தொடர்கதை – சாம்பவி சங்கர்

சூரியன் தத்தளித்து, தகதகத்துக் கிளம்பும் காலைப்பொழுது. அந்த ஓட்டு வீட்டு வாசலில் பெரிய வேப்பிலைக் கொத்து சொருகி இருந்தது.  பெரிய அகலமான பித்தளைச் சட்டியில் ஆலம் கரைத்து, அதில் வேப்பிலை, கரித் துண்டு, காய்ந்த மிளகாய் போட்டு வாசலில் அனைவரின் பார்வையில் படும்படி வைத்திருந்தனர்.

மரகதம் மூன்றாம் நாள் புனிதாவுக்கு சாதம் கொடுப்பதற்காக, அதிகாலையிலேயே எழுந்து, குளிசெலவு எல்லாம் மண் சட்டியில் வைத்துப் பொன்னிறமாக வறுத்து, அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட அரைத்து எடுத்தாள். முதல்நாளே பட்டம்மாள் பாட்டி கால்கிலோ பூண்டை உரித்து வைத்திருந்தாள். அலமு பாட்டி, அவள் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பிஞ்சுக் கத்தரிக்காயைப் பறித்துவந்து மரகதத்திடம் கொடுத்து இருந்தார்.

நல்லெண்ணெய் நிறைய ஊற்றி, பூண்டைப் போட்டு, அதன் தலையில் கொஞ்சமாகப் பெருங்காயத்தைக் கொட்டி, நன்றாக வதங்கியதும் பிஞ்சுக் கத்திரிக்காயைப் போட்டு, நல்லெண்ணெயில் மூழ்க விட்டு, தட்டு போட்டு மூடி வைத்து வதக்கி, கத்திரிக்காய் வெந்ததும் அரைத்த குளி செலவு போட்டு சட்டியை மூடி வேகவைத்தாள் மரகதம். அந்த வாசனை தெருவில் செல்பவர்கள் அனைவரையும் சுண்டி இழுத்தது.

“அடியே… மரகதம், அந்த கத்திரிக்காய் சட்டியில் சுடச்சுட சாதம் போட்டு எடுத்துட்டு வாடி…” என்று பட்டம்மா பாட்டி நாவில் நீர் ஊற சொன்னார்.

“பாரேன் இந்தக் கிழவிக்கு, அங்க புள்ளை பெத்தவ பசியோட இருக்கா. இங்கே இவங்களுக்கு சாப்பாடு கேட்குதாம்” என்று மாமியாரை மனதிற்குள் கிண்டல் அடித்துவிட்டு, தன் மகள் புனிதாவிற்குச் சுடச்சுட சாதமும் கத்தரிக்காய் வதக்கலும் சேர்த்து காலையில் 7 மணிக்கு உணவு கொடுத்தாள். இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த புனிதாவிற்கு, இந்தச் சாப்பாடு தேவாமிர்தமாக இருந்தது.

அவசரமாக வேலை முடித்துக் கொண்டிருக்கும்போதே, “வயலில் ஆளுங்களுக்கு சாப்பாடு வேணும்” என்று செந்தாமரை மரகதத்தை அவசரப்படுத்தினார்.

நேற்று  செய்து வைத்த கூழில் இருந்து ஒரு அண்டா கூழைக் கரைத்து, அதற்கு ஊறுகாய் மிளகாயும் நார்த்தங்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாயை ஒரு டப்பாவிலும் எடுத்துக்கொண்டாள். கூழ் அண்டாவை, தலையில் சும்மாடு வைத்துத் தூக்கிக்கொண்டாள். மரகதமும் செந்தாமரையும் மாறி மாறி அந்தக் கூழ் அண்டாவை ரெண்டு பர்லாங்கு  தூரத்தில் உள்ள வயலுக்கு எடுத்துச் சென்றனர்.

வயலில் அறுவடை வேகமாக நடந்து கொண்டிருந்தது. அங்கு இருந்த பாதாம் மரத்திலிருந்து கிடுகிடுவென்று வாதாம் இலைகளைப் பறித்த மரகதம், இலைகளை வேகவேகமாக தொண்ணை ஆக்கி, அங்கு இருந்தவர்களுக்கு எல்லாம் கூழ் ஊற்றிக் கொடுத்தாள். பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த அருக்காணியையும் கூப்பிட்டுக் கூழ் கொடுத்தாள் மரகதம்.

மரகதம் வயல் வேலை செய்து கொண்டிருந்தாளே தவிர, ‘பட்டம்மா பாட்டியும் அலமு பாட்டியும் புனிதாவையும் குழந்தையையும் நன்றாகப்  பார்த்துக்கொள்வார்களா?’ என்ற கவலையிலேயே அவள் மனம் இருந்தது.

மதியம் ரெண்டு மணி இருக்கும். வீட்டு வாசலில் தபால்காரர் வந்து, “ஐயா… ஐயா…” என்று கத்திக் கொண்டிருந்தார். வாசலில் வேப்பிலை சொருகவில்லை என்றால், அவர் நேரடியாக உள்ளே சென்று இருப்பார். வேப்பிலையைப் பார்த்ததும் தயங்கி, வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்.

ஆடி அசைந்து, திருவாரூர் தேராட்டம் பட்டம்மா பாட்டி வெளியில் வந்தார். “யார் அது? நம்ம ராமுவா? வாப்பா… என்ன வெளியிலேயே நின்னுட்ட?” என்று அக்கறையுடன் கேட்டார் பாட்டி.

“வெளியில்தான் வேப்பிலை வேலி போட்டுட்டீங்களே, அப்புறம் எப்படி உள்ளே வர்றது?” என்று அங்கலாய்த்தார் கடுதாசி கொண்டுவந்தவர்.

“பாட்டி இந்தாங்க, இதை பத்திரமாக உங்க பிள்ளைகிட்ட கொடுத்துடுங்க” என்று கூறி, கவரைப் பாட்டியிடம்  கொடுத்துவிட்டுச் சென்றார். பாட்டி அதை எடுத்து வந்து, பத்திரமாக சாமி மாடத்தில் முருகர் படத்திற்குப் பின்னால் வைத்தார். ‘யார் கண்ணிலும் படாமல், பத்திரமாக என்னிடமே இரு’ என்று படத்திலிருந்த செந்திலாண்டவன் சிரித்தார்.

வயக்காட்டில் அறுவடை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களும் கதிர் அறுத்து, அரி அரியாக  வைத்தனர். அதை மரகதம், செந்தாமரை, இன்னும் சிலர் கட்டுக் கட்டாகக் கட்டினர். சில கட்டுகள் கட்டி முடித்ததும், ஆண்கள் அந்தக் கதிர்களைத் தலையில் வைத்துக்கொண்டு களத்து மேட்டுக்குச் சென்றனர்.

கதிர்களை அறுத்து முடித்ததும் பெண்களும் அந்தக் கதிர்களைத்  தலையில் சுமந்து, களத்து மேட்டுக்குக் கொண்டு வருவார்கள். இதில் அழகு என்னவென்றால், ஆண்கள் வேகமாக வாய்க்கால் வரப்புகளில் நடந்து களத்து மேட்டுக்கு வந்துவிடுவார்கள். பெண்கள் பாவம், தட்டுத்தடுமாறி வரப்புகளில் மேடு பள்ளங்களில் கால்வைத்து நடந்து வருவது நடனமாடிக்கொண்டே வருவதுபோல அழகாக இருக்கும். இந்த ஆண்கள் கட்டுகளைக் களத்தில் போட்டுவிட்டு, பாதி வழியில் வந்து தன் தங்கையோ,  மனைவியோ,  அம்மாவோ,  அத்தை மாமன் மகளோ, தூக்கி வரும் கட்டுகளை அவர்கள் மாற்றிக்கொள்வார்கள். அந்தக் கதிர் மாற்றும் அழகு, வானத்தில் அலை அலையாகச் சென்று கொண்டிருக்கும் மேகங்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்த் திசையில் வரும் மேகத்துடன் மோதிக் கலைந்து செல்வது போல இருக்கும்.

கதிரெல்லாம் களம் வந்து சேர்வதற்குள், சூரியன் கீழ் வானம் வந்து சேர்ந்துவிட்டான். அவசர அவசரமாகக் கதிர்க் கட்டுகளை அடுக்கி வைத்துவிட்டு, ஆட்கள் எல்லாரும் அங்கேயே கரண்ட் கொட்டாயில் மோட்டார் கிளப்பி குளித்துவிட்டு, துணிகளைக் காய வைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள். பெண்கள் மார்பையும் உடலையும் மூடுவது போல, ஒற்றை சேலைத் தலைப்பை ஏற்றிக் கட்டிக்கொள்வார்கள். இன்னொரு தலைப்பை மறுகையால் பக்கவாட்டில் தூக்கிப் பிடித்தது  போல நடந்து வருவார்கள். கடலில் பாய்மரக் கப்பல், பாய்மரம் கட்டி கடலின் அலைகளில் ஆடி அசைந்து நகர்வது மாதிரி இருக்கும், பெண்கள் சேலை உலரவைத்து நடந்து வரும் அழகு.

அவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, செந்தாமரையும் மரகதமும் பேசிக்கொண்டே வந்தார்கள். “இன்னும் அறுவடை செய்ய வேண்டிய தளைகள் 4 துண்டு இருக்கு. இன்னைக்கு இரண்டு துண்டுதான் முடிஞ்சிருக்கு. இதுவே சின்ன தளைகள்தான்” என்று வேலையின் கடினத்தை வருத்தமாகக் கூறினார் செந்தாமரை.

“ஆமாங்க, குழந்தையையும் பார்த்துக்கொண்டு, வயல் வேலைகளையும் பார்க்க முடியலைங்க” என்று அலுப்புடன் கூறினாள் மரகதம்.

“அடி போடி, எள்ளு எண்ணெய்க்குக் காயுதாம், எலிப்புழுக்கையும், ‘ஆமாம், கூட சேர்ந்து நானும் காயுறேன்’னு சொல்ற மாதிரி இருக்கு நீ பேசறது. நான் கூலி கொடுக்க பணத்துக்கு என்ன பண்றதுன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன். இவ என்னடான்னா வேலை அதிகமா இருக்குன்னு புலம்பறா”   என்று குறைபட்டார் செந்தாமரை.

“ஆமா, பொம்பளைங்க வேலை செய்யறது ஆம்பளைங்களுக்கு பெரிய விஷயமாகவே தெரியாதே” என்று மனதுக்குள் புலம்பினாள் மரகதம்.

வேக வேகமாக வீட்டிற்குள் வந்த மரகதம், அவசரமாய் ஒரு குளியல் போட்டுவிட்டு, அதைவிட அவசரமாக மிளகு பூண்டு தட்டிப்போட்டு ரசம் வைத்து, அதற்குத் தொட்டுக் கொள்வதற்கு உடைத்த கடலையும் பூண்டும்  சேர்த்துத் துவையல் செய்தாள். புனிதாவிற்கு வறுத்த ரொட்டியைக் காபியில் ஊறவைத்து மாலை 6 மணிக்கே பட்டம்மா பாட்டி  கொடுத்திருந்தார்.

வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையிடம் சென்று, கொஞ்சிக் கொண்டிருந்தார் செந்தாமரை. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இரவு முழுவதும் மரகதம்தான் அந்தப் பச்சை சிசுவைப் பார்த்துக்கொள்வாள். புனிதாவால் எழுந்து உட்காரக்கூட முடியாது. இன்னும் சரியான சத்தான ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. குழந்தை பிறந்த ரணம் குடல் முழுக்க உள்ளாகவே இருக்கும். அந்த ரணம் ஆறுவதற்கு ஒரு வாரமாவது ஆகும். அது வரைக்கும் பார்த்துப் பார்த்துதான் சாப்பிடணும்.

புனிதா வெளியில் அனைவரிடமும் சிரித்துப் பேசிப் பழகினாலும், அவள் மனம் முழுவதும் அவள் கணவனின் நினைவே நிறைந்திருந்தது. “என்னதான் வேலை அதிகமாக இருந்தாலும், நான் எப்படி இருக்கேன்னு விசாரித்து ஒரு கடுதாசிகூடப் போட முடியாதா?” என்று புனிதாவிற்குக் கோபம் லேசாக எட்டிப் பார்த்தது.

“நொண்டியாகக்கூட இருந்துவிடலாம்; திருமணத்திற்குப் பிறகு ஒன்டியாக மட்டும் இருக்கக்கூடாது” என அடிக்கடி பாட்டி சொன்னது புனிதாவிற்கு நினைவுக்கு வந்தது. ‘இவள் வாழ்வின் சதியில் எனக்கும் பங்கு’ என்று செந்தில் ஆண்டவரும் அவருக்குப் பின்னிருந்த கடுதாசியும் சிரித்துக் கொண்டிருந்தது.

தொடரும்

  • சாம்பவி சங்கர்

Comment (1)


Raman

supper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *