கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு
வ. உ. சி. நினைவுநாளில் அவர் புகழ் பாடும் கவிதை
நிலம் மட்டும் அல்ல
நீரும் எமது உரிமை என
கடலிலும் நீ
சுதந்திரக் கொடி
பறக்கவிட்டாய்
கப்பல் ஓட்டிய உன் கம்பீரம்
இன்னும் பட்டொளி வீசிப்
பறக்கிறது பாரெங்கும்
நீதிமன்றத்தில் மட்டும்
வழக்காடி வாழ்ந்திருந்தால்
கப்பல் கப்பலாய் நீ
பொருள் ஈட்டியிருக்கலாம்
மக்கள் மன்றம் வந்து
உரிமைக் குரல் கொடுத்ததால்
நீதிமன்றம் கொண்டுபோய்
நிறுத்தினார்கள் உன்னை
ஆம்…
வழக்கறிஞராகப் போகவேண்டிய
நீதிமன்றத்துக்கு
குற்றவாளியாகக் கொண்டு போய்
நிறுத்தியது காலம்
கண்ணை மூடிக்கொண்டு
தண்டனையும் கொடுத்தாள்
அன்று கோலோச்சிய
ஆங்கில நீதி தேவதை
நீதி தேவதையா?
அநீதி தேவதையான
அவள் வழங்கியதோ
இரட்டை தீவாந்திரம்
அத்தோடு மூழ்கியது
உன் வாழ்க்கைக் கப்பல்
முள்ளை முள்ளால்தான்
எடுக்க வேண்டும் என்பதால்
கப்பலில் வந்த வெள்ளையனை
கப்பலோட்டியே கப்பலேற்றலாம்
என நீ நினைத்தாய்
சட்டம் படித்த உன் நெஞ்சில்
இருந்தது நீதி
அதனால் உன் முள் கூட
தராசு முள்ளாகத்தான் இருந்தது
வணிகம் செய்ய வந்து
ஆட்சியைப் பிடித்த
வெள்ளையன் வைத்திருந்ததோ
விஷம் தடவிய முள்
ஆயுள் தண்டனை விதித்து
சிறையில் அடைத்து
உன் சிறகுகளைப் பிய்த்து எறிந்தது
ஆங்கில ஏகாதிபத்தியம்
செக்கிழுத்து செக்கிழுத்து
சிறையிலேயே நீ
சிதைந்து போனாய்
விடுதலை அடைந்து வெளியே வந்ததும்
உன் துடுப்புகளையும்
உடைத்துப் போட்டது
எமது அலட்சியம்
ஏற்கனவே உடல் தேய்ந்திருந்த நீ
அதனால் உள்ளமும்
ஓய்ந்து போனாய்
அடியோடு வீழ்ந்துபோனது
அரசோடு போட்டி போட்ட உன்
அகண்ட பொருளாதாரம்
அன்றாட வாழ்க்கைக்கே
தள்ளாடும் நிலைக்குப் போனது
உன் வாழ்வாதாரம்
பின் உயிர் வாழ்ந்த நாளெல்லாம்
கொடும் வெயிலானது
கடன்காரர்கள் பட்டியலே
உன் உயிலானது
கடிதம் எழுதி எழுதியே
காலாவதி ஆனதுன் காலம்
கணக்குப் பார்த்தா
தீர்க்க முடியும் உன் தியாகத்தை?
கடலில் கரைத்த பெருங்காயமானது
உன் தியாகம்
கண்ணீராலும் ஆறாத பெருங்காயமானது
எங்கள் இயலாமை
காந்தி கணக்கானது
உன் வாழ்வு
மன்னிக்கச் சொல்லி
உன் முன் மன்றாடுவதன்றி
வேறொன்று தோன்றவில்லை எனக்கு
இவ்வளவு நெருக்கடிகளுக்கிடையே
எப்படி உனக்குள்
அப்படி ஒரு இலக்கிய தாகம்?
கடலையே குடித்துவிடுவதுபோல்
எழுதித் தள்ளியிருக்கிறாய்!
பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தாய்
ஆங்கில நூல்களை மொழிபெயர்த்தாய்
கவிதை எழுதினாய்
உரை எழுதினாய்
சிறையிலும் எழுதினாய்
எங்கள் பாரதியின் தோழனே
உன்னை எழுதாமல் இன்று நான்
வேறு யாரை எழுதி
என்ன பயன்?
கப்பலால் கவிழ்ந்த
கலங்கரை விளக்கே
ஒன்றை மட்டும் யாரும்
மறைக்கமுடியாது
எங்கே எப்போது
கப்பலைப் பார்த்தாலும்
உன் ஞாபகம்தான்
எங்கள் நெஞ்சில் எழுகிறது
ஏனெனில்
தேசத்தின் முதல் சுதந்திரக் கப்பல்
உன்னுடையதல்லவா?
அதில் பட்டொளி வீசிப் பறந்தது
இந்த மண்ணின் மானம் அல்லவா?
அதிகாரத்துக்கு அஞ்சாமல்
நெஞ்சு நிமிர்த்திய வீரனே
சட்டத்தால் போராடிய சூரனே
சதி காரத்தால் நீ வீழ்ந்திருந்தாலும்
இந்திய விடுதலை வரலாற்றில்
என்றென்றும் ஒளிவீசும் அத்தியாயம்
உன் சரித்திரம்
காலக் கடலில் கரைந்து போகும்
எத்தனையோ மனித வாழ்க்கையில்
என்றென்றும் கரையாமல் வாழும்
கப்பல் ஓட்டிய உன் கம்பீரம்
இந்தியப் பெருங்கடல் அலைகள்
உன் பெயரை ஓயாமல்
பாடிக்கொண்டே இருக்கும்
எங்கள் நெஞ்சின் அலைகளும்.
- பிருந்தா சாரதி

Comments (0)