காலத்தால் அழியாத கவி கா. மு. ஷெரீப்

எளிமையான வார்த்தைகளைத் தேடிப்பிடித்து, பாமரனும் புரிந்துகொள்ளும் வண்ணம் பாடல்களை இயற்றுவதில் வல்லமை படைத்த, கதை, வசனகர்த்தா,எழுத்தாளர், கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களது நினைவு தினம் இன்று.

தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்று, சுயம்புக் கவிஞரான ‘காதர்ஷா முகம்மது ஷெரீப்’ என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவர் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீஸ்வரம் என்னும் ஊரில், 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய் முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின. 15ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். ‘தமிழரசுக் கழகத்துடன்’ இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி கா.மு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு முன் தோன்றியவர்.

“தமிழ் முழக்கம்”, “சாட்டை” போன்ற பரபரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காஇயம் 1, அறிவுரைக் கடித நூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் மட்டுமல்லாது, இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார். தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைந்தவர். அவரின் முதல் கவிதை “குடியரசு” ஏட்டில் 1934ஆம் ஆண்டு வெளிவந்தது.

1948இல் அறிஞர் அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்தில், ‘திருநாடே’ என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி, அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளுக்காக வசனமும் பாடலும் எழுதி, திரை உலகுக்குள் மெல்ல நுழைந்தார்.

முதன் முதலாக இவர் 1948இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “மாயாவதி” எனும் படத்திற்குத்தான் பாடல் இயற்றினார். முதல் பாட்டை ஏ.பி.கோமளா எனும் பாடகி பாடினார். அதனைத் தொடர்ந்து இவரது வெற்றிப் பயணம் மிக விரைவாகத் தொடர்ந்தது. பழைய திரைப்பாடல்களில் பல, இன்னும் புதிதுபோல் இருப்பதை இளம் ரசிகர்கள் கூட மறுக்கமாட்டார்கள். “ஏரிக்கரை மேலே… போறவளே பெண் மயிலே….!” என்று கம்பீரமாகவும் காதலுடனும் ஆரம்பிக்கும் ‘முதலாளி’ திரைப்படத்தில் வரும் பாடலை, கிராமப்புறத்தில் உள்ளவர்களெல்லாம் பாடிக்கொண்டு திரிந்த காலம் ஒன்று உண்டு.

“சிட்டுக் குருவி… சிட்டுக் குருவி.. சேதி தெரியுமா? உன்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பலே” என்ற டவுன் பஸ் திரைப்படத்தில் வரும் பாடல், வில்லனுக்குக் கிடைத்த அபூர்வ டூயட்! மக்களைப் பெற்ற மகராசி என்ற திரைப்படத்தில் வரும் “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா… உண்மைக்காதல் மாறிப் போகுமா?” என்ற இனிமையான பாடல், இன்றைக்கும் கூட நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. இந்தப் பாடலில் இருக்கும் இனிமையோடு இன்னோரு ஆச்சரியமும் ஒளிந்திருக்கிறது. தமிழ்சினிமா மூலம் 40 ஆண்டு காலம் ரசிகர்களை மிரட்டிவந்த முதுபெரும் வில்லன் நடிகர். மிகச்சிறந்த அபூர்வக் கலைஞர், எம்.என். நம்பியார் – எம்.என்.ராஜம் இருவரும் சேர்ந்து பாடிய டூயட் பாடல் இது.

“வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா..!”, “பணம் பந்தியேயிலே குணம் குப்பையிலே… இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே..”, “வானில் முழு மதியைக் கண்டேன்.. வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்”, “நான் பெற்ற செல்வம், நலமான செல்வம்..”, “உலவும் தென்றல் காற்றினிலே.. ஓடமிதே… நான் மகிழ ஊஞ்சலாடுதே…”, “வாராய் நீ வராய் போகுமிடம் வெகுதூரமில்லை…”, “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை…” “பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமோ… துயரம் இதுதானா?” போன்ற எண்ணற்ற அழியாப் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களையும் எழுதியவர்.

400-க்கும் மேற்பட்ட வெற்றிபெற்ற திரைப்படப் பாடல்களை எழுதி, திரைத் தமிழுக்கு மாபெரும் பங்களிப்பை செய்திருக்கிறார். இவர் திரைப்படத்திற்காக எழுதிய முதல் பாடல்” அல்லியின் வெண்ணிலா வந்தது போல்” என்று தொடங்கும் பாடல். 1948இல் வெளிவந்த ‘மாயாவதி’ என்ற படத்தில் இடம்பெற்றது. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதிய இவர், பெண் தெய்வம், புது யுகம் ஆகிய திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற, ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலை கவி கா. மு. ஷெரீப் எழுதி இருந்தாலும் அது வேறொரு கவிஞர் பெயரில் வெளியானது. ஆனாலும் இவர் பெருந்தன்மையுடன் “கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது!” என்று குறிப்பிட்டதாக ஜெயகாந்தன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“செங்கோல்” வார ஏட்டில் ஏராளமான தமிழ், தமிழர் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார். ஒளி, சாட்டை, தமிழ் முழக்கம் ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார். (1952-1962) “சிவாஜி” என்ற ஏட்டின் துணை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். திரை உலகத்தோடும், தமிழர் இயக்கங்களோடும், தொடர்பு கொண்டிருந்த அவர், தனது வாழ்வின் பின்னாட்களில் மிகச் சிறந்த ஆன்மீகவாதியாக மாறினார்.

சிந்தை அள்ளும் சீறாப்புராணத்திற்கு மிகச் சிறந்த உரை ஒன்றினை எழுதினார். இறைவனுக்காக வாழ்வதெப்படி?, இஸ்லாமும் ஜீவகாருண்யமும், இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, கிழக்கிலுள்ள பிறைக்கொடி நாடுகள், பயண நூல், ஆகிய இஸ்லாமிய சமயம், வாழ்வியல் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார்.

சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டிருந்த காலத்திலும் அதன் சீரழிவில் சிக்கிக் கொள்ளாதவர். ‘அழைத்தால் வருவோம்; வாய்ப்புக் கொடுத்தால் பாடுவோம்; யாரையும் சார்ந்து வாழ மாட்டோம்; யாரிடமும் எதையும் கேட்க மாட்டோம்’ என்ற கொள்கைப்படி வாழ்ந்தவர் கவி கா.மு.ஷெரீப். கலைஞர் கருணாநிதி அவர்களை அழைத்து வந்து, தான் பணிபுரிந்த மாடர்ன் தியேட்டர்ஸ்-ல் வேலைக்குச் சேர்த்துவிட்டவரும் இவர்தான் என்றும் ஒரு செய்தி உண்டு.

“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி பத்தியம் இருக்கணும். ரசிகர்ளை அவன் புள்ள மாதிரி நேசிச்சு, எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுன்னு ஒரு பொறுப்புணர்ச்சியோடு எழுதணும்” என்ற இவர், தான் சொல்லியபடி வாழ்ந்தும் காட்டினார். 

  • வரோன் ஷர்மிளா


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *