கல்விப் பாதுகாப்பு நாள் – வித்யாசாகரர் பிறந்தநாள் – AISEC தமிழ்நாடு

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறந்த நாளான செப்டம்பர் 26 , அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி- தமிழ்நாடு சார்பாகக் கல்வி பாதுகாப்பு தினமாக செப்டம்பர் 25 அன்று கொண்டாடப்பட்டது. அத்தருணத்தில் இரண்டு நிகழ்வுகள் பிரதானமாக இடம் பெற்றன.

நிகழ்வில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக பேராசிரியர் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் (AUT, TNGCTA)பலரும் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களும் (AIFETO) கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அது மட்டுமன்றி தேசியக் கல்விக் கொள்கை வரைவு வந்தபோதும் (2019), அடுத்து கொள்கை விளக்கக் குறிப்பு வந்த போதும் தமிழில் மொழிபெயர்ப்புப் பணியை தன்னார்வக் குழுவினருடன் முன்னெடுத்த சிறார் எழுத்தாளர் விழியன் கலந்து கொண்டார்.

இந்திய விவசாயிகள் போராட்டம் நடந்தபோது, அதற்காக தமிழகத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்த தோழர் பாலகிருஷ்ணன் (சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு ) தோழர் மேரி , அகில இந்திய விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மேனாள் தமிழ்நாடு தலைவர் தோழர் ரங்கசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் அறம் இணைய இதழின் ஆசிரியர் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், சுவடு இதழின் நிர்வாக ஆசிரியர் அஹமது மன்சூர், தமிழர் எழுச்சிக்குரல் ஆசிரியர் நாஞ்சில் நாட்டான், சமூக செயற்பாட்டாளர் சௌந்திரராஜன், ஊடகவியலாளர் நெய்வேலி பாலு, அறிவியல் விஞ்ஞானி வெங்கடேசன் , அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு கிளை உறுப்பினர்கள் திரு சுதாகர், திரு லேனா குமார், திரு மருதநாயகம், திரு கோமல் தமிழமுதன், திரு சதாசிவம் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திலகர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

சென்னையில் எழும்பூர் மியூசியம் எதிரில்‌ அமைந்துள்ள இக்சா (ICSA) அரங்கத்தில் செப்டம்பர் 25, ஞாயிறன்று, மாலை 4 -7 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது .

ஈஸ்வர சந்திர வித்யாசாகரர் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

முதல் நிகழ்வாக, மேற்கு வங்காளத்தில் தோன்றி, இந்திய மறுமலர்ச்சியின் முன்னோடியாகத் திகழ்ந்த மாமனிதர் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நிகழ்ந்தது.

சுவடு பதிப்பகத்தை நடத்தி வருபவரும் சமூக மாற்றத்தை முன்வைத்து வாசிப்பு இயக்கத்தை பரவலாக்குவதன் பொருட்டு, நுழைபுலம் என்ற அமைப்பை நடத்தி வருபவருமான தோழர் நல்லு ஆர் லிங்கம் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார்.
மிகச் சிறப்பாக பணியாற்றி இக்காலத்தின் தேவையை கணக்கில் கொண்டு இப்புத்தகம் கொண்டுவரப்பட்டுள்ளது. பேரா மருதநாயகம் அவர்கள் நூலை வெளியிட ஆசிரியர் கோமல் தமிழமுதன் பெற்றுக் கொண்டார்.அதோடு கோமல் தமிழமுதன் அவர்கள் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் குறித்து சிறப்பானதொரு சிற்றுரையையும் நிகழ்த்தினார். உரையானது ஏன் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என வந்திருந்தவர்களுக்கு எழுச்சியூட்டும்படி இருந்தது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாகக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதன் பொருண்மையானது அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் விதமாக அமைந்தது. கல்வியில் பெரும் அழிவினை விளைவிக்கின்ற தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் தாக்கம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக அறிவியல்பூர்வக் கல்வியின் தேவை குறித்து மிகப்பெரிய கருத்துரையாடல் நடைபெற்றது.

சு.உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு (A3), உறுப்பினர், AISEC தமிழ்நாடு

கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்ற சு.உமாமகேஸ்வரி அவர்கள் தனது தலைமை உரையில் , தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வியில் தற்போது நடைமுறையில் பின்பற்றப்படும் திட்டங்கள் பலவும் (இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உட்பட பல திட்டங்கள்) எவ்வாறு தேசியக் கல்விக் கொள்கையின் சரத்துகளாக இருக்கின்றன, ஆசிரியர்கள் நியமனமின்மை , உட்கட்டமைப்பு வசதியின்மை, ஓராசிரியர் பள்ளிகளில் உள்ள பிரச்சனைகள் என தனது அனுபவத்தின் வழியாக கல்வி சார்ந்த சிக்கல்கள் குறித்துப் பேசினார். உயர்கல்வியில் நான் முதல்வன் திட்டம் உட்பட அனைத்தும் தேசிய கல்வி கொள்கையின் வடிவங்களே. ஆனால் முதல்வர் தனது கனவுத் திட்டம் என்று கூறி வருகிறார். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை கல்விப் புரட்சி என்கிறார். கல்வித் துறை அவலத்தில் சிக்கி சீரழிகிறது எனப் பகிர்ந்தார்.

திரு V.அண்ணாமலை
AIFETO பொதுச்செயலாளர்

தனது ஐம்பது ஆண்டுகால அனுபவத்தில் கல்வி எத்தனையோ மாற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் தற்போது தமிழக அரசின் கல்விக் கொள்கை ஆசிரியர்களைப் பணியாற்ற விடாமல் எமிஸ் (EMIS) உள்ளிட்ட கற்பித்தல் அல்லாத பணிகளை செய்ய வைத்து உளவியல் ரீதியாக ஆசிரியர்களை பாதிக்க வைத்து வருகிறது. கல்வித்துறையினாது பொறுப்பு ஆணையர்கள் கைகளில் சென்றுள்ளது ஒரு முக்கியமான பிரச்சனை. அவர்கள் அன்றாடம் ஒரு அறிக்கையும் ஆணையும் அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா காலத்தில் ‌‌
சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். ஆனால் ஆசிரியர்கள் நியமனம் என்பதே இதுவரை இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டே அதில் உள்ள எல்லா திட்டங்களையும் திமுக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. பாடநூல் அச்சடித்து வகுப்பறைகளில் பயன்படுத்தப்படாமலேயே வீணாகிறது. தீவுத்திடலில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் முதல்வர் தங்களுக்கு ஏதேனும் நல்ல திட்டங்களை அறிவிப்பார் எனக் காத்திருந்து ஏமாற்றத்தால் கண்ணீர் விட்டுக் சென்றனர்.

மாணவர்கள் தவறு செய்தாலும் ஆசிரியர்களின் மீதே நடவடிக்கை, மண்டல ஆய்வு என பாடம் நடத்தவிடாமல் அதிகாரிகள் செய்யும் போக்கு தமிழக அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமோ என அச்சமாக உள்ளது. பள்ளிகளை இணைக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் எந்தப் பள்ளியிலும் இல்லை ஆனால் மாதிரிப் பள்ளிகளை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

வகுப்புக்கு ஓராசிரியர் இல்லாமல் மூன்றாம் வகுப்பு வரை பாடநூலை நடத்த விடாமல் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கட்டாயப்படுத்துவது உள்பட தேசிய கல்வி கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் மக்களிடம் நாங்கள் தமிழ்நாட்டில் அதனை உள்நுழைய விடமாட்டோம் என பொய்பேசி வருகின்றனர்.இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும் என்று உரைத்தார்.

பேராசிரியர் ஜெ.காந்திரராஜ்
தலைவர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT)

தொடர்ந்து பேச வந்த பேராசிரியர் ஜெ.காந்திரராஜ் தனது அனுபவத்தையே முன்வைத்து உரையாட ஆரம்பித்தார். நான் கல்லூரியில் சேர்ந்து படித்ததற்குக் காரணம் இட ஒதுக்கீடு தான். ஆனால் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் இட ஒதுக்கீடு என்ற பதமே ஓரிடத்தில் கூட இடம்பெறவில்லை. அப்படியென்றால் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே கல்வி கிடைக்க வேண்டும் என்று புதிய தேசியக் கல்விக் கொள்கை உறுதியாகத் திட்டமிட்டுள்ளது. நமக்கென்று ஒரு கல்விக் கொள்கை வகுக்க வேண்டும் என அனைவரும் கேட்டதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 14 பேர் அடங்கிய கல்விக் குழுவை தமிழக அரசு நியமித்தாலும் குழு உறுப்பினர்கள் யாவரும் அமர்ந்து பணியாற்றுவதற்கென ஒரு இடத்தைக் கூட தரவில்லை என்பதையும் அக்குழு பெயரளவுக்கு செயல்பட்டு வருகிறது என்பதையும் அனைவர் முன்பும் இந்த அரங்கத்தில் பதிவு செய்கிறேன் என்றார்.

உயர்கல்வி முழுவதும் தேசிய கல்வி கொள்கை ஊடுருவி வருகிறது. திறன் மேம்பாடு என்ற பெயரில் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலமாக உயர்கல்விப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்து கொடுத்திருக்கிறது. இது தேசிய கல்விக் கொள்கையில் உள்ள கல்வி கிரெடிட் பேங்க் முறையை அடிப்படையாக க் கொண்டு (ABC) நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திறன் மேம்பாடு கல்வி உயர்திறன்கள் அன்றி சாதாரண திறன்களையே மையப்படுத்தி கொண்டுவரப்பட்டுள்ளது ஆன்லைன் கல்வி வழியாக கொண்டு வரப்படும் இது கல்வி தரத்தை மிகவும் சீரழிக்கவே விளைகிறது.

மாணவர்கள் எண்ணிக்கை அளவின் அடிப்படையில் கல்லூரிகளை மூடவும் திட்டமிட்டு வருகின்றனர். 45000 எண்ணிக்கையுள்ள கல்லூரிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில், அவற்றை சில நூறு பல்கலைக்கழகங்களாக அல்லது தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். உயர்கல்வி இன்னும் சில வருடங்களில் எட்டாக்கனியாகிட வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. கல்வியை முழுமையாக வியாபாரமயமாக்கிடவே இக்கல்வி கொள்கை வழிகாட்டுகிறது.
மத்திய அரசின் வழியில் மாநில அரசு தேசிய கொங்கு கொள்கையின் பல அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருவதால் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பையும் உருக்குலையும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றின் அபாயத்திலிருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் காக்கப்பட வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

அதோடு, தான் சார்ந்த அமைப்புகள் அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியுடன் இணைந்து களத்தில் நின்று போராடத் தயாராக இருக்கிறோம் என்றும் பதிவு செய்தார்.

பேராசிரியர் P.சிவக்குமார்
மேனாள் முதல்வர் , குடியாத்தம் கலைக் கல்லூரி

தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் பாதகங்கள் இன்று புதியதாக உருவானவை அல்ல. ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 1986இல் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை அன்றே விமர்சித்து கூட்டங்கள் நடத்தினோம் என்று தனது மாணவர் பருவம் முதல் இன்று வரை கல்விக் கொள்கை குறித்தான பல பாதகங்களை முன்வைத்தார். உயர்கல்வியின் வியாபாரமயமாக்கல், அரசு உதவி பெறும் தனியார் நிறுவனக் கட்டணக்கொள்ளை எனத் தோலுரித்ததுடன் சுயநிதிக் கல்லூரிகளின் நிலை குறித்து விரிவாகப் பேசினார்.
சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் நிலை எவ்வளவு பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது என்றும் புரிய வைத்தார். 35 ஆண்டுகளுக்கு முன்பே அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி தேசிய கல்விக் கொள்கை 1986ஐ எதிர்த்து கொண்டு வந்த புத்தகத்தை அவையோருக்குக் காண்பித்தார். மேலும்
பல புத்தகத் தரவுகளுடன் இன்றைய தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்தை எடுத்துக்காட்டினார். ஆகவே ஒன்றிணைந்து இந்த கல்விக் கொள்கையின் அபாயங்களைக் களைய முற்படவேண்டும் என்று பகிர்ந்தார்.

பேராசிரியர் T.வீரமணி
மாநிலத்தலைவர் TNGCTA

தேசிய கல்விக் கொள்கை வரைவு வந்த காலத்தில் இருந்து பேசி வருகிறோம். ஆனால் மிக சாமர்த்தியமாக மத்திய அரசின் போக்குக்கு ஏற்ப மாநில அரசு எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்றோம், ஆனால் ஒரு பக்கம் அதற்கு தயாராகிக் கொண்டே இருக்கிறோம். ‘நான் முதல்வன்’ திட்டம் வழியாக திறன் மேம்பாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எதையாவது நிறுத்த முடிகிறதா?

இவற்றின் பாதிப்பு நமக்கு இப்போது தெரியாது. ஆனால் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் அனைத்தையும் இழந்திருப்போம். நம் மாணவர்கள் அத்தனை பேரும் மாடு மேய்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். காரணம் நுழைவுத்தேர்வில் தேறி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சொல்லிவிடும் சூழல்தான் இங்கு உருவாகி வருகிறது.மக்களுக்காக தரமான கல்வியை முழுமையாக இலவசமாகக் கொடுக்கும் போக்கு எந்த அரசுக்கும் இல்லை. கல்விக்குழு தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டதோடு சரி, இது வரை அதன் செயல்பாடு என்ன என்பதே தெரியவில்லை. கூடியதா இல்லையா என்று கூடத் தெரியவில்லை.

கல்வியில் தொலைநோக்குப் பார்வை என்பதே மத்திய மாநில அரசுகள் இருவருக்கும் இல்லை.அதனால் பாதிக்கப்படுவது மாணவர் சமுதாயமே என்றும் இதை முறியடிக்க உடனடியாக அனைவரும் ஒன்று கூடிட வேண்டும் என்றார்.

பேராசிரியர் K.யோகராஜன்
AISEC, தமிழ்நாடு

புதிய தேசிய கல்வி கொள்கை புத்தகத்தை பார்வையாளர்களிடம் காட்டிய இவர், இதை அனைவரும் முழுவதும் வாசிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு தலைப்பிலும் இருக்கும் கடுமையான பாதகங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இதில் மறைந்திருக்கும் பாதகங்களை நம்மால் உணர முடியும்.

தேசிய கல்விக் கொள்கை கல்வி அமைப்பை முழுமையாக மத்தியத்துவப்படுத்த விளைகிறது. மேலும் மதவாத குருட்டுத்தனங்களையும் மூடநம்பிக்கைகளையும் பரப்ப 3 வயது முதல் 8 வயது வரை பாடத்திட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு முனைகிறது. எதிர்கால சமுதாயத்தை அழிக்க நினைத்துப்பார்க்க முடியாத கோணங்களில் திட்டமிடுகிறது இந்த புதிய தேசிய கல்வி கொள்கை என்றார். 5+3+3+4 என்ற இத்திட்டம் மழலையர் கல்வியிலிருந்து கட்டாயப் பாடத்தை திணிப்பதாகக் கூறுகிறது.இதை நாம் ஏற்கக்கூடாது. குழந்தைப் பருவத்திலிருந்தே புராணங்கள் இதிகாசங்கள் மற்றும் கலாச்சார கல்வியைத் திணிக்கத் திட்டமிடுகிறது . முதல் தலைமுறை மாணவர்களைக் கல்வியிலிருந்து தள்ளி வைக்கும் வேலையை கல்வி‌மறுக்கப்படும் சூழலைத் தான் இந்த புதிய தேசிய கல்வி கொள்கை ஆவணம் வலியுறுத்துகிறது.ஆகவே நாம் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறியதுடன் அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் நோக்கம் குறித்தும் அமைப்பால் திரள வேண்டியதன் அவசியத்தையும் பதிவு செய்தார்.

பங்கேற்பாளர்கள் கருத்துக்கள்

கல்லூரி பேராசிரியர் கதிரவன் மற்றும் விவசாய அமைப்பின் தோழர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பதிவு மிக இன்றியமையாதது.

இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் உள் அரங்குகளில் பேசுவது? போராட்டத்திற்கான நாளைக் குறியுங்கள் என்றனர்.

நன்றியுரை
திரு சுதாகர்

நிகழ்வின் இறுதியில் அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு கிளை உறுப்பினர் திரு சுதாகர் அவர்கள் நன்றியுரை கூறினார்.

புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து அடுத்த தலைமுறையை ஆபத்திலிருந்து காக்க ஒன்று திரள்வோம் என்ற முழக்கத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *