காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது
முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்களின் காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது.
முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்கள் பாண்டியர்¸ சேரர் மற்றும் பல்லவர் காலச் செப்பேடுகள் குறித்து மூன்று நூல்களையும் வடகரை, பாதாளி, மதாம் உள்ளிட்ட படைப்புகளையும் கவிஞர் அ.வெண்ணிலா அவர்களுடன் இணைந்து வந்தவாசிப் போர் மற்றும் கம்பலை முதல் என்ற வரலாற்றுக் கட்டுரை நூல்களையும் தந்துள்ளார்.
முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்களை ஆனந்த ரங்கப்பிள்ளையின் தினப்படி சேதிக் குறிப்பு என்ற மகத்தான பதிப்பு முயற்சியின் பதிப்பாசிரியர்களில் ஒருவராக அறிந்துகொண்ட தருணத்தில்¸ அவரது 1801 நாவலை வாசித்தேன்.
தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டில் முடிவுக்கு வந்த எல்லாவிதமான சுதந்திர முயற்சிகளையும் அதாவது குறிப்பாக, தென் தமிழகத்தில் சென்ற 18ஆம் நூற்றாண்டின் இறுதி இரு ஆண்டுகளில் மையம் கொண்டிருந்த புரட்சிகரப் போராட்டங்களின் முடிவுக் காலத்தை இத்தனை விரிவாகப் புனைவாக்கம் செய்த முயற்சி இதற்கு முன்பு எனக்குத் தெரிந்து இல்லை.
‘1857இல் நடந்த சிப்பாய்க் கலகத்தை இந்திய அரசு இந்தியாவின் முதல் சுதந்திரக் போர் என ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. அப்படிப் பார்த்தால் டெல்லி சிப்பாய்க் கலகம் நடப்பதற்கு ஐம்பத்து ஓரு வருடங்களுக்கு முன்பே 1806இல் வேலூர்ப் புரட்சி நடந்தது. அதுவும் சிப்பாய்களால் நடத்தப்பட்டதுதான். இந்தியா போன்ற பெரும் ஜனநாயக நாட்டில் மக்களின் விடுதலைக்காகச் சிப்பாய்கள் போராடினர் என்று பெருமையுடன் குறிப்பது ஜனநாயக மாண்பிற்கு இழுக்கு. மக்கள் புரட்சியே ஜனநாயகத்தில் மதிப்புமிக்கது.
சீருடை அணிந்து மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு, சம்பளம் கொடுப்போரை எதிர்ப்பது எந்த நிலையிலும் விடுதலைப் போராட்டம் ஆகாது. மருது சகோதரர்கள் தலைமையில் நடந்த தென்னிந்தியப் புரட்சியை முதல் சுதந்திரப்போராக அறிவிக்க வேண்டும்’ என்று தென்னிந்தியப் புரட்சி என்ற நூலை வெளியிட்டுள்ள வரலாற்று ஆய்வாளர் திரு.ராஜய்யன் குறிப்பிட்டுள்ளதை 1801 நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் நாவலாசிரியர் இராஜேந்திரன். 1801 நாவலும் அதன் தொடர்ச்சியான காலா பாணி நாவலும் தமிழ்நாட்டின் மகத்தான புரட்சிகர விடுதலைப்போரின் வரலாற்றையும் அதன் பின்விளைவுகளையும் பேசுபவை.
1801 நாவல், 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சாகித்ய அகாதமி விருதுக்கு இறுதிவரை போட்டியில் இருந்தது. அந்த நாவலின் தொடர்ச்சியாக அவர் எழுதிய காலா பாணி நாவலுக்குத்தான் இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. 1799 -1801 புரட்சியின் அடுத்த கட்டத்தைச் சொல்லுகிற நாவல்தான் காலா பாணி. அந்த வகையில் தகுதிமிக்க நாவலுக்கே விருது கிடைத்திருக்கிறது.
வரலாற்று நாவல் என்பது வெறும் சாகசக் கதைகள், போர்க்கள வருணனைகள் என்பதாக மட்டுமே அறியப்பட்டிருக்கிற தமிழ்ச் சூழலில், தென் தமிழகத்தில் நடந்த மகத்தான காளையார் கோவில் போரின் முடிவில் வெள்ளையர்களிடம் கைதிகளாகி நாடுகடத்தப்பட்டவர்களின் கதையைச் சொல்கிற காலா பாணி நாவல் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
விருது பெற்ற காலா பாணி நாவலையும், விருதாளர் மு.இராஜேந்திரன் அவர்களையும் சுவடு இதழின் சார்பிலும் சுவடு பதிப்பகத்தின் சார்பிலும் பாராட்டி மகிழ்கிறேன்.
- இரா. கோமதி சங்கர்

Comments (0)