ஹலோ மீரா
திரை விமர்சனம்
நாளை மறுநாள் காதலித்தவனுடன் மணவிழாவைக் காண உள்ள, ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் விஜயவாடாவைச் சேர்ந்த இளம்பெண் மீரா, தையற்காரரிடமிருந்து தனது திருமண உடைகளைப் பெற்றுக்கொண்டு, காரில் அமர்ந்து அம்மாவுடனும் கல்யாணுடனும் கிண்டலும் கேலியுமாகப் பேசி முடிக்கிறாள்.
அப்போது, தோழி சாக்ஷி குறிப்பிடும் இன்ஸ்டாகிராம் பதிவும் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விக்ரம் தெரிவிக்கும் தகவலும் அதிர்ச்சியைத் தர, மறுநாள் சங்கீத் உள்ள நிலையில் வீட்டிற்குக்கூடச் செல்லாமல், அந்த இரவில் அவள் விஜயவாடாவிலிருந்து, நிர்ப்பந்தத்தில் ஹைதராபாத்திற்குச் செல்லும்போது, வரும் அடுத்தடுத்த அழைப்புகளால், அவை தரும் செய்திகளால் பதற்றம், குழப்பம், அச்சம், வெறுப்பு, கோபம் என, பெரும் மன உளைச்சலில் உழல, அதிலிருந்து மீரா மீண்டாளா, திட்டமிட்டபடி அவளது திருமணம் நடைபெற்றதா என்பதுதான், ‘ஹலோ மீரா’ தெலுங்குப் படத்தின் மொத்தக் கதை.
வழக்கமான திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ‘ஹலோ மீரா’ படம், ஸ்ரீநிவாசு கக்கர்லா திரைக்கதையை அழகாக எழுதி, விறுவிறுப்பாக இயக்கியிருக்க, அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் வசனங்களுடன் வெளியாகி உள்ளது.
அழகான இளம் பெண் மீராவாக வரும் கர்கேயி எல்லபிரகடா, இக்கதைக்குப் பொருத்தமான நாயகி. பதற்றத்திலும் மன உளைச்சலிலும் மன உறுதியை இழக்காமல், உடைந்துவிடாமல், துணிச்சலுடன் பிரச்சனைகளைத் தெளிவாக எதிர்கொள்வதுமாக, யார் ஒருவருடனும் திரையைப் பகிர்ந்து கொள்ளாமல், முழுத்திரையையும் படம் முழுவதும் வியாபித்து, உணர்வுபூர்வமான பாவங்களை வெளிப்படுத்தி, தனியாளாகவே நடிப்பில் முத்திரை பதிக்கிறார். படம் முழுவதும் அப்படி இப்படிக் கவனம் சிதறாமல், அவருடனேயே நம்மையும் ஒன்றிடச் செய்திருப்பது வெகு சிறப்பு.
நாயகி மீரா தவிர, அவளது அம்மா, அப்பா, தம்பி, மணமகன் கல்யாண், அவனின் அம்மா, சகோதரி திவ்யா, மீராவின் தோழிகள் சாக்ஷி, பூஜா, புவி, நண்பன் கிரண், ஏசிபி ராகவ ராவ், சப்-இன்ஸ்பெக்டர் விக்ரம், பெண் காவலர், சுதிர், அவனின் அப்பா, அம்மா, டைலர், டிஜே, பியூட்டிஷியன் சாந்தி என, எல்லாரும் திரைமறைவுப் பாத்திரங்களாக இருந்தாலும் குரல் வழியில் உயிர்ப்புடன் வழங்கியிருக்கும் நடிப்பு பாராட்டுக்குரியது.



‘சாரி பேபி.. சாரி, நீ பேசும்போது அந்த இன்சூரன்ஸ் கம்பெனி ‘ஹட்’ல ஒரு பையன் பேசுவானே, அந்த மாதிரி இருந்தது’
‘இதே மாதிரி பத்து வருஷத்துக்கு அப்றமும் பேசு, அப்ப நான் ஒத்துக்கறேன்’
‘பேரு எழுதினதுக்கெல்லாமா அரெஸ்ட் பண்ணுவீங்க? அநியாயமா இருக்கு சார்!’
‘இந்தச் சின்ன விஷயத்துக்கு இவ்வளவு டிஸ்கஷன் அவசியமா?’
‘போறவன் போகாம, சூசைட் நோட்ல என் பேரையும் ஏன் எழுதணும்?’
‘இந்தப் பசங்களே இப்படித்தான், லவ் பண்றப்போ பொண்ணுங்க சொல்றபடி கேட்கறது; மேரேஜ்னா அம்மா சொல்றபடி கேட்கறது.’
‘சந்தோஷமா இருக்கும்போது நாம தைரியமாக இருக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கஷ்டம் வரும்போதுதான் நம்ம தைரியம் என்னன்னு நமக்குத் தெரியும்’
‘லவ் பண்றதுன்னா, தெனமும் பத்து தடவ போன் பண்ணி, ஐ லவ் யூ’ன்னு சொல்றதில்ல. இந்த மாதிரியான நெலயில உன்னைப் புரிஞ்சுகிட்டு உனக்கு சப்போர்ட் பண்றது’
ஒரு நாள் கல்யாண கூட்டிட்டு வந்து, ‘ரெண்டு பேரும் லவ் பண்றோம்; இவனைத்தான் கட்டிப்பேன்’னு சொன்னே. ஆனா, நீ மட்டும்தான் லவ் பண்ணி இருக்கேன்னு இப்ப தெரியுதுமா’
இவை ‘நச்’ சென்று ஈர்க்கின்ற வசனங்களில் சில.



வேறுபட்ட களங்களுக்கு வாய்ப்பே இல்லாத நிலையிலும் காரில் அமர்ந்திருக்கும் நாயகியின் முகத்தைப் பல்வேறு கோணங்களிலும் வேறுபட்ட முக பாவங்களையும் கிடைத்த கொஞ்சமான வாய்ப்பில் ‘ட்ரோன் ஷாட்’டில் சாலைப் போக்குவரத்தை இரவு ஒளியில் அழகாகப் படமாக்கி, சலிப்புத் தட்டாமல் செய்த கொப்பிலிடி பிரசாந்தின் ஒளிப்பதிவும், விறுவிறுப்பைக் கூட்டும் எஸ்.சின்னாவின் இசையும், மெடிகொண்டா ராம்பாபுவின் படத்தொகுப்பும் இயக்கத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.
காதல், சண்டை, பாடல், நகைச்சுவைக் காட்சிகள் என எதுவும் இல்லாமல், ஒரே காட்சி, ஒரே நடிகை என்று வைத்து, விறுவிறுப்புடன் கூடிய தெளிவான திரைக்கதை, வசனங்களால் 90 நிமிடங்கள் அப்படியே இருக்கையில் கட்டிப் போட்டுவிட்ட இயக்குநர் ஸ்ரீநிவாசு கக்கர்லாவின் ‘ஹலோ மீரா’, வித்தியாசமான அனுபவமாக அமையும் என்பதுடன், ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள், இம்மாதிரியான பிரச்சினைகளைத் தவிர்க்க, எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டுவதை வலியுறுத்தும் என்பதும் நிச்சயம்.
மதிப்பெண்: 7.5/10
- மது ராஜேந்திரன்

Comments (0)