட்டு முறை தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்ற CCE – Continuous and  Comprehensive  Evaluation முறை கல்வி உரிமைச் சட்டத்தின் வழிகாட்டுதலால் 2013 லிருந்து பின்பற்றப்படுகிறது. மிகச்சிறப்பான மதிப்பீட்டு முறை என்றாலும் ஆசிரியர்களுக்கும் இது குறித்த முழுமையான புரிதல் இல்லை. வழிகாட்ட வேண்டிய அதிகாரிகள் வழி காட்டுவதே இல்லை. வெறுமனே 40 மதிப்பெண்கள் இலவசமாகப் போடப்படுவதுபோல் இங்கு ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு முறையின் மற்றொருபுறம் பள்ளிக்கல்வி மிகவும் சவாலான விஷயங்களைச் சந்தித்து வருகிறது. இந்த மதிப்பீட்டு முறை குறித்து பெற்றோர்கள் யாருக்கும் எந்தவிதப் புரிதலும் கிடையாது. ஏனென்றால், அரசுப் பள்ளிகளுக்கு வரும் 90 சதவீத குழந்தைகள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் வசதியற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பெற்றோருக்கு வாழ்வாதாரத்தைத் தேடுவதற்கே நேரம் போதுமானதாக இருக்கும்பொழுது, குழந்தைகளின் கல்வி குறித்து ஆய்வு செய்யவோ அக்கறை கொள்ளவோ  அவர்களுக்கு நேரமோ புரிதலோ கிடையாது என்பதுதான் நிதர்சனம். இதனை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இங்கு நடப்பதோ வேறு. “எங்களது கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார்கள். மாணவர்களை அடிக்கக்கூடாது, திட்டக்கூடாது என்கிறார்கள். பெற்றோர்களும் சொல்லித் தருவது கிடையாது. அதனால் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை” என்று ஆசிரியர்கள் அரசின் பக்கம் கை காட்டுகின்றனர். ஆனால், உண்மையாகவே எதுவுமற்ற குழந்தைகளுக்கு கற்பித்தலின் பொருட்டுதான் நாம் சம்பளம் பெறுகிறோம். ஆகவேதான்  ஆசிரியப்பணி அர்ப்பணிப்பு மிக்க பணி என்று கூறுகிறோம். ‘இந்தப் புரிதலுடன் ஆசிரியர்கள் தற்போது உருவாக்கப்படுகிறார்களா?’ என்று பார்த்தால் அதுவும் கிடையாது. ஆகவே, இந்த மதிப்பீட்டு முறையில் இருக்கக்கூடிய இடைவெளியை நிரப்ப அரசு முனைய வேண்டும். கற்றுத்தேர்ந்த , இது குறித்து புரிதல் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க வேண்டும். இது குறித்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வெளிப்படையாக வரவேற்று இதனைச் சரி செய்ய வேண்டும். நமது கல்வியில் மிகப்பெரிய ஒரு பின்னடைவு இருப்பது மதிப்பீட்டினால் மட்டும்தான். ஏனென்றால், அனைத்து மதிப்பீடுகளும் பதிவேடுகளை அடிப்படையாகக் கொண்டே பார்க்கப்படுவதால், குழந்தைகளின் உண்மையான கற்றல் திறன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது கிடையாது. இந்த முறையை மிக மிக மிக அவசியமாக, அவசரமாக அரசு கையில் எடுக்க வேண்டும். ஏனென்றால், கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் இப்படியே போய் விட்டது. பள்ளிக் கல்வியை முடிக்கக்கூடிய குழந்தைகள் அத்தனை லட்சம் பேரும் இதில் மிகவும் பின்னடைவைச் சந்தித்து வெளிவரக்கூடிய, வெளிவந்து இருக்கக்கூடிய ஒரு சூழல் இங்கு நிலவுகிறது. 6. நிதி ஒதுக்கீடு    SSA, RMSA திட்டங்கள் தற்போது  சமகிரா சிக்‌ஷ அபியானாக மாறிப் போன திட்டங்களின் அடிப்படையில் கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் கல்விக்காக  ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி மிகச் சரியாக வந்து சேர்கிறதா என்றால் அதில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. ஒவ்வொரு திட்டத்திலும் ஆயிரக்கணக்கான கோடி கல்வி நிதி தமிழகப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டாலும் ஆசிரியர்கள் பெரும்பாலும் மற்றவர்களிடம் கையேந்தி அவரவர் பள்ளித்தேவையை நிறைவு செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் கற்பித்தல் பணியை முழுமையாகக் கையிலெடுக்க வேண்டும். கட்டமைப்பு சார்ந்த மற்ற நிதி நிலை சார்ந்தவற்றை அரசு மட்டுமே செய்யவேண்டும். குறிப்பிட்ட திட்டங்களுக்காக மட்டுமே நிதி ஒதுக்காமல், ஒவ்வொரு பள்ளிக்குமான தேவைக்கேற்ப நிதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேவைக்காக ஒரு பள்ளிக்கு நிதி ஒதுக்கப்பட்டு ஏற்கனவே அந்தப் பள்ளியில் அந்தத் தேவை நிறைவடைந்திருந்தால், அந்த நிதியை வேறு பள்ளிக்குக் கொடுக்கலாம். திட்டங்களுக்காக செலவிடப்பட கூடிய தொகையை வேறுமாதிரியாக செயல்படுத்த முனையலாம். உதாரணமாக, வரும் கல்வி ஆண்டில், பள்ளிகள் தற்போது மூடப்பட்டு இருப்பதால் அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் பாடங்கள் குறைக்கப்பட்டு, குறைவான அளவு அச்சடிக்கப்பட வேண்டும். பல கோடிக்கணக்கில் செலவு செய்து புத்தகங்களை அச்சிட்டு மாணவர்களுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் பள்ளிகள் செயல்படாததால் மாணவர்கள் படிப்பது இல்லை. கற்பித்தலும் கற்றலும் நடைபெறவே இல்லை. ஆகவே, பாடங்களைக்  குறைத்து சிறிய அளவில் புத்தகங்களை அச்சடித்து வழங்குவது  மிகவும் நல்லது. 7. மழலையர் கல்வி  தமிழகப் பள்ளிகளில் ஏறக்குறைய  2800  பள்ளிகளில் மட்டுமே மழலையர் கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கினால் அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் வருவார்கள். மேலும் மழலையர் பள்ளிக்கான கட்டமைப்பு வசதிகளையும் முறையாகச் செய்து தர வேண்டும். மழலையர் வகுப்புகளுக்கான  ஆசிரியர் நியமனம் என்பது தற்போது அவசர காலமாக இடைநிலை ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்து மழலையர் வகுப்பு குழந்தைகளை கவனிக்க ஆணை பிறப்பித்து அனுப்பினர். இதற்கு மாற்றாக மாண்டிசோரி கல்வி முடித்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும் மாண்டிசோரி கல்வி முறையைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை உருவாக்கும் பணியிலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஏற்கனவே மாண்டிசோரி கல்வி முடித்து பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தமிழகத்தில் இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மழலையர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் திரும்பக் கிடைக்கும். அதனால் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற இலக்கையும் எட்ட முடியும். அங்கன்வாடிப் பள்ளிகளை தொடக்கக் கல்வித்துறையுடன் இணைத்தால், இந்த இடைவெளியில் இருக்கும் சில சிக்கல்கள் தீரும். அதோடு சத்துணவு திட்டமும் பள்ளிக்குள் இருந்தாலும், பள்ளி நிர்வாகக் கட்டமைப்பிற்குள் இல்லாததால் அங்கும் பிரச்சனை வருகிறது. அதையும் பள்ளிக்கல்வித் துறைக்குள் இணைக்க வேண்டும்.  தொடரும்… கட்டுரையாளர்: உமா, கல்வியாளர்

கல்வி வளர்ச்சி நாள்

கல்வி வளர்ச்சி நாள்

காமராசர் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை தமிழகத்தில் 9 ஆண்டு காலம் மட்டுமே முதலமைச்சராகப் பொறுப்பு வகித்திருந்தாலும், கல்வியில் மிகப் பெரிய மாற்றங்களை சாதாரண குடிமக்களுக்காகக் கொண்டு வந்த தலைவர் நமது காமராசர் என்பதை அனைவரும் அறிவோம். 2006-ஆம் ஆண்டிலிருந்து அவரது பிறந்தநாளான ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  இங்கு கொண்டாட்டம் என்பது வெற்றுப் புகழும் ஆடம்பரமும்தான் என்றால் மிகையாகாது. துறையின் சுற்றறிக்கைக்கு இணங்க பள்ளிகளில் காமராசரின் படம் வைத்து மாலை போடுவது, மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது, இவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி கோப்புகள் தயாரித்து வைத்துக்கொள்வது – இவற்றுக்குப் பெயர்தான் இங்கு கல்வி வளர்ச்சிநாள். மாறாக, இந்த 15 ஆண்டுகளில் கல்வியின் தரம் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது என்ற தரவுகளைக் கண்டடைந்தால் நமக்கு அதிர்ச்சிகளே மிஞ்சும்.  பள்ளிக்கல்வி என்பது அவசர சிகிச்சைக்குப் போனது இந்த பதினைந்து ஆண்டுகளில்தான்.  கல்வி தனியார்மயமாகிப் போகவா காமராசர் பாடுபட்டார்? “பிச்சை எடுத்தாவது படிக்கச்சொல்லி ஔவையார் சொன்னாங்களாம். நீங்க ஏன் பிச்சை எடுக்கணும்ங்கேன்? நான் கையேந்திப் பிச்சை எடுத்தாவது படிக்கவைக்கிறேன். நீங்க படிங்க” என்று சொல்லி ஏழை மாணவருக்குப் பள்ளிகளை உருவாக்கிக் கொடுத்தாரே, அது இதற்காகவா?  ஊழல் நிறைந்த துறையாக மாறிப்போகவா இத்தனை பாடுபட்டார்?  உண்மையான கல்வியை வழங்க, எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க, இல்லாமை வறுமை என்பதால் ஒரு குழந்தை கல்வி கற்கும்  வாய்ப்பை இழந்துவிடாது இருக்கவே, அரசால் பள்ளிகளை உருவாக்க இயலா இடங்களில்  மக்களின் இடங்களை வழங்கக் கூறி அரசு உதவி பெறும் பள்ளிகளையும் உருவாக்க வாய்ப்பு கொடுத்தார் என்கிறது வரலாறு.  ஆனால்    அவரது நோக்கம் சிதைந்து தனியார் பள்ளிகள் காளான்கள் போல உருவாகி, இன்று எங்கு பார்த்தாலும் தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து இங்கு பேசப்படுகிறதா? மாணவர்களுக்கு இன்றைய சமூகத்தின் கல்விச்சூழல் உணர்த்தப்படுகிறதா? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறி. இப்படிப்பட்ட கல்வி வளர்வதைத்தானா காமராசர் எதிர்பார்த்து அவ்வளவு தூரம் உழைத்தார்? கல்விகே கண் திறந்த காமராசர் என்று போற்றப்படக்கூடிய அவரது பிறந்தநாளில் கல்வியின் கண்களை அழித்து, கரிய துணி கொண்டு கட்டி அதை மறைத்து, பார்வையைக் குருடாக்கிவிட்ட  ஒரு சூழலை அல்லவா இன்றைய சமூகம் உருவாக்கி வைத்துள்ளது? காமராசரின் பிறந்ததினத்தை நேர்மையுடன் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமென்றால், இங்குள்ள உண்மையைப் புரிந்து  கொள்ளக்கூடிய, அதை விமர்சனம் செய்யக்கூடிய, கேள்வி கேட்கக் கூடிய மனநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் முதலில் உருவாக வேண்டும். அவர்கள் தங்களை அவ்வாறு உருமாற்றிக் கொண்டால்தான், அவர்களின் வழிகாட்டலில் உருவாகும் எதிர்காலத் தலைமுறை, காமராசர் நினைத்த கல்விக்கண் திறக்கக்கூடிய நல்ல சமுதாயமாக மலரும். அதைவிடுத்து வெறும் கொண்டாட்டமாக அவரது படத்திற்கு மாலை அணிவித்து, பூக்களால் அலங்காரம் செய்து, வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட சொற்களால் போட்டிகள் நடத்தும்  வெற்று செயல்பாடுகளால் இந்த சமூகத்தின் கல்வித்தரம் மேலும் மேலும் நசுங்கிச் சீரழியும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, ‘அரசுப் பள்ளிகள்தான் மக்களின் பள்ளிகள்’ என்ற தாரக மந்திரத்தை அனைவரும் உணரும்படியாக அனைத்துத் தரப்பிலும் கல்வியைத் தரமுள்ள சாதனமாக, அரசுப் பள்ளிக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்லவும் அரசுப்பள்ளியை நோக்கி மக்கள் வரவும் தேவையான சூழலை உருவாக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், கல்வி அதிகாரிகள் போன்ற பொறுப்புகளில் இடம்பெறும் அளவில் தமிழகத்தின் கல்விச் சூழல்  மாறவேண்டும். அன்றுதான் நமக்கு உண்மையான கல்வி வளர்ச்சி நாள். கட்டுரையாளர்: உமா, கல்வியாளர்