மரு வைத்து வந்துள்ள மணற்கேணி

புதிய கண்டுபிடிப்புகளைப் போலவே கல்வித் துறையிலிருந்து ஒவ்வொரு அறிவிப்பும் வெளியிடப்படுவது குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆன்லைன் கல்விக்கு அடிகோலும் முயற்சிகள்தான் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் அனைத்தும். இதற்காகப் பணியாற்றி, கடும் உழைப்பைத் தந்திருக்கும் கல்வித்துறையின் அத்தனை ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக அந்த ஆசிரியர்களின் பணியிடங்களில் வகுப்புகளை கவனிக்க, பாடம் நடத்த, வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் சிறப்பு. இல்லை என்றால் அது குழந்தைகளுக்குச் இழைக்கப்படும் துரோகம்; அநீதி.

கல்வித் துறையில் மணற்கேணி என்ற செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மணற்கேணி குறித்து, இரு வழிகளில் நாம் விளக்கலாம். 

முதலாவதாக, இது நாட்டிலேயே  முதன்முதலாக என்பது உண்மை அல்ல. ஆம், தமிழ்நாட்டின் கல்வித்துறையில் பத்தாண்டுகளுக்கும் முன்பாகவே, சபிதா ஐஏஎஸ் அவர்கள் கல்விச் செயலாளராகப் பணியாற்றியபோது, மாநிலக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) டிஜிட்டல் கன்ட்டென்ட் என்ற கோட்பாட்டை முன்னெடுத்தது. பல்வேறு வகையான பயிற்சிகள், பாடப்பொருள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு, அறிவியல் காணொளிகள் என்று, முப்பரிமாண (3D) வரைவில் பலவிதமான வழிகளில் டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிக்கப்பட்டது.

SCERTஇல் ICT CELL என்ற ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு SCERTஇன் விரிவுரையாளர் ஒருவரை அதற்குப் பொறுப்பாளராகப் பணியமர்த்தியது. அங்கு ஒருங்கிணைப்பாளராக பள்ளி ஆசிரியர் ஒருவரும் பணியாற்றினார். ICT CELL வழியாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்புப் பணியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2013 முதல் 2016 வரை டிஜிட்டல் கன்ட்டென்ட் சார்ந்த ஏராளமான பணிகள் ICT CELL வழியாக முன்னெடுக்கப்பட்டன.

ஆசிரியர்கள் தயாரித்த டிஜிட்டல் கன்ட்டென்ட் அனைத்தும் மாணவர்கள் பயன்பாட்டுக்காக SCERT  வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்காகச் சேகரம் செய்யப்பட்டன. SCERTஇல் பயிற்சி பெறாமல், தனிநபராக ஆர்வமாக டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களிடமிருந்தும்கூட அவை பெறப்பட்டன. சில மாவட்டங்களில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், முதல்வர்கள் தலைமையில், ஆசிரியர்கள்  டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்,  அந்த நேரத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கலாச்சாரமும் பெருகின. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளை நவீனப் பள்ளிகளாக மாற்றம் செய்ய முயற்சி செய்ய ஆரம்பித்து வேகமெடுத்தது என்றும் கூறலாம்.

பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் உள்ள மனப்பாடப்பகுதியை, பாடல்கள் வழியாக டிஜிட்டல் கன்ட்டென்ட்டுகளாக மாற்றினர். அது மட்டுமல்ல; சிறு வகுப்புகள் முதல், ஒவ்வொரு வகுப்பிற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்ப்பாடம் மட்டுமல்ல; ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்  சமூக அறிவியல் என அனைத்துப் பாடங்களுக்கும் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் நீட்சியாகத்தான் சில வருடங்கள் கழித்து, கல்வித் தொலைக்காட்சி என்ற முயற்சியும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 

கற்றலில் புதுமை செய்யக் கூடிய ஆசிரியர்களது (Innovative  Practicing Teachers)   பணிகளை டிஜிட்டல் ஆவணமாக்கும் வேலையையும் SCERT முன்னெடுத்தது. முதற்கட்டமாக, நூறு ஆசிரியர்களைத் தேர்வு செய்து  அவர்கள் செய்யும் புதுமையான கற்பித்தல் முறைகளைக் காணொளிகளாக  தயார் செய்து, வலைத்தளத்தில் பதிவேற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்காகவும் ஒரு பெரும் தொகையை (ரூபாய் பத்து லட்சம்) SCERT  ஒதுக்கியது. இப்பணியைச் செய்ய முன்வந்தவரும்கூட, சேலம் மாவட்ட ஆசிரியர் ஒருவர்தான். 

இப்பணி நிறைவடைந்ததா என, இன்று வரை தெரியவில்லை. நூறு ஆசிரியர்களில், ஒருசிலரின் காணொளிகளை மட்டும் SCERT சேனலில் பார்க்க முடிகிறது.

10 மற்றும் 12ஆம் வகுப்புப் பாடப்பிரிவுகளுக்கு, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் ஆகுமெண்டேட் ரியாலிட்டி என்ற 

என்ற பிரிவிலும் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் தயாரிக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

அப்போது முன்னெடுக்கப்பட்ட பணிகளுக்கான ஒரு சில உதாரணங்கள்:

  1. Dec 4- 2013 – ICT Training
  2. ICT Flash Training
  3. Trichy, Madurai – Content Creation Training
  4. Innovative Practices – Online Registration – 100 Teachers
  5. Digital Content preparation work – 500 Content output
  6. Translation – Dubbing videos work – 500 content
  7. Science videos – Editing work
  8. Digital Content – Review work
  9. Digitization of text Books (NCERT)
  10. Script Writing Workshops
    Tamil Virtual Academy (TVA) Work:
    Wikipedia Article writing – involving teachers – 1100 New Entries by teachers all over TamilNadu
    Khan Academy Educational Videos Translation Work-Involved 140 Teachers across TamilNadu

இப்படி ஏராளமான முன்னெடுப்புகள் செய்யப்பட்டன.  அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகே அமைந்துள்ள கல்வியியல் இணையக் கழகம், ஆசிரியர்களுக்கு செயலிகள் உருவாக்கும் (App Development) பயிற்சிகளையும்கூட வழங்கியது. அதற்கும் SCERT இன் ICT CELL  தான் ஒருங்கிணைப்பு செய்தது. பாடப்புத்தகங்களை ஃபிலிப் (flip) போல விரலால் புத்தகத்தின் பக்கங்கள் திருப்பும் முறையைப்போல டிஜிட்டல் பக்கங்களை உருவாக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்குத் தரப்பட்டது.

இக்குழுவில் இணை இயக்குநர் ஒருவரையும் இணைந்திருந்தது

SCERT நிறுவனம். டெல்லியில்  தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) வழியாக இப்பயிற்சியை எடுத்துக் கொண்ட ஆசிரியர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்  (SCERT) ஒருங்கிணைப்பில் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களை flip முறையில் டிஜிட்டல் கன்ட்டென்ட் உருவாக்கம் செய்தனர். இப்படியாக, தொடர்ச்சியான பன்முகத்தன்மையுடன் பல வருடங்களாக, தொடர்ச்சியாக, டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்புப் பணிகளைச் செய்ய ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்.

அந்தப் பயிற்சிகளில் திறன்பெற்ற ஆசிரியர்கள்தான், மாநில மையத்தில் பெரும்பாலும் டிஜிட்டல் கன்ட்டென்ட் உருவாக்கம் உள்பட, பள்ளிக்கல்வி முன்னெடுக்கும் ICT சார்ந்த தொழில்நுட்பக் கற்றல் – கற்பித்தல்  திட்டங்கள் அனைத்திற்கும் இன்றளவும்  பங்காற்றி வருகின்றனர்.  சில வருடங்களாக அல்லது பல வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள், பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குப்  பாடம் நடத்துவதே இல்லை என்ற விமர்சனமும் பரவலாக உள்ளது.

அரசின் முயற்சிகள் கல்வித்துறையை நவீனமாக்கும் பார்வையைக் கொண்டிருக்கலாம். ஆனால் எந்தத் திட்டம் போட்டாலும் ஆசிரியர்களே அதைக் கவனிக்க வேண்டும் என்றால், கற்பித்தல் பணிக்கு யாரை நியமிப்பார்கள்?

முதல் பத்தியில் கூறியபடி, இரண்டாவது விளக்கம்: இந்த மணற்கேணி திட்டம் இணையவழிக் கல்வியை ஊக்குவிக்க உருவாகியுள்ளது. இது தேசியக் கல்விக் கொள்கை 2020இன் ஒரு கூறு. ஆம், ஏற்கனவே DHIKSHA செயலி வழியாக ஆசிரியர்கள் செய்யும் டிஜிட்டல் கன்ட்டென்ட் பதிவேற்றம் செய்யப்படும் என செய்தி வெளியானது; பின்னர் அது நடைமுறையிலும் வந்தது.

புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020இல் தலைப்பு 24, இணைய மற்றும் டிஜிட்டல் கல்வி என்ற உபதலைப்பின் 3ஆவது பிரிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.  இணைய வழிக் கற்பித்தல் மற்றும் கருவிகள் என்ற தலைப்பில், DHIKSHA குறித்துக் குறிப்பிட்டுள்ளனர். இதைத்தான் அப்போதே நாம் வேண்டாம் என்று கூறினோம். அதாவது, மரு வைத்து மாறுவேடம் பூண்டால் அது மணற்கேணி. மருவை எடுத்துவிட்டால் அது DHIKSHA.

DHIKSHA செயலியில் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் பதிவேற்றம் செய்ததும், வகுப்பறையில் ஆசிரியர்கள் ஒருநாளைக்கு ஒருமுறையாவது அதைத் திறந்து பயன்படுத்த வேண்டும் என்றனர். ஆனால் அதில் கற்றல் வளங்கள் (டிஜிட்டல் கன்ட்டென்ட்டுகள்) எல்லாத் தலைப்புகளுக்குள்ளும் காலியாகவே இருக்கும். அது பெயருக்குத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 வளர்க்க நினைக்கும் இணையவழிக் கல்வியையே நாடச் சொல்கின்றன. நேரடிக் கற்பித்தலுக்கு வழிவகுக்காத இவை புறக்கணிக்கத்தக்கவையே.

இதுவரை நாம் இங்கு கூறிய பத்தாண்டு கால டிஜிட்டல் வளங்கள் தமிழ்நாட்டின் குழந்தைகளது கல்வித்தரத்தை எந்த விதத்திலும் உயர்த்தவோ தரப்படுத்தவோ இல்லை. தரம் குறையவே செய்திருக்கிறது.

அடிப்படையில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக ஆசிரியர்கள் நியமனம், கற்றல் கற்பித்தல் பணி தொய்வின்றி நிகழ்வதற்கான சூழலை உருவாக்குதல், ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மட்டும் மேற்கொள்ளச் செய்தல் என யோசிக்கலாம். அதை விடுத்து, புதிய புதிய பெயர்களில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது – மணற்கேணி என்ற பெயரில் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகளில் ஒன்றான DHIKSHA  செயலியைப்போன்ற செயலியை அறிமுகம் செய்வது அவசியமற்றது.

தேவைக்கேற்ற செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டால்தான், கல்வி‌ ஏற்றமிகு வழியில் உயரும். 

  • சு.உமாமகேஸ்வரி, கல்விச் செயற்பாட்டாளர் 

Comments (2)


Anita Srikanth
Anita Srikanth
July 27, 2023

வணக்கம்..
உமா அக்கா எழுதி இருந்ததை படிச்சேன்.
படிக்க படிக்க மலைப்பா இருந்திச்சு.
ஒரு குழந்தைக்கு கல்வியை சொல்லித்தரதுல இத்தனை இருக்கு.
ஒரு ஆப் மூலமா தரமான கல்வியை தர முடியும் னா ஒரே ஒரு ஆப் பை உருவாக்கி அதுல ஆசிரியர்களுக்கு பயிற்சி தரலாம். பலவித ஆப் பை உருவாக்கலாம்..ஆனால் அதுல ஒவ்வொரு முறை இருக்கும்.. எதை கத்துகிட்டு குழந்தைகளுக்கு சொல்லி தர னு குழப்பங்கள் வரலாம்…

உமா அக்கா சொன்னது…
// அடிப்படையில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக ஆசிரியர்கள் நியமனம், கற்றல் கற்பித்தல் பணி தொய்வின்றி நிகழ்வதற்கான சூழலை உருவாக்குதல், ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மட்டும் மேற்கொள்ளச் செய்தல் என யோசிக்கலாம்.//
நூத்துக்கு நூறு உண்மை..
இதுல அரசு கவனம் செலுத்தினால் போதும்…
தரமால கல்வி எல்லாருக்கும் போகும்.

கடைசி வரி …
//தேவைக்கேற்ற செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டால்தான், கல்வி‌ ஏற்றமிகு வழியில் உயரும். //
இது ஆசிரியர்களின் ஏக்கம்..

Surya

நல்ல, விரிவான கட்டுரை. சரியான அலசல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *