பெண்ணால் முடியும் – நூல் அறிமுகம்

நூல்: பெண்ணால் முடியும்
ஆசிரியர்: நஸீமா ரசாக்
விலை: 180 ரூபாய்
பதிப்பகம்: ஸீரோ டிகிரி

‘பெண்ணால் முடியும்’ என்ற புத்தகத்தை Pen-ஆல் முடியும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கும் நஸீமா ரசாக் அவர்களின் புதிய படைப்பு. என்னுரை இல்லாமல் வந்திருக்கும்போதே தெரிகிறது, நல்ல எழுத்திற்கு எந்த உரையும் தேவையில்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்தியிருக்கிறார்.

எழுத்தாளர் என்றால், சுவாரசியமான நாவலைத் தருவது அல்லது சமூகத்திற்கு ஒவ்வாத கற்பனைப் படைப்பைத் தருவது என்று இல்லாமல் சமூகத்தில் சரியாக நிரம்பிடாத இடத்தை நிரப்பிட முயன்றிருக்கிறார். ஆசிரியர் அந்தச் சிறிய முயற்சியில் பெரிய விதையை விதைத்திருக்கிறார். இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் தடம் பதித்துவிட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படியென்றால் இந்தப் புத்தகம் எதற்கு என்ற கேள்வியும் கூடவே சேர்ந்து எழத்தான் செய்கிறது.

பெண் என்பவள் எப்போதும் பெருஞ்சக்திதான். கிளியோபாட்ரோ போன்ற அரசியல்வாதியை இன்று வரை பார்த்திட முடியாத அளவுக்கு, அப்படியொரு அரசியலை சுமார் 2300 வருடங்களுக்கு முன்பே நடத்தியிருக்கிறார். இராஜராஜனுக்கு ஒரு பஞ்சமாதேவி் என்று பட்டியல் நீண்டுகொண்டேதான் இருந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டில் பெண்கள் என்றால் பெருஞ்சக்தி என்று பாரதி முழங்க ஆரம்பித்தது முதல் அந்த முழக்கம் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.

அப்புறம் ஏன் இந்த முழக்கம் தொடர்கிறது என்று பார்த்தால், இன்று இருக்கிற வளர்ச்சி பெண்களுக்கானதாக இருக்காதோ என்ற எண்ணம் முளைக்கிறது. பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல, நாகரீகம், அறிவியல், தொழில்நுடபம் போன்ற பூக்களால் பெண்கள் நாராக மணந்திருப்பதைத்தான் வளரச்சி என்று சொல்லித் திரிவதாகத் தோன்கிறது. புரிகிற மொழியில் சொல்லவேண்டுமென்றால், பெண்களால் பலன் வருகிற தருணத்தில் பயன்படுத்திக்கொள்வதாகவும் தோன்றுகிறது. இந்த வளர்ச்சி, மாயைக்கும் உண்மைக்கும் இடையில் இருக்கிறது. அதாவது, தனியாக பெண்கள் தனித்துவம் பெற்றிருக்கிறார்கள். ஒரு குடும்பமாய் இருக்கிறார்களா என்றால் ஒரு தயக்கம் வரத்தான் செய்கிறது.

இந்தப் புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும் என்றால், இன்னும் அந்தக் கட்டு முழுமையாக விலக்கப்படவில்லை. ஒரு கையில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, வேண்டும்போது அதை இழுத்துக்கொள்வது போல, இன்றும் குடும்பத்தில் சிக்கிக்கொண்டு, இலக்கை அடையும் பெண்கள் ஏராளம்.

இந்தப் புத்தகத்தில் மொத்தம் 20 சக்திகள் பற்றிய வாழ்வியல். இதில் பலரின் வாழ்வியல் கண்ணீரை வரவழைத்தது. எம். எஸ். சுப்புலட்சுமி, ராமாபாய், மிருணாளினி சாராபாய், வி. சாந்தா, சாவித்திரி பாய் பூலே, ஆர். சூடாமணி, சுதா மூர்த்தி, தமிழிசை சௌந்தராஜன் என்று அனைவரின் வாழ்வியலிலும் நினைத்துப் பார்த்திடாத சாதனைகள் நிறைந்துள்ளன. அவர்களின் வெற்றியை மட்டும் பார்த்த நமக்கு, அந்தக் கரையைத் தொட அவர்கள் எப்படித் தங்களையே மெழுகாக்கிக்கொண்டு பிரகாசித்திருக்கிறார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தின் வெற்றியாகப் பார்ப்பது எழுத்து நடையே. யாருடைய வாழ்வியலாக இருந்தாலும், எதைச் சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து எழுதியிருப்பதும் ஆங்காங்கே இன்றைய நிகழ்வோடு பொருத்தி எழுதியிருக்கும் எழுத்தும் வாசிப்பை சுவாரசியப்படுத்தியிருக்கிறது. ஆளுமைகளின் தேர்வும் அப்படி. ஒன்றிரண்டு பேர் மட்டுமே நமக்குப் பரிச்சயம்.

நான் ரசித்த சில வரிகளை உங்கள் கண்களுக்கு விருந்தாக்குகிறேன்.

“பூவுக்கு மலரத்தான் தெரியும். எப்படி மலர்கிறாய் என்று கேட்டால், எப்படி பதில் சொல்லும்?” என்று எம். எஸ். சுப்புலட்சுமி பற்றி ஒரு நிருபர் கேட்டபோது, அவர் கணவர் சதாசிவம் அளித்த பதில் அத்தனை நெகிழ்வு. இரு ஆத்மாக்கள் பிணைந்த தாம்பத்யம் கண்களில் தெரிந்தது.

சாவித்ரி பாய் பூலே அவர்கள் கல்வி கற்றுத்தரச் சென்ற இடத்தில் சாணத்தையும் சேற்றையும் வாரி இறைக்கும்போது, வழியில் அழுக்குச் சேலை அணிந்துகொண்டு பாட சாலைக்குச் சென்று, அங்கே சென்றதும் வேறு சேலை மாற்றிக்கொண்டது, காந்தியடிகளை மிஞ்சிய அகிம்சை கண்களில் நிழலாடியது. இது நடந்தது 150 வருடங்களுக்கு முன்பு என்றால் நம்பமுடியவில்லை.

ராமாபாய் அம்பேத்கர் தனது கணவனின் லட்சியம் பாதித்திடாமல் இருக்க, அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பறிக்கொடுத்தும் அதையும் தாங்கிக்கொண்ட தாய்மையைக் கண்டபோது, இன்றைய யுவதிகளுக்கு இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. அம்பேத்கர் மனைவிக்கு எழுதிய கடிதம், நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதத்தைவிடக் கொண்டாடியிருக்கவேண்டிய கடிதமாகத் தெரிந்தது.

இந்தப் புத்தகத்தின் வாயிலாக, அன்பின் ஆழம் எப்படி இருக்க வேண்டும், தன்னோடு இருப்பவர்களின் இலட்சியத்தில் எப்படித் துணை நிற்க வேண்டும், எந்தச் சூழலிலும் இலட்சியம் மாறாத உறுதி எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்திடும் வாழ்வியல், உணர்வுகள் நிறைந்த வேதியியல்.

இந்தப் புத்தகத்தை யார் படித்தாலும் மாற்றம் வரும். ஒரு புத்தகம் தனி மனிதனுக்கு மாற்றத்தைத் தருகிறது என்றால், அது சமூகத்தின் மாற்றமாகக் கண்டிப்பாக உருப்பெறும். வாழ்த்துகள் நஸீமா ரசாக் அவர்களே.

  • சிவமணி

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *