புத்தம் புதிதாய்ச் சந்திப்போம்

மிகுந்த படபடப்புடன் காணப்பட்டார், மகனால் மனநல மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்த அந்த ஐம்பது வயதுப் பெண்மணி. உடல் முழுக்க வியர்த்துப் போயிருந்த அவரை ஆசுவாசப்படுத்தி அமரச்செய்து, பிரச்சினையை விசாரித்தேன்.

தனக்கு தூக்கம் பிடிக்கவில்லை, கைகள் நடுங்குகின்றன, தலை ஒரு பக்கமாக வலிக்கிறது, என்னாகுமோ ஏதாகுமோ என்று எப்பொழுதும் பயமாகவே இருக்கிறது. அதற்கெல்லாம் காரணம் தன்னுடைய இளைய மகளின் செயல்பாடுகள்தான் என்றார்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் தன் மகள், தன் வயதுக்குரிய பக்குவம் இல்லாமல் நடந்து கொள்வதாகவும், காரணமில்லாமல் எரிச்சலும் கோபமும் கொள்வதாகவும், தான் நினைத்தது மட்டுமே சரி என்று பிடிவாதமாகத் தன்னிடம் சண்டையிடுவதாகவும் கூறினார். மகளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் கூறிய அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கு மனப் பதட்ட நோய் இருப்பதாக அறிய முடிந்தது. அவர் அதில் இருந்து குணமடையத் தேவையான மருந்துகளைப் பரிந்துரைத்தேன்.

மருமகளைக் குறை சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்கலாம், ஆனால் மகளைப் பற்றி ஒரு தாய், புதியவரிடம் குறை சொல்கிறார் என்றால் நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கும் என்று அவர் மகளையும் ஒரு முறை ஆலோசனைக்கு அழைத்து வரச் சொன்னேன்.

பத்து நாட்கள் கழித்து தொடர் சிகிச்சைக்காக என்னைச் சந்திக்க வந்த அவர், தன் கணவருடன் வந்திருந்தார். தனக்கு இருந்த மனப் பதட்ட அறிகுறிகள் எல்லாம் சரியாகி, தற்போது நலமாக இருப்பதாகவும் தன் கணவர்தான் மிகவும் சோர்ந்து காணப்படுவதாகவும் கூறினார்.

அவர் கணவரிடம் ‘என்ன செய்கிறது?’ என்று நான் கேட்க, மிகவும் களைப்பாக சக்தியே இல்லாதது போல் உணர்வதாகவும், காலையில் எழுந்தவுடன் மனம் மிகுந்த இறுக்கமாக இருப்பதாகவும், எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருப்பதாகவும் கூறினார். மேலும் அவரும், தன்னுடைய பிரச்சினைகளுக்கு தன் மகள்தான் காரணம் என்று தன் மனைவியைப் போலவே கூறினார். எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக தன் மகள் இருப்பதாகவும், சிறிய பிரச்சினைகளைக் கூட மிகப் பெரியதாகப் பார்ப்பதாகவும் கூறி வருத்தப்பட்டார்.

‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று மகளை நோக்கி ஆனந்தமாகப் பாட வேண்டிய தந்தையே, மிகவும் மனம் நொந்து தன் மகளின் செயல்பாடுகள் பற்றி சொல்லி வருத்தப்பட்டது, உண்மையில் அவர் மகளுக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தியது. அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டிருப்பதைப் புரிய வைத்து, அதில் இருந்து மீண்டு வர சில மருந்துகளைப் பரிந்துரைத்து விட்டு, கண்டிப்பாக அவர்களின் மகளையும் சிகிச்சைக்கு அழைத்துவரும்படி கூறினேன். அவரிடம் சொல்லி அழைத்து வருவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறினார்கள் இருவரும்.

அவர்கள் சென்று சரியாக ஒரு வாரம் கழித்து, அவர்களின் மூத்த மகன், தன் இளைய சகோதரி தன்னுடன் தொடர்ந்து சண்டையிடுவதால் தன்னுடைய நிம்மதி எல்லாம் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டு வந்தார். வீட்டிலிருந்தபடி ஐ.டி.யில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டார். அவருக்கான ஆலோசனைகளை வழங்கிவிட்டு, அவரிடமும் அவர் சகோதரியை ஒரு முறை என்னிடம் அழைத்து வரும்படி கூறி அனுப்பி வைத்தேன். ஒரு மாதம் கழித்து ஒரு நாள் அவர், தன் சகோதரி திருமணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவித்துவிட்டு பின் மறுப்பதால் வீட்டில் உள்ள  அனைவரும் மிகக் குழப்பமான மனநிலையில் இருப்பதாக என்னிடம் வந்து கூறினார்.

வீட்டில் ஒருவருக்கு ஏற்பட்ட மனநலப் பிரச்சினை, எப்படி மற்ற மூவரின் மனநிலையில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது என்பதைத் தெளிவாகக் காண முடிந்தது. இதற்கெல்லாம் காரணமான அவரை,  ‘எனக்கே அவரைப் பார்க்கனும் போல் இருக்கு’ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அவருடைய தங்கையை ஒரு வழியாகப் பேசி அழைத்து வந்து விட்டதாகவும், வெளியில் காத்திருப்பதாகவும் கூறினார்.

குடும்ப உறுப்பினர்கள் மூவர் மூலம் எதிர்மறையான குணங்களால் மட்டுமே அறியப்பட்ட ஒருவரை முதலில் சந்திக்கும் போது, நான் கேள்விப்பட்ட மோசமான சுபாவங்களுடன் கூடிய ஒரு  நபரைப் பார்க்கப் போவதாக நினைப்பது சரியாக இருக்காது. அவரைப் பற்றி என் மனதில் ஏற்பட்ட முன்முடிவுகளையும், தீர்மானங்களையும் முற்றிலும் ஒதுக்கி விட்டு, திறந்த மனதுடன் எந்த வித கண்டனம் செய்யும் மனப்பான்மையுமின்றி, குறை காணும் மனமற்று, புதியதொரு நபரைச் சந்திப்பது போல் சந்தித்தால் மட்டுமே அவர் பிரச்சினைகளை முழுவதுமாகப் புரிந்து கொண்டு அவருக்கு உதவி செய்ய முடியும்.

தன்னிடம் உள்ள குறைகளையெல்லாம் கண்டுபிடித்து அதை மாற்றிக் கொள்ள அறிவுரை சொல்வார்களோ என்ற பயத்துடன் வரும் அந்தப் பெண்ணை, சிறு புன்னகையுடன்  வரவேற்று அமரச் செய்து, அவரைப் பற்றிய எந்தவித முன் முடிவுகளும் எனக்கில்லை என்பதை முதலில்  அவருக்குப் புரிய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, அவரும் தன் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் ஒரு இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று நம்பிக்கை கொண்டு தன் மனதினைத் திறப்பார். அந்த மனநிலையுடனே நான் அவரைச் சந்திக்க, அவரும் தன் பிரச்சினைகளை அழுதுகொண்டே சொல்லத் தொடங்கினார்.

தன் கல்லூரிக் காலத்தில் தனக்கு நேர்ந்த சில துயரமான சம்பவங்கள் தன் மனதை பாதித்தது முதல் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். முழுமையாக அவர் பிரச்சினைகளைக் கேட்டதில் அவருக்கு மாதவிடாய்க்கு முன் ஏற்படும் மனச்சோர்வு நோய் இருப்பது கண்டறியப்பட்டு அதில் இருந்து மீண்டு வருவதற்குத் தேவையான சிகிச்சை அளித்தேன்.

‘நாம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு புத்தகமே. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏதாவது ஒரு விஷயம்  இருக்கும்’ என்று  மனநலப் பிரிவு பேராசியர் எனக்கு சொல்லிக் கொடுத்தது ஞாபகத்திற்கு வந்து சென்றது. முன்முடிவுகளின்றி புத்தம் புதிதாக ஒவ்வொருவரையும் சந்திப்பது மட்டுமே, அந்த மனிதரையும்  சூழலையும் முழுமையாக உணர்வதற்கு உதவும்  என்பதே அவரிடம் நான் கற்ற பாடம்.

நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை, அவர்கள் பற்றிய நம் கருத்துக்களுடனும், முன் முடிவுகளுடனும், அபிப்ராயத்துடனும் பார்க்கிறோம். உண்மையில் ஒரு மனிதனுடைய குணங்கள் என்பது நிலையானவை அல்ல. மாறாக, மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறாதது என்பது போல மனிதனின் குணாதிசயங்களும் பல மாற்றங்கள் கண்டு மாறிக் கொண்டேயிருக்கும் என்றுதான் அறிவியலும்  நமக்குச் சொல்கிறது.

ஒரே நதியில் ஒருவர் இருமுறை கால் நனைத்திட முடியாது என்ற ஹெராக்லிடஸ் உடைய புகழ் பெற்ற சொற்றொடர் போல் நாமும், நாம் சந்திக்கும் மனிதர்களும் மாறிக்கொண்டேதான் இருக்கிறோம். ஒரு முறை நாம் சந்தித்த மனிதரை மீண்டும் மறுமுறை நாம் சந்திப்பதேயில்லை. நாமும் மாறியிருப்போம், மற்றவரும் மாறியிருப்பார்.

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பிறர் பற்றிய நம் அபிப்ராயங்களை, முடிவுகளை, கருத்துக்களை முற்றிலும் மறந்துவிட்டு, நம் நண்பரோ, உறவினரோ யாராக இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் திறந்த மனதுடன் புத்தம் புதிதாய்ச் சந்திக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டால்,  நாம்  வாழும் சிறியதொரு வாழ்க்கை புதியதாகவும் மகிழ்ச்சியாகவும் மிக அழகானதாகவும் இருக்கும்.

இப்படித்தான் ஒரு முறை என் அருமை  நண்பர் ஒருவரிடம் புத்தம் புதிதாய்ச் சந்திப்பது பற்றிய என் புரிதலை, நுண்ணர்வைப்  பகிர்ந்து கொண்டேன். அதைக் கேட்டு நன்றாகப் புரிந்துகொண்ட அவர், அதற்கு முன்பாக  என்னிடம் வாங்கிய பழைய கடன்களை எல்லாம் முற்றிலும்  மறந்துவிட்டு, தினமும் திறந்த மனதுடன், புத்தம் புதிதாய் என்னை வந்து சந்தித்து புதியதாகக் கடன் கேட்கத் தொடங்கி விட்டார். 😃😃

கட்டுரையாளர்:

Dr. ர. நிஷாந்த், D.P.M,
மனநல மருத்துவர்,
அருப்புக்கோட்டை,
தொடர்புக்கு: 9486496169
ravi.nishanth79@gmail.com

படங்கள்: இணையத்திலிருந்து


Comment (1)


Suresh R G

அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *