தொடர்கதை

“ஏங்க மாமா… காப்பு சம்மந்தி வீட்லதானே போடுவாங்க? நாம ஏன் வாங்கணும்? மூனாம் மாசம் பொண்ணைக் கூட்டி அனுப்பும்போதுதான் குழந்தைக்கு கொலுசு, அண்ணாக்கயிறுன்னு போட்டு அனுப்புவாங்க” என்று குழப்பத்துடன் கேட்டாள் மரகதம்.

“இனாமாக் குடுத்த மாட்டைப் பூட்டி நெலாவுல ஏரடிச்சானாம் இளிச்சவாயன்”ன்னு உன் தலையில கட்டிடப் போறாங்கடா, உன் மருமவன் வூட்டு மனுசனுங்க” என்று ராகம் இழுத்தாள் பட்டம்மா.

“என்னைய என்ன புத்திகெட்ட ஆம்பளன்னு நினைச்சயளா? ஆளாளுக்கு  அலப்பற தர்ரீங்க..” என்று செந்தாமரை சத்தம் போட்டுவிட்டு, அவங்களுக்கு   டவுனுக்குப் போக பொழுது ஆப்படலையாம். அதான் என்னய  வாங்கியாந்து வைக்கச் சொன்னாங்க” என்றார்.

மனிதனுக்கு இரண்டு நேரங்களில் கோபம் வரும். செய்த தப்பை மறைக்கும்போதும், தப்பு செய்யாத போது குற்றம் சாட்டப்படும் போதும்.  இதில் செந்தாமரை இப்பொழுது கோபப்பட்டது எந்த ரகம் என்று நமக்குப் புரியும்.

செந்தாமரை லேசாகக் குரலை உயர்த்தியதும், மாமியாரும் மருமகளும்  பொங்குகிற பாலில் தெளித்த தண்ணீர் மாதிரி ‘புஸ்சுன்னு’ அடங்கிவிட்டார்கள்.

செந்தாமரை வெளியில் வந்து, “ஏய்.. சுள்ளான் இங்க வாடா” என்று கூப்பிட்டதும், வாசலில் படுத்திருந்த சுள்ளான் வாலை ஆட்டிக்கொண்டே இவர் பின்னாடியே ஓடி வந்தது. இவர் வயக்காட்டுப் பக்கம் செல்வதைப்  பார்த்ததும் இவருக்கு முன்னாடி ஓடி வழிகாட்டியது.

அதிகாலையில் எழுந்த மரகதம், வெள்ளிக்கிழமைங்கறதால வாசல்  தெளித்து அரிசி மாவில் பெரிதாகக் கோலம்போட்டு, அடுப்பு தட்டு   மொழுகி சும்மா வீட்டை ஜொலிக்க வைத்திருந்தாள். ‘நாளைக்கு வீட்டுக்கு சொந்த பந்தம், சாதி சனமெல்லாம் வருவாங்க’ என்று வீட்டை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு,  தலைக்குக் குளித்து, சின்ன சின்ன பூ கண்ணுக்கே தெரியாத சிவப்பு நிறத்தில் இருந்த மஞ்சள் நிற நூல் புடவையைக் கட்டியிருந்தாள் மரகதம்.

அவளை ஏற இறங்கப் பார்த்த பட்டம்மா, ‘டொக்…. டொக்..’ என்று வெற்றிலை இடித்துக்கொண்டே,

“சீமை சிறுக்கியாட்டும் சீவி முடிச்சு சிங்காரிச்சு வயக்காட்டுல கலெக்டரு உத்தியோகம் பாக்க போனாளாம் வித்தக்காரி” என்று வியாக்கனம் படிச்சார்.

பொழுது விடிந்ததும் சண்டை வேண்டாம் என்று முகத்தைப் பரண்மேல்  வைத்துக்கொண்டு வேலை பார்த்தாள் மரகதம்.

“என்னத்த சுத்தம் பண்றா இந்தக் கருப்பாயி?” என்று அவளைத் திட்டிக்கொண்டே மாட்டுக் கொட்டகையைப் பெருக்கி வாரி, சாணத்தைக் குப்பைக்குழியில் கொட்டினாள். மாட்டுக்கு புண்ணாக்கு, தவிடு போட்டுத் தண்ணீர் காட்டிவிட்டு,  பித்தளையில நல்ல உயரமாக இருக்கும் பால் பாத்திரத்தில் பாலைக் கறந்து, நுரை பொங்கப் பொங்க அப்படியே எடுத்து வந்து பட்டம்மா பக்கத்தில் ‘பட்’டென்று வைத்துவிட்டு,

“பால் வாங்க வரவங்களுக்கு அளந்து ஊத்திடுங்க” என்று வெடுக்கென்று சொன்னாள்.

நுரை பொங்கற பாலை ஊற்றி இழைய காய்ச்சி, கருப்பட்டி போட்டு  புனிதாவுக்கும் மாமியாருக்கும் கொடுத்துவிட்டு, ‘ரெண்டு டபரா’ காபியை கூஜாவில் ஊற்றி எடுத்துக்கொண்டு வாசலில் வந்து, ‘வயக்காட்டுப் பக்கம் யாரு போறாங்க?’ என்று பார்த்துக்கொண்டு நின்றாள் மரகதம்.

“எலே.. குருவம்மா வயக்காட்டுப் பக்கம் போனீன்னா.. என் மாமங்கிட்ட  கொடுத்துடு” என்று சொல்லி, அந்தப்பக்கம் வந்த குருவம்மாவிடம் கூஜாவைக் கொடுத்தாள்.

“எக்காவ், உங்க வயலுக்குத்தான் அறுப்புக்குப் போறேன்” என்று ‘போற போக்குல’ சொல்லிக்கொண்டே போனாள் குருவம்மா.

நேற்று, வயலில் வேலை செய்யும் ஆட்கள்,  “தினம் கூழு வேண்டாம்; அரிசிக் கஞ்சி வேணும்” என்று சொன்னதால் மரகதம் அடுப்பில் உலை வைத்து, பெரிய படியில் ஐந்து படி நொய் அரிசியை ஊறப் போட்டுவிட்டு,  பக்கத்துத் தெருவில் இருக்கும் இருக்கற நாவிதர் வீட்டுக்குப் போனாள்.

மரகதத்தைப் பார்த்ததும் ஓடி வந்த இருளாயியிடம், “நாளைக்கு புனிதாவுக்குத் தீட்டு எடுக்கணும். வயக்காட்டுல வேலை கெடக்கு,  கொஞ்சம் வெள்ளனயே வந்துடு” என்று சேதி சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

வீட்டுக்கு வந்து கஞ்சி காய்ச்சி எடுத்துக்கொண்டு, தூதுவளை துவையலை  வாழையிலையில் மடித்து அண்டா மேல் வைத்துக்கொண்டு, முந்தானைத் தலைப்பை சிம்மாடு மாதிரி சுருட்டித் தலை மேல் வைத்துக்கொண்டு, ‘ஒத்த கையால’ அண்டாவைப் பிடித்துக்கொண்டாள். ‘ஒத்த கையை வீசி வீசி அவள் நடந்த தாள லயத்துல வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாரை மயங்கியது. நெல்லு பொறுக்கிக்கிட்டு இருந்த தேன்சிட்டு, அந்த அண்டா மேல இருந்த தட்டு விளிம்புல ஊஞ்சல் ஆடிக்கிட்டு வந்தது.’

இந்த காட்சியில் மயங்கிய சூரியனும், ‘தனக்கு ஒருவாய் கஞ்சி கிடைக்காதா?’ என்று, மரகதம் பின்னாலேயே ஓடிவர, மேகக் கூட்டங்கள் அலைஅலையாக ஒன்றோடு ஒன்று துரத்திக் கொண்டு சூரியனை முந்திக்கொண்டு ஓடிவர, ஒருவழியாக வயக்காட்டுக்கு வந்து சேர்ந்தாள் மரகதம்.

சுடச்சுட கஞ்சியைப் பார்த்ததும், கதிர் அரிவாளைப் போட்டுவிட்டு ஓடிவந்தாங்க. கும்பலா உட்கார்ந்து ஊரு கதையைப் பேசி உரண்டை இழுத்து கஞ்சி குடிக்கற சுகமும் வெஞ்சனம் இல்லாம உடல் உழைச்சி, வயிறாற கஞ்சி குடிக்கற சுகமும் சொர்க்கத்துக்குச் சமம்.

செந்தாமரை பெரிய மகளை கூவத்தூரில் உள்ள மச்சானுக்கே திருமணம் செய்து கொடுத்தார். நடு மகளை தேவாதூரில் கொடுத்தார். ‘இரண்டு  ஊரும் பக்கம் பக்கம்தான்; இருந்தாலும் நடந்து போக முடியாது’ என்று பொட்டி வண்டியைக் கட்டிக்கொண்டு கிளம்புகிற நேரத்தில், வயக்காட்டில் வேலை செய்தவங்க எல்லாம் வேலையை விட்டுவிட்டு கும்பல் கும்பலாக ஓடினார்கள்.

தொடரும்

  • சாம்பவி சங்கர்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *