மெழுகாய் உருகும் மனங்கள்
தீக் கானல் பற்றிய நேர்காணல்
விபத்துகள் நம்மை உலுக்கி எடுப்பவை. இயற்கைப் பேரிடர்களால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுப்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் மனிதத் தவறுகளால் நேரிடும் விபத்துகள் தரும் இழப்புகளும் வலிகளும் வாழ்நாள் வடுக்களாக மாறிவிடுகின்றன. கும்பகோணம் பள்ளித் தீ விபத்து சமகாலத்தில் நாம் சந்தித்த கொடூரங்களில் ஒன்று.
தீயில் சிக்கி 94 குழந்தைகள் பொசுங்கிப்போயினர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அந்தத் தீ விபத்தில் உயிர்தப்பிய பெண் ஒருவருடனான நேர்காணல் இது. தற்செயலாக நடந்த உரையாடல் ஒன்றில்தான் அவர் கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பியவர் என்ற செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அதைத் தொடர்ந்து சம்பிரதாயமான பேட்டியாக இல்லாமல், இயல்பாக அவருடன் நடந்த உரையாடல்தான் இது. அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க பெயர் குறிப்பிடப்படவில்லை.
விபத்து நடந்தது 2004ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று. 20 ஆண்டுகள் முடியவுள்ள இந்தத் தருவாயிலும் மனதளவில் இன்னும் தீயின் தாக்கம் அவரிடம் இருப்பதைக் காணமுடிகிறது. அந்தக் கோர நாளின் நினைவுகளையும் அதன் பிறகான தனது மனநிலையையும் அவர் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
தென்னிந்தியாவில் ஏற்பட்ட மோசமான தீ விபத்து கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து. அப்போது நீங்கள் எந்த வகுப்பு? சென்னைவாசியான நீங்கள் அந்தப் பள்ளியில் படிக்க என்ன காரணம்?
அப்பா மட்டும்தான் அப்போது சென்னையில் இருந்தார். நானும் தம்பியும் கும்பகோணத்தில் பாட்டி வீட்டில் இருந்தோம். பாட்டி வீட்டுக்குப் பக்கம்தான் அந்தப் பள்ளிக்கூடம். அதனால் பக்கத்துலேயே படிக்கட்டும் என்று சேர்த்துவிட்டார்கள். நான் அப்போ 3ஆம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தேன். தம்பி அப்போது எல்.கே.ஜி.
அந்த நாளில் என்ன நடந்தது என்று நினைவிருக்கிறதா? எத்தனை நண்பர்கள் உயிர் தப்பினார்கள்? உங்கள் தம்பி என்ன ஆனார்?
என் தம்பி அன்று பள்ளிக்கு லீவ் போட்டிருந்தான். அதனால் அதிர்ஷ்டவசமாக அவன் பிழைத்தான். ஒருவேளை அன்று அவன் பள்ளிக்கு வந்திருந்தால், அவன் ரொம்ப சின்ன பையன் என்பதால் தப்பிப்பது கஷ்டமாக இருந்திருக்கும். அன்று கணித வகுப்பு நேரம். ஆசிரியர் வரவில்லை என்பதால் எல்லாருமே கத்திக்கொண்டும் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தோம். அதுவும் வழக்கமான ஒரு நாளாகத்தான் இருந்தது, தீ விபத்து ஏற்படும் வரை. அதன்பிறகு கத்தி வீசியதைப்போல ஒரே அலறல் சத்தம். எல்லாருமே கத்தியபடி ஓடிக்கொண்டிருந்தனர். எங்கும் ஒரே புகைமூட்டமாக இருந்தது.
ஒரு அண்ணாதான் என்னை தூக்கிக்கொண்டு போனார். நான் பாதியிலே மயக்கம் அடைந்தேன். விழித்துப் பார்க்கும்போது மருத்துமனையின் மேற்கூரை தெரிந்தது. அருகில் சில மாணவர்கள் வாழையிலையில் போர்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள். அது மட்டுமே நினைவில் உள்ளது. மற்ற நண்பர்கள் பற்றி நினைவு இல்லை.
அது ஆடி மாதம் என்பதால் பக்கத்தில் கூழ் ஊற்றும் சத்தம் போலத்தான் இருந்தது. தாமதமாகத்தான் எங்களுக்கு தீ பற்றிக்கொண்டது தெரிந்தது. மேலும் கோயிலில் இருந்துதான் தீ பிடித்திருக்கும் என்று நாங்க நினைத்தோம். பிறகுதான் உணவுக் கூடத்திலிருந்து தீ பரவியது தெரிந்தது.
மனித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்புகளில் ஒன்று நெருப்பு. இந்தச் சமூகத்தில் பெண்களே நெருப்போடு அதிக நேரம் நெருங்கி வாழ்கிறார்கள். விபத்தில் பாதிக்கப்பட்ட உங்களுக்கு நெருப்பை அணுக இன்னும் தயக்கம் உள்ளதா?
ஆண், பெண் என்ற பேதமில்லை. பசித்தால் சமைத்துதான் சாப்பிட வேண்டும். தொடக்கத்தில் எனக்கு மிகவும் பதட்டமாகத்தான் இருந்தது. தீக்குச்சி பற்றவைக்கும்போதுகூட நடுக்கமாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது பழகிவிட்டது. இருட்டு அறையில விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மட்டுமே தனியாக இருக்க வைத்தார்கள். அது ஒருவகை உளவியல் சிகிச்சை. அப்படியே பழகிப் பழகி, நெருப்பு நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றுதான் என்கிற இயல்புநிலை புரிய ஆரம்பித்தது.
வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தைப் பார்க்கும்போது எப்படி உணர்வீர்கள்?
இப்போதும்கூட கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். சத்தம் இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
திருவிழாக்களில் தீச்சட்டி எடுப்பது, வாயில் நெருப்பை ஊதி வேடிக்கை காட்டும் நிகழ்ச்சி போன்றவற்றையெல்லாம் பார்ப்பதுண்டா?
கோயிலில் தீபம் காட்டுவதுகூட பயமாகத்தான் இருக்கும். என்ன செய்ய? அங்கேதானே அழுது தீர்க்க முடிகிறது?! தீ விபத்து ஏற்பட்ட அதே ஆண்டில்தான் சுனாமி வந்தது. அதற்காக பயந்துகொண்டு யாருமே கடலுக்குப் போகாமல் இருக்கவில்லையே! புயல் வருவதால் காற்றை நாம் வெறுக்கிறோமா என்ன? பஞ்சபூதங்கள் நம்ம வாழ்க்கையில் முக்கியமானவை என்ற புரிதல் நாளடைவில் வந்துவிட்டது.
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் என்று சொல்வார்கள். ஆனாலும் உங்கள் மனத்திலும் உடலிலும் ஏற்பட்ட பக்கவிளைவுகள்?
தீ விபத்துக்குப் பிறகு நிறைய நாக்குகள் தீயை உமிழ்ந்திருக்கின்றன, அப்பா உட்பட. பெண் பார்க்கும்போது நிறைய தவிர்ப்புகள். முகத்தை உற்றுப் பார்ப்பார்கள். எனக்கு மேக் அப் போடப் பிடிக்காது. ஆனாலும் (முகத்தில் உள்ள தழும்பைக் காட்டி) இதை மறைக்க மேக் அப் போடுவேன். கூட்டத்தில் நான் இருக்கும்போது ராசியில்லாத பொண்ணு என்று சொல்வார்கள். பக்கவிளைவாக முடக்கு வாதம் இருந்தது. சிகிச்சைக்குப் பிறகு ஓரளவுக்குப் பரவாயில்லை. என்னை உற்றுக் கவனித்தால் நான் நான் கொஞ்சம் இழுத்து இழுத்து நடப்பது தெரியும். இப்போது நன்றாகவே நடக்கிறேன்.
அலுவலகத்தில் தீத் தடுப்புப் பயிற்சிகள் வழங்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
எல்லாரும் அதைப் பாடமாக மட்டுமே கவனிப்பதால் தைரியமாக இருப்பார்கள். அதுவே விபத்தாக இருந்தால் அவரவர் தப்பிக்கவேண்டும் என்றவொரு பதற்றம் இருக்கத்தான் செய்யும். எனக்கு இருவிதமான மனநிலையும் இருக்கும்.
தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகள் பற்றி?
எனக்கு தீபாவளி பிடிக்காது. பட்டாசுச் சத்தம் கேட்டால் ஒரு பூனைக்குட்டி எப்படிப் பதுங்குமோ அப்படி அறைக்குள் பதுங்கிக்கொள்வேன். பறவைகள் எப்படிப் பதறிப் பறக்குமோ அப்டியொரு பயம் இருக்கும்.
பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்படும் தீ விபத்து குறித்த செய்திகளைக் காணும்போது எப்படி உணர்வீர்கள்?
மீண்டும் நெருப்புக்கு பயந்த அந்த அலறல் சத்தம்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு தத்துவம் இருக்கிறது, இயற்கை ஒரு குழந்தை; நாம் எல்லாருமே அதன் பொம்மைகள். (விரக்தியான சிரிப்பு)
நாடு நன்கறிந்த கோவை குண்டுவெடிப்புகள் குறித்த உங்கள் கருத்து?
கண்மூடித்தனமான, தெளிவில்லாத கடவுள் நம்பிக்கையினால் வந்த விளைவு.
தீக்காயம் அல்லது தழும்பு உள்ளவர்களைச் சந்திக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?
என்னைத் தூக்கிச் சென்று காப்பாற்றிய அந்த அண்ணாவை ஒருமுறையாவது பார்க்கமாட்டோமா என்ற ஏக்கம் எழும்.
அவரைப் பார்த்தால் அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பு உள்ளதா?
ஏதோ ஒரு உள்ளுணர்வு அவரை அடையாளம் காட்டலாம் என்ற நம்பிக்கை உள்ளது. (சிறிது மௌனம்)
தீ வாடை, தீயணைப்பு வண்டிச் சத்தம் போன்றவற்றை உணரும்போது உங்கள் மனநிலை?
தீயணைப்பு வண்டிச் சத்தம், ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே எனக்கு அன்று கண்கள் மூடிய அலறல் சத்தம்தான் காதில் கேட்க ஆரம்பிக்கும். இயல்பாக என்னை நானே சமாளிப்பது கடினம். அனைத்தையும் உடைத்து வெளியே வந்துகொண்டு இருக்கிறேன்.
சிகரெட் பிடிப்பவர்களைப்பற்றி?
அது அவர்கள் விருப்பம்.
உடன்கட்டை ஏறுதல், புராணங்களில் வரும் ராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னது, கண்ணகி மதுரையை எரித்தது போன்ற சம்பவங்கள் பற்றி?
எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் இந்த ஒரு விசயதுக்காக ராமரைப் புனிதப்படுத்தத் தேவையில்லை. கண்ணகி மதுரையை எரித்தது உண்மை சாகடிக்கப்பட்ட கோபத்தில்தானே?! உடன்கட்டை ஏறுதல் நடைமுறையில் இல்லாவிட்டாலும் இன்றளவும் சமூகத்தில் ஏராளமான பிற்போக்குச் சிந்தனைகள் இருக்கத்தான் செய்கின்றன.
நேர்காணல் முடித்து இருவரும் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது, “நாம ஒருநாள் அந்த கும்பகோணம் ஸ்கூலுக்குப் போகலாம்” என்றார். நான் வியப்போடு நிமிர்ந்து பார்த்தேன். தேநீர்க்கடை சுவற்றில் Every sip has a story என்று எழுதியிருந்தது.
- நேர்காணல்: சுதாகரன் எஸ்.
GOMATHISANKARR
June 6, 2023சபாஷ்
சுதாகரன்
June 6, 2023நன்றிகள், சார்.
நந்தகுமார்
June 7, 2023நேர்காணலில் படிக்கும் போதும் அதன் தாக்கத்தை உணர முடிகிறது.
சுதாகரன்
June 7, 2023உங்கள் வெளிப்படைக்கு நன்றிகள்.
தினேஷ்கண்ணா
June 19, 2023சரியான கேள்வி சரியான பதில்கள்
சுதாகரன்
June 27, 2023நன்றிகள்