திரை விமர்சனம்: மது ராஜேந்திரன்

நேர்மையான காவல்துறை துணை ஆணையருக்கும் மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த புகாருக்கு இலக்கான ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கும் இடையில் நடைபெறும் சட்டப் போராட்டம்தான், அருண் வர்மாவின் அறிமுக இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகி ஆங்கிலத் திரை வசனங்களுடன் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘கருடன்’ திரைப்படம்.

விசாரணை அலுவலராக டிசிபி ஹரிஷ் மாதவ் (சுரேஷ் கோபி) இந்த வழக்கில் திறம்படச் செயல்பட்டு, ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை அடுத்து, அரசு வழக்குறிஞர் தாமஸ் ஐப் (சித்திக்) கல்லூரி பேராசிரியர் நிஷாந்த் ( பிஜு மேனன் ) குற்றவாளி என்று நிரூபித்து, ஆயுள் தண்டனை பெற்றுத் தருகிறார். பலாத்காரத்திற்கு உள்ளான மாணவி தெரசா ஃபிலிப் (சைதன்யா பிரகாஷ்) நினைவிழந்து ‘கோமா’ நிலைக்குச் சென்றுவிட்டார்.

ஏழு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு வெளிவரும் நிஷாந்த், ஹரிஷ் மாதவ் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளில், தனது வழக்கை மீண்டும் விசாரணை செய்ய கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது, வழக்கில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது.

மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட, நிஷாந்த் குற்றவாளி என  நிரூபிக்க காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆதாரங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி, தாமே முன்னின்று வாதாடி, குற்றமற்றவன் என்று விடுதலையாகி வெளியே வருகிறான், நிஷாந்த். தவிர, விசாரணை அலுவலர் மீதான அவனது அவதூறு வழக்கில், டிசிபி ஹரிஷ் மாதவ் நஷ்ட ஈடாக 70 லட்சம் அவனுக்குத் தரும்படி உயர்நீதிமன்றம் ஆணையிடுகிறது.

நிலைகுலைந்து போன ஹரிஷ் மாதவ், அரசு வழக்குறிஞர் தாமஸ் ஐப்பிடம் இந்த வழக்கில் நான் தவறு ஏதும் செய்யவில்லை என்பதைத் திடமாக நம்புவதாகவும் தெரிவித்து, புத்திசாலியான நிஷாந்த் திட்டமிட்டு நடத்திய நாடகத்தை வெளிக்கொணர்வதாக உறுதியளிக்கிறார். அதை அவர் நிறைவேற்றுகிறாரா என்பதுதான் ‘கருடன்’ படத்தின் மீதிக் கதை.

காவல்துறை உயரதிகாரியாக சுரேஷ் கோபியும் கல்லூரிப் பேராசிரியரும் ஒரு பாலியல் குற்றவாளியுமாக பிஜூ மேனனும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பில் திறமை காட்டுகின்றனர்.

தொழில் நேர்த்தியையும் முயற்சியில் வெற்றி பெறும்போது அதீதமாக இல்லாமல் அழுத்தமான ஒரு புன்முறுவலையையும்  தோல்வியடையும்போது அதை ஜீரணிக்க இயலாத நிலையிலும் தான் தவறு ஏதும் செய்யவில்லை என நிற்பதில் காட்டும் உறுதியையும் சுரேஷ்கோபி துல்லியமாக வெளிப்படுத்தும் பாங்கு ரசிக்கத்தக்கது.

அதேபோன்று கண்ணியமான பேராசிரியர் பதவிக்கே இழுக்கு நேரும் நிலையில் குறுகிப்போவதும் நீதிமன்றத்தில் குற்றவாளி என உறுதி செய்யப்படும் நிலையில் உடைந்து போவதும் தண்டனை முடிந்து வெளியே வரும்போது மகளுடன் வரும் மனைவி தன்னை உதாசீனப்படுத்தும்போது தவித்துப் போவதும் பின்னர் ஹரிஷ் மாதவ்விடம் வெளிப்படும்போதான மாறுபாடான முக பாவமுமாக எதிர்மறையான பாத்திரமாக இருந்தாலும் அதன் தன்மையை முழுதுமாக உள்வாங்கி பிஜு மேனன், தன் பங்களிப்பை அற்புதமாக வழங்கியுள்ளார். கதையில் அவர்களுக்குள்ள இடமும் கண்ணாமூச்சி விளையாட வசதியாக இருக்கின்றது.

ஜெகதீஷ் (சலாம்), அபிராமி (ஸ்ரீதேவி), திவ்யா பிள்ளை (ஹரிதா), தலைவாசல் விஜய் (கார்னல் ஃபிலிப் ஜார்ஜ்), திலீஷ் போத்தன் (ஐ ஜி பி சிரியா ஜோசப்), நிஷான் சாகர் (நாரி சுனி), மாளவிகா (அருனிமா) போன்ற ஏராளமான துணைப் பாத்திரங்களும் அவரவர்களுக்கு உரிய பங்கை சிறப்புறவே செய்துள்ளனர்.

ஜினேஷின் கதைக்கு, மிதுன் மேனுவல் தாமஸ் தெளிவான திரைக்கதை எழுதியுள்ளார். அஜய் டேவிட் கச்சபில்லியின் கண்கவர் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜய்யின் கதைக்கு இணக்கமான இசையும் ஸ்ரீஜித் சரங்கின் கச்சிதமான படத்தொகுப்பும் அறிமுக இயக்கத்திற்கு வலு கூட்டுகின்றன. ஏழு கோடியில் எடுக்கப்பட்ட படம் 27 கோடி வசூலைக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிஷாந்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தர விசாரணை அதிகாரி மேற்கொண்ட முயற்சிகளைக் காட்டிய அளவில், அவனது விடுதலைக்குப் பிறகு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஏற்ற நிலைக்கு பிந்தைய காலத்தில் காட்டப்படாதது குறையே.  அவ்வாறே, அமைச்சரின் டாலர்ஸ் ஸ்மக்லிங் வழக்கு, ஒட்டாத வாலாகத் தனித்து ஆடுகிறது; தவிர்த்திருக்கலாம்.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், சுரேஷ்கோபி, பிஜு மேனன், சித்திக் கூட்டணியின் சிறப்பான பங்களிப்பு, அறிமுகச் சுவடே தெரியாத இயக்கம், படத்தை இரண்டு மணி நேரமும் தொய்வின்றி விறுவிறுப்பாகக் கொண்டுசென்றது என்கிற வகையில், அருண் வர்மாவின் ‘கருடன்’  உயர்ந்தே பறக்கிறது.

மதிப்பெண் : 7/10

  • மது ராஜேந்திரன்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *