களத்து மேட்டுக் காவலுக்குக் கிளம்பிய செந்தாமரை, “மரகதம், நாளைக்கு அரைவிடுதி வேலைதான் ஆளுங்களுக்கு சொல்லிவிட்டிருக்கு; நீ காலைல கஞ்சியும் சேர்த்து எடுத்துட்டு வந்துடு. ஆளுங்க கோழிகூவயிலேயே வந்துருவாங்க” என்றார்.   

“அய்யோ நாளைக்கும் கஞ்சி காய்ச்சணுமா? வீட்ல சொல்லிவிட்டவங்க எல்லாம் வந்துடுவாங்களே.. வேலை மெனக்கெடுமே” என்று புலம்பினாள் மரகதம்.

“விளைஞ்ச வெள்ளாமை வீடு வர வேணாமா? மேலு அலுப்ப பார்த்தா முடியுமா?”

“நான் கஞ்சி காய்ச்சிடறேன் மாமோய்.. சத்த அந்தக் கஞ்சி அண்டாவ, மாரிய விட்டு தூக்கிப் போயிடேன்..” என்று கொஞ்சும் குரலில் சொன்னாள் மரகதம்.

“சிறுமலை சுத்தற சின்னக்காளுக்கு மணவறை சுத்தனா மயக்கமா?” என்று நீட்டி முழக்கினார் பட்டம்மா.

“யாரும் இங்க பவுசா உட்காந்து திங்கல. ‘இடிஇடின்னு இடியாப்பம் பிழிஞ்சு, காப்பித் தண்ணி கொடுத்து கப்பலேத்தி விட்டாங்க’ன்னு சொல்றா மாதிரி உழைச்சிகிட்டுதான் இருக்கோம்” என்று பதிலுக்குப் பொரிந்தாள் மரகதம்.

“டேய் சுள்ளான்… இங்க நின்னு பஞ்சாயத்து பார்த்தோம்னா பஞ்சா பறந்துடுவோம். களத்துமேட்டுக்குப் போலாம் வா” என்று நாயையும் அழைத்துக்கொண்டு செந்தாமரை கிளம்பினார்.

கோழி கூவறதுக்கு முன்னாடியே எழுந்து, வாசல் தெளித்து, செம்மண்ணில் ஓரங்கட்டி, வாசல் அடைத்து பச்சரிசி மாவில் கோலம் போட்டு, வாசலில் தொங்கிய வேப்பிலையெல்லாம் எடுத்து வீசினாள் மரகதம்.

அடுப்பை மெழுகிக் கோலம் போட்டு, கஞ்சி காய்ச்சினாள். குளித்து   முடித்து சிவப்பு நிறத்தில் சின்ன சின்னதாக மஞ்சள் பூப்போட்ட புடவையைச் சுற்றிக்கொண்டு விளக்கு தட்டு விளக்கி, சாமி மேடையைச் சுத்தம் செய்தாள். முருகர் படத்தைத் துடைக்கப் போனவள், படத்துக்குப் பின்னாடி இருந்த கடிதத்தைப் பாரத்தாள்.

“கூறுகெட்ட மனுசன், கடுதாசி படிச்சா தூக்கிப் போடவேண்டியது தானே..” என்று தூக்கிப் போடப் போனவள், ‘பிரிக்காமலேயே இருக்கே..’ என்று அங்கேயே வைத்துவிட்டு, அடுப்படி வேலைக்கு வந்துவிட்டாள்.

எட்டு மணி சங்கு கூவும்போது, இருளாயி வந்து சேந்தாள். முந்தானையில்  பறிச்சு வச்சிருந்த குப்பைமேனி, தூதுவளை, கற்பூரவல்லி, முடக்கத்தான், முசுமுசுக்கை, முருங்கை, துளசி, சீந்தல், அருகம்புல், வேப்பிலை, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் எல்லாவற்றையும் அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட அரைத்து எடுத்தாள்.

அண்டா நிறைய சுடுதண்ணி விளாவி வைத்து, புனிதாவைப் புழக்கடைப் பக்கம் அழைத்து வந்து உட்காரவைத்து, தலையில் பொட்டு எண்ணெய்  வைத்து அரப்புப் பொடி போட்டு நல்லா தலை முடியைக் கசக்கி எடுத்தாள்.  அடி வயிற்றில் நல்லா தண்ணியை அடித்து ஊற்றினாள். வேகவேகமாகப் புனிதாவுக்குத் துணியைச் சுற்றி, அரைத்து வைத்த மருந்துருண்டையில் மூனு உருண்டை கொடுத்து, சுடு தண்ணி கொடுத்தாள். அதற்குள் மரகதம் கரி நெருப்புல சாம்பிராணி போட்டாள். அதை இருளாயி பக்குவமா புனிதா முடியில காட்டி, தலையில பல்லாங்குழி காய ஆறவிட்டாள். நல்லா நுரை பொங்க காபி தண்ணி கொடுத்தாள். ஆறவைத்து ஒரு சொம்பு நிறைய குடித்தாள் புனிதா.

பட்டம்மா பாட்டி புனிதாவைப் பார்த்து, “அரிசி, பருப்பு, புளியில் கை வச்சிட்டு கூடத்துல வந்து உட்காருடி; தல ஆறாம படுக்கக்கூடாது” என்று சத்தம் போட்டாள்

இருளாயி, குழந்தைக்குத் தலைக்கு ஊற்றி, நன்றாகத் துவட்டி சாம்பிராணி போட்டு, உச்சந்தலையில் விபூதி வைத்து, புனிதா பக்கத்தில் துணியைப் போட்டுக் கிடத்தினாள். ஒரு வாரம் கழிச்சு இப்பதான் வெளியில் வருகிறாள் புனிதா.

பட்டம்மா ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து வந்து அவ தலையில சொருகினாள். அதற்குள் பட்டம்மா பாட்டியின் பட்டாளமெல்லாம் ஒன்றாக  சேர்ந்துகிட்டு, “இதைப் பண்ணியா, அதைப் பண்ணியா” என்று மரகதத்தை அதிகாரம் பண்ணிகிட்டு இருந்தாங்க. கடுப்பானாள் மரகதம்.

“கூடவந்த பெருச்சாளி கூடைய தூக்கிட்டு ஆடுச்சாம்; பாக்க வந்த பெருச்சாளி செருப்ப தூக்கிட்டு ஆடுச்சாம்”ன்னு பாடிகிட்டே எல்லாருக்கும் காபி தண்ணி கொடுத்தாள். எல்லா கிழவிகளும் காபிய குடிச்சிட்டு கிளம்பிடுச்சிங்க.

அருக்காணி வாய்க்கால் தண்ணியில் இருந்து, குட்டி குட்டிக் கெண்டை மீனைப் பிடித்துவந்து, காரம் கம்மியா போட்டு, மிளகுத்தூள் போட்டு நல்லெண்ணெய் நிறைய விட்டு, மணக்க மணக்க வச்ச மீன் குழம்ப வயிறுமுட்டச் சாப்பிட்டு, தூங்க ஆரம்பிச்சிட்டா புனிதா.

மதியம் வர்ற சொந்தபந்தத்துக்கு நாட்டுக்கோழிக் குழம்போடு இருளாண்டிகிட்ட ஆட்டுக்கறிக்குச் சொல்லி விட்டிருந்தாள். ஆட்டுக் காலு சூப்பும் ஆட்டுக்கறித் தொக்கும் நெய்யை ஊத்தி ருசியா பண்ணி வைத்திருந்தாள் மரகதம்.

அரைவிடுதி வேலையை முடித்து வந்த செந்தாமரை, சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு, டவுனுக்குப் போய் வெற்றிலை பாக்கு வாங்கிகிட்டு  காப்பு எடுத்துட்டு வரலாம் என்று கிளம்பினார்.

மரகதத்தின் பெரிய மவளும் ஆத்தா, அப்பன், தம்பியும் வண்டி கட்டிகிட்டு வந்தாங்க. அம்மாவைப் பார்த்ததும் வாயெல்லாம் பல்லாக, “வாங்க வாங்க” என்று அழைத்தபடி வாசலுக்கு ஓடினாள் மரகதம்.

பெரிய பேத்தியை பார்த்ததும்  பட்டம்மா கிட்டே கூப்பிட்டு கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தா வைத்துக் கொஞ்சினாள். சம்பந்திய ‘வாங்க’ன்னு கூப்பிட்டு,

“ஏய்.. மரகதம் எல்லாருக்கும் சாப்பாடு போடு”ன்னு அதிகாரம் பண்ணினார் பட்டம்மாள்.

மரகதத்தின் அம்மா மரகதத்திடம் வந்து “என்னடி, புனிதாவுக்கு தலைக்கு ஊத்தியாச்சா? மருந்து அரைச்சுக் குடுத்தியா?”ன்னு விசாரணை பண்ணாங்க. இதே கேள்வியை பட்டம்மா கூட்டாளிங்க கேட்கும்போது மரகதம் பழிச்சு பாட்டு பாடினா இல்ல.. அதனால் இப்ப பட்டம்மா, “அதியசயமான ஊர்ல புள்ள பொறந்துச்சாம்; தொப்புள் கொடி அறுக்க கப்பல் ஏறுச்சாம்”ன்னு ராகம் இழுத்தா.

கொஞ்ச நேரத்தில் நடு மகளும் அவள் மாமியாரும் மட்டும் வந்தாங்க. கோதையையும் கட்டிப் பிடித்துக் கொஞ்சிய பட்டம்மாவுக்கு சந்தோஷத்துல தலகால் புரியல.

புழக்கடைப் பக்கம் வந்த கோதைகிட்ட “எப்படியவ இருக்க?” என்றாள் மரகதம்.

“எள்ளுக்குச் சேலை இருபத்திரண்டு முழமாம்; சுத்து எட்டலைன்னு சுண்டறா கண்ணீர’ன்னு எம் மாமியாகாரிக்கு எவ்வளவு செஞ்சாலும் பத்தாதுமா”ன்னு குறைபட்டாள் கோதை.

வந்த உறவுகளெல்லாம் நன்றாகச் சாப்பிட்டு, உண்ட களைப்பு தீர ஓய்வெடுத்தார்கள்.

டவுனுக்குப் போன செந்தாமரை, சாமானெல்லாம் மூட்டைகட்டிகிட்டு வந்தார். உறவுகளை ‘வாங்க’ன்னு சொல்லிட்டு, மரகதத்தைத் தேடி வந்தார். அங்கே மரகதம் லாந்தர் விளக்கு, பெரிய விளக்கு, சிம்னி விளக்குன்னு    ஏழெட்டு விளக்கை அரிசி மாவு போட்டு கரிபடிஞ்ச சிம்னி எல்லாத்தையும் துடைத்துக் கொண்டு இருந்தாள்.

“பூவுள்ள மங்கையாம் பொன்கொடியாம்; போன இடமெல்லாம் செருப்படியாம்”ங்கற கதையாட்டம் உனக்கு வேல ஒழிய மாட்டேங்குது. பாவம் புள்ள நீ” என்று பொஞ்சாதிகிட்ட செந்தாமரை உருகறது கடவுளுக்கே பொறுக்கவில்லை போல.

“தம்பி.. செந்தாமரை”ன்னு குரல் கொடுத்தார் கோபாலண்ணா.

“இதோ, வாரேன்”னு சொல்லிட்டே திண்ணைக்கு வந்த செந்தாமரையிடம், சுப்புடு ஐயர் பேர் எழுதிக் கொடுத்த பேப்பரை நீட்டினார். பேப்பரைக் கையில் வாங்கிப் பார்த்ததும் அதிர்ந்தார் செந்தாமரை.

தொடரும்.

  • சாம்பவி சங்கர்
  • ஓவியம்: வெண்ணிலா

Comment (1)


பாரதி மோகன் . க
பாரதி மோகன் . க
August 12, 2022

ஒரு கதையை படிக்கிறோம் என்றால் கதையில் செய்திகள் இருக்கும் கதை இருக்கும்

ஆனால் இவங்க சொல்ற கதைல செய்தி கதை இதையும் தாண்டி சில சூட்சமங்கள் ஒளிஞ்சிருக்கும்

சொல்கிற செய்தியில் சில நுணுக்கங்கள் பரவி கிடக்கும் 10 வார்த்தைகள் சொல்ல வேண்டியது ஒரு வார்த்தையில் ஒரு வரியில் சொல்லி இருப்பாங்க

ஒரு வார்த்தை அல்லது ஒரு வரியில் வந்திருக்கும் இத சொல்றதுக்கு தான் சாமர்த்தியம் வேண்டும்

இதை நுணுக்கமான அறிவுள்ள வாசகர் புரிந்து கொள்வார்

அதற்கு அனுபவமும் அது சார்ந்த ஞானமும் இருக்க வேண்டும்

அப்பொழுது வரும் ஒரு ஆச்சரியமும் ஒரு வியப்பும் அதுதான் இந்த எழுத்தாளரின் வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *