சிறுகதை – களந்தை பீர்முகம்மது
அவர் போகும்போது ஒருமுறை பார்த்துக்கொண்டார். அரசமரத்தையும் அதைச் சூழ்ந்திருக்கும் பீடத்தையும். அழகாகவும் அடர்ந்த நிழலாகவும் வந்து தலைசாய் என்று சொல்கிற விதமாகவும் நல்ல அரச மரத்தடி. அந்த மரம் அக்கிராமத்தின் வயதைக் கூறுகிறதுபோல. அதை ரொம்பவும் அடர்த்தியாகப் பார்த்தார். பக்கத்தில் குளம் கிடக்கிறது. தண்ணீர் அலைவுறும் பாளமாக ஒளிர்கிறது. சிற்றலைகள் மீன்குஞ்சுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கலாம். விளையாட்டு விளையாட்டாயிருக்க, மேலே ஊர்ந்துசெல்லும் தென்றலோடு இசைந்து அலைகள் ஏதோ பாடல் பாடுகின்றன. அதனால்தான் இத்தனை குஷாலான அலையடிப்புகள். குளம் ஊர்ப்பரப்புக்கு மேலே நான்கைந்து அடி உயரமாக விரிந்துகிடப்பது தெரியவருகிறது புலமாடத் தேவருக்கு.
நடந்துகொண்டே இருந்தார். ஆனால் அரச மரத்தடியில் உட்கார்ந்து சுகமாகத் தலையைச் சாய்த்துத் தூங்கிவிடுகிறார். காற்றும் அலைகளும் இவ்வளவு குதூகலமாய் இருக்கும் கிராமக் குளத்தில் இதை யாரும் ரசிக்காமலோ அனுபவிக்காமலோ எங்கெங்கிலும் அலைந்து திரிகிறார்கள். அவர் தன் உடம்பை அங்கே கிடத்தியபடியே நடந்துகொண்டிருக்கிறார். திரும்பித் திரும்பிப் பார்க்கிறார். தான் அங்கே கட்டைபோலச் சாய்ந்துகிடப்பது தெளிவாகத் தெரிகிறது. கொஞ்சம் புரள்வதும் ஏதோ புலம்புவதுமாக. அந்தக் காற்றும் பீடமும் தனக்கு எப்பவும் வேண்டும் என்று விரும்புகிறார். உள்மனது அவரை அறியாமல் சொல்லிவிட்டது, ‘நீ அங்கே செல்வாய் கொஞ்ச நேரத்தில்.’
காற்றின் இதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வயல் பசுமை கிறங்கச் செய்தது. இவள் இந்தச் சொகுசில்தான் இந்த ஊரிலேயே இருக்கிறாளா என்று கேட்டுக்கொள்கிறார். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லை. அதனால் கொஞ்சம் சத்தமாய்க் கேட்டார், ‘பாதவத்தி, வந்த ஜோருல இப்படியே ஒக்காந்திட்டியே. என்னை ஒருமுறை கூடவா நீ நெனச்சுப் பாக்கல?’
முன்பு எப்போதோ வந்தது. மாப்பிள்ளை ஜோர் காலம். அதற்குப் பிறகு அவர் இங்கு வரவில்லை. தலையாரி வேலையில் சாத்தியப்படாது. ஆனால் அவர் வள்ளியம்மாவிடம் சொல்லிக்கொண்டது இன்னும் கெத்தாக, ‘இந்த மாரி அங்கேயும் இங்கேயும் அலையுற ஜோலி மயிரெல்லாம் இங்கே நடக்காது. வாய மூடிட்டுக் கெட.’ அன்று முடங்கிவிட்டாள்; ”அவரு வந்துதான் கிழிக்கப்போறமா?”. தன்னைப் பார்க்க வந்த அம்மைகிட்டேயும் ஐயாகிட்டேயும் எவ்வளவோ குறை சொல்லி ஒப்பாரி வைத்திருக்கிறாள். ஒப்பாரியோடும் முணங்கல்களோடும் வருஷங்களைக் கடத்திவந்தாள். புலமாடன் புலமாடத் தேவராக அறியப்பட்ட ஒருநாள் கலவரக்காரி மாதிரி அவரை எதிரே நிற்கவைத்துக் கேள்வி கேட்டாள். தலையாரித் தேவர் பயந்துபோய், ‘ போய்த் தொல.’ வள்ளியம்மாள் அந்த ஒரு வாய்ப்பைப் பன்மடங்கு வாய்ப்பாய்ப் பெருக்கினாள், வரவும் போகவும். என்ன பொல்லாத தூரமா? ஒரு பதினைஞ்சு கிலோ மீட்டர். கணபதி பஸ் போகிற நேரத்தைக் கணக்குவைத்து நேராக ரைஸ்மில் பக்கம்போய் நின்னா போதும். வள்ளியம்மை கைகாட்ட வேண்டிய அவசியமில்லை. அவள் நிற்கிறதைப் பார்த்து பக்கீர் ராவுத்தர் பஸ்ஸை உடன் பிரேக் போட்டு நிறுத்துவார். வள்ளியம்மை பூஞ்சை உடம்புக்காரி. காற்றுபோல ஒரு சொடுக்கொலியில் பஸ்ஸில் ஏறுவாள். பஸ் நின்றதும் தெரியாது; புறப்பட்டதும் தெரியாது.
ஒருமுறை புலமாடத் தேவர் நூறு, இருநூறடி தூரத்துக்குள் வந்துகொண்டிருக்கும்போதே கணபதி பஸ்ஸை நிறுத்தி ஊருக்கு ஏறிப் போயிட்டாள். ‘எளா, ஒன் வீட்டுக்காரரு வாரார, நீ கண்டுக்காம ஏறிட்டே!”
’ஆங்… வந்தா போவாரு…’
இதைப் பார்த்தார் தேவர். அவருக்கு ஆத்திரம் வந்து அவள் ஆக்கிவச்ச சோற்றைப் பூனைக்கு அள்ளிக்கொட்டினார்; அப்புறம் பஸ்ஸ்டாண்டுக்கு வந்து கிட்டுப்பிள்ளை கிளப்பில் உட்கார்ந்து முட்டைகோஸும் தேநீரும் சாப்பிட்டது ஞாபகத்தில் உண்டு.
புலமாடத் தேவர் பீடியை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டார். புகை வெளியே வருவதற்குள்ளேயே காற்றில் காணாமல் போயிற்று. ‘அவதான் அப்படிப் போனா. இந்தப் படுபாவி இசக்கியுமில்லா அவக்கூட சேந்துக்கிட்டான். அவன் எப்படி இந்த ஒண்ணுக்குமில்லாத ஊர்ல வந்து கெடக்கான்? அவன் சேக்காளிப் பயலுவள் எல்லாம் நம்மகிட்ட எத்தனை முறை கேட்டுட்டானுவோ. அந்த மீரான் பய கடுதாசி போட்டதா வேற சொன்னான். ஆனா இசக்கி பதிலே போடாம ஒக்காந்துட்டான். இப்படி சேக்காளிப் பயலுவளயே கைவிட்டுட்டுப் போறவன் எப்படி நம்மள ஏறெடுத்துப் பாப்பான்.”
புலமாடத் தேவர் தன் மகனிடம் நாசுக்காகப் பேசி கையோடு இழுத்துட்டுப் போயிரணும் என்று மனசுக்குள் திட்டம் வைத்திருந்தார். ’அவன் இங்கே கிடந்து என்ன வேல பாப்பான். வயல்ல இறங்கி வேல பாக்குறப் பயலா அவன்? மூதி….அறிவுகெட்ட மூதி….அவன் அம்மையோடு சேந்துசேந்து அவனுக்கும்லா மூளை மழுங்கிப்போச்சு.’ இத்தனைப் போக்காக அவர் இசக்கியை நினைத்துக்கொண்டிருந்தாலும் சரஸ்வதியைப் பற்றி நினைக்கவே இல்லை. அவ பெரிய ராங்கிக்காரில்லா. நல்ல நாள்லேயே நாழிப் பால் கறக்காதவ. இப்போ அவ அம்மைக்குத் துணையா இருக்குறதா சொல்றானுங்கோ. நம்ம வீட்டுக் காரியம் நமக்குத் தெரியல்ல. ஊருக்காரப் பசங்கெல்லாம் ஏதோ திருதராஷ்டிரன் கணக்கா எல்லாத்தையும் நேரில பாத்த மாதிரி நம்ம வீட்டுக் கதைய பேசுறானுவோ.’
அவர் வடக்கே நோக்கிப் போகப்போக அவரைக் கடக்கும் வண்டிகளும் வடக்கே இருந்து வருவனவாகத்தான் இருந்தன. தெற்கே இருந்து யாராவது மாட்டுவண்டி, சைக்கிள்ல வந்தாலும் அவங்களைத் தொத்திக்கிட்டு ஊருக்குள்ளாற போயிரலாம். இந்தக் காற்றும் பச்சை வயலும் இல்லேன்னா இந்த வெயில்ல அலையிறது ரொம்பக் கஷ்டமாக ஆகியிருக்கும். அந்த மரத்தடியில் தலையைச் சாய்த்திருக்கலாம். பிள்ளையார் துணையிருக்கிறார். அவர்கிட்டே கதையச் சொல்லிப் பிரார்த்தனையும் செஞ்சிருக்கலாம்.
ஊரில் அந்த சேக்கு பையன் இருக்கிறான். இசக்கியோட முக்கியமான சேக்காளி அவன். சேக்கு நிறைய கதை எழுதிக்கிட்டிருக்கான்னு சொல்வானுவோ. அவன் என் கதையை எழுதிப் பரிசு வாங்கியிருக்கானாம். அதைக் கேள்விப்பட்ட நாளிலே இருந்து அவனைக் கண்ணால பாக்கக் கூட முடியல்ல. என் கதையை அவன் எப்படி எழுத முடியும்? இப்பத்தான நான் இப்படி லோல்படுறேன். இதெல்லாம் படுறதுக்கு முன்னாலேயே ஒருத்தன் எப்படி என்னோட கதைய எழுத முடியும்? ரொம்பவும் அக்குறும்பால்ல இருக்கு!
‘ஜெயிக்க விரும்பியவர்’ என்ற தலைப்பில் சேக் கதை எழுதினான். அது முக்கியமான சிற்றிதழில் பிரசுரமானது. அந்த மாதமே அந்தக் கதைதான் சிறந்த கதை என்று தேர்ந்தெடுத்திருந்தது அந்த இலக்கிய அமைப்பு. ‘ஜெயிக்க விரும்பியவர்’ கதாநாயகரான புலமாடத் தேவர் மிகவும் அணுக்கமாக இருந்தார் சேக்கிற்கு. அவன் எழுதிய கதை அவனாகக் கற்பனை செய்து எழுதியதல்ல. இந்தக் கதையில் இப்படி ஓர் அம்சம் இருக்கு என்று எடுத்துக் கொடுத்தவள் மைமூன் பாத்திமா. இவன் கண் முன்னே வாழும் புலமாடத் தேவரைப் பற்றித் தன் சொந்த மண்ணில் பார்க்க துப்புக்கெட்டு, சென்னையில் மைமூன் பாத்திமாவைப் பார்க்கப்போன இடத்தில் அவள் சொல்லித்தான் சேக்கிற்குத் தெரிந்தது. மைமூன் பாத்திமா தெளிவாகச் சொன்னாள், ‘ஐயோ பாவம் புலமாடத் தேவரு. அவரு பொண்டாட்டி அவரை வேண்டாம்னு சொல்லிட்டாளாமே,”
அவன் கொஞ்சமாய் முழித்தான். அந்த முழிகண்டு மைமூன் பாத்திமா மறுபடியும் சொன்னாள்,” உனக்குத் தெரியாதாக்கும் இத்தனை நாளா? இந்த முழி முழிக்கிற? நீயெல்லாம் என்னடே கதை எழுதுற?”
மைமூன் பாத்திமா இப்படிக் கேட்டதும் சேக்கிற்குக் கடும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவன் எதிர்பார்க்கவில்லை; மைமூன்பாத்திமாவும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவளை அடக்க விரும்பி ஆங்காரமாகக் கட்டிப்பிடித்து முத்தங்களாகக் கொடுத்தான். அவனுக்கு ஆச்சரியம் என்னவென்றால், மைமூன்பாத்திமா எந்த ஆட்சேபணையும் சொல்லாமல் அவன் கட்டுக்குள் கிடந்தாள்; எனக்கென்ன என்கிற மாதிரி வசப்பட்டிருந்தாள். இன்னும் ரொம்ப நேரமாய் அவன் தழுவித்தழுவித் தனக்குள் புதைத்துக்கொண்டிருந்தான். மைமூன்பாத்திமா எத்தனை பெரியவள்? இவனுக்கு உண்மையிலேயே அவளை என்றேனும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கவா செய்தது? அப்புறம் இருவரும் அவரவர் பேச்சைத்தான் பேசி வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். அவளுடைய ஈர்ப்பான முலைகள் இன்னும் நல்ல திமிரோடு அவன் மார்பில் குத்திக்கொண்டிருந்தது அவனுக்குக் கிளர்ச்சியை ஊட்டியது. இவளும் தன் உடம்பு அழுந்திவிட்ட இந்த ஒல்லிப்பிச்சான் சேக்கின் உடம்பை ஆச்சரியமாக நோக்கினாள்.
‘சேக்கு நீ இந்தக் கதையை எழுது…என்னா….நல்லா வரும் பாரு. உனக்குப் பரிசும் கிடைக்கும்டே.’ இந்தப் பேச்சை ரொம்ப ரசித்தான்.
புலமாடத் தேவரை அவரறியாமல் மனம் பின் தொடர விட்டான். அவன் இதற்குள்ளாக தேவரைப் பற்றிச் சில விஷயங்கள் தெரிந்துகொண்டிருந்தான். அதையெல்லாம் லெட்சுமணன் சொன்னான். இந்த லெட்சுமணன் ஒரு கூறுகெட்ட பய. இவன் சொல்லை எவ்வளவுக்கு ஆதாரமாகக் கொள்வது? ஊசலாடினான் சேக். இருந்தாலும் இப்போது இது ஓர் இடைக்காலக் கொள்முதல் போல கைவசம் இருக்கட்டும் என்று மனத்துக்குள் பூட்டிவைத்தான். எவ்வளவு கூறுகெட்ட பயலாயிருந்தாலும் ஒரு கதைக்கு எல்லா தகவல்களும் தேவைதானே?
புலமாடத் தேவர் தன் பாரியாள் வள்ளியம்மையைத் தேடிப் போகப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது; அவருக்கும் தெரியாது. வயிற்றுப் பசியும் உணர்ச்சிப் பசியும் அவரை மொய்த்தன. கிட்டுப்பிள்ளை கிளப்பில் மூணு இட்லியும் ஒரு தேநீரும் சாப்பிட்டு வேலைக்காகவில்லை. நின்றுகொண்டிருந்த கணபதி பஸ்ஸில் ஏறிக்கொண்டார். பல கற்பனைகள். வள்ளியம்மா ரொம்பவும் கோபப்பட்டுப் பேசுவாள். இம்முறை நாம் சாந்தமாகப் பதில் பேச வேண்டும். பாவி மட்டை, சும்மா ஊருக்குப் போயிட்டு வர்ரேன் என்று சொல்லிவிட்டுப் போனவள்தானே, இப்படியா போய் தன் ஊருக்குள் இருந்துவிடுவது? கோபத்தை ஆற்றிய பின்னராவது தன் வீட்டுக்கு வந்திருக்கலாமே! அப்படியென்ன ஊரு உலகத்தில் யாருக்கும் இல்லாத கோபம்? வாயில் வைக்கிற மாதிரி சாப்பாடு செஞ்சாயென்னா என்று கேட்டது ஒரு தப்பா? அல்லது இதுபோக வேறு எதையாவது என்னையறியாமலேயே நான் சொல்லிட்டேனா? இல்லே, பழைய கோவத்தையெல்லாம் திரட்டிக்கிட்டு ஒரேயடியா காலிபண்ணிப் போயிட்டாளோ?
அவள் போய்விட்டு நாளைக்கு வருவா, நாளை மறுநாளைக்கு வருவா என்று எதிர்பார்த்திருந்தார் புலமாடத் தேவர். ஒரு வாரம் ஆகவும் சந்தேகம் வந்தது; அச்சம் வந்தது. பிறகுதான் தெரிந்தது அவளுடைய ட்ரங்குப் பெட்டியில் எதுவும் இல்லையென்று. சரஸ்வதியுடைய துணிமணிகளும் ஒன்றும் கிடையாது. ”எவ்வளவு தந்திரம் இந்தப் பொட்டச்சிகளுக்கு?”. இவை மனசுக்குள் ஓடஓட வேலையில் கவனம் சிதறித் தேவர் வாங்கிக் கட்டிக்கொண்டதும் உண்டு. யாரிடத்திலும் துயரைப் பகிர முடியாமலும் போச்சு. வழக்கமாக இராத்திரி நேரத்தில் அந்த போஸ்ட் ஆஃபீஸ் திண்ணையில கொஞ்சம் குளுமையை அனுபவிச்சுக்கிட்டு, சோவாரிக்கிட்டு, ஊர்க்கதையைப் பேசிக்கிட்டு இருந்த அந்தப் பொழுதெல்லாம் நரகமாப் போச்சி. அவர் உடம்பு அங்கு இருக்கும்; மனதைக் காணோம் என்று ஆகிவிடும். சேதுப்பிள்ளை, பேச்சியா பிள்ளை, மூக்கன் செட்டியார், அதாவுல்லா, பாலையா கோனார் இப்படியாக எல்லாரும் சேர்ந்து கிடந்து பேசிக்கிட்டிருந்தப்போது தன்னால் ஒரு வரியும் ஆற்ற முடியாமல் போயிற்று. பேந்தப் பேந்த அங்குமிங்கும் முழிப்பார். தன் முன்னே இப்படி ஊர்க்கதையும் சினிமாகதையும் பேசுகிற இவர்களுக்குத் தன்னைவிட்டுத் தன் மனைவி போய்விட்டாள் என்ற கதையே தெரியவில்லை. ஒருவகையில் நல்லதுக்குத்தான்; மறுவகையில் இவங்க எப்போ தன் கதையைக் காதாரக் கேட்டு ஆறுதல் சொல்லப்போகிறார்கள் என்று அலைபாய்தல். அப்படி எதுவும் நடக்கவில்லை. இரவு முழுநிலா அவ்வளவு வெளிச்சத்தைக் கொட்டி சிலுசிலுன்னு காற்று வீசி உதவிபுரிந்தது. இருந்தபோதும் தன் மன வேக்காட்டுடன் போட்டிபோட முடியாமல் தவித்துக்கிடந்தார். எவ்வளவுதான் வெளியே சாப்பிட்டு வந்தாலும் திருப்தியில்லை. வயிற்றுப் பசியா மனப்பசியா என்று அவரால் அறிந்துகொள்ள முடியாமல் கரைந்துபோன நேரங்களும் இல்லாமல் இல்லை.
