கரைசேராப் படகுகள் – 8
தொடர்கதை
சேதி சொல்லப் போன மனுஷன் வெள்ளையத்தேவன் மாதிரி வெள்ளைப் பசுவைப் பிடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் குழம்பித்தான் போனாள் மரகதம்.
“மதனி, நான்தான் அந்த ஊருதானேன்னு மாடு வாங்க அண்ணனைக் கூப்பிட்டுகிட்டுப் போனேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு மாட்டை ஓட்டிச் சென்றான் மாணிக்கம்.
‘வெளைஞ்ச வெள்ளாமை வீடு வந்து சேர்றதுக்கே பணத்துக்கு பவுசத்து நிக்கயிலே, இந்த மனுஷன் கூறு கெட்டுப்போய் மாட்டைப் புடிச்சிட்டு வந்துட்டாரே’ன்னு மனதிற்குள் பயந்த மரகதம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
“சரி… சரி… வெளக்கு வைக்கப் போவுது. வீட்டுக்கு வந்து கஞ்சித் தண்ணி குடிச்சிட்டு, பொறவு களத்து காவலுக்கு வரலாம்” என்று கணவனுக்குக் கட்டளையிட்டுவிட்டு, அருக்காணி ஆய்ந்து வச்ச கீரையெல்லாம் சிவப்பு நிறத்தில் மஞ்சள் பூ போட்ட புடவை முந்தானையை விரித்து மூட்டைக் கட்டிக்கொண்டு கிளம்பினாள் மரகதம்.
“அடியே…. எத்தனை பேரு வேலை செஞ்சாங்க? எவ்வளவு வேலை செஞ்சாங்கன்னு சொல்லாமலேயே கிளம்பறயே…” என கூப்பாடு போட்டார் செந்தாமரை.
“ஆம்பள ஆளு 25, பொம்பள ஆளு 10, நம்ம அருக்காணியை எனக்கு ஒத்தாசைக்கு வச்சிருந்தேன். கணக்கு தீர்க்கும்போது அவ வந்து நிக்கப் போறா. அவ கணக்கை நான் பாத்துக்கறேன்” என்று படபடவென்று சொல்லிக் கொண்டே நடந்தாள் மரகதம்.
அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே பக்கத்தில் ஓடினார் செந்தாமரை.
நாலு தளை தாண்டியதும் கோவாலு நாயக்கர் தோட்டம் வந்தது. “அண்ணாத்த, புள்ள பெத்தவளுக்கு கத்தரி பிஞ்சும் முருங்கைப் பிஞ்சும் பறிச்சுகறேன்” என்று தூர நிக்கற உருவத்தைப் பார்த்துக் கத்திவிட்டு வேகமாக கத்தரி பிஞ்சைப் பறிச்சா. “மச்சான் ரெண்டு முருங்கை பிஞ்ச ஒடியேன்”னு சொன்னவள், காய்களைப் பறிச்சதும் செந்தாமரை தோளில் இருந்து துண்டை எடுத்து அதுல பறிச்சதெல்லாம் போட்டு மூட்டை கட்டிக்கொண்டு நடையைக் கட்டினர் இருவரும்.
வீட்டிற்கு வந்ததும் இருவரும் அரப்புப் பொடி போட்டு நன்கு குளித்துவிட்டு வந்தனர்.
“எலே செந்தாமரை, இன்னிக்கு ஏன் இவ்வளவு நேரம்?” என்று கேட்ட அம்மாவுக்கு, சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே, களத்து காவலுக்குப் போனதில் இருந்து முருங்கைக்காய் பறிச்சது வரைக்கும் வெட்டி ஒட்டி படம் ஓட்டினார் செந்தாமரை.
காதில் தொங்கிய பாம்படம் ஊஞ்சல் ஆட, மஞ்சள் நிறத்தில் ஓரத்தில் மட்டும் காபி நிறத்தில் லேசான கோடு போட்ட புடவை முந்தானையால் அடிக்கடி முகத்தை துடைத்துக் கொண்டும் ரவிக்கை அணியாத மேலுக்கு விசிறி விட்டுக் கொண்டும் கதை கேட்டாள் பட்டம்மா பாட்டி.
பின்பக்கம் இருக்கும் சமையல் அறையில் அடுப்பை ஊதி ஊதி நொந்து கொண்டிருந்த மரகத்திற்கு, ‘ஆத்தாளும் மவனும் அப்படி என்னதான் பேசுவாங்களோ!” என்று மனசுல உலை கொதித்தது. ஒரு வழியாக சமைத்து முடித்து சாப்பாடு தட்டில் வரும்போது இரவு ஏழு மணி சங்கு கூவியது.
“ஏண்டி.. இந்த பச்ச புளிக்குழம்புக்கும், பருப்புத் துவையலுக்குமா இம்புட்டு நேரம்?” என்று வியாக்கனம் பேசினார் பட்டம்மா.
“ம்… உங்க அதட்டலுக்கு நான் பயப்படலாம், பச்சை மட்டை கூடவா பயப்படும்?” என்று வெடுக்கென்று பதில் சொல்லிட்டு,
“ஏனுங்க, நாளைக்கு கழிச்சுப் போட்ட புளியமரத்தை வெறவுக்கு ஏத்தி அனுப்புங்க” என்று பட்டம்மாள் மேலிருந்த எரிச்சலைக் கணவனிடம் காட்டினாள் மரகதம்.
நாலு முழ வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு, துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு, நீண்ட மூங்கில் கழியை ஒரு கையிலும் லாந்தர் விளக்கை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு நின்ன செந்தாமரையைப் பார்த்து, “என் ராசா அப்படியே மாறு வேசத்தில வரும் ராசராச சோழனாட்டம் இருக்கேடா” என்று பட்டம்மா நெட்டை முறித்தாள்.
இதை ரசித்துக்கொண்டே தூக்குச் சட்டியை எடுத்துவந்து கொடுத்து, “மாமா, காசற கீரை சாதம். நிறைய பூண்டு போட்டு நல்லெண்ணெய்யில் பண்ணது; வீணாக்கிபுடாதீங்க. பருப்பு துவையலும் வச்சிருக்கேன். உங்களுக்குத்தான் வாயில் வேப்பங்குச்சியை வச்சதுமே வயிறு பசிக்குமே…” என்றாள் மரகதம்.
“நாளைக்கு அமட்டச்சிக்கு சொல்லணும். புனிதாவுக்கு தலைக்கு ஊத்த பச்சில மருந்தைத் தேடி எடுத்து வரணும். இதெல்லாம் முடிச்சிட்டு அப்பறம் வயக்காட்டுக்கு போ” என்று மரகதத்திற்குக் கட்டளையிட்டார் பட்டம்மா.
“மரகதம் நீ சீக்கிரம் வந்து மாத்தினாதான் ஆச்சு. எனக்கும் நிறைய வேலையிருக்கு. ஐயர்கிட்ட பேரு வாங்கணும்; பொண்ணுங்களுக்கும் அங்காளி, பங்காளிக்கும் சொல்லிட்டு வரணும். டவுனுக்குப் போய் காப்பு வாங்கணும்” என்று இழுத்த செந்தாமரையிடம்,
“என்னது..! காப்பா?” என்று மாமியாரும் மருமகளும் ஒத்து ஊதினார்கள்.
“தவள மாட்டிகிச்சு” என்று செந்தாமரை நினைத்தார்.
தொடரும்
- சாம்பவி சங்கர்

பாரதி மோகன் . க
July 16, 2022எழுத்துக்கு எழுத்து
காட்சி கண்ணில் நிறுத்தி
வரிக்கு வரி
கதையின்
உயிரோட்டம் மாறாத
மண்ணின் மணம்
(பா)பத்திக்கு (பா)பத்தி
கதை நடவில் நேர்த்தி
ஊடு பயிராய்
உலவும்
ஒய்யாரப் பழமொழிகள்
தேர்ந்த விவசாயி
தெளித்த நல்ல தமிழ் வயலில்
ஆழ்ந்த நல் கருத்தோட
அமைத்த நல் வெள்ளாமை
இது கதையல்ல
நம் முன்னோர் வாழ்வின்
நிஜம்
இன்றும் மாறாது
வாழும் கிராமங்கள் ஏராளம்
சுதாமன்
July 16, 2022சகோதரி
ஆஹா..
படகோடு உங்கள்
கைவண்ணமும்
துடிப்புடன்
துடுப்பு போட
வைக்கிறது.
ஒரு கிராமத்தில்
பிரசவம் ஆன வீட்டில்
என்னென்ன நடக்கின்றன என்பதை
தெளிவாக , தொய்வின்றி நீங்கள்
எழுதும் பாணி மிகவும்
அருமையானது.
டாக்டர் சுதாமன், பெங்களூர்.