திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

முதல் பகுதிக்குக் கிடைத்த ஆதரவு, மகிழ்ச்சியையும் கூடவே பொறுப்புணர்வையும் அதிகரித்துள்ளது. ஏனெனில், பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு, இதுவொரு வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் உள்வாங்கி, உணர்ந்து, நம்பிக்கையுடன் தொடர்வோம்.

பொதுவாகவே, கொங்கு மண்டலப் பகுதி என்பது மழை மறைவுப் பிரேதேசம் ஆகும். இந்தப் பகுதியின் நீராதாரம் நொய்யல், பவானி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளையும் பருவமழையையும் மட்டுமே சார்ந்துள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் விவசாயம், பருவமழை சார்ந்த விவசாயம் என்பதால், பொருளீட்டலுக்கான தேடல் கொங்குப் பகுதிகளில் இயற்கையாகவே அதிகம். இதன் காரணமாகவே, பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இங்கு பல்கிப் பெருகி, தமிழ்நாட்டின் தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகளிலும் பொருளாதாரம் மற்றும் உற்பத்திக் குறியீடுகளிலும் கொங்குப் பகுதி எப்பொழுதும் முன்னணி வகிக்கிறது. ஒட்டுமொத்த கொங்குப் பகுதிகளில் ஜவுளித் தொழில் பிரதானமாக வளர்ந்ததற்கு, பருத்தி உற்பத்தியோடு, நான் மேற்சொன்ன காரணங்களும் உள்ளடங்கியுள்ளன.

இதையும் கடந்து, ஒரு வரலாற்றுத் தரவையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த கொடுமணல் என்னும் ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் பட்டுப்பூச்சி வளர்ப்பும் பட்டாடைகள் நெய்து ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதியும் நடந்துள்ள விவரங்கள் கிடைத்துள்ளன. எனவே, இங்குள்ள மக்களின் மரபணுவிலேயே ஜவுளித்தொழிலின் தாக்கம் இருப்பதே, இங்கு இந்தத் தொழில் வளர முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கூறலாம்.

1950-களில் வேறொரு பணியின் காரணமாகக் கல்கத்தா சென்ற திரு. குலாம் காதர் அவர்கள், அங்கிருந்து தையல் இயந்திரங்களை வாங்கிவந்து, இங்கு பனியன் உற்பத்தியை முன்னெடுத்தார்.  தொடக்கத்தில் வெள்ளை நிற உள்ளாடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. நூலைத் துணியாகப் பின்னுவதற்கான நிட்டிங் இயந்திரம் லூதியானாவிலிருந்து வாங்கப்பட்டு, துணி உற்பத்தி தொடங்கியது. தொடர்ந்து, அந்தத் துணிகளை வெள்ளையாக்கும் வேலைகளைச் செய்ய சலவைப் பட்டறைகள் உருவாக்கப்பட்டன. 1970-களில் துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் சாய ஆலைகள் தொடங்கப்பெற்று, உள்ளாடைகளைத் தாண்டி மேலாடை உற்பத்தியும் தொடங்கியது. பின்னர் ஆடைகளில் அச்சு (பிரிண்ட்) செய்வதற்கான ஆலைகளும் உருவாகின. ஏற்றுமதித் தரம் வாய்ந்த ஆடைகளின் தயாரிப்பு தொடங்கப்பெற்று, 1980-களில் ஏற்றுமதியும் தொடங்கியது.

ஒரு தொழில் அமைக்க ஏதுவான சுற்றுச்சூழல், அந்தத் தொழில் குறித்தான நுட்பங்கள், அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள், அதனைச் சந்தைப்படுத்தும் வழிகள், எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதாரம், இவையனைத்தையும்  உள்ளடக்கியதுதான் வெற்றிகரமான உற்பத்தித் தொழிலுக்கான அடிப்படை. எந்தவித தொழில்நுட்ப, கல்விப் பின்புலமோ வழிகாட்டுதல்களோ இல்லாது,

‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து’

என்னும் திருவள்ளுவரின் வாக்குக்கேற்ப, உயர வேண்டும் என்கிற எண்ணமும் அதற்கான தேடலும் தேடலைப் பகிர்தலும் அதன் வாயிலாக ஒரு சமூகமாக உயர்ந்ததும் திருப்பூரின் வெற்றிக்கான அடிப்படை. இந்தத் தொழிலும் இந்த ஊரும் சுயம்புவாக உருவானவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.

1980-களில் ஒரு தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கே பெரும் செலவு செய்து, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். அதுவும், வெளிநாடுகளுக்குத் தொடர்பு கொள்வது அத்தனை எளிதல்ல. அந்தக் காலகட்டத்தில் திருப்பூர் ஒரு சிறு நகரம்; ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஒரு அங்கம். வெளிநாடுகளுக்கான தொலைபேசித் தொடர்புக்கு கோவைக்குச் செல்லவேண்டிய சூழல் இருந்தது. ஏற்றுமதிக்கான ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு, அதற்கான அனுமதியை அளிக்கும் மத்திய  அரசின் அலுவலகங்களை நோக்கி சென்னை, பெங்களூரு, மும்பை அல்லது டெல்லி செல்லவேண்டும். இத்தகையை சிரமங்கள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களின் மனோபலமும் விடாமுயற்சியும் எதற்கும் துணிந்த செயல்பாடுகளும் இந்தத் தொழிலின் ஆரம்பகாலச் சிரமங்களைக் கடந்து முன்னேற, அடுத்தடுத்து இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்குப் பெருமளவு உதவியது.

பொதுவாக ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கும்போது, எளிதாக அந்தத் தொழிற்சாலைக்குள் அனுமதிப்பதோ நுட்பங்களைக் கற்று கொடுப்பதோ சந்தையைப் பற்றிய அறிவினைப் பகிர்வது என்பதோ நடக்காது. இன்றும், இந்தத் தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள காலத்திலும் பல இடங்களில் இது சாத்தியமில்லை. ஆனால், திருப்பூரைப் பொறுத்தமட்டில் இந்தத் தொழில் வளர்ந்ததற்கான பிரதான காரணங்கள் பல என்பதை ஒவ்வொரு இடத்திலும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.

அதுபோலவே, பகிர்தல் என்பது திருப்பூரின் வளர்ச்சிப் பின்புலத்தின் பிரதான காரணங்களில் ஒன்று. தொழில் நுட்பங்கள், நிதியாதாரத் திரட்டல், சந்தை வாய்ப்புகள், மூலப்பொருட்களின் மூலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எந்தவிதத் தயக்கமுமின்றி இந்தத் தொழிலை முன்னெடுக்க வந்த நண்பர்கள், உற்றார், உறவினர், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்களின் நண்பர்கள் எனப் பகிர்ந்து, அவர்களையும் தொழிலை நிறுவச்செய்த பண்பாடு  திருப்பூரைத் தவிர வேறெந்த ஊருக்கும் இல்லாத சிறப்பு என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிடலாம்.

இதைச் சொல்வதால் மற்ற தொழில் நகரங்களைத் தாழ்த்தியோ அல்லது திருப்பூரை உயர்த்தியோ கூறுவது நோக்கமல்ல. இங்குள்ள இயல்பினையும் சுயம்புவாக இந்தத் தொழில் உருவானதையும் பல பத்தாண்டுகளாக நாட்டின் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்கள் திருப்பூரைப் போன்ற ஒரு தொழில்நகரைத் தங்கள் மாநிலங்களில் அமைக்க முயன்று இயலாமல் போனதும் இன்றைய, மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  திரு. பியூஸ் கோயல், பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில்சார் கூட்டங்களில், ‘திருப்பூரைப் போன்று, இந்தியா முழுவதும் 75 திருப்பூரை உருவாக்கவேண்டும்’ என்று பதிவு செய்வதின் அடிப்படையும் திருப்பூரின் இந்தப் பண்பாட்டு விழுமியமே.

‘திருப்பூர் எனும் திருப்புமுனை’ கட்டுரை, இன்றைய சிக்கலான சூழலை விவரிக்கத்தானே! ஏன் பழைய வரலாறுகளைப் பேசவேண்டும்?’ என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழலாம்.

திருப்பூரின் தொழில், அடுத்த தலைமுறை மற்றும் சில தொழிற்சாலைகளில் இரண்டாம் தலைமுறைக்கு நகர்ந்துள்ள சூழலில், ஜவுளித் தொழிலைச் சாராதவர்களும் இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது, அவர்களுக்கும் இந்தத் தொழில் கடந்து வந்த பாதை, அதைக் கடக்க ஏற்பட்ட சிரமங்கள், அந்தப் பயணத்தில் நேர்ந்த நல்ல விடயங்கள் மற்றும் தவறான முடிவுகள், செய்யத் தவறிய விடயங்கள் உள்ளிட்டவற்றை விவரித்தால் மட்டுமே, அடுத்து பயணிக்க வேண்டிய பாதையை வலுவாக அமைத்துக்கொள்ளலாம் என்பதாலேயே முந்தைய வரலாறுகளைச் சொல்ல வேண்டியுள்ளது. எனவே கடந்தகால வரலாற்றை மிகச் சுருக்கமாகப் புரிந்துகொண்டு, மேலும் பல்வேறு தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.

  • குமார் துரைசாமி

Comments (4)


Anita Srikanth
Anita Srikanth
August 5, 2023

வணக்கம் ..
எங்க ஊரை பத்தி எழுதினதுல ரொம்ப சந்தோஷம் ஐயா.
ஒரே ஒரு வருத்தம் என்னான்னா சாய கழிவுகள் எல்லாமே நொய்யல் ஆத்துல கலந்து நிறையா கெடுதலை செஞ்சிருச்சு…
இப்பவும் நொய்யல் ஆறு சாயம் கலந்த தண்ணியாத் தான் ஓடுது.
ஒரு காலத்தில அந்த தண்ணியை குடிச்சோம்னு ஏக்கமா சொல்லும்போது அந்த வலியை புரிஞ்சுக்க முடியும்..
நன்றி..

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 5, 2023

தொடர்ந்து உங்கள் கருத்துகள் சுவடு படைப்பாளிகளுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் ஊக்கம் தருகிறது. இந்தக் கட்டுரையை தொடர்ந்து படிக்கும் போது நீங்கள் சுட்டிக்காட்டும் கெடுதல் பறிறியும் நாம் அறிய வருவோம்.. நன்றி – சுவடு ஆசிரியர் குழுவிற்காக.

Vinoth Kumar
Vinoth Kumar
August 8, 2023

மிக அருமை தொடர்ந்து எழுதுங்கள் திருப்பூர் என்னும் சுயம்பை பற்றி

Vinoth Kumar mks
Vinoth Kumar mks
August 8, 2023

மிக அருமை தொடர்ந்து எழுதுங்கள் திருப்பூர் என்னும் சுயம்பை பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *