ஜெயிக்க விரும்பியவர்
சிறுகதை – களந்தை பீர்முகம்மது அவர் போகும்போது ஒருமுறை பார்த்துக்கொண்டார். அரசமரத்தையும் அதைச் சூழ்ந்திருக்கும் பீடத்தையும். அழகாகவும் அடர்ந்த நிழலாகவும் வந்து தலைசாய் என்று சொல்கிற விதமாகவும் நல்ல அரச மரத்தடி. அந்த மரம் அக்கிராமத்தின் வயதைக் கூறுகிறதுபோல. அதை ரொம்பவும் அடர்த்தியாகப் பார்த்தார். பக்கத்தில் குளம் கிடக்கிறது. தண்ணீர் அலைவுறும் பாளமாக ஒளிர்கிறது. சிற்றலைகள் மீன்குஞ்சுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கலாம். விளையாட்டு விளையாட்டாயிருக்க, மேலே ஊர்ந்துசெல்லும் தென்றலோடு இசைந்து அலைகள் ஏதோ பாடல் பாடுகின்றன. அதனால்தான் இத்தனை குஷாலான அலையடிப்புகள். குளம் ஊர்ப்பரப்புக்கு மேலே நான்கைந்து அடி உயரமாக விரிந்துகிடப்பது தெரியவருகிறது புலமாடத் தேவருக்கு. நடந்துகொண்டே இருந்தார். ஆனால் அரச மரத்தடியில் உட்கார்ந்து சுகமாகத் தலையைச் சாய்த்துத் தூங்கிவிடுகிறார். காற்றும் அலைகளும் இவ்வளவு குதூகலமாய் இருக்கும் கிராமக் குளத்தில் இதை யாரும் ரசிக்காமலோ அனுபவிக்காமலோ எங்கெங்கிலும் அலைந்து திரிகிறார்கள். அவர் தன் உடம்பை அங்கே கிடத்தியபடியே நடந்துகொண்டிருக்கிறார். திரும்பித் திரும்பிப் பார்க்கிறார். தான் அங்கே கட்டைபோலச் சாய்ந்துகிடப்பது தெளிவாகத் தெரிகிறது. கொஞ்சம் புரள்வதும் ஏதோ புலம்புவதுமாக. அந்தக் காற்றும் பீடமும் தனக்கு எப்பவும் வேண்டும் என்று விரும்புகிறார். உள்மனது அவரை அறியாமல் சொல்லிவிட்டது, ‘நீ அங்கே செல்வாய் கொஞ்ச நேரத்தில்.’ காற்றின் இதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வயல் பசுமை கிறங்கச் செய்தது. இவள் இந்தச் சொகுசில்தான் இந்த ஊரிலேயே இருக்கிறாளா என்று கேட்டுக்கொள்கிறார். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லை. அதனால் கொஞ்சம் சத்தமாய்க் கேட்டார், ‘பாதவத்தி, வந்த ஜோருல இப்படியே ஒக்காந்திட்டியே. என்னை ஒருமுறை கூடவா நீ நெனச்சுப் பாக்கல?’ முன்பு எப்போதோ வந்தது. மாப்பிள்ளை ஜோர் காலம். அதற்குப் பிறகு அவர் இங்கு வரவில்லை. தலையாரி வேலையில் சாத்தியப்படாது. ஆனால் அவர் வள்ளியம்மாவிடம் சொல்லிக்கொண்டது இன்னும் கெத்தாக, ‘இந்த மாரி அங்கேயும் இங்கேயும் அலையுற ஜோலி மயிரெல்லாம் இங்கே நடக்காது. வாய மூடிட்டுக் கெட.’ அன்று முடங்கிவிட்டாள்; ”அவரு வந்துதான் கிழிக்கப்போறமா?”. தன்னைப் பார்க்க வந்த அம்மைகிட்டேயும் ஐயாகிட்டேயும் எவ்வளவோ குறை சொல்லி ஒப்பாரி வைத்திருக்கிறாள். ஒப்பாரியோடும் முணங்கல்களோடும் வருஷங்களைக் கடத்திவந்தாள். புலமாடன் புலமாடத் தேவராக அறியப்பட்ட ஒருநாள் கலவரக்காரி மாதிரி அவரை எதிரே நிற்கவைத்துக் கேள்வி கேட்டாள். தலையாரித் தேவர் பயந்துபோய், ‘ போய்த் தொல.’ வள்ளியம்மாள் அந்த ஒரு வாய்ப்பைப் பன்மடங்கு வாய்ப்பாய்ப் பெருக்கினாள், வரவும் போகவும். என்ன பொல்லாத தூரமா? ஒரு பதினைஞ்சு கிலோ மீட்டர். கணபதி பஸ் போகிற நேரத்தைக் கணக்குவைத்து நேராக ரைஸ்மில் பக்கம்போய் நின்னா போதும். வள்ளியம்மை கைகாட்ட வேண்டிய அவசியமில்லை. அவள் நிற்கிறதைப் பார்த்து பக்கீர் ராவுத்தர் பஸ்ஸை உடன் பிரேக் போட்டு நிறுத்துவார். வள்ளியம்மை பூஞ்சை உடம்புக்காரி. காற்றுபோல ஒரு சொடுக்கொலியில் பஸ்ஸில் ஏறுவாள். பஸ் நின்றதும் தெரியாது; புறப்பட்டதும் தெரியாது. ஒருமுறை புலமாடத் தேவர் நூறு, இருநூறடி தூரத்துக்குள் வந்துகொண்டிருக்கும்போதே கணபதி பஸ்ஸை நிறுத்தி ஊருக்கு ஏறிப் போயிட்டாள். ‘எளா, ஒன் வீட்டுக்காரரு வாரார, நீ கண்டுக்காம ஏறிட்டே!” ’ஆங்… வந்தா போவாரு…’ இதைப் பார்த்தார் தேவர். அவருக்கு ஆத்திரம் வந்து அவள் ஆக்கிவச்ச சோற்றைப் பூனைக்கு அள்ளிக்கொட்டினார்; அப்புறம் பஸ்ஸ்டாண்டுக்கு வந்து கிட்டுப்பிள்ளை கிளப்பில் உட்கார்ந்து முட்டைகோஸும் தேநீரும் சாப்பிட்டது ஞாபகத்தில் உண்டு. புலமாடத் தேவர் பீடியை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டார். புகை வெளியே வருவதற்குள்ளேயே காற்றில் காணாமல் போயிற்று. ‘அவதான் அப்படிப் போனா. இந்தப் படுபாவி இசக்கியுமில்லா அவக்கூட சேந்துக்கிட்டான். அவன் எப்படி இந்த ஒண்ணுக்குமில்லாத ஊர்ல வந்து கெடக்கான்? அவன் சேக்காளிப் பயலுவள் எல்லாம் நம்மகிட்ட எத்தனை முறை கேட்டுட்டானுவோ. அந்த மீரான் பய கடுதாசி போட்டதா வேற சொன்னான். ஆனா இசக்கி பதிலே போடாம ஒக்காந்துட்டான். இப்படி சேக்காளிப் பயலுவளயே கைவிட்டுட்டுப் போறவன் எப்படி நம்மள ஏறெடுத்துப் பாப்பான்.” புலமாடத் தேவர் தன் மகனிடம் நாசுக்காகப் பேசி கையோடு இழுத்துட்டுப் போயிரணும் என்று மனசுக்குள் திட்டம் வைத்திருந்தார். ’அவன் இங்கே கிடந்து என்ன வேல பாப்பான். வயல்ல இறங்கி வேல பாக்குறப் பயலா அவன்? மூதி….அறிவுகெட்ட மூதி….அவன் அம்மையோடு சேந்துசேந்து அவனுக்கும்லா மூளை மழுங்கிப்போச்சு.’ இத்தனைப் போக்காக அவர் இசக்கியை நினைத்துக்கொண்டிருந்தாலும் சரஸ்வதியைப் பற்றி நினைக்கவே இல்லை. அவ பெரிய ராங்கிக்காரில்லா. நல்ல நாள்லேயே நாழிப் பால் கறக்காதவ. இப்போ அவ அம்மைக்குத் துணையா இருக்குறதா சொல்றானுங்கோ. நம்ம வீட்டுக் காரியம் நமக்குத் தெரியல்ல. ஊருக்காரப் பசங்கெல்லாம் ஏதோ திருதராஷ்டிரன் கணக்கா எல்லாத்தையும் நேரில பாத்த மாதிரி நம்ம வீட்டுக் கதைய பேசுறானுவோ.’ அவர் வடக்கே நோக்கிப் போகப்போக அவரைக் கடக்கும் வண்டிகளும் வடக்கே இருந்து வருவனவாகத்தான் இருந்தன. தெற்கே இருந்து யாராவது மாட்டுவண்டி, சைக்கிள்ல வந்தாலும் அவங்களைத் தொத்திக்கிட்டு ஊருக்குள்ளாற போயிரலாம். இந்தக் காற்றும் பச்சை வயலும் இல்லேன்னா இந்த வெயில்ல அலையிறது ரொம்பக் கஷ்டமாக ஆகியிருக்கும். அந்த மரத்தடியில் தலையைச் சாய்த்திருக்கலாம். பிள்ளையார் துணையிருக்கிறார். அவர்கிட்டே கதையச் சொல்லிப் பிரார்த்தனையும் செஞ்சிருக்கலாம். ஊரில் அந்த சேக்கு பையன் இருக்கிறான். இசக்கியோட முக்கியமான சேக்காளி அவன். சேக்கு நிறைய கதை எழுதிக்கிட்டிருக்கான்னு சொல்வானுவோ. அவன் என் கதையை எழுதிப் பரிசு வாங்கியிருக்கானாம். அதைக் கேள்விப்பட்ட நாளிலே இருந்து அவனைக் கண்ணால பாக்கக் கூட முடியல்ல. என் கதையை அவன் எப்படி எழுத முடியும்? இப்பத்தான நான் இப்படி லோல்படுறேன். இதெல்லாம் படுறதுக்கு முன்னாலேயே ஒருத்தன் எப்படி என்னோட கதைய எழுத முடியும்? ரொம்பவும் அக்குறும்பால்ல இருக்கு! ‘ஜெயிக்க விரும்பியவர்’ என்ற தலைப்பில் சேக் கதை எழுதினான். அது முக்கியமான சிற்றிதழில் பிரசுரமானது. அந்த மாதமே அந்தக் கதைதான் சிறந்த கதை என்று தேர்ந்தெடுத்திருந்தது அந்த இலக்கிய அமைப்பு. ‘ஜெயிக்க விரும்பியவர்’ கதாநாயகரான புலமாடத் தேவர் மிகவும் அணுக்கமாக இருந்தார் சேக்கிற்கு. அவன் எழுதிய கதை அவனாகக் கற்பனை செய்து எழுதியதல்ல. இந்தக் கதையில் இப்படி ஓர் அம்சம் இருக்கு என்று எடுத்துக் கொடுத்தவள் மைமூன் பாத்திமா. இவன் கண் முன்னே வாழும் புலமாடத் தேவரைப் பற்றித் தன் சொந்த மண்ணில் பார்க்க துப்புக்கெட்டு, சென்னையில் மைமூன் பாத்திமாவைப் பார்க்கப்போன இடத்தில் அவள் சொல்லித்தான் சேக்கிற்குத் தெரிந்தது. மைமூன் பாத்திமா தெளிவாகச் சொன்னாள், ‘ஐயோ பாவம் புலமாடத் தேவரு. அவரு பொண்டாட்டி அவரை வேண்டாம்னு சொல்லிட்டாளாமே,” அவன் கொஞ்சமாய் முழித்தான். அந்த முழிகண்டு மைமூன் பாத்திமா மறுபடியும் சொன்னாள்,” உனக்குத் தெரியாதாக்கும் இத்தனை நாளா? இந்த முழி முழிக்கிற? நீயெல்லாம் என்னடே கதை எழுதுற?” மைமூன் பாத்திமா இப்படிக் கேட்டதும் சேக்கிற்குக் கடும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவன் எதிர்பார்க்கவில்லை; மைமூன்பாத்திமாவும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவளை அடக்க விரும்பி ஆங்காரமாகக் கட்டிப்பிடித்து முத்தங்களாகக் கொடுத்தான். அவனுக்கு ஆச்சரியம் என்னவென்றால், மைமூன்பாத்திமா எந்த ஆட்சேபணையும் சொல்லாமல் அவன் கட்டுக்குள் கிடந்தாள்; எனக்கென்ன என்கிற மாதிரி வசப்பட்டிருந்தாள். இன்னும் ரொம்ப நேரமாய் அவன் தழுவித்தழுவித் தனக்குள் புதைத்துக்கொண்டிருந்தான். மைமூன்பாத்திமா எத்தனை பெரியவள்? இவனுக்கு உண்மையிலேயே அவளை என்றேனும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கவா செய்தது? அப்புறம் இருவரும் அவரவர் பேச்சைத்தான் பேசி வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். அவளுடைய ஈர்ப்பான முலைகள் இன்னும் நல்ல திமிரோடு அவன் மார்பில் குத்திக்கொண்டிருந்தது அவனுக்குக் கிளர்ச்சியை ஊட்டியது. இவளும் தன் உடம்பு அழுந்திவிட்ட இந்த ஒல்லிப்பிச்சான் சேக்கின் உடம்பை ஆச்சரியமாக நோக்கினாள். ‘சேக்கு நீ இந்தக் கதையை எழுது…என்னா….நல்லா வரும் பாரு. உனக்குப் பரிசும் கிடைக்கும்டே.’ இந்தப் பேச்சை ரொம்ப ரசித்தான். புலமாடத் தேவரை அவரறியாமல் மனம் பின் தொடர விட்டான். அவன் இதற்குள்ளாக தேவரைப் பற்றிச் சில விஷயங்கள் தெரிந்துகொண்டிருந்தான். அதையெல்லாம் லெட்சுமணன் சொன்னான். இந்த லெட்சுமணன் ஒரு கூறுகெட்ட பய. இவன் சொல்லை எவ்வளவுக்கு ஆதாரமாகக் கொள்வது? ஊசலாடினான் சேக். இருந்தாலும் இப்போது இது ஓர் இடைக்காலக் கொள்முதல் போல கைவசம் இருக்கட்டும் என்று மனத்துக்குள் பூட்டிவைத்தான். எவ்வளவு கூறுகெட்ட பயலாயிருந்தாலும் ஒரு கதைக்கு எல்லா தகவல்களும் தேவைதானே? புலமாடத் தேவர் தன் பாரியாள் வள்ளியம்மையைத் தேடிப் போகப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது; அவருக்கும் தெரியாது. வயிற்றுப் பசியும் உணர்ச்சிப் பசியும் அவரை மொய்த்தன. கிட்டுப்பிள்ளை கிளப்பில் மூணு இட்லியும் ஒரு தேநீரும் சாப்பிட்டு வேலைக்காகவில்லை. நின்றுகொண்டிருந்த கணபதி பஸ்ஸில் ஏறிக்கொண்டார். பல கற்பனைகள். வள்ளியம்மா ரொம்பவும் கோபப்பட்டுப் பேசுவாள். இம்முறை நாம் சாந்தமாகப் பதில் பேச வேண்டும். பாவி மட்டை, சும்மா ஊருக்குப் போயிட்டு வர்ரேன் என்று சொல்லிவிட்டுப் போனவள்தானே, இப்படியா போய் தன் ஊருக்குள் இருந்துவிடுவது? கோபத்தை ஆற்றிய பின்னராவது தன் வீட்டுக்கு வந்திருக்கலாமே! அப்படியென்ன ஊரு உலகத்தில் யாருக்கும் இல்லாத கோபம்? வாயில் வைக்கிற மாதிரி சாப்பாடு செஞ்சாயென்னா என்று கேட்டது ஒரு தப்பா? அல்லது இதுபோக வேறு எதையாவது என்னையறியாமலேயே நான் சொல்லிட்டேனா? இல்லே, பழைய கோவத்தையெல்லாம் திரட்டிக்கிட்டு ஒரேயடியா காலிபண்ணிப் போயிட்டாளோ? அவள் போய்விட்டு நாளைக்கு வருவா, நாளை மறுநாளைக்கு வருவா என்று எதிர்பார்த்திருந்தார் புலமாடத் தேவர். ஒரு வாரம் ஆகவும் சந்தேகம் வந்தது; அச்சம் வந்தது. பிறகுதான் தெரிந்தது அவளுடைய ட்ரங்குப் பெட்டியில் எதுவும் இல்லையென்று. சரஸ்வதியுடைய துணிமணிகளும் ஒன்றும் கிடையாது. ”எவ்வளவு தந்திரம் இந்தப் பொட்டச்சிகளுக்கு?”. இவை மனசுக்குள் ஓடஓட வேலையில் கவனம் சிதறித் தேவர் வாங்கிக் கட்டிக்கொண்டதும் உண்டு. யாரிடத்திலும் துயரைப் பகிர முடியாமலும் போச்சு. வழக்கமாக இராத்திரி நேரத்தில் அந்த போஸ்ட் ஆஃபீஸ் திண்ணையில கொஞ்சம் குளுமையை அனுபவிச்சுக்கிட்டு, சோவாரிக்கிட்டு, ஊர்க்கதையைப் பேசிக்கிட்டு இருந்த அந்தப் பொழுதெல்லாம் நரகமாப் போச்சி. அவர் உடம்பு அங்கு இருக்கும்; மனதைக் காணோம் என்று ஆகிவிடும். சேதுப்பிள்ளை, பேச்சியா பிள்ளை, மூக்கன் செட்டியார், அதாவுல்லா, பாலையா கோனார் இப்படியாக எல்லாரும் சேர்ந்து கிடந்து பேசிக்கிட்டிருந்தப்போது தன்னால் ஒரு வரியும் ஆற்ற முடியாமல் போயிற்று. பேந்தப் பேந்த அங்குமிங்கும் முழிப்பார். தன் முன்னே இப்படி ஊர்க்கதையும் சினிமாகதையும்