பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு
கல்விக் கட்டுரை : சு. உமா மகேஸ்வரி
பள்ளிக்கல்வியின் சூழல் நாளுக்கு நாள் பல வழிகளில் ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது. இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அதிகம் பேசப்படும் ஒன்றாக, போதைப்பொருள் பிரச்சனை இருந்துவருகிறது. அது குறித்து செங்கல்பட்டு மாவட்டப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவரங்கள் கீழ்வருமாறு.
மாவட்ட ஆட்சியரது வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில், சட்ட விரோத போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்தல் குறித்தான, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்குதல்.
மாணவர்களிடையே COOL LIP என்ற போதை தரக்கூடிய மிட்டாய் பயன்பாடு உள்ளதா என்பதை ஆசிரியர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.
பள்ளி அருகில் உள்ள கடைகளில் COOL LIP விற்கப்படுகிறது எனத் தகவல் தெரிந்தால், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்திடல் வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கும் தகவல் அளித்திட வேண்டும்.
RBSK (Rashtriya Bal Swasthya Karyakram) என்ற மருத்துவக் குழு, பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்தும்போது, மாணவர்களின் பற்களைப் பரிசோதனை செய்து, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் கறைகள் உள்ளதா எனக் கண்டறிந்து, அம்மாணவர்களுக்கு த் தனியே உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
அம்மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதைக் கண்டறிந்து, மந்தன முறையில் காவல் நிலையத்தில் புகார் தரப்படவேண்டும். அவ்வாறு மந்தன முறையில் காவல்துறையில் தரப்பட்ட புகாரின் நகல், முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
பிரதி வாரம் திங்கட்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில், அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள், உளவியல் ஆலோசகர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மூலமாக, போதை விழிப்புணர்வு சார்ந்த கருத்துருக்களை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்களிடையே உரையாற்ற வேண்டும்.
போதை விழிப்புணர்வு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும். காவல்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து, பாரத சாரணர் சாரணியர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை இணைத்து, போதை விழிப்புணர்வுப் பேரணி பள்ளியளவில் நடத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கை வழிகாட்டுதலைத் தருகிறது.
சென்னை சுற்றுவட்டாரத்தில் கண்ணகி நகர், வடசென்னை, பல்லாவரம், குரோம்பேட்டை, ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்கள் இந்த COOL LIP பழக்கத்தைக் கைக்கொண்டுள்ளதாகக் கூறினர். இதனால் மாணவர்கள் சமுதாயம் செல்லும் மோசமான பாதை குறித்தும் தங்கள் சி.ஆர்.சி பயிற்சி அரங்குகளில் வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட சென்னைப் பகுதி மாணவர்களிடம் மட்டுமே இந்தப் பழக்கம் உள்ளதா? தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இந்தப் பழக்கம் எவ்வாறு இருக்கிறது என ஆசிரியர்கள் சிலரிடம் பேசும்போது, கள நிலவரம் என்னவென்று புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில், இந்தச் சுற்றறிக்கைகள் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் என, அனைத்து மாவட்டங்களிலும் கடந்த மூன்று மாதங்களாகச் சுற்றி வருகின்றன.
தஞ்சாவூரைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி அவர்கள் இது குறித்துப் பேசும்போது, “வழிபாட்டுக் கூட்டத்தில உறுதிமொழி எடுக்கச் சொல்லியிருக்கோம். வாசல்ல tobacco free zone என்று ஒட்டியிருக்கோம். தலைமையாசிரியர்கிட்ட பக்கத்துல எந்தக் கடையிலும் போதைப்பொருள் விற்பனையில்லைன்னு சான்று வாங்கியிருக்கோம். மாணவர்களிடம் இருந்தால், அதைப்பெற்று அன்பாகக் கண்டிச்சிருக்கோம் என்கிற அளவில் அரசும் கல்வித்துறையும் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கின்றன. உண்மையில் இந்தப் பழக்கம் வெளிவட்டாரப் பெரியவர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் போன்றோரிடமிருந்து மாணவர்கள் பழக்கத்திற்கு வருகிறது. பெற்றோரே பலர் அப்படி வரும்போது, யாரிடம் போய்ச் சொல்வது? விற்பவர்களுக்கும் உபயோகிப்போருக்கும் கடுமையான தண்டனைக்கு வழிவகை செய்யாமல், பள்ளியையோ மாணவர்களையோ குறை சொல்வது அர்த்தமற்றது” என்கிறார்.
“அரசு இதன் விற்பனையைத் தடைசெய்ய வேண்டும். பள்ளி மாணவர்களிடையே வயது வித்தியாசம் இன்றி, இப்பழக்கம் பரவி வருகிறது. பல மாணவர்களை இப்பழக்கத்திற்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஷாலினி.
“இதற்காகவே எங்கள் பள்ளியில் கேமரா வைக்க வேண்டும் என நான் வற்புறுத்தி, சில ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி நன்கொடையாளர்கள் மூலம் கேமரா வைத்தோம். தற்போது ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் பள்ளிக்கு வெளியே என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. பெண் பிள்ளைகள் இதற்குப் பணம் கொடுத்து உதவுகிறார்கள்” என்கிறார் திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர் கௌதமன்.
“எங்கள் பள்ளி அருகில் கடைகளில் விற்பனை இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகத் (PTA) தலைவரை வைத்து வார்னிங் கொடுத்துள்ளோம். மீறினால் அவரு இவங்களை வேற மாதிரி கவனிப்பார்னு பயம். நம்ம பையனுகளே ஏஜன்சி எடுத்து நடத்துறாங்க. காட்டில்தான் அவனுகளுக்கு ஓப்பன் டாய்லெட். மண்ணில் புதைத்து வியாபாரம் செய்வாங்க. நாங்களும் சஸ்பெண்ட் பண்ணிட்டு இருக்கோம்” என்கிறார் தாராபுரத்தில் அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஜெய கீதா.
“அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை கமிஷன் போகிறது. சென்ற ஆட்சியில் குட்கா கமிஷன் ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சரே ரெய்டில் சிக்கினார். வட இந்தியக் கூலித் தொழிலாளர்கள் மூலமே இதுபோன்ற பழக்கங்கள் தமிழகத்தில் நுழைந்தது. இப்பழக்கத்தால் வாய்ப் புற்றுநோய் ஏற்படும்” என்கிறார் சீர்காழி ஆசிரியர் கண்ணன்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமப் பகுதி ஒன்றின் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர், “முறத்தில் அள்ளி அள்ளிக் கழிப்பறைகளில் கொட்டினேன், COOL LIP பாக்கெட் கவர்களை” என்று கூறி வேதனையாகப் பகிர்ந்துகொண்டார்.
கூடுவாஞ்சேரி அருகே சில பள்ளிகளில் மாணவர்களிடம் பேசும்போது, சின்ன பசங்ககூட கூலிப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஆசிரியர், “பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், ஒருநாள் முழுவதும் தங்கள் பள்ளிகளில் நடக்கும் கூலிப் பிரச்சனை குறித்துதான் பேசி வருந்துகின்றனர். மொரட்டுப்பாளையம், வாவி பாளையம், முதலிபாளையம், ஊத்துக்குளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களும் இந்த போதைப் பொருள் பயன்பாட்டால் சீரழிவதைக் காணச் சகிக்கவில்லை” என்கிறார்.
கரூர் பகுதி ஆசிரியர் சாதாரணன் என்பவர், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகர மயமான தனது பள்ளியில், இந்த கூலிப் பழக்கக் குழந்தைகளைக் கண்டறிந்து, அதைக் களையப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து எடுத்த நடவடிக்கைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு, தனது முகநூலில் விரிவாக எழுதியிருந்தார்.
இப்படி ஏராளமான கதைகள் அன்றாடம் நடந்துகொண்டு இருக்கின்றன பள்ளிகளில். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களைக் கைக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் வந்தபிறகு, பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் மதுக்கடைகளுக்குச் சீருடையில் செல்வதாகவும் சில பள்ளிகளில் பள்ளிக்குள்ளேயே மது அருந்திவிட்டு வந்து மாணவர்கள் பிரச்சினை செய்வதாகவும் செய்திகளைப் பார்த்திருக்கலாம்.
ஆனால் கொரோனா காலத்தின் கொடையால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இலைமறை காய்மறையாக இருந்த இந்த போதைப்பொருள் கலாச்சாரம், தற்போது பள்ளிகளில் வெளிப்படையாகவே வேரூன்றி, மாணவர் சமுதாயத்தை நாசம் செய்து வருகின்றது.
இப்படியான பழக்கம் கண்டறியப்பட்ட எத்தனையோ மாணவர்கள், மருத்துவச் சிகிச்சைக்கும் செல்கின்றனர். அப்படியான ஒரு சூழலில் ஒரு மருத்துவர் பகிர்ந்துகொண்ட செய்தி நம்மைத் திகைக்க வைக்கிறது. “இந்த ‘கூலிப் ‘ போதை மருந்துப் பொடியில் கண்ணாடித் துண்டுகள் மிகப் பொடியாக அரைத்துக் கலக்கப்படுகின்றன” என்கிறார் அவர். அதை மாணவர்கள் வாயில் வைத்து அடைத்துக்கொள்ளும்போது, வாயின் உட்புறம் இருக்கும் மிக மெல்லிசான தசைப் பகுதியை அறுத்துச் செல்லும் கண்ணாடித் துண்டுகள், இரத்தத்தில் உடனடியாக போதை மருந்து கலப்பதற்காகவும் அந்த போதை உணர்வை வீரியப்படுத்துவதற்காகவும் அப்படி காலக்கப்படுகிறது” என்று சொல்வதை எப்படி நம்மால் சந்தேகிக்க முடியும்?
இந்தப் பழக்கம் ஏழை – பணக்காரன், ஆண் குழந்தைகள் – பெண் குழந்தைகள், அரசுப்பள்ளி – தனியார் பள்ளி என்று எந்த வேறுபாடுகளும் இல்லாமல், அனைத்துத் தரப்பு மாணவர்களையும் அடிமைப்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளும் இதைப் பயன்படுத்துவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனனர். எண்ணிக்கையில் குறையலாம். ஆனால், இப்போது மது குடிக்கும் பழக்கம் எப்படிப் பெண் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லையோ, அதுபோலவே இதுவும்.
வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதை உபயோகிப்பதை, ஒவ்வொரு பள்ளியையும் கண்காணித்தால் தெரிந்துகொள்ள முடியும்.
தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்கள் ஓரளவு பெற்றோர்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதால் கண்டறிய முடிவதாகவும் பெரும்பாலும் மீட்டுவிடுவதாகவும் சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும், பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் என்றே கூறுமளவிற்கு வீடுகளில் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் எதார்த்தம். ஏனெனில், இந்தச் சமுதாயத்தில் அன்றாடங்காய்ச்சிகளாகவே வாழும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் கடைக்கோடி மக்களின் குழந்தைகளுக்கான அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் இந்த வியாபாரிகளின் வலையில் சிக்கித் தவிப்பவர்கள்.
அரசாங்கம் நினைத்தால் இந்த போதைப் பொருள்கள் தயாரிப்பு, விநியோகம் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும் என்று சுற்றறிக்கைகள் விடுவது எந்த வகையிலும் பொறுப்பேற்காத தன்மையைக் காட்டுகிறது.
பாம்பின் கால் பாம்பறியும். ஆமாம், காவல்துறைக்குத் தெரியாமல் எந்தக் கடைகளுக்கு இந்த போதைப் பொருள்கள் வந்துவிடும் சொல்லுங்கள். அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் இதுபோன்ற கேடுகள் சமூகத்தில் நடக்க வாய்ப்பு உண்டா?
அதோடு, எந்த ஆசிரியர் இயக்கங்களும் சங்கங்களும் இது குறித்து அரசையோ கல்வித் துறையையோ ஏன் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்? அல்லது ஏன் இதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்ளவில்லை? என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம்.
இத்தனை விபரீதமான பழக்கத்தை ஒழிக்க, பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கச் சொல்கிறது அரசு. விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தக் கூறுகிறது.
ஆனால், தலைமை ஆசிரியர் பாடம் நடத்தும் ஆசிரியர்களது வகுப்பறையைக் கவனித்து எமிஸ் ஆப்பில் போட வேண்டும். அதில் இதுபோன்ற மாணவர்கள் வகுப்பறைகளில் இருக்கின்றனரா என்று ஏதாவது கேள்வியை வடிவமைத்திருக்கிறதா கல்வித்துறை என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
தேசிய கல்விக் கொள்கை, இப்படியான மாணவர்களுக்கோ பள்ளிகளைப் பீடித்திருக்கும் இந்த விபரீதப் போக்கிற்கோ என்ன தீர்வை வைத்துள்ளது?
இந்த அரசு எடுக்கும் கல்வி சார்ந்த திட்டங்களில் இந்தப் பிரச்சனைக்கு என்ன திட்டம் வைத்துள்ளது? பள்ளி மேலாண்மைக் குழுக்களில் இவையெல்லாம் மனம் திறந்து பேசப்படுகிறதா? கிராமங்களில்கூட வேரூன்றி வளர்ந்துள்ள இந்தப் பழக்கங்களைக் களைய, கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் போடப்படுகிறதா?
மாணவர்கள் எதிர்காலம் நாசமாகி வருவதைத் தடுக்க, கல்வி அமைச்சர் எடுத்துவரும் அதிரடியான நடவடிக்கைகள் என்ன?
ஆசிரியர்களும் வாய்மூடி மௌனமாகக் கடந்து செல்லும் போக்கு, எதிர்காலத் தலைமுறையினர் நம் கண்முன்னே சின்னாபின்னமாகி வருவதையே உறுதி செய்கிறது.
கல்வி அரசியலின் போக்கில், பெரும்பான்மை மக்களில் ஒருபகுதியினர், கல்வி கற்று உயர்ந்த நிலைக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, திட்டமிட்டு அவர்களுக்கான கல்வி மறுக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சனம்.
- சு. உமா மகேஸ்வரி, கல்விச் செயற்பாட்டாளர்

Regurathi Pandian S
October 29, 2023சாராயம் விற்கும் அரசாங்கம், அதற்கு காவல்காக்கும் காவல்துறை, இந்த அதிகாரிகளைக் கொண்டு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு என்பது பித்தலாட்டம். அவர்களுக்கு தார்மீக உரிமையே இல்லை. தகுதியுமில்லை.