தபால்காரர் தெய்வமான கதை
திரைப் பார்வை
‘அலை ஓசை’ நாவல் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும், அதன் முதல் அத்தியாயத்தில் தபால் சாவடி என்று வரும். 1930களின் போஸ்ட் ஆபீசை, கல்கி அவ்விதம் எழுதியிருப்பார். ‘வெளியே சற்றுத் தூரத்தில் ‘ஜிங் ஜிங் ஜிக ஜிங்’ என்ற சத்தம் கேட்டது. வர வர அந்தச் சத்தம் தபாலாபீசை நெருங்கியது. ரன்னர் தங்கவேலு கையில் உள்ள ஈட்டிச் சிலம்பைக் குலுக்கிக்கொண்டு தபால் சாவடியின் வாசலுக்கு வந்து சேர்ந்தான்‘ என்று அந்த அத்தியாயத்தை முடித்திருப்பார் கல்கி.
1930களில் தபால்காரருக்கு ரன்னர் என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது என்பதை அறிகிறோம்.
தபால்காரர்கள் வெள்ளையர் காலத்திலேயே கேந்திரமான பணியை வகித்தார்கள். நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த தபால்காரர்களுக்கும் தற்காலத்தில் வேலை பார்க்கும் தபால்காரர்களுக்கும் மிக முக்கியமான வேறுபாடே, முன்னவர்கள் நடந்தும் ஓடியுமே கடிதங்களைக் கொண்டு சேர்த்தார்கள் என்பதுதான். வனத்திலும் மலையிலும் அவர்களின் தடத்தை இந்தத் திரைப்படம் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது.
‘ஹர்காரா‘ படத்தைப் பார்த்ததும் ஹர்காரா என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தபால்காரர் என்று தெரிந்தது. நூறாண்டுக்கு முந்தைய தபால்காரரின் கதையைக் கேட்கிற இன்றைய தபால்காரர்..
எல்லா வேலைகளிலும் ரொம்ப முன்னால ஒருத்தர் இருந்திருப்பாரே.. இன்றைய மாறுதல்கள் எல்லாவற்றின் ஆரம்பமும் அவர் அல்லவா?! அவரின் கதை என்ன? அவர் ஒரு மலை மக்களின் தெய்வமாக மாறியது எப்படி?
சென்ற காலத்தின் வரலாற்று விழுமியங்கள் நிகழ்காலத்தில் புதைக்கப்பட்டதால் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மண்டிக் கிடக்கும் சூழலில் வந்திருக்கும் சரியான கலைப் படைப்பு. ஆனால் தியேட்டரில் வெகுஜனங்களுடன் பார்த்து, திரைப்படம் முன்வைக்கும் விவாதங்களை ரசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. இதைப் பற்றியும் கவலை மேலிடுகிறது.
பாலசந்தரின் ‘தண்ணீத் தண்ணீர்’ வெகுமக்கள் திரள் முன்பு எத்தனை விவாதங்களைத் தந்தது? ஜெயிலருக்கும் சந்திரமுகிகளுக்கும் கோடித் திரைகள் திறக்கட்டுமே.. எம் மக்களின் கதைகளைக் கேட்பதற்கு ஓரிரு திரைகளாவது ஒளிரக்கூடாதா? இப்படித்தான் ‘கக்கன்’ என்றொரு படம் வெளியாகி, தியேட்டர் இல்லாமல் பார்க்க முடியாது போனது. தமிழ்த் திரைஅரங்குகள் வெகுஜன விழுமியத்தில் இருந்த காலம் போய்விட்டது.
சரி, படத்துக்கு வருவோம்.
மலையும் வனமும் சூழ்ந்திருக்கும் கிராமம் ஒன்றில், மலை மக்களைச் சமாளிக்க முடியாத தபால்காரரின் சிரமம் மிகுந்த பணிக்கிடையே, அவர் கேட்கும் பழைய தபால்காரரின் கதையை அவரோடு நாமும் கேட்கிறோம். ஒரு தபால்காரனின் துணிச்சலான முடிவு, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வர்த்தகச் சதியை முறியடிக்கிற கதையை, அதன் விளைவாக அவன் கழுவேற்றப்பட்டு தெய்வமாகிற சரித்திரத்தை நாமும் கேட்கிறோம்.
19ஆம் நூற்றாண்டில் வெள்ளையன், தன்னை எதிர்ப்பவர்களைத் தூக்கில் ஏற்றுவான், பீரங்கி வாய்முன் சுட்டுப் பொசுக்குவான். கழு ஏற்றினானா என்று தெரியவில்லை. இந்தப் படத்தின் கதை விவாதத்தில் பயணித்திருக்கிற வாசிப்பை நேசிப்போம் குழுவின் கதிரவன் ரத்தினவேலிடம் பேசும்போது, அப்படியான செய்திகள் கிடைத்திருக்கின்றன என்கிறார். மலை சூழ்ந்த சூழலில் அதிகாரம் செலுத்துகிற வெள்ளைத் துரைகள் தனக்கு வாய்ப்பான முறையைப் பின்பற்றியிருக்கலாம் என்று சமாதானம் கொண்டேன்.
ஒரு மலைக் கிராமத்துக்குப் புதிதாக வந்திருக்கும் தபால்காரரை அந்த மலைக் கிராமத்து மக்கள் அணுகும் முறையில் பளிச்சென்று படம் தொடங்குகிறது. விடியும்போதே தபால்காரரை எழுப்பி, சேமித்த பணத்தைக் கேட்டு, அதிலும் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அதிகமாகப் பெற்றுச் செல்கிற பெண்ணும் அப்பெண்ணுக்கு ஆதரவாகப் பேசுகிற மக்களும்..
கொட்டாவி கலையாத முகத்துடன் பணத்தைக் கொடுக்கிற நம் தபால்கார் காளி என்ன செய்வார், பாவம்? தனக்கு மாற்றல் வேண்டி மேலதிகாரிகளுடன் பேசுகிறார். அதுவும் எப்படி? சிக்னல் இல்லாத மலைப் பிராந்தியத்தில் போனை வைத்துக்கொண்டு அலைந்தவாறு சிக்னல் கிடைக்கும்பொழுதில் சின்ன சந்தோஷத்தை முகத்தில் காட்டிப் பேச, மாறுதல் மறுக்கப்பட, உடனே எரிச்சலைக் காட்டுகிற அழகு..
மலைக் கிராமத்து தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டர், குமாஸ்தா, போஸ்ட்மேன் எல்லாம் ஒருவரே. நம் ஊர் ஓராசிரியர் பள்ளி போல, ஒரு நபர் போஸ்ட் ஆபிஸ்.
தன் மாறுதலுக்காக மலை மக்களுக்கான அந்த ஒற்றைத் தபால் அலுவலகத்தையும் இல்லாமல் செய்ய, அந்த வெள்ளந்தி மக்களையே ஏமாற்றி அவர்களிடம் கைநாட்டு வாங்குகிறார் இந்தத் தபால்காரர் காளி.
எத்தகைய மக்கள்? அரசுப் பணியில் இருக்கும் அந்தத் தபால்காரரை வெள்ளந்தியாக நம்புகிற மக்கள். வாழ்க்கையில் நேர்மறையான நம்பிக்கையை மட்டுமே வெளிப்படுத்துகிற மலைவாசிகள். அந்த ஒற்றைக் காக்கிச் சட்டைக்காரரின் மேல் உரிமையையும் அன்பையும் காட்டுகிற கள்ளமில்லாத மக்கள்.
மாரியம்மாள் என்கிற, மலைமேல் இருக்கிற ஒரு முதிய பெண்ணுக்கு வந்திருக்கும் கடிதத்தைக் கொடுக்க, ‘நடை தூரத்தில்தான் இருக்கிறது’ என்று மலை மக்கள் வழிகாட்ட, போய்க்கொண்டே இருக்கும் மலைப் பாதையில் ஏறிக் களைத்துப்போய் மாரியம்மாளிடம் கடிதத்தைக் கொடுக்கிறார்.
மிக நீண்ட காலம் போராடிய அவளுக்கு, அரசு அவள் கோரிக்கையை ஏற்ற செய்தியைத் தெரிவிக்கிற கடிதம் அது. அது அவளுக்கான கோரிக்கை மட்டுமல்ல; அந்த மலை மீது வாழ்கிற முதியவர்கள் அனைவருக்குமான கோரிக்கை. அது என்ன? அது சொல்லும் அரசியல் என்ன?
முதியோர் பென்சனைத் தபால்காரர் கொண்டு தந்து, வாங்கிக்கொண்டிருந்த மலைமக்களை இனி வங்கிக் கணக்கு மூலமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று முகத்தில் அறைந்துவிட்டது அரசு. மாரியம்மாள் தொடர்ந்து மனுப் போட்டு, மீண்டும் தபால் அலுவலகம் மூலம் தபால்காரரே கொண்டு தருவார் என்று தனது கோரிக்கையில் வென்றிருக்கிற செய்தியைச் சுமந்து வந்திருக்கிறார் நம் காளி. அதாவது, மலை மக்கள் சேமிப்பைத் தபால் அலுவலகம் இல்லாமல் வங்கிக்கு மாற்றலாம் என்று மலை மக்களே கேட்பதாகப் பொய் மனு எழுதி, மக்களிடம் கைநாட்டு வாங்கி இருக்கிற காளி.
மலை மீது ஏறிவரும் பாதையில், ஏகாதிபத்திய வெள்ளையனால் கழுவிலேற்றப்பட்டு தெய்வமான பழைய ‘ஹர்காரா’ என்ற ரன்னர் மாதேஸ்வரனின் கதையைச் சொல்கிறார் அந்த மலைவாழ் பெரியவர் ஒருவர். செஞ்சட்டை அணிந்திருக்கிறார். அவர் காளியைக் கேட்கும் கேள்விகள், திரையரங்கில் பார்த்தால் கைத்தட்டல்களை அள்ளிவிடும் தன்மையுடன் மிகக் கூர்மையாக நம்மைத் துளைக்கின்றன.
மாதேஸ்வரனின் கதை காவியத் தன்மையோடு திகழ்கிறது. மாதேஸ்வரனாக நடித்திருக்கும் ராம் அருண் காஸ்ட்ரோ அந்தப் பாத்திரத்தின் கூர்மையைக் கொண்டுவர இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அவரே படத்தின் இயக்குநரும் அவரே. இயக்குநராகவே அதிகம் ஸ்கோர் செய்கிறார்.
தபால்காரர் காளி பாத்திரத்தில் வருபவர் பெயரும் காளி வெங்கட்தானாம். என்ன அருமையான, இயல்பான நடிப்பு! மலைக் கிராமப் பணியின் மீதான எரிச்சல், பொய் மனு வேலையில் காட்டும் கள்ளத்தனம், மாரியம்மாளைப் பார்த்துவிட்டு வரும்போது தன்னில் எழும் குற்றவுணர்வு, அத்தனையிலும் சிறந்த நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
பட்டப் படிப்பு படித்திருந்தாலும் கிராம வாழ்வை மெச்சி வாழும் அந்தக் கிராமத்தின் இளைஞன், பொய் மனுவைப் படிக்காமலே கையெழுத்துப் போடும்போது தங்கள் ஊர் தபால்காரர் மீது காட்டும் நம்பிக்கை மனதை அள்ளிவிடுகிறது.
விடிந்தும் விடியாத காலையில் சேமிப்புக் கணக்கில் இல்லாத பணத்தை வாங்கி வந்து, அதைக் கறாராகத் திருப்பிக் கொடுத்ததுடன், தனது குட்டியாடை நன்றியுடன் தபால்காரரின் பெயரான காளி என்று பெயரிட்டு அழைக்கும் நன்றியறிதலில் கரைந்துபோகிறோம்.
நவீன யுகத்துத் தபால்காரர் ஒரு சைக்கிளாவது வைத்துக்கொண்டிருக்கலாமே என்பது மட்டும் பெரிதாக உறுத்துதியது. தலைப்பும் மக்களை ஈர்க்கும் விதத்தில் இருந்திருக்கலாம். படத்தின் தொழில்நுட்பக் குறைகளைக் கலைத்துறையில் தேர்ந்தவர்கள் சொல்லக்கூடும். முதல் முயற்சியிலேயே நல்லதொரு படத்தைத் தந்திருக்கும் இந்த வளர்ந்துவரும் கலைஞர்களைப் பாராட்ட மட்டுமே தோன்றுகிறது.
பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்கள் மனம் நிறைக்கும் படங்களில் ஒன்றாகக் கண்டுகொள்வீர்கள். ஹர்காரா, தெய்வமானவர்களின் கதை மட்டுமல்ல; முதல் தலைமுறை அஞ்சல்காரர்களின் வரலாறும்தான்.
- இரா.கோமதிசங்கர்

Comments (0)