அவரின் பார்வை பரிதாபத்திற்குரியதாக மாறியிருந்தது. இதை முத்துச்சாமி சொன்னார். அவரிடம்தான் இசக்கி ஊரைக்காலிசெய்துவிட்டுத் தன் அம்மாவோடு சேரப் போகும் தகவலைச் சொல்லியிருக்கிறான். இந்தக் கதையும் இப்படி ஆயிற்றா என்று வேகவேகமாக விரைந்தார் தேவர். கதவைத் திறந்து பார்த்தபோது இசக்கியின் பெயர் சொல்லும் அடையாளம் ஒன்றுகூட இல்லை. தேவர் அதிர்ந்துபோய் நின்றார். வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு வெளித்திண்ணையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தார். இந்த மரபில் அழுகையும் கண்ணீரும் உண்டா? ஆனால் எவரும் அவருடையை விசும்பல் ஒலி கேளாமல் தெருவில் அங்குமிங்குமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். தன்னிடம் எதுவும் கேட்க முடியாத அளவுக்கு மற்ற எல்லோருக்கும் ஒரு சோகக் கதை இருக்குமாடே என்று முத்துசாமியிடம் கேட்டார். முத்துசாமிக்கு வயசென்ன, புலமாடத் தேவருக்கு வயசென்ன? அவனிடம்போய் இவர் அவ்வளவு ஆற்றாமையான கதையின் தொடக்கமும் முடிவும் கேட்கிறார்; வழியில்லாமல் கேட்கிறார். வீட்டில் பெண்டாட்டிப் பிள்ளைகள் இல்லையென்றால் தன் கிராமத்தில் ஆறுதல் சொல்பவர்களும் இல்லாமல் போகிறார்கள்.
இரவு முழுவதும் வீட்டுக்குள் முடங்கிப் புரண்டிருக்கிறார். அடிக்கடி வெளியே வந்து தெருவைப் பார்க்கவும் நேராகப் போய் மாந்தோப்பு கட்டைமண்மீது மூத்திரம் பெய்யவுமாக இருந்தார். மறுநாள் காலையில் வீம்புடன் எழுந்தார். ஆற்றில் போய்த் துணிமணிகளைத் துவைத்துக் குளித்துவிட்டு மடமடவென்று வயல்களைத் தாண்டி பஸ்ஸ்டாண்டுக்குப் போனார். கிட்டுப்பிள்ளை காப்பி கிளப் மட்டும்தானா இந்தப் பூவுலகில்? வேறொரு கிளப்பில் இட்லி, ஆப்பம் சாப்பிட்டால் பசியை அடக்கிவிடலாம் என்று எண்ணினார். மாறுதலாக இருந்தது இட்லி, சட்னி, சாம்பார். நல்ல ருசி என்று ரசித்தார். வள்ளியம்மை இல்லாட்டியென்ன? முருக பவன் டிபன், சாப்பாட்டை ஜமாய்த்துவிடலாம் என்று நினைத்தார். திடீரென்று ஒருநாள், புலமாடத் தேவரை எதிர்கொண்டு கிட்டுப்பிள்ளை சேமநலம் விசாரித்தவராக தேவரின் ஆஜர் இன்மையை விசாரித்தார். கிட்டுப்பிள்ளையிடம் எவனோ ஒருவன் போட்டுக்கொடுத்திருக்கிறான். அதையெல்லாம் மனசில் வைத்து, ’தேவரே நீரு நம்ம கிளப்புக்கு இனிமே வந்தீர்னா ஒம்ம ஸ்பெசலா கவனிக்கச் சொல்றேன்வே’ என்று வாக்குறுதி கொடுத்தார். தேவருக்கு இப்போது ரெண்டு கிளப்பும் தேவைப்பட்டது. அதனால் பட்டும் படாமல் சொல்லி, இங்கும் அங்குமாகச் சாப்பிட்டு நாளையும் பொழுதையும் கழிக்கப்போவதாகச் சொன்னார். கிட்டுப் பிள்ளைக்கு இது ஆகா, ஓகோவென்றெல்லாம் இல்லை. இருந்தாலும், ‘சரி’வே, மறந்திடாம வந்து போனா சரிதான் தேவரே,’ என்றார்.
இப்படியாகப் பல மாதங்கள் கழிந்தன. தேவருக்கு உண்மையில் இது பெரிய சாதனை. இடையிலே இரண்டு மூன்று முறை இசக்கி அவரைத் தேடிவந்து செலவுக்குப் பணம் வாங்கிவிட்டுச் சென்றிருக்கிறான். அப்பாவுக்கும் மகனுக்கும் சின்னச் சின்ன தர்க்கங்கள் நிகழ்ந்துகொண்டபடி இருந்ததாகத் தெரியவருகிறது. ஆனால் இசக்கி எப்படி வருகிறான், எப்படி திரும்புகிறான் என்று தெருக்காரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘ஒன் அம்மைய வரச் சொல்லுலே…..நான் அவ எவ்வளவு கேக்காளோ, அதுல ஒரு தம்பிடிகூடப் பழுதில்லாம கொடுத்திர்றேன்…இப்பிடி என்னைத் தனியா ஏங்க வச்சாளே. ஏம்ல, ஒனக்குமால்ல மனசு கல்லாப் போச்சு.”
இந்த அனல்காற்று அவருக்கு அத்துப்படி. வள்ளியம்மைக்கும் தனக்குமான உறவு முறிந்த புள்ளி எதுவென்று அவருக்குத் தெரியவில்லை. அந்த நாளில் ஆயிரத்தெட்டுக் குறைகள், முனகல்களோடு வீடு கிடந்தது. தலையாரி என்ற அதிகாரம் வீட்டிலும் கொடிகட்டிப் பறந்தது. அவள் இஷ்டத்துக்கும் ஊர்போய்விட்டு வரத்தான் செய்தாள். நோக்காடு எங்கே, எப்படி வந்ததுன்னு கண்டுபிடிக்க முடியல்ல. இப்போ அவள்கிட்டே என்ன எப்படிப் பேசுவது என்ற ஒத்திகைகள் மனத்தில் நடக்கவில்லை. அவள் யாருடைய சம்பாத்தியத்தில் வாழ்கிறாள்? அவளுக்குத்தான் யாரும் இல்லையே!
ரொம்ப நாளைக்கப்புறம் வந்தாலும் இதுதான் தெரு என்றும் அந்தத் தெருவில் இதுதான் தன் மாமியாள் வீடென்றும் தேவருக்கு அடையாளம் தெரிந்தது. தெருவும் வீடுகளும் தேய்ந்தோ ஒளி குன்றியோ வெறிச்சிட்டுக் கிடந்தன. இந்தத் தெருவுக்குள் மனுஷன் வசிக்க ஏலாது. வசிக்க ஏலாத இடத்தில் வள்ளியம்மை வாழ்கிறாள்; இசக்கி வாழ்கிறான்; சரஸ்வதியும்! முன்னொரு காலத்தில் வந்தபோது குளுமை வீசிய வேப்ப மரங்கள், பூவரச மரங்களைக் காணோம். கோயில் பளபளப்பாக இருந்தது. சமீபத்தில் வெள்ளைப் பூச்சுப் பூசியிருக்கிறார்கள். ஓலைப்பிரை கூரை நீக்கி ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டிருந்தார்கள். தரைபெயர்ந்துகிடந்த கோயில் திண்ணையில் நல்ல சிமெண்ட் பூசியிருந்ததது. இப்படி திண்ணை வாய்த்தால் பெரிய வட்டமாக உட்கார்ந்து நல்ல சீட்டாட்டம் போடலாம்.
தளர்ந்த நடையோடு வீட்டின்முன் போய் நின்று, “ ஏலா ஏ வள்ளி…” என்று குரல் கொடுத்தார் தேவர். இந்த நேரத்தில் ஒரு பித்தளைக் கும்பா அளவு பழையதும் ஊறுகாயும் கிடைத்தால் எப்படியிருக்கும்? வீட்டில் ஆள் நடமாட்டம் தெரியாமல் ஆனால் முழு வீடும் திறந்துகிடந்தது. இப்படி குரல் கேட்டதும் வள்ளியம்மைக்குத் திக்கென்றது. “பேதீல போவா…வந்து சேந்துட்டார..” பயம் ஏதும் இல்லை, எதிரிலும் நிற்க எண்ணமில்லை. பின்னே நிற்கிறவள் வீட்டினுள் நுழைவதானால் புலமாடத் தேவர் கண்ணில் பட்டாக வேண்டும். கொஞ்ச நேரம் மூச்சுக் காட்டாமல் நின்றாள். கடூரமான வெயிலில் போய் ஒண்ணுக்கிருந்துவிட்டுக் காலில் கொஞ்சம் தண்ணீரை விட்டுக் கழுவும்போது அவர் குரல் கொடுத்தார். நட்ட நடு வெயிலில் சுட்ட தரையில் நிற்க முடியவில்லை. புலமாடத் தேவர் குரல் கேட்டதால் அவளால் நிற்க முடிந்தது. ’ஏ…புள்ள,’ என்கிற குரல் மீண்டும் வருகிறது. இப்போது அழைக்கக் கூடிய விதமா இது? பைத்தார மனுஷன்.
அடுத்த வீட்டுப் புறவாசலுக்கு வந்த பொன்னம்மா சொன்னா, ”ஏ அக்கா யாரோ உங்களைக் கூப்பிட்டா மாதரி இருக்கே. அவரு ஒங்க பழைய வீட்டுக்காரரோ?” நேரம் பார்த்துப் பொன்னம்மா எப்படிக் குத்துகிறாள்? வள்ளியம்மை அவளை ஏறிட்டாள்; பதிலேதும் சொல்லவில்லை. ‘நல்ல தேரம் பாத்துதான் இவ நம்மள குத்துறா…” பொன்னம்மா ‘பழைய’ வீட்டுக்காரர் என்று சொல்லும்போது அவளின் நக்கல்தான் இது…..’ஏ வுட்டி, எனக்கு எதுவும் புரியாதுன்னு நெனச்சிருக்கியோட்டி,”
’பாவிமட்ட வீட்டைத் தொறந்துபோட்டு எங்க போயிட்டா?’ என்று சொன்னபடி திண்ணையில் உட்கார்ந்து மீண்டும் உள்ளே பார்வையை நுழைத்தார். “வே, நீரு யாரும்? அடுத்த வூட்டுல இருந்துட்டு எட்டிப் பாக்கீரே’வே. எந்த ஊருவே ஒமக்கு?” என்று பாம்படம் தொங்க, வெள்ளைச் சேலை கட்டிநின்ற வயசாளிப் பாட்டி ஒன்று கேட்டது. “ ஏ ஆத்தா, நீ சும்மா போ. அவுக எசக்கியோட அப்பாதான்…” வள்ளியம்மை வந்து நின்றாள். கேட்டவளுக்கு வாய் அடைத்துவிட்டது. வள்ளியம்மை உறவைக் கொண்டு பார்த்தால் இவர் தனக்கும் மருமான் முறை. இப்படி கருக்குழிஞ்சு கருங்குருவியாட்டமா போயிட்டாரே. வருஷக் கணக்கா பாக்காமப்போனது குத்தமோ? அந்த ஆத்தா மெல்லமாக நக்ர்ந்தாள். புலமாடத் தேவர் யாதொரு உணர்வுமின்றி ஏறிட்டார். வள்ளியம்மை பார்வையும் அதைச் சரி செய்தமாதிரிதான் இருந்தது.
“எங்கவே வந்தீரு?” புலமாடத் தேவர் எல்லாவற்றையும் கணக்குப்போட்டு வந்திருப்பதாகத்தான் நினைத்திருந்தார். அந்த நினைப்பில் இந்தக் கேள்வி இல்லை. திடீரென்று நிகழும் நிலநடுக்கம் போல் கேட்டுவிட்டாள். தேவர் மிக உஷார். அவருக்கு ,வீறிட்ட ஆத்திரம் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது – விநாடியில். “நீ என்ன சொல்லாம கொள்ளாம வந்துட்டே….அப்படி என்ன நடந்துச்சு?”. என்று அவர் கேட்க, “ஏதும் நடந்தாதானா?…..மனசே அங்க தங்கல….மனச மீறி என்னத்தவே வாழச் சொல்றீரு?”
இயந்திரமயமான அசைவில்தான் இரண்டு குழந்தைகள் பிறந்தன. காதல் கனிரசம் கிடையாது, ’செங்கனி வாய்திறந்து சிரித்திடுவாய்…’ என்று பாடல் இல்லை; வசனமாகவும் வரவில்லை. வள்ளியம்மைக்கு இதெல்லாம் ஆசையாக இருந்திருக்குமா? தேவரின் இந்த மனசு ஓட்டம் சரியா தப்பா என்று அவரே கேட்டுப் பார்க்கிறார். இந்த இடத்தில் நின்று அவர் வாயைத் திறந்து பேசியிருப்பாரேயானால் உண்மை கொஞ்சம் தெரிந்திருக்கலாம். (காலங்கள் கடந்தபின் உண்மை தெரிந்தபின்னும் பயனில்லை). சம்பளம், குடிபோதை, வரதட்சணை, சும்மாவாச்சும் புழுபுழுத்துக்கொண்டிருந்தது, நேரம் – காலமில்லாமல் வருவது போவது… என்ற சின்னச்சின்ன விஷயங்களெல்லாம் பெரிசாகிடுச்சோ?
“நீ இனி என்ன சொல்றியோ அதுமாதிரி இருந்துக்குர்றேன். வீட்டுக்கு வா…. ஊர்ல அவனவனுக்கும் பதில் சொல்லிட்டிருக்க முடியல்ல….”
வள்ளியம்மை கேட்டுக்கிட்டிருந்ததாகத் தெரியவில்லை. சிலச்சில மனிதர்கள், சிலச்சில மரங்கள் என்பதைத் தவிர கணவனின், அவர் ஊரின் மிச்சசொச்சமாக அவள் எதையும் தன் மனத்தில் தங்கவிட்டிருக்கவில்லை. தெருவில் கனத்த நடமாட்டமில்லை. வீட்டுக்குள்ளிருந்தபடி பலபேரும் தங்களைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். இதெல்லாம் வள்ளியம்மைக்குச் சங்கடமாக இருக்கிறது. ஊருக்குள் இனி இதுபற்றி விசாரம் இருக்கும். அவள் மீண்டும் தன் கதையை யார்யாருக்காகவோ சொல்ல வேண்டியிருக்கும். அல்லாதுபோனாலும் தனக்காகவேனும் தன்னைச் சமாதானப்படுத்த வேண்டும். புலமாடத் தேவர் இப்படி வருவார் என்று யார் கண்டது? தான் ஒன்றும் எந்தக் குறிப்பிட்ட காரணத்துக்காகவும் வரவில்லை. சுவர்களைப் பார்த்துத் தன் நியாயத்தை இவள் பலமுறையும் பேசியிருக்கிறாள். சுவர்கள் நான்கையும் தட்டிக்கேட்டால் விவரம் சொல்லும்.
இந்த மனுஷனை ரொம்பநேரம் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. மனசு கரைஞ்சுடும் என்று பயந்தாள். இவர் சீக்கிரமாய்ப் போய்த் தொலைந்தால் பரவாயில்லை. அவரை அனுப்பிவைக்க கௌரமான வார்த்தைகள் இருக்கின்றன. வள்ளியம்மை பயன்படுத்த வழி தெரியாமல் தவித்தாள். அவர் முகம் முதல்நிலை அனாதை போல அவரைக் காட்டிற்று.
முடிவில்லா நாள்களின் முடிவில்லா கதைகள், கேள்விகள், ஆர்வங்கள். அந்த அளவுக்குப் பேச்சு வளர்வேனா என்றது. மௌனம் பெரிய பனிக்கட்டிபோல ஒவ்வோர் இடைவெளியிலும் வளர்ந்துவிடுகிறது. வாசல்படியில் மெதுவாக ஏறிவந்தார் முண்டத் தேவர். வாசலில் எதிரும்புதிருமாக ஓர் ஆம்பளையும் பொம்பளையும் இருக்கிறார்கள். சிதறாத பார்வை. அவர் நேர்க்கோட்டைப் பிடித்து வீட்டுக்குள் போனார். புலமாடத் தேவர் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அவருக்குப் புரியவில்லை. அவரும் தன்னைப்போல மேலே ஒரு துண்டைப் போர்த்தியிருக்கிறார். தன்னைப்போல மெதுவாக அடியெடுத்து நடக்கிறார். வீட்டுக்குள் போகிறார், சொந்த வீடு போல. மேலே கிடந்த துண்டை எடுத்துக் கொடியில் போடுகிறார். புலமாடத் தேவரின் கண்களில் எண்ணற்ற காட்சிகள் குவிந்தன. ஞானக் கண் கொண்டவரைப் போல அந்த வீட்டினுள் உறைந்துகிடந்த எல்லா காட்சிகளும் அவருக்குள் விரிகின்றன. அந்த மனிதர் கட்டையைச் சாய்த்துவிட்டார். வள்ளியம்மை இருக்கிறாள் – தன் இருப்பைத் தானே விலக்கிக்கொண்ட மாதிரி. புலமாடத் தேவர் தான் கருதிய வள்ளியம்மையை உற்றுப் பார்க்கிறார். தெரு வீட்டில் சாய்ந்துகிடக்கிற கட்டையைப் பார்க்கிறார். கீழே குனிந்தார். தன் கால்களைப் பார்த்தார். எழுந்து நின்று எதுவும் சொல்லாமல் கீழே இறங்கி வந்தவழி பார்த்து நடந்தார்.
திண்ணையில் வள்ளியம்மை இருக்கிறாள்; அவள் உருவத்தை ஒருமுறை பார்க்க விரும்பித் திரும்பினார். வள்ளியம்மையின் கண்களிலிருந்து ஒரு துளி சிதறும் காட்சி அவருக்குப் போதுமானதாயிருந்தது.
- களந்தை பீர்முகம்மது

Anita Srikanth
July 6, 2022சிறுகதை: ஜெயிக்க விரும்பியவர்.
எழுதியவர் : களந்தை பீர் முகமது அவர்கள்.
காதல்…..
இந்த மூன்று எழுத்து தான் கதை
புலமாடத்தேவருக்கு வள்ளியம்மையின் மீதான காதலை ஒவ்வொரு வரியிலயும் பார்க்கலாம்.
வள்ளியம்மையின் இருப்பிடத்துக்கு புலமாடத்தேவர் போகும்போது அந்த ஊரின் வளமையை விவரிப்பதில் ஆரம்பித்து இறுதியில் இந்த வளமையில் தான் அவள் இருக்கா னு முடிக்கும் போது அந்த காதலின் ஆழம் நமக்கு தெரியும்.
அடுத்தது புலமாட தேவரின் கதையை எழுதி பரிசு வாங்கும் சேக்கின் காதல்.
தன்னை விட வயதில் பெரியவளான மைமூன் அவனை ஒரு கட்டத்தில் அந்த கதையை எழுதுமாரு சீண்ட , அப்போது தனக்கு வரும் கோவத்தை அவளை இறுக்கி அணைத்து முத்தமாக தரும் இடத்தில் அவர்களின் காதலை அழகுபட சொல்லி இருப்பார்.
அந்த காதல் தான் புலவாட தேவரின் கதைக்கு பரிசை வாங்கியும் தந்திருக்கிறது.
இறுதியாக வள்ளியம்மை புலவாட தேவரோடு வாழ வரவில்லை என கூறும் தருணத்தில் சிறு ஏமாற்றத்தோடு கிளம்பும் புலவாட தேவர் சற்றே திரும்பும் போது வள்ளியம்மை யின் சிறுதுளி கண்ணீரை கண்டு நாம ஜெயிச்சிட்டோம் னு கெத்தா கிளம்பும் இடத்தில இருவரின் காதலும் நமக்கு புரியும்.
நன்றி
அனிதா ஶ்ரீகாந்த்
டோம்பிவிலி
6/07/2022
Mansoor
July 8, 2022சிறப்பான சிறுகதை..
களந்தை பீர்முகம்மது அவர்களின் எழுத்துகளை காலச்சுவடு வில் படித்திருக்கிறேன்..
இப்போது சுவடு வில் படிக்கிறேன்.. மகிழ்ச்சி..
சுவடுவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.. தொடர்ந்து எழுதுங்க அண்ணா..