திரை விமர்சனம்

‘இப்படியெல்லாம் நடக்குமா!’ என்று வியக்க வைக்கும், ஏன், அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயங்கள் நடைமுறையில் நடக்காமலும் இல்லை என்பதே உண்மை, ஆம், கசப்பான உண்மை. அப்படியான ஒரு கதைதான், கல்யாண்ஜி கோகனா எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘சுந்தரி’.

ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள அந்தக் கிராமத்திற்கு வந்த பிரபு (அர்ஜுன் அம்பட்டி), தற்செயலாக அங்கு காண நேர்ந்த சுந்தரி (ஷாம்னா காசிம்/பூர்ணா) மீது மையல் கொண்டு, மணமும் செய்து கொள்கிறான். மாதம் ஒரு லட்சம் ஊதியத்தில், மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் அனாதையான பிரபுவின் நவநாகரிகமான இல்லத்தில் அடியெடுத்து வைக்கும் கிராமத்துச் சுந்தரிக்கு அந்த நகரச் சூழல் வியப்பையும் கொஞ்சம் அச்சத்தையும் தருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவை தெளிந்து வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பிரபுவுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. அதற்கான காரணத்தை அவன் சொல்லவில்லை; அவளும் கேட்கவில்லை.

தொடர்ந்து பல இடங்களில் தேடியும், வேலை கிடைக்கவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் விற்கும் நிலை. பிரபுவின் குடிப்பழக்கமும் குடும்பத்தில் சச்சரவும் தொடர்கின்றன. பெற்றோர் இருந்து, ஜாதகம் பார்த்து அவளை மணம் முடிக்காததாலேயே, அவளது ‘ராசி’யால்தான் இவையெல்லாம் என்று, சுந்தரி மீது வீசிய பிரபுவின் வார்த்தைகள் திராவகமாகத் தகிக்கச் செய்கின்றன.

இதற்கு ஒரு ‘முடிவு’ காண அவள் மேற்கொண்ட முயற்சி, அறிந்த பலன், முயன்ற விபரீதப் பரிகாரம், கிடைத்த அதிர்ச்சியான உண்மைகள், எடுத்த தீரமான முடிவுதான் சுந்தரி திரைப்படத்தின் மொத்தக் கதை.

சுந்தரியாக, ஷாம்னா காசிம் என்கிற பூர்ணா, மிகவும் பொருத்தமே. அவரது காஸ்ட்யூம் டிசைனர் பாராட்டுக்குரியவர். அமைதியான கிராமத்துப் பெண்ணாக, தாம்பத்திய வாழ்க்கையில் காதலில் கட்டுண்ட மனைவியாக, நகர வாழ்க்கையில் நிலவும் நரகச் சூழலில் தகிக்கும் அழகியாக, கேள்வியே இல்லாது கணவனை, ஜோசியத்தை, ஜோதிடனை நம்பும் வெள்ளந்தியாக, உண்மைகளை உணர்ந்து தெளிந்து, வெடிக்கும் அறிவார்ந்த மனுஷியாக, பூர்ணா பல பரிமாணங்களில் வெளுத்து வாங்குகிறார். ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என ஆரம்பித்த அர்ஜுன் அம்பட்டி, பீரும் குடிக்கும் என்கிற வகையில் தனது பங்களிப்பை, அளவோடு வழங்கியிருக்கிறார்.

சுரேஷ் பொப்ளி இசையும், அளவான பின்னணி இசையும் அருமை. பால் ரெட்டியின் ஒளிப்பதிவு, கிராமம் நகரம், உள்ளே வெளியே எல்லாவற்றிலும் ‘பளிச்’சென்று கவர்கின்றது. மணிகாந்தின் படத்தொகுப்பும் கச்சிதம்.

பாமரர்கள், படித்தவர்கள் என்ற வேறுபாடில்லாமல், பேராசையால், அறியாமையால்,  அச்சத்தால், சுய சிந்தனை இல்லாமல், மூடத்தனமான நம்பிக்கைகளில் கண்மூடித்தனமாக வீழ்ந்து, உயிரை, உடைமையை, உயிருக்குயிரானவர்களை, ஏன் மானத்தையும் கூட இழந்து, பரிதாப நிலைக்கு உள்ளான நிகழ்வுகளின் பின்னணியில், இந்த சுந்தரி ஒரு விழிப்புணர்வு தரும் எச்சரிக்கை.

மதிப்பெண்: 7/10

விமர்சனம்: மது ராஜேந்திரன்

படங்கள்: இணையத்திலிருந்து


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *