திருப்பூர் எனும் திருப்புமுனை – 6
திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பு திருப்பூர் பின்னலாடைத் தொழில் உருவாகிப் பின்னர் அது பெரும் தொழிலாக உருமாறிய பரிணாம வளர்ச்சியின் வரலாறு, சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், பின்னலாடைத் தொழில் வளர்ச்சியால் மாநகரமாக விரிவடைந்தது, பின்னலாடைத் தொழிலின் படிநிலைகள், திருப்பூரின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தப் பகுதியில் தொழிலுக்கான அடிப்படை, முதலீடு மற்றும் அவை தொடர்பான தரவுகளைக் காண்போம். முந்தைய பகுதிகளை வாசிக்கத் தவறியவர்கள் கீழே உள்ள இணைப்புகள் வழியே அவற்றை வாசித்துவிட்டு, இந்தப் பகுதியைத் தொடர்ந்தால் பின்னலாடைத் தொழில் குறித்துத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். பின்னலாடை உற்பத்திச் சங்கிலியின் பல்வேறு படிநிலைகளை முன்பே விளக்கமாகப் பார்த்தோம். ஒவ்வொரு படிநிலை உற்பத்தி மையங்களும் ஒவ்வொரு விதமான கட்டமைப்பு, அதற்கேற்றாற்போல் இயந்திரங்கள், தொழிலாளர்கள் ஆகியவற்றைக் கொண்டவை. அடிப்படை முதலீடுகளும் ஒவ்வொரு தொழிற்சாலையின் தன்மைக்கேற்ப மாறுபடும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல் கோடிகளில் முதலீடுகள் செய்யப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பக் கட்டத்தில் முற்றிலும் இந்தியத் தயாரிப்பு இயந்திரங்களை மட்டுமே கொண்டு தொழிற்சாலைகள் இயங்கின, ஏற்றுமதி வர்த்தகம் தொடங்கிய பின்னர், ஒவ்வொரு படிநிலை உற்பத்தித் தளங்களிலும் இறக்குமதி இயந்திரங்கள் கோலோச்சத் தொடங்கின. ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, தைவான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு கடன் சலுகைகள், மானியங்கள், ஊக்குவிப்புத் தொகை போன்றவை, சாமானியர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்றியது. வங்கிக் கடன் வசதி மிக எளிதாகக் கிடைக்கப்பெற்றதும் கிடைத்த கடனைக் கொண்டு தொழிலைச் சிறப்பாக முன்னெடுத்து, அடுத்தடுத்து விரிவாக்கம் செய்து, அதிகளவு வர்த்தக வளர்ச்சியையும் அதன் வாயிலாக வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கப்பெற்ற சூழல் உருவானது. இதைத் தாண்டி, இங்கு ஒரு பண்பாடு உண்டு. ஆடை உற்பத்தி என்பது, பல்வேறு படிநிலைகளைக் கொண்டது என முன்பே குறிப்பிட்டதைப்போல, ஒவ்வொரு படிநிலைத் தொழில் முனைவோர்களும் அடுத்தடுத்த படிநிலைத் தொழிமுனைவோர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டதாலேயே இந்தத் தொழில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டது. இந்த இணக்கம் என்பது, பொருளாதார ஆதரவையும் உள்ளடக்கியது என்றால் மிகையல்ல. வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கப்பெறும் ஒரு ஏற்றுமதி நிறுவனம், அந்த ஆர்டருக்கான உற்பத்திச் செலவுக்காக, வங்கியில் மூலதனக் கடனைப் பெறும். ஆர்டரின் மொத்த மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் தொகையை வங்கிகள் கடனாகக் கொடுக்க, இதர படிநிலை நிறுவனங்கள், தாங்கள் முன்னெடுக்கும் பணிக்கான தொகையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனாக வழங்க, ஏற்றுமதி நிறுவனம் அணைத்து ஒருங்கிணைப்பையும் செய்து ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்து, வாடிக்கையாளரிடம் பணத்தைப் பெற்று, மூலதனக் கடனை அடைப்பர். வங்கிகள் உள்ளிட்ட, உற்பத்திப் படிநிலைக் கடன் அனைத்திற்கும் ஏற்றுமதி நிறுவனமே பொறுப்பு. ஏற்றுமதி செய்வதென்பது, லாபத்தைக் கடந்து, பெரும் சவாலான ஒன்று என்றே சொல்லலாம். ஏனெனில், வெளிநாட்டு வர்த்தகர், நாம் அனுப்பிய சரக்கை எடுக்காமலோ அல்லது பெற்றுக்கொண்டு பணத்தை வழங்காமல் போனாலோ, ஏற்றுமதி நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் மீளவே முடியாமல் சொத்துக்களை விற்றுக் கடனை அடைக்கும் சூழல் உருவாகும். ஆடைச் சந்தை என்பது மிக நுட்பமான ஒன்று. குறித்த காலத்திற்குள் ஆடைகள் தயாராகி சந்தைக்கு விற்பனைக்குச் செல்லவேண்டும். தவறும் பட்சத்தில் சரக்குக்குள் தேங்கும் அபாயம் மற்றும் அதிகத் தள்ளுபடி கொடுத்து விற்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதையும் கடந்து, வெளிநாடுகளுக்குக் கப்பல் போக்குவரத்து வாயிலாகச் செல்லும் ஆடைகள், உற்பத்தி இலக்குக் காலம் தவறும்பட்சத்தில், விமானம் மூலம் ஆடைகளை அனுப்ப நேர்ந்தால், கடல் வழியே அனுப்புவதற்குச் செலவாகும் தொகையைப்போல, 10 முதல் 12 மடங்கு அதிகமாகச் செலவழிக்க வேண்டும். இது ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு கடும் பொருள் இழப்பை ஏற்படுத்தும். ஏற்றுமதித் தொழிலில், குறித்த கால உற்பத்தியும் தரமும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை. இந்தியாவைப் பொறுத்தமட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பினை வழங்கும் தொழில் ஜவுளித் தொழில். அதேநேரத்தில், குறைத்த முதலீட்டில் நல்ல லாபமும் தொழிலைத் தொடர்ந்து விரிவாக்கும் வாய்ப்புகள் அதிகமும் பெற்ற தொழிலும் இதுதான். அடர்ந்த மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அதிக அளவில் இருக்க வேண்டும். அந்தவகையில் திருப்பூர், அதிக வேலைவாய்ப்பினை, அந்நியச் செலவாணியை, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஊராகத் திகழ்ந்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் முதலீடு என்பது 110 பேருக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும். இதன் காரணமாகவே, அதிக வளர்ச்சியை நோக்கி இந்தத் தொழில் பயணித்தது. இன்னும் ஒரு பண்பாட்டை இங்கே மீண்டும் குறிப்பிட்ட ஆகவேண்டும். புதியவர்களுக்கு, தொழிலை மனமுவந்து கற்றுத் தருவதோடு மட்டுமல்லாது, அப்படிப் பயின்றவர்களுக்குச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதோடு, தொழிலைக் கற்றுக்கொடுத்தவரே முன்னின்று புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறும் வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து, மூலப்பொருட்களைத் தரும் நிறுவனங்களிடம் தாங்களே பிணையாக நின்று, குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனைப் பெற்றுத்தந்ததுடன், சந்தை வாய்ப்புகளைக் கற்றுத் தந்து ஒரு சமூகமாக உயர்வதற்கான பண்பாட்டு விழுமியங்களைத் திருப்பூர் மக்கள் தங்களை அறியாமலே கொண்டிருந்தனர். இந்தத் திறந்த மனதும் பெருந்தன்மையான செயல்பாடும் திருப்பூரில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாகக் காரணமாக அமைந்தன. அது மட்டுமல்லாது, இங்குள்ள பெரும்பாலான தொழில் முனைவோர்கள் வேளாண் பின்னணியைக் கொண்டவர்களே. அவர்களுக்கு, வேளாண் வருவாய் சேமிப்பாக வைத்துள்ள உற்றார் உறவினர், மிகக் குறைந்த வட்டி அல்லது தங்களுக்குத் தேவையான நேரத்திற்கு தொகையைத் திருப்பித் தரவேண்டும் என்னும் நிபந்தனையோடு வட்டி இல்லாமலும் கடன் கொடுத்தனர். வங்கிக் கடனுக்குப் பிணையாக அசையாச் சொத்துக்களை வழங்க இயலாதவர்களுக்கு, இதுபோன்ற கடன் வசதிகள் பெரும் பேறாக அமைந்தன. ஏற்றுமதி செய்வதிலிருக்கும் அபாயம் குறித்து மேலே பார்த்தோம். அதற்கான தீர்வாக, மத்திய அரசின் ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகம் (ECGC), இறக்குமதியாளர்களின் பின்னணியை, அதற்கென உள்ள மதிப்பீட்டு நிறுவனங்கள் வழியாகப் பெற்று, அதற்கேற்ப கடன் உத்திரவாதங்களை அளித்தனர். இதனால் பாதுகாப்பான ஏற்றுமதி என்கிற நிலையை எட்ட முடிந்தது. சுருங்கச் சொன்னால், இது ஒரு காப்பீட்டுத் திட்டம் போலச் செயல்படும். பணத்திற்கான உத்திரவாதத்தைக் கொடுப்பதற்கு நாம் சிறிய தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு வட்டி மானியத் திட்டங்களுடன், மாநில அரசும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் கடன் உதவிகளை விரைவாக அளித்ததும் இந்தத் தொழில் வளரப் பெருமளவு உதவியது. தற்சமயம் சிறிதும் பெரிதுமாக சுமார் 20000 நிறுவனங்கள் வாயிலாக, சுமார் 60000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது எனில், இவை அனைத்திற்குமான அடிப்படை முன்பே குறிப்பிடப்பட்ட பல்வேறு கடன் உதவிகளே. தொழில் வளர்ச்சிக்கான அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். இனி தொழில் சந்தித்துவரும் பிரச்சனைகள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான தீர்வுகள் போன்றவற்றை இனி அடுத்தடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம். மீண்டும் திங்களன்று புதிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன். நம்பிக்கையுடன் நடைபோடுவோம்.