திருப்பூர் எனும் திருப்புமுனை
திணறுகிறது திருப்பூர், திண்டாடுகிறது திருப்பூர், இனி பின்னலாடைத் தொழில் அழிந்துவிடும் என்றெல்லாம் பல்வேறு செய்திகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே இந்தச் சமூகத்தின் பேசுபொருளாக இருந்துவருகின்றன.
உண்மை நிலவரம் என்ன? உள்ளபடியே இத்தொழில் அழிந்துவிடுமா? திருப்பூரின் எதிர்காலம் என்னவாகும்? ஊடங்கங்களிலும் பொதுமக்களிடமும் பரவும் செய்திகளுக்கும் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் தரவுகளை உள்ளடக்கிய அவதானிப்பை விடையாகப் பகிர்கிறார், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளரும் ஈஸ்டர்ன் குளோபல் க்ளோத்திங் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரும் ஒன்றிய அரசின் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் நிரந்தர அழைப்பாளரும் பி.எஸ்.ஜி. கல்லூரியின் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புப் பாடத்திட்ட உருவாக்கக் குழு உறுப்பினருமான குமார் துரைசாமி அவர்கள்.
கட்டுரையாளர் முன் குறிப்பு: இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் முன், அரசியல் சிந்தாந்தச் சார்புகளை விடுத்து, பொதுவான மனநிலையில் அணுகுமாறு வேண்டுகிறேன். பல்வேறு அனுமானங்களைக் கடந்து நியாயமாக எழுப்பப்படும் ஐயங்களை இயன்றவரை தீர்க்க முயல்கிறேன்.
திருப்பூரைப் பொறுத்தமட்டில், பெருமளவில் பருத்தி விளையும் நிலப்பரப்பாக ஒரு காலத்தில் அறியப்பட்டது. சுமார் 60 -70 ஆண்டுகளுக்கு முன்னரே ஜின்னிங் மற்றும் நூற்பாலைகள் அமையப்பெற்ற ஊர் என்றாலும் 1950களில் மதுரை, சேலம் போன்ற பகுதிகளில் உள்ளாடை தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இங்கு மிகச் சிறிய அளவில் பனியன் உற்பத்தி தொடங்கப்பட்டு படிப்படியாக முன்னேறியது. பெருமளவு வேளாண் சமூகமாக அறியப்பட்ட இப்பகுதி மக்கள், பின்னலாடைத் தொழில் முனைவோர்களாகவும் தொழிலாளர்களாகவும் இந்தத் தொழிலை முன்னெடுத்தனர்.
1979 இறுதியில் இத்தாலி வர்த்தகர் ஒருவரின் வருகையைத் தொடர்ந்து இங்கிருந்து நேரடி ஏற்றுமதிக்கான வாய்ப்பினைப் பெற்றது. அதற்கு முன்னர் ஏற்றுமதி ஆடைகள் இங்கு தயாரிக்கப்பட்டாலும் மும்பை, டெல்லி வர்த்தகர்கள் அதனைக் கொள்முதல் செய்து அவர்கள் நேரடி ஏற்றுமதியில் ஈடுபட்டுவந்தனர்.
1984ஆம் ஆண்டு சுமார் 9 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்த இந்த நகரம், தற்போதைய நிலவரப்படி சுமார் 38 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி மற்றும் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி என்கிற அளவில் உற்பத்தியை மேற்கொள்கிறது. சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் தொழிலில் பணியாற்றுகின்றனர்.
1984ஆம் ஆண்டு 300 நிறுவனங்கள் இருந்த ஊரில், தற்போது 20000 க்கும் அதிகமான நிறுவனங்கள் இயங்குகின்றன. பல்லடம் தாலுகாவில் ஒரு கிராமமாக அறியப்பட்ட திருப்பூர், இன்று ஒரு மாவட்டத்தின் தலைநகராக, உலகளவில் பின்னலாடை உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஊராக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்தப் பின்னலாடை ஏற்றுமதியில் 54% திருப்பூரிலிருந்து மட்டுமே உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமூகத்தின் அனைத்துப் படிநிலைகளை உள்ளடக்கிய ஒரு தொழில் வளர்ச்சிக்கான நகரம் என்று உலகளவில் திருப்பூரை மட்டுமே அடையாளம் காட்ட இயலும். ஏனெனில், சமூகத்தின் அனைத்துத் தரப்பின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் கட்டமைப்பைத் தன்னகத்தே கொண்ட தொழில் நகரம் இது. இங்குள்ள நிறுவனங்களின் வரலாற்றுப் பின்னணிகளை ஆய்வு செய்தால், ஒன்று வேளாண் பின்னணி அல்லது நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி என்கிற பின்னணியைப் பறைசாற்றும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தொழில் மற்றும் நகரம் என்கின்ற பின்புலம்.
தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் வேலை இல்லை, பருவமழை தப்பியதால் பிழைப்புக்கு வழி இல்லை எனும் நிலை எழும்போதெல்லாம், திருப்பூர் போனால் நாம் மட்டுமல்ல; நமது குடும்பத்திற்கான வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும் என்கிற ஒரு காலகட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொழிலாளர்களாக, நிர்வாகத்தின் அங்கமாக, திருப்பூரை நோக்கித் தனியாகவும் குடும்பமாகவும் பல்லாயிரக்கணக்கான பேர் புலம்பெயர்ந்து இங்கு குடியேறினர். அவர்களில் பலர், இன்றைய தேதியில் தொழில் முனைவோர்களாகவும் பலரின் குழந்தைகள் வாழ்வின் அடுத்த படிநிலையை நோக்கி நகர்ந்தும் இருக்கின்றனர். வந்தோரையும் வழியின்றித் தவித்தவர்களையும் அரவணைத்துக் காப்பாற்றிய நகரம் திருப்பூர்.
பனியன் உற்பத்தி என்பது பல்வேறு நிலைகளைக் கொண்டது. நூலில் தொடங்கி ஆடை நுகர்விற்கு வரும்முன், அடிப்படையில் குறைந்தது 7 நிலைகளைக் கடக்க வேண்டும். மிக நுட்பான வேலைப்பாடுகளைக் கொண்ட ஆடைகள் 15 நிலைகள் வரை கடந்து உற்பத்தி செய்யப்படும். உலகிலேயே மிக ஆரோக்கியமான, குழு சார் உற்பத்திச் சூழலைக் கொண்ட நகரம் திருப்பூர். ஒவ்வொரு படிநிலையிலும் ஏரளமான நிறுவனங்கள், பல்வேறு அளவுகளில் உற்பத்தியை மேற்கொள்கின்றன. பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்ட நிறுவனங்களாகவே இவை இயங்குகின்றன. ஒவ்வொரு படிநிலையிலும் உள்ள குழுசார் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று ஆதரவாக, ஒற்றுமையுடன் செயல்படுவதே இந்த மாநகரின் பின்னலாடைத் தொழில் வளர்வதற்கான முக்கியக் காரணம்.
இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ‘இனி இந்தத் தொழில் உயிர்ப்புடன் இருக்குமா?’ என்று சமூகத்தில் எழுந்துள்ள கேள்வி, தொடர்ந்து என்னுள் எதிரொலித்துக்கொண்டே உள்ளது. தற்சமயம் கடும் நெருக்கடியில் இந்தத் தொழில் உள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இரு பெரும் கொரோனா பெருந்தொற்றுக் காலம், பஞ்சு விலை ஏற்றம், ரஷ்யா -உக்ரைன் போர், அதன் தொடர்ச்சியாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகிய காரணிகளால் தொடர்ந்து ஏற்றுமதியிலும் உள்நாட்டுச் சந்தையிலும் இந்தத் தொழில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும்15 முதல் 20 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. ஏறத்தாழ எல்லா நிறுவனங்களும் 50 முதல் 70 சதவீதக் கொள்ளளவிலேயே இயங்குகின்றன.
மேற்சொன்ன காரணங்களைக் கடந்து, பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கச் சிக்கல், மின் கட்டண உயர்வு, வங்கிகளின் நடைமுறையில் மாற்றங்கள், அரசின் கொள்கைகளில் மாற்றம் என பிற காரணங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இவை ஒருபுறம் இருக்க, உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மேம்படுத்திக்கொள்ளாத சூழலும் ஒரு பெரும் காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
யார் வேண்டுமெனாலும் தொழிலில் ஈடுபட்டுப் பொருளீட்டலாம் என்கிற நிலை மாறி, தகுதி பெற்றுத் தொழிலில் ஈடுபட்டால் பொருளீட்டலாம் என்கின்ற நிலையை அடைந்து, தற்போது, தகுதியானவர்கள் மட்டுமே தொழிலில் ஈடுபட்டுப் பொருளீட்ட இயலும் என்கிற நிலைக்கு வந்துள்ளோம்.
அடுத்தடுத்த பகுதிகளில் மேற்சொன்ன பல்வேறு விடயங்களைப் பற்றி விரிவாகப் பேசி, இறுதியில், தகுதியானவர்கள் என்பதன் பொருள் என்ன என்பதை அறிவோம்.
நம்பிக்கை மட்டுமே இப்போதைய தேவை. தொடர்ந்து பயணிப்போம்.
(அடுத்த பகுதி வெள்ளிக்கிழமை வெளியாகும்)
- குமார் துரைசாமி

Nanjundeeswaran.m
July 31, 2023Tirupur nelay neshsayam marum
Vijay
August 3, 2023Welldone sir. Absoultely correct what you are mentioned in this article. We trust, tirupur knitting never fail, will come back soon. And eligibility person will reach their goal.
Arasu
August 4, 2023En thaai mannai poll intha mannai nesikkiraen….