மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்

திரை விமர்சனம்

எப்போது வரும், எப்படி வரும் என விளையாட்டுக காட்டும் மரணத்தை, அறியாத நிலையில் அதன் நினைப்பில் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், அந்த மரணத்தையே வலிந்து எதிர்கொள்ளும் ஒருவனின் கதைதான், லைம் ஹெம்ஸ்வொர்த் நடித்து, நிக் சன்தோரா எழுதி, ஃபில் ஆபிரகாம் இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில், தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ‘மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்’ ஆங்கிலத் திரைப்படம்.

டெட்ராய்ட் நகரில் வசிக்கும் முன்னாள் தடகள வீரரும், ரியல் எஸ்டேட் தொழிலில் தோல்வியுற்றுத் துவண்டிருப்பவரும், உயிர்க்கொல்லி நோயால் மரணத்தை எதிர்கொண்டு இருப்பவருமான டாட்ஜ் டைன்ஸ், பிறக்கப் போகும் தனது குழந்தை மற்றும் மனைவியின் எதிர்கால நலனுக்காக, யாருமே துணியாத அபாயகரமான ஒரு திட்டத்திற்கு உடன்படுகிறார். அதன் அடுத்தடுத்த நிகழ்வுகளும், முடிவுமே இப்படத்தின் மொத்தக் கதை.

இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தின் முப்பதாவது நிமிடத்தில், கதை நாயகன் டாட்ஜ், தன்னைத் துரத்தும் மரணத்திலிருந்து தப்பிக்க ஓடத் தொடங்கிய நிமிடம் முதல், படமும் படுவேகமாக ஓட்டமெடுக்கிறது. குலை நடுங்க வைக்கும் ஓட்டத்தில், அவனோடு நம்மையும் இழுத்துக் கொண்டே ஓடுகிறான்.

Promo material

விரக்தி, கோபம், பாசம்,நட்பு,வருத்தம், கண்களில் மரண பயம் என, பல்வேறு முகபாவ வெளிப்பாடுகளுடன் லைம் ஹெம்ஸ்வொர்த் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் மைல்ஸ் செல்லர் (கிறிஸ்டோபர் வால்ட்ஸ்), மனைவி வால் (சாரா கார்டன்), நண்பன் ரோஜர் (ஜாக் செர்ரி), கண்காணிப்பாளர் கானல் (ஆரன் பூளே), வேட்டையாளர் நிக்சன் (கிரீஸ் வெப்ஸ்டர்), ரீகன் (பில்லி புர்க்), கார்ட்டர் (ஜிம்மி அக்கின்போலா), எல்பிஜே (பேட்ரிக் காரோ), கென்னடி (நட்டாஷா லியோ போர்டிஸோ) ஆகியோர் அவரவர்களுக்குரிய பாத்திரப் படைப்புக்கு நேர்மையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

தனது உடல்நிலை பற்றி உண்மை தெரிந்த வினாடியில் டாட்ஜ் நிம்மதி பெற்றாலும், தான் ஏமாற்றப்பட்டதையும், பேரபாயத்தில் சிக்க வைக்கப்பட்டதையும் உணர்ந்து கொதித்து வெடிக்கும்போது, “எல்லாம் உனக்கு ஹெல்ப் பண்ணத்தான். நீ செத்துகிட்டுதானே இருந்தே, உன்கிட்ட பணம் இல்ல, காரியர் இல்ல, ஃப்யூச்சர் இல்ல, நீ சந்தோஷமாக வாழ்ந்து எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? நான்தான் உனக்கு புது வாழ்க்கைய தந்திருக்கேன்” என்று மைல்ஸ் செல்லர் கூலாகச் சொல்வதும், தன்னைக் காப்பாற்றும் நண்பனை டார்ஜ் புரிந்து கொள்ளும் தருணமும், எந்தப் படுமோசமான சூழ்நிலைகளிலும் எல்லோருமே விதிகளைக் கடுமையாகப் பின்பற்றும் நிகழ்வுகளும், பதைபதைக்க வைக்கும் கிளைமாக்ஸ்சில், ஹன்டர் நிக்சன் “சூரியன் வந்திருச்சி, கேம் முடிஞ்சு போச்சு. நல்ல விளையாடின, தேங்க்ஸ். எனக்கு ஆட்டத்த காமிச்சிட்டே” என்று ஜென்டிலாக சொல்லிச் செல்வதும் ரசிக்கத்தக்கக் காட்சிகள்.

மேத்யூ ஜே லாய்ட் டின் அற்புதமான ஒளிப்பதிவும், டோடர் கொபகோவ்வின் அசத்தலான பின்னணி இசையும், வில்லியம்ஸ் டரோ, கெய்ஜர் ஆகியோரின் கச்சிதமான படத்தொகுப்பும் பட இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன.

படத்தின் இறுதிக் காட்சியில், மிகவும் பேராபத்தான விளையாட்டின் மரண பயத்தில் இருந்து நாமே விடுபட்ட உணர்வை ஏற்படுத்தி விடுவதுதான், ‘மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்’ திரில்லரின் வெற்றி.

மதிப்பெண் : 7/10

விமர்சனம்: மது ராஜேந்திரன்


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *