திரை விமர்சனம்

நானி, தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா நசீமுடன் இணைந்து  அட்டகாசமாக நடித்து, விவேக் ஆத்ரேயா எழுதி சிறப்பாகவும், சிரிப்பாகவும் இயக்கியுள்ள காதல் கதைதான், சுந்தரத் தெலுங்கில்  ‘அண்டே சுந்தரநிக்கி’, மொழி மாற்றத்தில் தேன் தமிழில் ‘அடடே சுந்தரா’.

காதல் என்றாலே, வழக்கமாகச் சாதியோ மதமோ ‘கேட்’டைப் போடும்தானே! இந்தப் படத்தில் மதம்! எதற்கெடுத்தாலும் ஹோமம் செய்யும் விஸ்வநாத ஐயரின் (நரேஷ்) ஒரே மகன் சுந்தர பிரசாத் (நானி), ஊரறிந்த இந்து. பாயசமே கசப்பான முன் அனுபவத்தால், இந்து மதமும் கசந்த தாமஸின் (அழகம் பெருமாள்) இரண்டாவது மகள் லீலா தாமஸ் (நஸ்ரியா நசீம்). அவர்களுக்குள் லேசுப்பட்ட காதல் இல்லை. பள்ளி நாடகத்தில் வேஷமிட்டு நடித்தபோது துவங்கிய 100% உண்மையான காதல்.

நடுவிலே சுந்தரன் தொடர்பற்றுப்  போக, பருவமடைந்த லீலா கொஞ்சம் டைவர்ஷன் ஆகி, பின் சற்றுச் சுதாரித்து, இப்போது மீண்டு(ம்) சுந்தரனின் பாதையில்! 180 டிகிரி எதிரும் புதிருமாக உள்ள குடும்பத்தில் நிலவும் மத நல்லிணக்கத்துக்கு எதிரான நிலையைக் கடந்து,  காதலை நிறைவேற்றிக் கொள்ளத்தான், எத்தனை பாடுகள், பொய்கள், தந்திரங்கள், கோபதாபங்கள், உணர்ச்சிப் பிரவாகங்கள், மௌன யுத்தங்கள், சரணாகதிகள்…!!! இத்தனையையும் தாண்டி, அவர்களின் காதல் கைகூடியதா என்பதுதான், ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் மொத்தக் கதை.

நகைச்சுவை கலந்த திரைப்படம், நானி, நஸ்ரியாவின் அசத்தலான தலைமையில், நரேஷ், ரோகிணி, பாட்டி அருணா பிக்‌ஷு,  அழகம் பெருமாள், நதியா, தன்வி ராம்,  மேனேஜர் ஹர்ஷவர்தன் பலமான கூட்டணியில்,  தங்குதடையின்றி ‘கலகல’வென்று செல்வது, இனிமை, சிறப்பு. மனிதத்தை மறுக்கும் மதவாதக் கருத்தியல்கள், சடங்கு சம்பிரதாயங்கள் மீது, ஆங்காங்கே அழுத்தமாகக் குட்டு வைப்பதும் பாராட்டத்தக்கது.

பிராமணன், சமுத்திரத்தைத் தாண்டக்கூடாது என்கிற சம்பிரதாயம், அவசியத்திற்கும் அவசரத்திற்குமேற்ப மீறவும், அதற்கான பரிகாரமும்  படிப்படியாக நீர்த்துப்போய், நாக்கிலே ஒற்றைத் தர்ப்பையைக் கொளுத்தி, குறுக்கில் இழுத்து விடுவதில் குறுகிப் போவதையும், சுயநலத்தோடு ஒரு சமயம் மதத்தைப் பொருட்படுத்தாததையும், பிறிதொரு நிலையில் மதத் துவேஷத்தில் உக்கிரத்துடன் நிற்பதையும் இயக்குனர் பதிவு செய்திருப்பது, அவர்களை ஒருவேளை சிந்திக்க வைக்கக்கூடும்.

லேடிஸ் பை-சைக்கிளை எதிர்க்கும் சுந்தரனிடம் அப்பா, சிலதைக் காப்பாத்தணும்னா, சிலதை இழந்துதான் தீரணும்; விதவிதமான ரீசன் எல்லாம் உங்களாலதான் சார் சொல்ல முடியும்; என்னது! நல்ல குடும்பம்னு சொல்லி, சம்மதிக்க வெச்சியா? அப்ப, நம்ம குடும்பம் நல்ல குடும்பம் இல்லியா? போன்ற வசனங்களும், சுந்தரனுக்கும் அவனது மேனேஜருக்குமான  உரையாடல்களும் சுவையானவை. மேலும் இப்படத்தில், கருத்தரித்தது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும், ‘டிஸ்ஜெர்மினொமா’ எனும் கொடிய கருப்பைப் புற்று நோயின் அடையாளத்தை மறைத்துவிடும் கொடுமை குறித்து விழிப்புணர்வு கொள்ள வழிவகுத்த இயக்குனரை வெகுவாகப் பாராட்டலாம்.

சிறுவன் சுந்தரன் (வினய்) மற்றும் சிறுமி லீலா தாம்ஸன் (ஹரிகா கோயிலம்மா) போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளனர். சௌமியா (அனுபமா பரமேஸ்வரன்),  ஜோதிடர் ஜோகராவ் ( ஸ்ரீகாந்த் ஐயங்கார் ), சுந்தரின் மாமா (பிரித்வி ராஜ்), ஜோசப் (வெங்கடேஷ் மஹா), டாக்டர் குரு (ராகுல் ராமகிருஷ்ணன்), கைனகாலஜிஸ்ட் (பவித்ர லோகேஷ்), வம்சி (சாய் ரோனக்), பட இயக்குநர் (அலி) எனத் துணைப் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களும், நடிப்பில் சோடை போகவில்லை.

விவேக் சாகரின் பின்னணி இசையும் பாடல்களும் இனிமை. நிகேத் பொம்மியின் கண்கவர் ஒளிப்பதிவு ‘பளிச்’. குறிப்பிடத்தகுந்தது, ரவி தேஜா கிரிஜாலாவின் படத்தொகுப்பு. குறிப்பாக, ‘கட் டயலாக்ஸ்’  காட்சிகளை குழப்பமில்லாமல், விறுவிறுப்பு குறையாமல் ‘கட்’ செய்தது.

படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க, நிறைய நியாயம் இருக்கிறது. முன் பாதியில் கணிசமாகக்  குறைக்க வாய்ப்பும் இருக்கிறது. படத் தொகுப்பாளரை இயக்குநர் அனுமதித்திருக்கலாம்.

சமூகத்தில் முதன்மை பெற வேண்டியது, மதம் தாண்டிய மனிதக் காதலே என்பதை, அழுத்தந்திருத்தமாகவும் நகைச்சுவையுடனும் வழங்கும் விவேக் ஆத்ரேயின் ‘அடடே சுந்தரா’, பலே சுந்தராதான்.

மதிப்பெண் : 8/10

  • மது ராஜேந்திரன்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *