கரைசேராப் படகுகள் – 3
தொடர்கதை
மனிதன் பிறக்கும்போதே பல உறவுகளுடன்தான் பிறக்கிறான். குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு எங்கோ பிறந்து வளர்ந்த ஆணும் பெண்ணும் இணைகின்றனர். வெறும் மஞ்சள் கயிறும் மோதிரமும் மட்டுமா இருவரையும் இணைக்கிறது?! அவை வெறும் அடையாளம் மட்டுமே. கணவன் – மனைவி உறவு என்பது பூர்வ ஜென்ம பந்தம், நம்பிக்கை இருப்பவர்களுக்கு; இந்த ஜென்மத்து சொர்க்கம் அன்பு இருப்பவர்களுக்கு.
பிரசவம் முடிந்த மறுநொடியில், பிறந்திருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூட கேட்கத் தோன்றாமல், கணவனைத் தேடுகிறாள் என்றால், ‘எனக்குக் குழந்தை பிறந்தாலும் அவர்தான் முக்கியம்’ என்று உணர்த்தும் மறைபொருள் இது என்பதை அனைவரும் அறிந்தனர்.
“அம்மாடி தாயே, நீ படிச்சிருக்க; உன் கணவரைப் பற்றி உனக்குத் தெரியாதா? நீதான் மனசைத் தேத்திக்கணும்” என்று செந்தாமரை, தன் மகளுக்கு ஆறுதல் கூறினார்.
“நீ பார்த்து வச்ச மாப்பிள்ளைதானே? அவ ஏன்டா மனசைத் தேத்திக்கணும்?” என்று மகன் மீது பாய்ந்தாள் பட்டம்மா பாட்டி.
மருத்துவச்சி குழந்தையை சுத்தப்படுத்தி, பழைய நூல் புடவையில் சுற்றி எடுத்து வந்து செந்தாமரையிடம் காட்டினாள். ரோஜாக் குவியலுக்கு மத்தியில் தாமரைப் பூ மலர்ந்திருப்பதைப் போன்று அந்தக் குழந்தை பூத்திருந்தது. புனிதாவைப் போன்று அழகான பெண் குழந்தை.
குழந்தையைப் பார்த்ததும், முதலில் அதன் காதைத் திருப்பிப் பார்த்து, “என் நிறமெல்லாம் வரமுடியாது” என்று அலட்டிக் கொண்டாள் அலமு பாட்டி.
“ஆமா, ஆமா. நீ காக்கா சிவப்பாச்சே” என்று கிண்டலடித்தாள் பட்டம்மா பாட்டி.
“ஏம்பா செந்தாமரை, குழந்தை உனக்குச் சொந்தமா? இல்ல, ஊருக்குச் சொந்தமா?” என்று கோபால் நாயக்கர் கேட்டார்.
“என் பொண்ணு மாதிரியே தங்கச்சிலை பொறந்திருக்கா நாயக்கரே” என்று மகிழ்ச்சியுடன் வெளியில் இருந்த அனைவரின் கைகளையும் பிடித்துக் கொண்டார் செந்தாமரை.
“சரிப்பா, இந்தப் பேப்பரில் குழந்தை பிறந்த நேரம், தேதியெல்லாம் குறிச்சிருக்கேன். வெள்ளனயே போய் நம்ம சுப்புடு ஐயர்கிட்ட குழந்தைக்கு ஜாதகம் எழுதிக்கோ” என்று சொல்லிவிட்டு பெரிசுகள் திண்ணையைக் காலி செய்தனர். பாட்டிகளும் ஆளுக்கொரு காரணம் சொல்லிவிட்டுக் கிளம்பினர்.
“வள்ளி, பொறந்த குழந்தை பையனா பொண்ணான்னு கேட்க மறந்துட்டோமே?” என்று சுகுணா தண்ணி மோந்துகொண்டே ஆதங்கப்பட்டாள்.
“அதுக்கு ஏன் அம்புட்டு விசனப்படற? என் மாமியாளும் உன் ஆத்தாளும் வந்தா தெரிஞ்சிடப் போகுது” என்று வள்ளி நீட்டி முழக்கினாள்.
“சுகுணா, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வச்சிருக்கேன். வந்து எடுத்துகிட்டு போ” என்று சொன்ன வள்ளிக்கு, ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு, “வள்ளி, என் குடம் ரொம்பிடுச்சு. நீ மோந்துக்கோ” என்று வாளியை நீட்டினாள் சுகுணா.
“சுகுணா, மதியம் நெல்லு குத்தியது மேலெல்லாம் வலிக்குது. நாலு குடம் தண்ணி இறைச்சி கொடேன்” என்று கேட்டாள் வள்ளி.
“அதானே பார்த்தேன், என்னடா ‘செட்டியார் ஆத்தைக் கட்டி இழுக்கறாரே’ன்னு” என்று வள்ளி குழம்பு கொடுத்த காரணத்தைச் சொல்லிவிட்டு, நீர் இறைத்தாள் சுகுணா.
“அம்மா, நாக்கு வறட்சியா இருக்கு; கொஞ்சம் தண்ணி கொடும்மா” என்று புனிதா குரல் கொடுத்தாள்.
மரகதம் எடுத்துக்கொண்டு சென்ற தண்ணீர் டம்ளரை வெடுக்கென்று பிடுங்கினாள் பட்டம்மா பாட்டி.
தொடரும்
- சாம்பவி சங்கர்

பானுரேகா
June 29, 2022உனக்கு சொந்தமா? ன்னு கேட்டால் பெண் என்று அர்த்தமா?
சாம்பவிசங்கர்
June 29, 2022ஆண் என்று அர்த்தம். ஆண் மகன் தான் பெற்றோருடன் இருப்பார்கள். பெண் திருமணமாகி யார் வீட்டுக்காவது சென்றுவிடுவாள்.
Senthil
July 5, 2022Supper
Raman
July 6, 2022supper