கரைசேராப் படகுகள் – 4
தொடர்கதை
குழந்தை பெற்றெடுத்த எந்த உயிரினமாக இருந்தாலும் அகோரப் பசியில் இருக்கும். சில உயிரினங்கள் தன் குட்டியையே சாப்பிட்டுவிடும்.
அப்படி ஒரு பசியில்தான் நாக்கு வறண்டு தண்ணீர் கேட்டாள் புனிதா. ஆனால் இந்தப் பட்டம்மா கிழவி அதைப் பிடுங்கிவிட்டதே என்ற கோபத்துடன், “ஏன் அத்தை, தண்ணி டம்ளர புடுங்கறீங்க?” என்று கேட்டாள் மரகதம்.
“பொசக்கெட்டவளே, புள்ள பெத்த உடனே தண்ணி குடிச்சா ஜன்னி வச்சிடும்” என்று ஆதங்கத்துடன் சொன்னார் பட்டம்மா.
“இப்ப என்ன பண்றது? புள்ளைக்கு நாக்கு வறளுதே” என்று விசனப்பட்டாள் மரகதம்.
“சர்க்கரைத் தண்ணிய தொட்டு, பச்ச மண்ணு நாக்கிலும் புனிதா நாக்கிலும் தடவுங்க” பட்டம்மா பக்குவமாகச் சொன்னார்.
தாமரைமீது மோகம் கொண்டு ஆதவன் அதிவேகமாய் வரும் இளங்காலைப் பொழுது. ஆதவனைக் கண்ட வெட்கத்தில் ஆம்பலும் அல்லியும் மறைய, குளங்களில் தாமரைகள் பூத்துக் குலுங்கின.
மரகதம் சாணத்தால் வாசல் மெழுகி, கோலம் போடாமல் விட்டாள். அப்பதான் தீட்டு வீடுன்னு பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஏழு நாளுக்கு அந்த வீட்டுடன் அன்னம் தண்ணி புழங்க மாட்டாங்க.
வீட்டு வாசலில் “அம்மா… தாயீ..” என்ற குரல் கேட்டு வெளியில் வந்த மரகதம், வாசலில் வண்ணாத்தி இருப்பதைப் பார்த்தாள்.
“வா சொக்கி.. ஏன் நேற்று துணி எடுத்துட்டு வரல?” என்று சற்று அதட்டலுடன் கேட்டாள்.
“வந்தேன் தாயீ, திண்ணையில பெரிய வூட்டு அய்யாமாருங்க எல்லாம் இருந்தாங்க, அதான் போயிட்டேன். பாப்பாவுக்கு பொண்ணு பொறந்திருக்காமே, ரொம்ப சந்தோசமுங்க” என்று வெள்ளந்தியாகப் பேசினாள் சொக்கி.
“ஆமா சொக்கி, தீட்டு எடுக்கற அன்னிக்கு உனக்கு வெத்தல பாக்கு தரேன். இப்ப பாப்பா துணிய தனியா எடுத்துட்டுப் போ” என்று உள் அறையைக் காட்டினாள் மரகதம்.
“எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. புள்ள பெத்த வீடும் கல்யாண வீடும் ஒன்னுன்னு சொல்வாங்க. வாரவங்க போறவங்களை கவனிக்கணும்; புள்ள பெத்தவளை கவனிக்கணும். காடு கழனிய பாக்கணும். இந்த மனுஷன் வேற, ரெண்டு நாள்ல அறுவடைன்னு சொல்றாரு. ஆளுங்களுக்கு கூழாக்குவேனா? புனிதாவ கவனிப்பேனா? ஆத்தாடி, தலைய சுத்துதே!” என்று புலம்பிக்கொண்டே வேலைகளைத் தொடர்ந்தாள் மரகதம்.
“செந்தாமர.. டவுனுக்குப் போய் புனிதாவுக்கு வறுத்த ரொட்டி வாங்கிட்டு வா. இன்னிக்கு புனிதாவுக்கு அதுதான் சாப்பாடு” என்று மகனுக்குக் கட்டளையிட்ட பட்டம்மா, “ஏன்டா, உன் மத்த மவளுக்கெல்லாம் சேதி சொல்லிட்டியா?” என்று பேத்திகளைப் பார்க்கும் ஆர்வமுடன் கேட்டாள்.
“சொல்லி விட்டிருக்கு. அவளுங்க எல்லாம் ஏழாம் காப்புக்கு வர்ரோம்னு சொல்லியிருக்காங்க” என்றார் செந்தாமரை.
“என்னமோ போடா, நீ பெத்தது மூனும் பொண்ணா போச்சேன்னு வெசனமா இருக்கு” என்று புலம்பிக்கொண்டே பட்டம்மா பாட்டி நெய்யை ஊற்ற, “யாரை நோவறது? விதைச்சவன் விதைச்சுட்டான்; விதி வழியே போவ வேண்டியதுதான்” என்று சலித்துக்கொண்டார் செந்தாமரை.
“ஏங்க காலையிலேயே எதுக்கு சலிச்சிகிட்டு? ஆகற வேலைய பாருங்க. போய் சுப்புடு ஐயரைப் பாத்து புள்ளைக்கு பேர் குறிச்சிட்டு வாங்க” என்று செந்தாமரையைக் கிளப்பி சுப்புடு ஐயர் வீட்டிற்கு அனுப்பினாள் மரகதம்.
“மரகதம்…. மிளகு, சீரகம், தனியா, சுக்கு, ஓமம், திப்பிலி, இதையெல்லாம் பொன்னிறமா வறுத்து, அம்மியில வச்சு ஒட்ட ஒட்ட அரைச்சு, குழம்பு வைக்கணும். இனிமே மூனு மாசத்துக்கு இது மாதிரி பத்தியச் சாப்பாடுதான் தரணும்” என்று மரகதத்திற்கு விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள் பட்டம்மா.
பக்கத்துத் தெரு குப்புசாமி ரெட்டியார் கொல்லையில் களையெடுத்துக் கொண்டே பெண்கள், ஊர்க் கதையை ஊறுகாய் இல்லாமல் வாயில் ஊறவைத்தனர்.
“ஏன்டி, நம்ம ஓட்டு வீட்டு பட்டம்மா பாட்டி பேத்திக்கு பொண்ணு பொறந்திருக்காமே!” என்று முனியம்மாவுக்கு மூக்கு வியர்த்தது.
“ஆமான்டி, பாவம் அவ புருசன் வரலன்னு அழுதுகிட்டு இருக்காளாம். எங்க இருக்கானோ?! உயிரோட இருக்கானோ, இல்லையோ! யாரு கண்டா? கல்யாணம் பண்ணி மூனு மாசத்துல விட்டுட்டு போனான்; இன்னி வரைக்கும் தகவல் இல்லையாம்” என்று அருக்காணி அளந்துவிட்டுக் கொண்டிருந்தாள்.
மனிதர்களிடம் இருந்து வரும் வார்த்தைகள், தனக்குச் சொந்தம் என்று நினைக்கிறார்கள். அந்த வார்த்தையின் பலன் பிறருக்குச் சொந்தம் என்பதை அறியாமலே பேசுகிறார்கள். இங்கும் அப்படித்தான், களையெடுத்துக் கொண்டே புனிதாவின் கணவனைப் பற்றி, தப்புத் தப்பாக தலைப்புச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தனர்.
“அருக்காணி, உன் வாயில நல்ல வார்த்தைகளே வராதா? பாவம் புனிதா, அவ புருசனைப் பத்தி அவச்சொல்லா சொல்ற. எல்லாம் மாசம் ஒரு தடவை கடுதாசி போடறானாம்” என்று நல்ல மனதுடன் பேசினாள் சிவப்பி.
“ஏன்? கடுதாசி போடற துரைக்கு ஒரு எட்டு வந்து பாக்க முடியாதாமா? அப்படி என்ன பொல்லாத வேலை? ஒருக்கால் அங்க ஏதாவது வீடு கீடு வச்சிருப்பானோ?” என்று திரையில்லாமல் படம் ஓட்டினாள் அருக்காணி.
“ஊரு கதைய உப்பில்லாம பேசறியே அருக்காணி, உன் புருசனை எங்க மூனு மாசமா காணோம்? அடிச்சி விரட்டிட்டியா?” என்று கடுப்புடன் கேட்டாள் சிவப்பி.
“என் கதைதான் ஊரு சிரிக்குதே! உனக்கு வேற தனியா சொல்லணுமா? அவன்தான் அந்த எடுபட்ட சிறுக்கியை விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டான். அதான் ஒரேயடியா போய் சேருடான்னு தலைமுழுகி விட்டுவிட்டேன்” என்று சாதாரணமாகச் சொன்னாள் அருக்காணி.
அருக்காணியைப் பொறுத்தவரை அவள் கதையாக இருந்தாலும், ஊர்க்கதையாக இருந்தாலும், மேளம் கொட்டாமல் தண்டோரா போடுவாள். இது அவள் இயல்பு. அதை யாரும் பெரிதாக எடுத்துக்க மாட்டாங்க. ‘குடிகாரக் கணவனிடம் உதைபட்டு வாழறதைவிட, தனியா உழைச்சு ரெண்டு புள்ளைங்களைக் காப்பாத்தறாளே’ன்னுதான் சந்தோஷப்படறாங்க. அருக்காணி ஒரு கொல்லையில் வேலை செய்தால், அங்கே ஊர் செய்தி முழுவதும் தெரிந்து கொள்ளலாம்.
இன்னிக்கு இப்பதானே தென்னன்டை தெரு புனிதாவைப் பற்றி சொல்லியிருக்கா? இன்னும் வடக்குத் தெரு, நடுத் தெரு, வில்லித் தெருன்னு எல்லா செய்தியும் வரும். யார் யார் வீட்ல அடிச்சிகிட்டாங்க என்பதில் தொடங்கி, யார் வீட்ல என்ன சமையல் செய்தாங்க என்பது வரை அனைத்துச் செய்திகளுக்கும் குத்தகைக்காரி இந்த அருக்காணி.
தொடரும்
- சாம்பவி சங்கர்

Senthil
July 5, 2022Supper
Raman
July 6, 2022supper