நினைவுகளின் துகள்
ஏதோ பழைய பொருட்களை
போட்டுவைப்பதைப் போல
என் நினைவுகளை
ஒரு மூலையில் போட்டு வைத்திருக்கிறாய்
என்றாவது ஒருநாள்
உனக்குத் தேவையற்றதாகிவிடும் என்கிறாய்
என் நினைவுகளின் மேல்
புதிதாய் ஒரு பட்ரோஸ் செடி பூத்துக் குலுங்கலாம்
அல்லது
மண்தொட்டியில் களை மண்டிக்கிடக்கலாம்
அல்லது
உன் பூச்சாடியில் மரம் முளைத்திருக்கலாம்
ஆனால் நானோ
இந்த நினைவுகளுக்கு
தினமும் சிரட்டையில் தானியம் இடுகிறேன்
புராதனமான பொருட்களைப் போல்
பத்திரப்படுத்துகிறேன்
ஒருநாள் என் கல்லறையைத் தோண்டும்போது
உன் கரங்களில் என் நினைவுகளின் துகள் வந்து விழும்தானே!
- பவித்ரா பாண்டியராஜூ

Comments (0)