தொடர்கதை
வயலில் வேலை செய்தவர்கள் கும்பல் கும்பலாக ஓடியதைப் பார்த்ததும், ‘ஏன் இப்படி ஓடுகிறார்கள்?’ என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றிருந்தார் செந்தாமரை.

“எலே.. செந்தாமரை, நம்ம ஊரு கன்னிமா கோயில்ல…. யாரோ பெரியவரு வந்திருக்காராம். எல்லாரும் பாக்க போறாங்களாம், நீயும் வாடா” என்று கோபால் நாயக்கர் கூப்பிடவும், குழந்தை பிறந்த தீட்டு இருப்பதை  மறந்து அவர் கூடவே ஓடினார் செந்தாமரை.

கோவாலண்ணன் கூப்பிட்டாரேன்னு வேகவேகமாக வந்த செந்தாமரைக்கு கோயிலுக்கு கிட்ட வந்ததும்தான் தீட்டுன்னு உரைச்சது. இருந்தாலும் வந்துட்டமேன்னு வாசலைத்  தாண்டி ஒதுங்கி நின்றார்.

கோயில் வாசல்ல  அகலமா ஒரு கல்லு இருக்கும். அந்தக் கல்லு மேல, உடம்பெல்லாம் ஒட்டிப்போய், ஒல்லியாக வேட்டி மாதிரி ஒரு காவித் துணி கட்டிகிட்டு, மேலுக்கு ஒரு துண்ட விரிச்சி போட்டுகிட்டு, கையில ஒரு கொம்ப வச்சிகிட்டு ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார்.

“ஆரு இவரு..?” என்று செந்தாமரை கோவாலுவைக் கேட்டார்.

“இவருதான் பெரிய மகான்; வட நாட்ல இருந்து  வர்ராராம், இவர பாத்தா புண்ணியமா..” என்று கோவாலு விளக்கினார். 

எல்லாரும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். செந்தாமரை பயந்துகொண்டு ஓரமாக நின்றுகொண்டிருந்தார். மகான், செந்தாமரையைக் கையை அசைத்துக் கூப்பிட்டார். கிட்ட ஓடிப் போன செந்தாமரை, ‘படார்’னு அவர் காலில் விழுந்துட்டார். 

“எழுந்திரு, காய்ச்ச மரம்தான் கல்லடி படும்”னு  சொல்லிட்டு, “சுவாதி நல்லா இருப்பா”ன்னு சொன்னார்.

‘அந்த மகான் என்ன சொன்னார்னு புரியலையே..”ன்னு வழியெல்லாம் யோசனையாகவே இருந்தார்  செந்தாமரை.

“அண்ணாத்த…. நம்ம வீட்ல யாருண்ணா சுவாதி? இல்லாத பேரை சொல்றாரு” என்று குழப்பமாகக் கேட்டார் செந்தாமரை.

“முட்டா பய மவனே.. புனிதா குழந்தைக்குதான் சுவாதின்னு பேர் வக்கச்  சொல்லியிருக்காரு டா” என்று விளக்கினார் கோவாலு.

“அண்ணாத்த, எனக்கு ஒரு ஒத்தாச பண்ணுங்க. நம்ம சுப்புடு ஐயர்கிட்ட குறிப்பு கொடுத்திருக்கேன். குழந்தைக்குப் பேரு வாங்கி வந்துடுங்கண்ணா. நான் மவளுங்களை ஏழாம் காப்புக்கு அழைச்சிட்டு வந்திடறேன்”னு சொல்லி பொட்டி வண்டியில புறப்பட்டார் செந்தாமரை.

நடுமகள்  ஊரைத் தாண்டிதான் பெரிய மகள் வீட்டுக்குப் போகணும். அதனால  முதல்ல நடுமகள் வீட்டுக்குப் போனாரு செந்தாமரை. 

“கடிச்ச பாக்குல காப் பாக்கு கொடுக்காத பெரியாத்தா, நாபெத்த மவளே, நாபெத்த மவளேன்னு வழியனுப்ப வந்தாளாம்”.  அந்த மாதிரி வாயிலேயே வட சுடுவா, கோதை மாமியாரு பவளம்.

செந்தாமரையைப் பார்த்ததும் “வாங்க.. வாங்க”ன்னு வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்  பவளம்.

“எப்படி இருக்கீங்க சம்பந்தி?ன்னு தெரியாம கேட்டுட்டாரு செந்தாமரை.

“நாயக்  கேட்பாரும் இல்ல, நடுவூட்ல வைப்பாரும் இல்ல;  ஏன்னு கேட்பாரும் இல்ல எடுத்து புடிப்பாரும் இல்ல”ன்னு ஒப்பாரி  வைக்க ஆரம்பிச்சுட்டா பவளம்.

ஆனா கழுத்துல மாட்டு வடமாட்டம் மோப்பு வச்ச  செயினு தொங்க, காதுல வைர பேசரி மின்ன, ஆளு நல்லா வளமாதான் இருந்தா. பஞ்சு மிட்டாய் நிறத்துல காபிதூள் பூப்போட்ட  வெல உசத்தியான சேலையில கூந்தலில் கனகாம்பரம் தொங்க செழிப்பா இருந்த, மகள் கோதையைப் பாக்கறதுக்கு செந்தாமரைக்கு  மனசுக்கு குளிர்ச்சியா இருந்தது.

வயிறு குளிர  மோரைக் குடித்துவிட்டுக் கிளம்பினார். “நாளைக்கு புனிதா பொண்ணுக்கு ஏழாம் காப்பு, குடும்பத்தோட வந்துடுங்க”ன்னு சொல்லிவிட்டுக் கிளம்பினார். வண்டிய வேகமாக  கூவத்தூருக்கு ஓட்டினாரு. வவுறு பசியில கத்த, மாட்ட அடிச்சு   ஓட்டினார்.  

உச்சி வெயிலுக்கு இவரோட  பெரிய மகள்  வசந்தி வீட்டுக்கு வந்தார். பேத்தி வளரும்போது பாட்டியா பாசம் காட்னவ, தாலி ஏறியதும் மாமியாரா மாறிட்டா. இருந்தாலும், செந்தாமரை மருமவன்தானே.. அதான், மருமவன் வருவாருன்னு எதிர்பார்த்து , வெடக்கோழிக் குழம்பு வச்சு, வயக்காட்டு நண்டை வறுத்து ரசம் பண்ணி வச்சிருந்தாங்க. வவுறு கதறக் கதற உள்ள போட்டுத் திணிச்சுட்டு, மீதிய அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும்   மூட்ட கட்டினார் செந்தாமரை.

“காலைல கோழி கூவ வந்துடுங்க  அத்தை. வசந்தி.. நீயும்தான். புனிதா அவ புருசனை நெனைச்சு வெசனப்பட்டுகிட்டு இருக்கா. உன்னையும் கோதையையும் பாத்தா, அவ மனசு ஆறும்”னு  சொல்லிட்டு, “மாமனையும் மச்சானையும் வயக்காட்ல பாத்து சொல்லிட்டேன்”  என்ற சேதியும் சொல்லிட்டு கிளம்பினார். பொழுது சாயறதுக்குள்ள ஊரு போய்ச் சேரணும்னு வண்டிய அடிச்சு ஓட்டினார்.

வயக்காட்டு வேலைய கணக்கு தீர்த்துட்டு, கட்டின புடவயில கதிரெல்லாம் ஒட்டியிருக்க, முகமெல்லாம் வேர்த்து விறுவிறுக்க  வந்த மரகதத்தைப் பார்க்கும்போது, வழவழன்னு இருக்கற ரப்பர் மரத்துல பால் வடியறா மாதிரி இருந்தது.

செந்தாமரையும் மாமியார் வீட்ல கொடுத்த தூக்குச் சட்டிய தூக்கிக்கிட்டு வீட்டுகுள் நுழைந்தார். 

“என்னதுங்க..? என் ஆத்தா கொடுத்தாங்களா?”ன்னு தூக்குச் சட்டிய  கையில வாங்கினாள் மரகதம்.

“விலை மோர்ல வெண்ணெய் எடுத்து, தலை மகனுக்குக் கல்யாணம் பண்ற குடும்பமாச்சே.. அவளா கொடுத்திருக்கப் போறா?”ன்னு  வம்பிழுத்தார்   பட்டம்மா.

“ஓசியில உலை வச்சி, காந்தல்ல களிகிண்டற குடும்பமாச்சே உங்க குடும்பம்! நீ  என் குடும்பத்தைப் பேசறியா?”ன்னு பதிலடி கொடுத்தா மரகதம். 

“ஆரம்பிச்சிட்டீங்களா உங்க போராட்டத்த… சத்த நேரம் அடங்குங்க”ன்னு சத்தம் போட்டுட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்த செந்தாமரை மனசுகுள்ள, அந்த மகான் சொன்னது ஓடியது. அதற்குச் சாட்சியாக முருகர் படத்திற்குப் பின் இருந்து கடிதம் ஆடியது.

தொடரும்

  • சாம்பவி சங்கர்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *