O2
திரை விமர்சனம்
ஆக்சிஜன், பிராணவாயு என்றெல்லாம் குறிப்பிடப்படும் உயிர்க்காற்று, உயிரைக் கொடுப்பதற்கு மட்டுமல்ல, எடுப்பதற்கும்கூடக் காரணமாக அமையலாம் என்பதை, ‘சீட் ஏஜ் திரில்லர்’ திரைக்கதையாக அறிமுக இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ், ‘ஓ2’ திரைப்படத்தின் மூலமும் நயன்தாரா வழியாகவும் வழங்க முனைந்திருக்கிறார்.

‘சிஸ்டிக் ஃபைரோசிஸ்’ எனும் சுவாச பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவி இல்லாமல் சுவாசிக்க முடியாத வீராவுக்கு (ரித்விக்) அறுவைச் சிகிச்சை செய்யும் பொருட்டு, கோவையிலிருந்து கொச்சி நகருக்குத் தனியார் பேருந்தில் அழைத்துச் செல்லும் அம்மா பார்வதி (நயன்தாரா). இவரைப் போன்று அவரவர் பிரச்சனைகளுடன் ஒருங்கே பயணிக்கும் சில பயணிகள். போக்குவரத்து நெரிசல் காரணமாக, வழக்கமான பாதையை விட்டு குறுக்கு வழியில் செல்லும் பேருந்து, எதிர்பாராத விதமாக நிலச்சரிவில் பூமியில் புதைந்து, நம்மையும் பயத்தில் புதைய வைத்து விடுகிறது.
அம்மா, குழந்தை, பேருந்து ஓட்டுநர் உட்பட பயணிகளின் கதி என்ன என்பதுதான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள இரண்டு மணிநேரப் படத்தின் மொத்தக் கதை.
தாவரங்களின் வகை, தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் உயிர்க்காற்றின் முக்கியத்துவம் ஆகியவை குறித்த புரிதலைக் கொண்ட தாய் பார்வதியாக நயன்தாரா, ‘எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துன்னா, அத பார்த்துகிட்டு சும்மா இருக்கமாட்டா; தட் அப்ளைஸ் டு மதர் நேச்சர் டூ’, ‘உண்மைய சொல்லனும்னா நாமெல்லாம் ஒரு சவப்பெட்டியில் புதஞ்சிருக்கோம்’, ‘ஒரு மனுஷன் சும்மா இருந்தாலே ஒரு நிமிஷத்துக்கு 16 லிட்டர் காத்து தேவைப்படுது; கண்ணுக்குத் தெரியாத பிரச்ன ஆக்சிஜன்’ என்று சொல்வதும், குழந்தையைக் காப்பாற்ற நடத்தும் துணிச்சலும் உணர்வுப்பூர்வமுமான போராட்டங்களும், அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகின்றன. 
அம்மாவுடன் பாசத்தைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளிலும், ஆக்சிஜன் வேண்டி, ஜோம்பிகள் போன்று எல்லோரும் தம்மை வெரித்துப் பார்க்கும்போது, ஒருவித அச்சத்துடன் அவர்களை நோக்கும் போதும், குழந்தை ரித்விக்கின் நடிப்பு பளிச்சிடவே செய்கிறது.
எதிலும் எப்போதும் சுயநலமாக நடந்து கொள்ளும், சட்டத்திற்குப் புறம்பான காரியத்தைச் செய்யும், தண்ணீர் கொடுத்தவனையே ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லவும் செய்கின்ற, கொடுமையே உருவான போலீஸ்காரர், ‘கடவுளே ஒரு குறை வச்சாலும், ஒரு தாய் நெனச்சா அத சரியாக்க முடியும் தாயி ‘ என்று கூறும் குற்றமே செய்யாமல் தண்டனை அனுபவித்த கைதி, அரசியல்வாதி ஆர். என். ஆர். மனோகர், பேருந்து ஓட்டுநர் ஆடுகளம் முருகதாஸ், ‘உன் தகுதிக்கேத்த ஸ்கூல்ல சேக்கோணும்’ என்று கூறும் பஸ் முதலாளி கவிதா பாரதி, அப்பா இடிக்கி பாஸ்கர், மகள், மருத்துவப் படிப்பை முடித்த இளைஞர் எனத் துணைப் பாத்திரங்களை ஏற்ற கலைஞர்களும் கவனம் பெறுகிறார்கள். 
யாராலேயோ அலட்சியமாக வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பை, எங்கெங்கோ பயணித்து இறுதியில் காற்றாடியின் இயக்கத்தையே நிறுத்தி விடுவதான குறியீடு, காரில் போனால் கண்டம் என்று சொன்ன ஜோசியக்காரர், நடக்கப் போகிற விபரீதத்தைச் சொல்லாத அங்கதம், எதற்கெடுத்தாலும் ‘பேட் டே’ என்று சொல்லிக் கொண்டு வரும் இளைஞன், பஸ் என்ன ஆகியிருக்கும் என்று உணர்ந்த வினாடி ‘மை குட் டே’ என்று கூறுவதிலான நகைமுரண் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.
குழந்தை வீராவை அத்துணை நிர்பந்தப்படுத்தி, மீண்டும் பேருந்தில் மின்சாரத்தைப் பெறக் கீழே இறக்குவது, மூச்சுத் திணறலுக்கு ஆக்சிஜன் பெற முயல்வதைவிட அவசியமானதோ! நிலச்சரிவு நிகழக்கூடிய மலைப்பாங்கான மாநிலத்தில் இல்லாது, புதைந்திருக்கும் பேருந்தில் சரியான இடத்தை அறிந்துகொள்ள உதவும் கருவியை அரக்கோணத்தில் இருந்துதான் பெறவேண்டுமென்று கூறுவதை ஜீரணிக்க இயலவில்லை.
இதுபோன்ற கதைக்கரு கொண்ட படத்திற்குப் பக்கபலமாக இருக்க வேண்டியது இசை. விஷால் சந்திரசேகர் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பில் ஓரளவு நிறைவைத் தந்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன். ஆர் கே செல்வா படத்தொகுப்பை இன்னும் கூர்மைப்படுத்தியிருக்கலாம்.

நயன்தாரா முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்தும், கதைக்கரு வித்தியாசமாக இருந்தும், வாய்ப்பிருந்தும் அதனைப் படமாக்கிய விதத்தில் செழுமை இல்லாது, இந்த பட்ஜெட்டுக்குள் எடுக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் எடுத்தது போன்று, போதிய விறுவிறுப்பு இல்லாமல் போனதும், சில காட்சிகள் ‘அமெச்சுரிஸ்ட்’டாகவும்கூட அமைந்து விட்டது, சோகமே.
மதிப்பெண் : 6/10
- மது ராஜேந்திரன்

Comments (0)