தேநீர் அழைப்பு
ஒரு தேநீரை எப்படிக் குடிப்பது?
தேநீருக்குள்ளிருந்து மேலெழும் ஆவியை
சில நிமிடங்களாவது பார்க்க வேண்டும் ;
என்னுடன் பேசும்
உன் விரகங்களுக்கு
இதே வண்ணம்
இதே சூடுதான் ;
தேநீருக்குள் பிஸ்கட்டை
நனைக்கும் போது
நிகழ்காலத்தின் பெருவெளியில்
நம்மை ஒப்படைத்திருக்க வேண்டும்.
அது நண்பனின் மனைவியை
பொது இடத்தில் அணைப்பது மாதிரி
சடாரென்று விலகி விட வேண்டும் ;
என் ஆசைகளின் நிறம்
உன் கன்னத்திற்கு
சிவப்பாய் கடத்தப்பட்டிருப்பதைப் போல
தேநீரின் சூடு கோப்பைக்கு வந்திருக்கும்;
கோபத்தில் திரும்பியிருக்கும்
முகத்தை மெல்லத் திருப்புவதைப் போல
அந்தக் கோப்பையைக்
கையாள வேண்டும்;
எடுத்த உடனே குடித்துவிடக் கூடாது.
முத்தமிடுவதற்கு முன்
முகத்தை உற்றுப் பார்ப்பதைப் போல்
நீ மொத்த உலகத்தையும்
பார்த்தாக வேண்டும்;
நாசியில் ஏறிய தேநீரின் நறுமணத்தை
மல்லிகையின் நெடியென
உயிருக்குள் பத்திரப்படுத்த வேண்டும்;
முதல் மிடறைக் குடித்த உடனே
பாராட்டி விடக் கூடாது.
அது
முதல் முத்தம் முடிந்த உடனே
பேசுவதற்கு நிகரானது ;
கோப்பையை
அவ்வப்போது கீழே வைக்க வேண்டும்.
‘போடா ‘என்று
தள்ளி விட்டபடியே
சாய்வதைப் போல்
கீழே வைத்திருக்கும் போதும்
விரல்கள் கோப்பையில்
இருக்க வேண்டும்;
யாருடனாவது பேசிக் கொண்டே
தேநீர் பருகும் போது
உன்னை ஒரு கையால் அணைத்தபடியே
அலுவலக வேலைகளை
கணிணியில் பார்ப்பதை
நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்;
தேநீர்ச் சூடு ஆறுவதற்குள்
குடித்து முடித்திருக்க வேண்டும்;
தேநீரைச் சுவைப்பது
ஓட்டப்பந்தயமோ
கலவியோ
அல்ல.
இரண்டுக்கும் இடைப்பட்ட
ஆழமான முத்தம் ;
கோப்பை கையிலிருக்கும் போது
தட்டு காலியாகத்தான்இருக்கும்.
உன்னை மடியில் போட்டிருக்கும் போது
அநாதையாய்ச் சிணுங்கும்
தொலைபேசி அழைப்புகளைப் போல
அதைக் கண்டு கொள்ளக் கூடாது;
எப்போதும் ,
கொஞ்சம் தேநீர்
கோப்பையில்
மீந்திருக்க வேண்டும்.
ஒரு தேநீரின் கடைசி மிடறு
இன்னொரு தேநீரின்
முதல் மிடறுதான்
என்பதை உணர்ந்தாக வேண்டும் ;
ஓர் ஆழமான கலவிக்குப் பிறகு
தலைகோதி விடுவதைப் போல
தேநீர் பருகி முடித்த பிறகும்
சில நொடிகள்
கோப்பையைக்
கையில் வைத்திருக்க வேண்டும்;
நீ நினைப்பது சரிதான்.
யாரையும்
விளையாட்டாகவோ
ஒப்புக்காகவோ
கடமைக்காகவோ
பழக்க தோஷத்திலோ
தேநீர் பருக அழைத்து விடக்கூடாது.
ஒரு தேநீர் அழைப்பு
தேநீரோடு முடிந்து விடுவதில்லை…
- மானசீகன்

Comments (0)