கரைசேராப் படகுகள் 2
தொடர்கதை
வாழ்க்கை , எந்தத் துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியாகச் செல்லும்வரை மனிதனுக்கு தான்தான் பெரிய சக்தி என்ற எண்ணம். கொஞ்சம் துன்பம் தலை தூக்கும்போதுதான் தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை உணர்கிறான்; அதையும் மதங்களில் தேடுகிறான்; மனித மனங்களை விட்டுவிட்டான்.
புனிதாவின் அலறல் ஓலம் , ஈரக்குலையே வாய்வழியே வந்துவிடும் அளவிற்கு வெளியில் இருப்பவர்களுக்கு வேதனையளித்தது. பெண்கள் உள்ளே போகலாம் என்று நினைத்தால், வெளியே திண்ணையில் பெருசுகள் இருக்கிறார்கள். அவர்களை மீறிப் போனால் மரியாதையாக இருக்காது என்று வாசல் தெளிக்கும் இடத்திலேயே இளவட்டப் பெண்கள் தத்தளித்து நின்றனர்.
தெருத்திண்ணையில் பட்டம்மா பாட்டியுடன் வட்டமேசை போடவரும் வல்லரசு நாடுகள் அலமு பாட்டி, கருப்பாயி பாட்டி, கோமளா பாட்டி என, அனைவருக்கும் தகவல் தெரிந்து, அடித்துப்பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினர்.
“ஏம்பா செந்தாமரை, பொட்டி வண்டிய கட்டுப்பா. டவுன் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போகலாம்” என்று
பால் ரெட்டியார் குரல் கொடுத்தார்.
“யார்ரா இவன் மடையன், இந்த நேரத்தில எந்த டவுன் ஆஸ்பித்திரி திறந்திருக்குமாம்?” என்று கோபால் நாயக்கர் பதில் கொடுத்தார். கூடியிருந்தவர்களின் தவிப்பு செந்தாமரையை மேலும் கலக்கமாக்கியது.
உள்ளே வந்த பாட்டிகள் நேராக பட்டம்மா பாட்டியிடம் போனார்கள். குழந்தை கீழே விழுந்தால், யாரும் பார்க்கலைன்னா அழாம அது பாட்டுக்கும் எழுந்து விளையாடும்; யாராவது பார்த்தால்தான் ஒப்பாரி வைக்கும். அது மாதிரி, இது வரைக்கும் தேமேன்னு வெற்றிலை இடித்த பட்டம்மா பாட்டி, தோழிகளைப் பார்த்ததும் , “அடி ஏய்!! என் பேத்தி நிலைமையை பார்த்தீங்களாடி”ன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.
“ஏய் கிழவி, சும்மா இருக்க மாட்டியா? எழவு வீடு மாதிரி ஒப்பாரி வைக்கற?” என்று செந்தாமரை அதட்டினார்.
உடனே எல்லா பாட்டிகளும் எழுந்து, புனிதா இருக்கும் அறைக்குள் சென்றனர். செந்தாமரை செய்வதறியாது தலையில் அடித்துக் கொண்டார்.
“ஏம்மா மருத்துவச்சி, கர்ப்பப் பை வாய் திறந்திடுச்சா?”ன்னு, எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி அதட்டல் விட்டாள் அலமு பாட்டி.
யாரும் பேசற நிலையிலா இருக்காங்க அங்க? மருத்துவச்சி கட்டில்ல ஏறி, முட்டியால புனிதா வயிற்றில் அழுத்திக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்ததும் கோமளா பாட்டி அலறினாள்.
“ஏம்மா, என்னம்மா பண்ற? இப்படி முட்டியால அழுத்தினா குழந்தை தலை அழுந்தும்மா. மூளை நரம்பு பாதிச்சு மனவளர்ச்சி இல்லாம போயிடும். சில நேரங்களில் அது மலத்தையே சாப்பிட்டு விடும். இப்படி தூர வாம்மா”ன்னு மருத்துவச்சியை தூர வரச்சொல்லிட்டு கோமளா பாட்டி புனிதாவின் வயிற்றை அழுத்திவிட்டுக் கொண்டே கீழிறக்கினாள்.
“புனிதா, ஐயோ ஐயோன்னு கத்தாதே. குழந்தை நல்லபடியா பொறக்கணும்னு மனசுல நினைச்சுகிட்டு, சாமி பேரை சொல்லிக் கத்து” என்று கோமளா பாட்டி புனிதாவிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே குழந்தை வரும் பாதை வழுக்கிக்கொண்டு வருவதற்காக அங்கு விளக்கெண்ணெய் தடவி விட்டு, மீண்டும் கைகளால் வயிறை அழுத்தினாள்.
இப்போது புனிதாவுக்கு வலி உச்சத்தைத் தொட்டது. அவளுடைய அலறல் வெளியில் இருப்பவர்களின் இதயத்தைக் கையில் வைத்துத் துடிக்க வைத்தது. கோமளா பாட்டி அதிக அழுத்தம் கொடுக்கவும், தலையைத் திருப்பி குழந்தை வெளியே வர ஆரம்பித்தவுடன், அதன் தலையை லாவகமாகப் ,பிடித்து குழந்தையை வெளியே எடுத்தாள்.
குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்டதும், பால் ரெட்டியார் தயாராக வைத்திருந்த பேப்பர் பேனாவில் நேரம் குறித்தார். 20-10-1965, நேரம்: சூரியன் அஸ்தமனமாகும் 6:15 என எழுதினார். வெளியில் நின்றிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
“வாங்கடி, பொழுது இருட்டுது. சீக்கிரம் தண்ணி மோந்துட்டு போகணும்”னு ஒருத்தி குரல் கொடுத்ததும், அனைவரும் கிணற்றடி நோக்கி ஓடினர்.
புனிதா கொஞ்சம் நிதானமானதும் செந்தாமரை உள்ளே வந்து பார்த்தார். செந்தாமரையைப் பார்த்ததும், “அவர் வரலையாப்பா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள் புனிதா.
“அதுக்குதான் நான் அப்பவே சொன்னேன். ஊரில் இல்லாத மாப்பிள்ளைன்னு தூக்கிவச்சிகிட்டு ஆடுனீங்க” என்று பப்படம் மாதிரி பொரிந்தாள் பட்டம்மா பாட்டி.
தொடரும்
- சாம்பவி சங்கர்

Mansoor
June 25, 2022அருமை..
Sankaran T
June 25, 2022Supper
பாரதிமோகன் .க
June 26, 2022அருமை என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட முடியாது
திருமதி. சாம்பவி சங்கர் பற்றி ஒரு சிறு குறிப்பு :-
*ஆசிரியை திண்டிவனம்
*வளர்ந்து வரும் எழுத்தாளர்
கதையை படித்தால் நாம் தான் வளர வேண்டும் என தோன்றும்
அந்த அளவு எல்லா விஷயத்திலும் தீர்க்கதரிசனம்
*முதல் நாவல் “அன்பின் முகவரி நீயானால்”
திரு. ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் மூலம் வெளியிடப்பட்ட பதிப்பகம் “அகில்நிலா”
*புத்தகத்தை வெளியிட்டவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
*புதினத்தில் வாழ்த்துரை வழங்கியவர் எழுத்தாளர் கேஜி ஜவஹர் அவர்கள்
*எழுத்துலகில் புதியவர் என்கிற பெயரில் வலம் வரும் இவருடைய எழுத்துக்கள் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களுடைய எழுத்துக்களை போல் அகமும் புறமும் மேவியதாக சிறப்புடன் காணப்படும்
இவர் புதிய எழுத்தாளர் என்று யாருமே நம்ப முடியாது
*வாழ்த்துக்கள் கதைக்கும் எழுத்தாளருக்கும்
*தான் எழுதிய “அன்பின் முகவரி நீயானால்” என்கிற முதல் நாவலிலேயே மாசிலா விஜயா விருதான ரூபாய் 10,000 பணப் பரிசும் பாராட்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிமோகன் . க
June 26, 2022அருமை என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட முடியாது
திருமதி. சாம்பவி சங்கர் பற்றி ஒரு சிறு குறிப்பு :-
*ஆசிரியை திண்டிவனம்
*வளர்ந்து வரும் எழுத்தாளர்
கதையை படித்தால் நாம் தான் வளர வேண்டும் என தோன்றும்
அந்த அளவு எல்லா விஷயத்திலும் தீர்க்கதரிசனம்
*முதல் நாவல் “அன்பின் முகவரி நீயானால்”
திரு. ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் மூலம் வெளியிடப்பட்ட பதிப்பகம் “அகில்நிலா”
*புத்தகத்தை வெளியிட்டவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
*புதினத்தில் வாழ்த்துரை வழங்கியவர் எழுத்தாளர் கேஜி ஜவஹர் அவர்கள்
*எழுத்துலகில் புதியவர் என்கிற பெயரில் வலம் வரும் இவருடைய எழுத்துக்கள் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களுடைய எழுத்துக்களை போல் அகமும் புறமும் மேவியதாக சிறப்புடன் காணப்படும்
இவர் புதிய எழுத்தாளர் என்று யாருமே நம்ப முடியாது
*வாழ்த்துக்கள் கதைக்கும் எழுத்தாளருக்கும்
*தான் எழுதிய “அன்பின் முகவரி நீயானால்” என்கிற முதல் நாவலிலேயே மாசிலா விஜயா விருதான ரூபாய் 10,000 பணப் பரிசும் பாராட்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Suresh A
June 28, 2022Super🔥
Senthil
July 5, 2022Supper
Raman
July 6, 2022supper