திரை விமர்சனம்

கால் வலி இருந்தாலும் பொருட்படுத்தாமல்,  வழமையான வேலைகளைச் செய்யும் குட்டியம்மா (மஞ்சு பிள்ளை), உழைத்துத் தேய்ந்த நிலையில், அவ்வப்போது நினைவுகளும் தப்பும் பெரியவர் அப்பச்சன் (கயினிகரி தங்கராஜ்), டீ குடித்த கப்புகளைக்கூட கீழே திருப்பி எடுத்துச் செல்லாமல், சுழலும் மின் விசிறியை நிறுத்தக்கூட கீழே இருக்கும் அம்மாவை, மாடி அறைக்கு அழைக்கும் இளைஞன் சார்லஸ் ஆலிவர் (நேஸ்லன் கே கபூர்), அறியாமல் சிறுநீர் கழித்துவிடும் அப்பாவை நொந்து கொள்வதும் உடன் அப்படி நொந்துகொண்ட தன்னையே அதற்கு நொந்து கொள்வதும், மாடித் தோட்டத்தை மட்டில்லா மகிழ்ச்சியுடன் கவனித்துக் கொள்வதுமான குடும்பத் தலைவன் ஆலிவர் ட்விஸ்ட் (இந்ரன்ஸ்), அந்த இல்லத்தில் இருந்து 220 கிலோமீட்டர் தள்ளி, தனது அடுத்த படத்திற்கான ஆயத்த வேலையில் மூழ்கி இருக்கும் திருமணமாகாத இளம் இயக்குனர் அந்தோனி டிவிஸ்ட் (ஸ்ரீநாத் பாஷி), இவர்களுக்குள் நிலவும் உறவை, உரிமையை, உயர்வை, உரசலை ஆழமாகவும் அதே அளவுக்கு மெதுவாகவும் சித்தரிக்கும் மலையாள மொழித் திரைப்படம்தான், ரோஜின் தாமஸ் எழுதி இயக்கி, அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘ஹோம்’.

“பாரு, இந்த இடம் எவ்ளோ அழுக்கா இருக்கு? இது உன்னோட அறை அல்ல, மனசு. ஒரு வேலை செய். இங்கிருந்துட்டு கிளைமாக்ஸ் எழுதாதே. உன்னோட முதல் படத்தோட கதைய எங்கிருந்து  எழுதின?” புரொடியூசர் பேபி கேட்க, பதிலாக செல்போன் அழைத்து அந்தோணி எடுத்துப் பார்க்க,  படத்தின் தலைப்பு வருவது நயம்.

அந்தோணி வீட்டுக்கு வந்தும் அப்பாவின் நேசம் அவன்மீது படராமல், அவரின் நெருக்கம் தொடராமல், அவ்வப்போது அவன் ஸ்மார்ட்போனும்  அதில் வரும் காதலி பிரியாவும் இடையூறாகவே இருக்கின்றனர். இது, “வழக்கமா வீட்ல இருக்கும்போது அவன் படுக்கப்போகும் முன்னே நம்மள முத்தமிட்டு குட் நைட் சொல்வான்” என்று குட்டியம்மா ஆலிவரிடம் அன்று இல்லாததைக் கூறி வருந்துவதில் பளிச்சிடும்.

அந்தோணி படித்துக் கொண்டிருந்த ஜோசப் லோபஸின் வாழ்க்கை வரலாறு பற்றி விசாரித்த ஆலிவர், தாமும் ஏன் இப்படி எழுத முடியாது? என்று கேட்க, “வாழ்க்கையில் அசாதாரணமானவை நிகழணும். அதுக்கப்புறம்தான் ஒரு புத்தகம் எழுத முடியும். இந்தப் பக்கத்திலே அவரோட சாதனைகள பாருங்க. உங்க சுயசரிதை அரைப் பக்கம்கூட வராது. ‘நான், ஆலிவர் ட்விஸ்ட்’ ன்னு அதுக்கு ‘பளிச்’சுன்னு பேரு தரலாம். நான் கடை நடத்தனேன், காலத்துக்கு ஏத்த மாதிரி மாற முடியாமல் அதை மூடிட்டேன். இப்போ மாடித் தோட்டத்தப் பராமரிச்சுகிட்டு சும்மாவே உக்காந்திருக்கேன். வேற எழுத என்ன இருக்கு? இது அரைப் பக்கம்கூட வராது”. அந்தோணியின் இந்த வார்த்தைகள் ஆலிவர் ட்விஸ்ட்டிடம் பல ட்விஸ்ட்களை ஏற்படுத்தி விடுவதை விவரிக்கும் சுவாரசியம்தான், ஹோம் படத்தின் மீதிக் கதை.

வருங்கால மாமனாருக்குதான் மகன் ஸ்மார்ட் போன் வாங்கவிருக்கிறான் என்றறிந்து, தானே குறைந்த விலையில் ஒரு போன் வாங்கி வந்து இருக்க, எதிர்பாராதவிதமாக மகன் அந்தோணி அவருக்காக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கித் தந்ததை அறிந்து, ஆலிவர் மகிழும் போதே பாக்கெட்டில் இருந்த செல்போன் ஒலித்ததை அடுத்து, அவர் சங்கடத்தில் நெளிவதும் சின்ன மகன் சார்லஸ்சிடம்  செல்போனைப் பயன்படுத்துவது குறித்துப் பாடம் எடுத்துக் கொள்வதும் ஜோசப் லோபசைப் படமெடுக்க இயலாமல் தவிப்பதும் நடிகர் விஷாலிடம் சகஜமாகப் பழகிப் பேசுவதிலும் உளவியல் மருத்துவரிடம் விவாதிப்பதிலும் அங்கு டாக்டர் அவரிடம் கேட்டது போல சார்லஸிடம் கேட்டு, எதிர்பாராதவிதமாகப் பதில் வந்து விடுவதிலும்  ‘எல்லாம் போனில் இருக்கிறது’ என்று சொல்லும் ஜோசப்பிடம், ‘போனில் இருக்கலாம். ஆனா, மனசுல இல்ல’ என்று சொல்வதிலும் ஆலிவராக இந்ரன்ஸ் மிளிர்கிறார்.

பாசத்தைக் காட்டிட முனைவதிலும் மாறிவரும் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதில் ஏற்படும் பரவசத்தையும் ஏக்கத்தையும் பரிதவிப்பையும் ஒருசேர அற்புதமாகப் பிரதிபலிக்கவும் செய்கிறார்.

ஒரு பக்கம் தொழில், இன்னொரு பக்கம் காதல் என்று ஆதங்கமும் அவதியுமாக ஸ்ரீநாத் பாஷியின் நடிப்பும் அருமை. மஞ்சு பிள்ளை, நேசலன் கே கபூர், கயினிகரி தங்கராஜ், தீபா தாமஸ் (பிரிய ஜோசப்), விஜய் பாபு (டாக்டர். பிராங்கிளின்), ஜானி அந்தோனி (சூரியன்), மணியன்பில்லா ராஜு (பேபி), அனுப் மேனன் (நடிகர் விஷால்), கே.பி.ஏ.சி. லலிதா (அன்னம்மா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர்.

ராகுல் சுப்பிரமணியம் இசையின் இனிமையும் நீல் டி குன்ஹாவின் கண்கவர் ஒளிப்பதிவும் படத்தின் மெதுவான நகர்வையும் பொருட்படுத்தாமல் செய்துவிடுகின்றன. படத்தொகுப்பைக் கவனித்துள்ள பிரிஜிஷ் பிரகாஷ், இன்னும் கடுமையாகக் கவனித்து, படத்தின் வேகத்தைச் சற்று கூட்டி இருக்கலாம் அல்லது அதன் நீளத்தையாவது குறைத்திருக்கலாம்.

எல்லோரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சாதனை இருக்கத்தான் செய்கிறது. அதைக் கண்டறியக்கூட இயலாத வகையில்தான், அவரவர் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதனை வெளிக்கொணர்ந்து அங்கீகரிக்க உறவுகள் உதவ வேண்டும். அப்படி உதவினால்தான் அது உறவு என்பதையும் எங்கு கோபப்பட மாட்டார்களோ, சந்தோஷப்படுத்துவார்களோ, தவறிழைத்தால் கண்டிப்பார்களோ, தவறு எனில் திருத்துவார்களோ, அதுதான் ‘இல்லம்’ என்பதையும், எத்தனை நவீன தொழில்நுட்பங்களுக்கு நாம் அறிமுகமானாலும், அடிப்படையான மனிதப் பண்புகளை மட்டும் இழந்து விடக்கூடாது என்பதையும் அழகாகவும் அன்பாகவும் அழுத்தமாகவும்கூட எடுத்துச் சொல்லும் படம்தான், ஹோம்.

மதிப்பெண் : 8/10

விமர்சனம்: மது ராஜேந்திரன்

படங்கள்: இணையத்திலிருந்து


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *