பழையாறையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வந்தியத்தேவன் தனது குதிரையின் காலில் அடிப்பட்டிருந்ததை அறிந்தான். அராபியர்கள்போல் அதன் குளம்புகளில் லாடம் அடிக்கலாம் என்று கருதி ஒரு கொல்லுப்பட்டறையை அணுகினான். அந்தக் கொல்லன் மீன் முத்திரை பதிக்கப்பட்ட அபூர்வமான வாள் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தான். அந்த மீன் முத்திரையை அழிக்கும் வேலை அதுவென்று வந்தியத்தேவன் புரிந்துகொண்டான்.

கொல்லன் தான் செய்துகொண்டிருக்கும் பணியை முடித்துவிட்டு லாடம் செய்துதருவதாகக் கூறினான். வந்தியத்தேவன் பெரிதும் களைத்திருந்தபடியால் ஓரமாய்ப் படுத்து உறங்கலானான். உறக்கத்தில் பல்வேறு கனவுகளால் அலைக்கழிக்கப்பட்டு உளறினான். விழித்து எழுந்ததும் கொல்லன் அவன் உறக்கத்தில் உளறியதைச் சொல்லி எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினான்.

மேலும் இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி அங்குவரை பரவியிருப்பதையும் சற்றுமுன் இவ்வழியே சென்ற பழுவேட்டரையரின் பரிவாரங்கள்மூலம் அந்தச் செய்தி வந்துசேர்ந்திருந்தது என்பதையும் கொல்லன்மூலம் அறிந்தான். குளம்புகளில் லாடம் அடித்துக்கொடுத்த கொல்லனுக்கு நன்றி கூறிவிட்டுப் பழையாறை வழியில் செல்ல ஆரம்பித்தான்.

வழியில் ஆபத்துதவி தேவராளன் குறுக்கிட்டு, ரவிதாஸனைப்பற்றியும் இளவரசரைப்பற்றியும் கேட்க, வந்தியத்தேவன் கவனமாகப் பதிலளித்தான். ஒரு மூடுபல்லக்கைச் சுட்டிக்காட்டி அதில் இருக்கும் நந்தினி வந்தியத் தேவனிடம் பேசவிரும்புவதாகக் கூறி அழைத்தான் தேவராளன். இவனும் பல்லக்கின் அருகே செல்ல, சுற்றி மறைந்திருந்த வீரர்கள் அவனைத் தாக்கிப் பல்லக்கிற்குள் கட்டிப்போட்டுப் பல்லக்கைத் தூக்கிச்சென்றனர்.

சுதாரித்துக்கொண்ட வந்தியத்தேவன் பல்லக்குப் பயணத்தின் நோக்கத்தையும் முடிவையும் அறியும்பொருட்டு அமைதியானான். அப்போது பல்லக்கில் ஏதோ மயக்கும் புகை எழவும் அதில் நினைவிழந்தான். கண் விழித்தபோது ஒரு அறையில் இருந்தான். திறந்த கதவின் வழியாக நந்தினி வரவும் இலங்கையில் கண்ட ஊமை ராணியின் தோற்றத்தை ஒப்பிட்டு அவள்தான் ஆடை, ஆபரணங்கள் அணிந்து வந்துவிட்டாளா என்று அதிசயித்தான்.

பொக்கிஷ நிலவறையில் இருந்து அவள்தான் அவனைத் தப்பிக்கவிட்டதாகவும் அவன் ஒரு நன்றிகெட்டவன் எனவும் பல்வேறு வார்த்தைகளால் அவனை வெறுப்பேற்றினாள் நந்தினி. பிறகு  அருள்மொழிவர்மரைப்பற்றிக் கேட்டாள். குந்தவையையும் பூங்குழலியையும் எள்ளி நகையாடினாள். வந்தியத்தேவன் அத்தனைக்கும் அசைந்துகொடுக்காது அவளை அமைதியுறுமாறு வேண்டினான்.

அப்போது வந்தியத்தேவன் முன்பு கொல்லுப்பட்டறையில் கண்ட வாளைக் கைகளில் எடுத்து ஆசையுடன் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள் நந்தினி.  ’ஆடை, ஆபரணங்களால் அலங்கரிந்த என்னுடைய உடம்பிலோ நெஞ்சத்தில் வஞ்சம்கொண்ட கொடியவன் ஒருவனின் விஷநெஞ்சத்திலோ இந்த வாளைச்செலுத்திக் குபுகுபுவெனப் பெருகும் இரத்தத்தைப் பூசிக்கொண்டு சாகவேண்டுமென்பது தெய்வத்தின் ஆக்ஞை’ என்றெல்லாம் ஆவேசம் வந்தவள்போலப் பேசிக்கொண்டுபோனாள். அவளை அமைதிபடுத்தும் வழி தெரியாது, ‘பழுவேட்டரையர் எங்கே?’ என வந்தியத்தேவன் பேச்சைத் திருப்பினான். அவரும் பார்த்திபேந்திரனும் வெறியாட்டக்காரனிடம் இளவரசர்பற்றிக் குறிகேட்கப் போயிருப்பதாகச் சொல்லி, அதற்கும் பெரிதாய்ச் சிரித்து, பெரிய பழுவேட்டரையர், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், ஏன் ஆதித்த கரிகாலனும்கூடத் தன்முன் வர அஞ்சுவதைக் கூறினாள்..

ஆதித்த கரிகாலனை கண்டு தன்னைப்பற்றி  அஞ்சவேண்டாம் என்ற செய்தியைச் சொல்லுமாறு நந்தினி கேட்க வந்தியத்தேவன் மறுத்தான். இளவரசரைப்பற்றிக் கேட்க, அதுவும் தனக்குத் தெரியாது என்று கூறி அவளின் முத்திரை மோதிரத்தைத் திருப்பியளித்தான். அதை அவனையே வைத்துக்கொள்ளச்சொன்னவளிடம் ஊமை ராணி அவள்தானா என்ற சந்தேகத்தை வந்தியத்தேவன் கேட்டான். நந்தினி இல்லையென மறுத்துவிட்டு மறுமுறை அவளைக்கண்டால் தன்னிடம் கொண்டுவந்து சேர்க்குமாறும் இல்லையெனில் தன்னையாவது அவளிடம் கூட்டிச்செல்லுமாறும் கேட்டு அவனைத் தன் ஆட்களிடமிருந்து விடுவித்தாள்.

தன்னைக் கடத்திப்போன இடத்திலிருந்து பழையாறைக்குப் பயணம் செல்லும் வழியில் சென்றவன் இருளடையவும் சிறிதுநேரம் உறங்கிக்கொண்டிருந்தபொழுது இரண்டு காளாமுக வீரசைவர்கள் அவனைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் பேசிக்கொண்டு கடந்துசென்றனர். ஆதித்த கரிகாலனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பேசிக்கொண்டதை மறைந்திருந்து வந்தியத்தேவன் கேட்டபொழுது, விரைவில் தன் எஜமானருடன் சென்றுசேர்ந்துவிடவேண்டுமென நினைத்துக்கொண்டு பழையாறையை நெருங்கினான்.

எப்படி பாதுகாப்பைத் தாண்டி உள்ளே நுழைவது என்று கவலைப்பட்ட பொழுது, மதுராந்தகர் தன் பரிவாரங்களுடன் வருவது தெரிந்தது. செம்பியன் மாதேவி முக்கியமான விஷயம் பேசவருமாறு அனுப்பிய அழைப்பை ஏற்று மதுராந்தகர் கிளம்பியபொழுது அவர் மாமனாரான சின்ன பழுவேட்டரையர் அன்னையிடம் பட்டம் குறித்தும் பேசுமாறு அறிவுறுத்தியிருந்தார். 

வந்தியத்தேவன் வேண்டுமென்றே பரிவாரங்கள் நடுவே நுழைந்து  நிமித்தம் கூறுவோன்போல, கடம்பூரில் மூடு பல்லக்கில் வந்த நிகழ்ச்சியைக்கூறி நடிக்க, மதுராந்தகன் அவனையும் தம்முடன் அழைத்துக்கொண்டு பழையாறை கோட்டைக்குள் நுழைந்தார். சிவ சீல சிரோன்மணியான செம்பியன் மாதேவி திருநாரையூர் நம்பி எனும் சிவக்கொழுந்தை மரியாதையுடன் வரவேற்று சபையில் பாடச்செய்து சிறப்பு செய்துகொண்டிருந்தார்.

மதுராந்தகருக்கு அதையெல்லாம் காணக்காண எரிச்சலாய் இருந்தது.  தனியிடத்தில் வந்து வந்தியத்தேவனை நிமித்தம் சொல்லுமாறு கேட்க, அவன் ஆ..ஊ எனக் கத்திக்கொண்டு நடித்தான். பின் அவர் பட்டம்சூட்ட ஒரு பெண் தலைவிரிக்கோலத்தில் தடையாக இருப்பதாக இட்டுக் கட்டினான். பின் தலைவலியால் துடிப்பதாகக் கூறி நகர்வலம் போய்விட்டு வருவதாகச் சொல்லி மாளிகையிலிருந்து வெளியேறினான். மதுராந்தகரை அவரது அன்னை அழைப்பதாகச் செய்தி வரவும் ஆத்திரத்துடன் கிளம்பிச்சென்றார்.

கோடியக்கரையில் வந்தியத்தேவனுடன் மூலிகை பறிக்க வந்துவிட்டு, பின்பு பழுவேட்டயர்களிடம் காட்டிக்கொடுத்த வைத்தியர் மகன் பினாகபாணியிடம், வந்தியத்தேவன் பழையாறைக்கு வந்தால் தன்னிடம் தகவல் சொல்லுமாறு நந்தினி சொல்லியிருந்தாள். அதனை ஏற்றுக் காத்திருந்தவன் வெளியேவந்த வந்தியத்தேவனைக் கண்டான்.

அப்போது மக்களிடம் குற்றவாளி, ஒற்றன் என்றெல்லாம் கூறி வந்தியத்தேவனை மாட்டிவிட, அங்குவந்த ஆழ்வார்க்கடியான் அவனை சாமர்த்தியமாகத் தப்பிக்கவைத்தான். பின்பு குந்தவையைச் சந்திக்க அனுப்பிவைத்தான்.

இளவரசரைக் கடல்கொண்ட துக்கச் செய்தியை அப்போது தூதர்கள் கொண்டுவந்திருந்தனர். செம்பியன் மாதேவி மதுராந்தகரிடம், தன் கணவர் கண்டராதித்தருக்கு மண்ணாளும் ஆசை இல்லாததோடு, சுந்தரசோழரின் பரம்பரையே தனக்குப்பின் ஆளவேண்டுமென்றும், அதற்குத் தன் வாரிசு தடையாக இருக்கக்கூடாது என்றும் வாக்குப் பெற்றுக்கொண்டு சிவபதம் அடைந்ததாகக்கூறி, மதுராந்தகர் தந்தையின் விருப்பம்போலவே நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். மதுராந்தகர் பொறுமை இழந்து செம்பியன் மாதேவியைக் கண்டபடி ஏசினார். ஆத்திரத்தில் கழுத்திலிருக்கும் உருத்திராட்ச மாலையைக் கழற்றியெறிய முயல, கழுத்தைவிட்டு அது நகரவில்லை.

தன் மகன் பட்டத்தை அடையத் தடையாக இருக்கும் நீயெல்லாம் ஒரு தாயா?  என்றெல்லாம் கேட்க, தன் மகன் உயிருடன் இருப்பதும் தனக்கு முக்கியம் என செம்பியன் மாதேவி விளக்க, அவன் கோபம் சற்றுத் தணிந்தது. தனக்குப் பல சிற்றரசர்கள் உதவுவார்கள் என்றெல்லாம் சொல்லி தாயைச் சமாதானப்படுத்த தொடங்கினான். அவர்களையெல்லாம் நம்புவதில் பயனில்லை என்று பெரிய பிராட்டி அறிவுரை சொல்லத்தொடங்கியபொழுது அரண்மனை வாசலில் பெரும் ஓலமும் சாபக்குரல்களும் கேள்விக் குரல்களும் பயங்கரப் பேரொலியாக கேட்டன. மதுராந்தகரை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு செம்பியன் மாதேவி மாடத்தைநோக்கி விரைந்தார்.

வந்தியத்தேவன் ஓடத்தில் குந்தவையைச் சந்தித்தான். சில நொடிகள் பேச்சிழந்து நின்றபிறகு நடந்தவை அனைத்தும் சொல்லும்படி குந்தவை கேட்க, எல்லாவற்றையும் சொல்லலானான். இளவரசருக்குக் கடும் சுரம் ஏற்பட்டதையும் சேந்தன் அமுதனும், பூங்குழலியும் சூடாமணி விஹாரத்துக்கு அழைத்து சென்றதையும் கூறிக்கொண்டிருந்தபொழுது வானதி தோட்டத்திலிருந்து ஓடிவந்து தண்ணீருக்குள் விழுந்தாள். இளவரசர் இறந்துவிட்டதாக நினைத்து வானதி தன் உயிரையும் விட்டுவிட வேண்டுமென நீரில் பாய்ந்திருந்தாள். அவளைக் காப்பாற்றி, குந்தவை தன் மடியில் வைத்து மயக்கத்தைத் தெளியவைத்துக் கொண்டிருந்தபொழுது வந்தியத்தேவன் பூங்குழலியின் மீதான இளவரசரின் எண்ணம் குறித்தும் பூங்குழலி இளவரசருக்காகத் தன்னுயிரையும் பணயம் வைப்பாள் என்பதையும் கூற, குந்தவை ஆத்திரமுற்றாள்.

மயக்கம் தெளிந்துவிட்ட வானதியும் இந்தச் செய்தியைக்கேட்டு, ‘இளவரசர் உயிருடன் இருக்கிறார்’ என்ற ஆறுதலையும் ‘பூங்குழலியை விரும்புகிறார்’ என்ற துயரத்தையும் ஒருசேர அடைந்தாள்.

வந்தியத்தேவன் ஊமை ராணியைப்பற்றிக்கூற குந்தவை பரபரப்படைந்தாள். நந்தினிக்கும் அவருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமையைப்பற்றிக் கூறவும் நந்தினி தன் தமக்கையென்று முன்னமே தனக்குச் சந்தேகம் இருந்ததையும் கூறி வருந்தினாள். ஓடக்காரப் பெண்ணான பூங்குழலியை இளவரசர் மணக்கமுடியாது என குந்தவையும் குலம், கோத்திரமெல்லாம் அந்தப் பெண்ணின் அன்புக்கு முன்னால் ஒன்றுமில்லை என வந்தியத்தேவனும் நடத்திய வாக்குவாதத்தில் வானதி மயக்கம் பூரணமாகத் தெளிந்து எழுந்தாள்.

ஆழ்வார்க்கடியான் விரைந்து வந்து, ‘இளவரசர் கடலில் மூழ்கிவிட்டதுபற்றி ஆத்திரமாயிருப்பதாகவும் வந்து சமாதானம் செய்யும்படியும் குந்தவையை அழைத்தான். குந்தவையும் செம்பியன் மாதேவியும் மாடத்தில் வந்து நின்றவுடன் கூட்டத்தில் அனைவரும் அவர்களை நோக்கி முறையிட்டனர். பழுவேட்டரையர் சூழ்ச்சியால்தான் ஏதோ நடந்துவிட்டது என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, குழப்பமும் ஆத்திரமும் மிகுந்து அந்த இடம் களேபரமாகக் காணப்பட்டது. அப்போது குந்தவை குறிப்புணர்த்த, ஆழ்வார்க்கடியான் பெரிய குரலில், இளவரசருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று நிமித்தக்காரன் சொல்வதாகக் கூற, நிமித்தக்காரனாக வேடம் பூண்டிருந்த வந்தியத்தேவனும் அதை  ஆமோதித்தான். வைத்தியர் மகன் அவனைப் பார்த்து ஒற்றன் எனக் கத்த, ஆத்திரமுற்று மேலிருந்து குதித்து வந்தியத்தேவன் அவனோடு சண்டையிடத் தொடங்கினான்.

அதற்குள் அநிருத்த பிரும்மராயர் அங்கே வருகைதந்து அவர்கள் இருவரையும் கைதுசெய்யுமாறு ஆணையிட்டுவிட்டு கூட்டத்தையும் அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு செம்பியன் மாதேவியைத் தனியே சந்தித்தார். சுந்தர சோழச் சக்கரவர்த்தி மதுராந்தகருக்குப் பட்டம் சூட்ட இருப்பதாகவும் அதற்குச் சம்மதம் தருமாறும் கேட்க, செம்பியன் மாதேவி தன் கணவரின் ஆணையை மீறமாட்டேன் என்று மறுத்தார்.  அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக முதன்மந்திரி சொல்ல வர, மதுராந்தகர் உள்ளே வரவே அதைச் சொல்லாமலேயே விடைபெற்றார். மதுராந்தகர் அநிருத்தரை தன் முக்கிய எதிரியாக கருதுவதாகத் தன் தாயாரிடம் கூறினான்.

குந்தவையைச் சந்தித்த அநிருத்தர், நாட்டின் நிலைமையை எடுத்துக்கூறினார். அவர் அனைத்தையும் அறிந்து வைத்திருந்ததைத் தெரிந்துகொண்டு வியந்துவிட்டு வந்தியத்தேவனை விடுவிக்கும்படி கோரினாள். ஆனால், வந்தியத்தேவன் நந்தினியைச் சந்தித்ததை அநிருத்தர் சொல்லி அவன் நந்தினியின் ஒற்றனாய் இருக்கலாம் எனச் சந்தேகப்பட, குந்தவை மறுத்தாலும் அவன் மறைத்ததை நினைத்துக் குழம்பினாள்.

இளையராணியின் சூழ்ச்சிக்குப் பழுவேட்டரையர்கள் மட்டுமல்லாது, மதுராந்தகர், கந்தன்மாறன் மற்றும் பார்த்திபேந்திரன் அனைவரும் மயங்கி அவள் பேச்சுக்கு ஆடுவதையும் ஆதித்த கரிகாலனைக் கடம்பூருக்கு வரவழைத்து சம்புவரையர் மகள் மணிமேகலையை திருமணம் செய்து கொடுக்கத் திட்டம் தீட்டியுள்ளதையும் கூறினார்.

ஆனால் அது வெளிப்பேச்சுதான் எனவும், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடன் அவளுக்குத் தொடர்பிருப்பதால் இதன் பின்னால் வேறு சூழ்ச்சி இருக்கலாம் என்று கூற, குந்தவை பயந்தாள்.

அநிருத்தர் வந்தியத்தேவனைத் தான் விடுவிப்பதாகவும், அவன் உடனே காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வரவிடாமல் தடுக்குமாறும், தடுக்க முடியாது போனால் நிழல்போல ஆதித்தரைப் பிரியாமல் காக்குமாறும் ஆணையிடச் சொல்லி குந்தவையிடம் சொல்லி முடித்தார்.

வந்தியத்தேவன் பக்குவமற்று நடந்து கொள்வதால் ஆழ்வார்க்கடியானையும் உடன் அனுப்புவதாக முடிவெடுத்தனர். நடுவே வந்த வானதி பிடிவாதமாகக் கொடும்பாளூர் போவதாகக் கூற தடுக்க முயன்று முடியாமல் போக, குந்தவை அவளுக்கு விடை கொடுத்தாள்.

தொடரும்.

  • சவிதா

சவிதா

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *