திரை விமர்சனம்

அங்கிங்கு என்று இல்லாமல், இந்தியச் சமூகத்தில் எங்குமே எப்போதுமே நிலவும் ஒன்றுதான், ‘காதல் கசக்குதையா’. ஜீவன் அபயங்கர், சந்தியா ஜோஷி விஷயத்திலும் அதே நிலைதான். அவரவர் குடும்பங்கள் அவர்களது நட்புக்கு, காதலுக்கு, வாழ்க்கைக்கு, தோழமைக்கு குறுக்கே நிற்கின்றன. தடைகளைத் தாண்டி, அவர்கள் இணைந்தார்களா? வாழ்ந்தார்களா? என்கிற கேள்விகளுக்கு விடைதான், தீபக் பிரபாகர் மாண்டே எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மராத்தி மொழி குடும்பச் சித்திரம்,  ஜீவன் சந்தியா.

காதலுக்குக் கண்ணில்லை என்பது மட்டும் இல்லை, வயதும் இல்லை; தேவை மட்டுமே உண்டு. என்ன ஒன்று, ஜீவன் அபயங்கர் (அசோக் சரப்) சந்தியா ஜோஷி (கிஷோரி சஹானே) ஜோடி, அவர்களின் தேவையை உணரும்போது கொஞ்சம் வயதாகி விடுகிறது;  அறுபதுகளில்தான் அவர்களிடத்தில் காதல் வாய்க்கிறது. அதனால் ஒன்றும் அது சுலபமாகி விடவில்லை. வாழ்க்கையில் போராட்டமாகவும், போராட்டமே வாழ்க்கையாகவும் தொடர்கிறது, பரஸ்பரம் கைத்தலம் பற்றியே என்பதால், சுமையும் சுகமுமாக.

மர்ம முடிச்சுகள் இல்லை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. கிளுகிளுப்பான காட்சிகள் இல்லை. சண்டை சர்க்கஸ் இல்லை. கிளாமருக்கு இடமில்லை. விரசம் இல்லை. காமெடி டிராக் இல்லை. இத்தனை ‘இல்லை’ என்றாலும், நிறைவும் இல்லாமல் இல்லை.

நடுங்கும் கையைப் பற்றிக் கொண்டு, “மிஸ்டர் அபயங்கர், எனக்கு நீங்க கைய கொடுக்கறீங்களா? இல்ல, பிடிமானத்துக்காக என் கைய  புடிச்சுக்கிறீங்களா?” எனக் கேட்கும் சந்தியாவிடம், “கைய நீ கொடுத்தாலும், நான் கொடுத்தாலும் இந்த வயசுல நம்ம ரெண்டு பேருக்குமே பிடிமானம் தேவைப்படுதே, மிஸஸ் அபயங்கர்” என்பதும், 

ஆட்டோவில் அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகம், ரெஸ்டாரண்டில் ஜோஷியின் அழகை ஆராதித்து, ஜீவன் அபயங்கர் வண்ணத்துப்பூச்சியை வாழ்க்கைக்கு ஒப்பீடு செய்தலும், சந்தியா மகளிடம் பேச முனையும்போது முடியாமல் போவதும், பின்னர் மகள் பேச முனையும்போது பேச்சை முடித்து விடுவதும், பூங்காவில் அபயங்கர், ஜோஷி பூவைச் சூடிக் கொள்ளச் சம்மதிக்க அந்த மலர் பற்றி எடுத்து விளக்குவதும், கண்ணாடியைப் பார்க்கச் சொல்ல, அவள் பார்ப்பதும், நட்பு காதலாகித் திருமணத்தில் வந்து நிற்கும் நிலையில், பூங்காவில் அவர்களுக்குள்ளான உரையாடலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அபயங்கரோடு சந்தியாவின் பேச்சும்,

அப்பாவின் வாழ்க்கை குறித்து எடுத்த முடிவை மகன் அங்கூர் சொல்ல, “உன்னுடைய சந்தோஷத்துக்காக வேண்டுமானால் அந்த பேப்பரில் கையெழுத்துப் போடுகிறேன். ஆனா ஒரு விஷயம் ஞாபகத்தில வெச்சுக்கோ, பேப்பர்ல போடற கையெழுத்து நாங்க ஒருத்தர ஒருத்தர் விரும்புறத நிறுத்தப் போறதில்ல” என்று சொல்வதும், நர்ஸ் மமதா கரே வாக அபயங்கர் குடும்பத்தினருடன் அளவளாவதும், ரசிக்கத்தக்க  நயமான காட்சிகள்.

தொலைபேசியிலோ செல்பேசியிலோ அனைத்துப் பாத்திரங்களும் ஒரு முறை பேசி விடுகிற காட்சி தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. சந்தியா ஜோஷியை சந்திக்கக்கூட மறுக்கும் அளவிற்கு, மகன் அங்கூர் அபயங்கரின் அதீத வெறுப்புக்கு வலுவான காரணம் இல்லை.

பாத்திரத்தின் தன்மையால் அசோக் சரப்பும், கிஷோரி சஹானாவால் பாத்திரமும் மெருகேறி நிற்பது சிறப்பு. ஜீவன் அபயங்கராக முற்பகுதி நடிப்பில் இருந்த இயல்பு, பிற்பகுதியில் சற்று தொய்வடைந்து விடுகிறது. சந்தியா ஜோஷியாக  ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்கிறது நடிப்பில் சரிவே இல்லாத செறிவு.

சமீர் தர்மாதிகாரி (அங்கூர் அபயங்கர்),  பிரதீபா அபயங்கர் (ருசிதா ஜாதவ்), ரவீந்திர மக்கானி (டாக்டர் தாமலே), ரமேஷ் தியோ (சந்தீப்), சீமா தியோ (சினேகா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பை, ஏற்ற பாத்திரங்களுக்குப் பழுதில்லாமல்  வழங்கியுள்ளனர்.

அதுல் பாலச்சந்திர ஜோஷியின் இசையில் இனிமையான  பாடல்களும், பின்னணி இசையும், மங்கேஷ் அஷோக் கடேக்கர் கண்கவர் ஒளிப்பதிவும் மனதைக் கவர்கின்றன. மஹந்தேஷ்வர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். இரண்டு மணி 15 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளத்தை, இயக்குனர் உடன் இணைந்து பேசி, இருபது நிமிடங்களைக் குறைத்திருந்தால், இன்னும் நிறைவாக இருந்திருக்கும்.

காதல் என்பது எதுவரை என்கிற கேள்விக்கு, இறுதிச் சுவாசம் உள்ளவரை என்கிற பதிலை, அறுபது வயதிற்கு மேற்பட்டவருக்கு என்று இல்லாமல், எல்லா வயதினர் மனதிலும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது, ‘ஜீவன் சந்தியா’.

மதிப்பெண்: 7/10

விமர்சனம்: மது ராஜேந்திரன்


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *