பாரதி நினைவு நாள் மகாகவி நாளாகக் கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்குப் பாராட்டுகள். ஆனால், பாரதியின் நினைவுநாள் செப்டம்பர் 11 என்பதுதான் பிழையாக உள்ளது.

பாரதி இறந்தது செப்டம்பர் 11 நள்ளிரவு 12 முடிந்து, செப்டம்பர் 12 அன்று ஒன்றரை மணிக்கு. சென்னை மாநகராட்சிப் பதிவேட்டிலும் செப்டம்பர் 12 என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அக்கால வழக்கப்படி காலை ஆறு மணி வரையிலான நேரத்தை முந்தைய தேதியில் குறிப்பிட்டு சிலர் பேச்சு வழக்கில் சொன்னதே வரலாறாக நிலைத்துவிட்டது. அனைத்திந்திய வானொலி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி உள்ளிட்டவை இன்றளவும் செப்டம்பர் 11 தேதியிலேயே பாரதி நினைவு நாள் நிகழ்வுகளை ஒலி/ஒளிபரப்புகின்றன. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பிற மாநிலங்களிலும் பாரதி சிலையில் நினைவுநாள் தவறாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்தக் குழப்பத்தைச் சரி செய்யக்கோரி தமிழறிஞர்கள் பலர் குரல் எழுப்பி வந்துள்ளனர். காரைக்காலைச் சேர்ந்த பேராசிரியர் ச. சுப்புரெத்தினம் எடுத்த முயற்சியின் பலனாக, எட்டயபுரம் பாரதி நினைவு மண்டபத்தில் உள்ள கல்வெட்டில், 2014 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், பாரதியின் நினைவு நாள் செப்டம்பர் 12 என்று மாற்றம் செய்யப்பட்டது.

மேலும், பேராசிரியரின் முயற்சியால், புதுவை பாரதியார் இல்லத்தில் அவரது இறப்புச் சான்றிதழ் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவர் பாரதியின் நினைவுநாள் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர, செப்டம்பர் 12 என்பதை தமிழ்நாடு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரி வருகிறார்.

பாரதியின் இறப்புச் சான்றிதழ்

இந்தச் சூழலில், தமிழக அரசே பாரதி நினைவுநாளை செப்டம்பர் 11 என்று அறிவித்துள்ளது வரலாற்றுப் பிழையை அதிகாரபூர்வமாக ஆக்குவதாக உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக மகாகவி நாள் செப்டம்பர் 12 அன்று கொண்டாடப்படும் என அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் குழப்பம் முடிவுக்கு வரும்.


Comment (1)


பானுரேகா
பானுரேகா
September 10, 2021

புதிய தகவல் .நன்றி🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *