காட்சி 3

காலமும் களமும் : அதே நாள்; அதே இடம்.

பாத்திரங்கள்: சங்கர கிருஷ்ணன் மற்றும் சீடர்.

(மேடையின் ஒருபகுதி இருளாகவும் மறுபகுதி ஒளியிலும் இருக்கிறது. இருளான பகுதியில் ஓம்காரின் அறை உள்ளது. ஒளிவிழும் பகுதியில் சங்கர கிருஷ்ணன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்)

சங்கர கிருஷ்ணன் : “ஐயா, ஆசிரமம் எவ்வாறு நடக்கிறது? பொருள் உதவி யார் செய்கிறார்கள்.?”

சீடர் : “சுவாமிஜியைத் தெரிந்த வடநாட்டு நண்பர்களும் இங்கேயே இருக்கும் சில பெரிய மனிதர்களும் தனவந்தர்களும் உதவி செய்கிறார்கள். சுவாமிஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வரும் பொது ஜனங்களும் உதவுகிறார்கள். இந்தப்பக்கம் உள்ள ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் உதவி பண்றாங்க..”

சங்கர கிருஷ்ணன் : “நல்லது ஐயா, சுவாமிஜி பற்றி உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்களேன்..”

சீடர் : “ஐயா, நான் இங்கு வந்து சிலகாலம்தான் ஆகிறது. எனக்கு சீர்காழி. சுவாமிகளின் ஊர்க்காரன்தான். சுவாமிஜியின் பிரசங்கங்கள் இங்கு வெகு சகஜம். வடநாட்டு பாஷையிலும் தெலுங்கு பாஷையிலும் இவரைப் பத்தியும் இவரோட பிரசங்கங்களையும் போட்டிருக்கிறார்கள். இவர் பெரிய புரட்சிக்காரர் என்பதெல்லாம் இங்கே உள்ளவர்களுக்கு அதிகம் தெரியாது. இவரும், தனது பழைய செய்திகளை யாருக்கும் சொல்வதும் இல்லை. எனக்குக்கூட கொஞ்சமாகத்தான் தெரியும்..”

(சங்கர கிருஷ்ணன் சாப்பிட்டு முடிக்கிறார்)

சீடர் : “தட்டத்திலேயே கை அலம்பிக்கொள்ளுங்கள். ஓய்வறை இருக்கிறது. சற்று ஓய்வெடுங்கள். சுவாமிஜியை மாலை சந்திக்கலாம். நான் வந்து அழைத்துக்கொள்கிறேன்.”

சங்கர கிருஷ்ணன் : “ஓய்வு தேவையில்லை. ஆசிரமப் பணிகளைப் பார்க்கிறேனே..”

சீடர் : சரி, வாருங்கள், சுற்றிக் காட்டுகிறேன்.

(இருவரும் அறையிலிருந்து வெளியேறுகிறார்கள். சாப்பாட்டு அறையில் ஒளி மறைந்து ஓம்கார் சுவாமிகளின் அறைப் பகுதியில் ஒளி வருகிறது. ஓம்கார் சுவாமிகள் அமர்ந்திருக்கிறார். சங்கர கிருஷ்ணன் உள்ளே வருகிறார்)

நேரம் : மாலை 4 மணி
பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன்.

ஓம்கார் சுவாமிகள் : “வாரும் சங்கர கிருஷ்ணன். அமருங்கள். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தீங்களா?”

சங்கர கிருஷ்ணன் : “ஆமாம் சுவாமி.. கொஞ்சம் ஆச்சரியமாவும் இருந்தது.”

ஓம்கார் சுவாமிகள் : “என்ன ஆச்சர்யம் தம்பி?”

சங்கர கிருஷ்ணன் : “இந்த 85 வயசிலேயும் ஆசிரம வேலைகளை நீங்களும் செய்றீங்க.. அப்புறம்…”

ஓம்கார் சுவாமிகள் : “அப்புறம் என்ன? சொல்லுங்கள்..”

சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமணர் என்பதால் ஆசிரமத்தில் எல்லாரும் பிராமணர்களாக இருப்பாங்களோன்னு நெனைச்சுட்டேன். ஆனா ஹரிஜன்கள் தொண்டர்களா இருக்காங்க. சமையல் வரைக்கும் அவங்க இருக்கறதும் ஆசிரமக் கோவில் பணிகள்ளே அவங்க சுதந்திரமா வேலை செய்யறதும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது..”

ஓம்கார் சுவாமிகள் : “ஆமாம் ஒரு பன்னிரண்டு தாழ்த்தப்பட்ட குடும்பத்தச் சேர்ந்தவங்க இந்த ஆசிரமப் பணிகள்ள இருக்காங்க. எல்லா சாதிக்காரங்களும் இங்கே வந்து வேலை செய்யலாம். ஆசிரமத்துல சாதி வித்தியாசமே தெரியாது. இப்ப உங்க கண்ணுல பட்டுருக்கு. கண்ணுலயா.. காதுலயா.?” (கேட்டுவிட்டுக் குழந்தைபோலச் சிரிக்கிறார்.)

சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி, நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் உங்களிடம் சந்தேகம் ஒன்று கேட்கலாமா?”

ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக்கொண்டே) “இந்தப் பீடிகையிலேயே நீங்கள் கேட்கப் போவதென்ன என்று தெரிகிறது. கேளுங்கோ..”

சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமண பாஷையை விலக்கிப் பேசுவது வியப்பளிக்கிறது..”

ஓம்கார் சுவாமிகள் : (மீண்டும் வெடிச் சிரிப்புடன்) “40 வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள். நான் இப்போது பிரசங்கி அல்லவா? தமிழில் பேசுகையில் இன்னும் முழுதாக மாறிவிட்டதுன்னு சொல்லமுடியாது சங்கர கிருஷ்ணன். நீங்கள் கேட்க வந்ததைக் கேளுங்கோ.”

சங்கர கிருஷ்ணன் : “அறுபது வருசத்திற்கு முன்னே நீங்கள் பெரிய புரட்சிக்காரர். இப்போ சாது. இந்த சந்நியாச வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்திப் போனீர்கள்..?”

ஓம்கார் சுவாமிகள் : “இது உங்கள் கேள்வியாக இருக்கமுடியாது. கேட்க வந்ததை நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.”

சங்கர கிருஷ்ணன் : “அதிபயங்கரவாதத்தின் மறுபக்கம் கோழைத்தனம் என்பார்கள். அதுபோல, இது தப்பித்தலா என்று தோன்றுகிறது சுவாமிஜி..”

(ஓம்கார் சுவாமிகள் மௌனமாகிறார். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதை அடக்கிக்கொள்வது போன்ற மௌனம்)

ஓம்கார் சுவாமிகள் : (கொஞ்சம் உஷ்ணமாகவே) “என்ன சொன்னீர்? கோழைத்தனம் என்றா? தப்பித்தல் என்றா? நான் கோழையில்லை தம்பி; தப்பிக்கவும் இல்லை. நான் அதிபயங்கரவாதியெல்லாம் கிடையாது. அந்த வார்த்தையே தப்பு. என்னால் தொண்டு செய்யாமல் சோம்பி இருக்க முடியாது. இளமையில் குடும்பம், கல்யாணம், சம்பாத்தியம் எல்லாமே விட்டுட்டு வந்தது நாட்டுத் தொண்டுக்காகத்தான்.”

(சற்றே நிதானிக்கிறார். இப்போது குரல் சாந்தமடைகிறது)

“தம்பி, என் இருத்தல் அவசியமல்லவா? 1930இல் விடுதலையானேன். நாடு மாறியிருந்தது. வெளியே வந்தபோது உப்புச் சத்தியாக்கிரகம் உச்சத்தில் இருந்தது. தேசபக்தி என்பது மாறியிருந்தது. போர்க்களம் மாறியிருந்தது. புதிய களத்தில், புதிய பாதையில், நான் பொருந்திப் போகவில்லை. நான் அறிந்திராத புதிய தேசத் தொண்டர்களோடு என் சேர்க்கை அமையமுடியாது என்ற நிலை. அதுபோக, இந்தச் சாது மனோநிலைக்கு நான் சிறையிலேயே வந்திருந்தேன். அதனால் என் இருப்புக்கும் நாட்டுப் பணியைத் தொடர்ந்து செய்யவும் இந்தப் புதிய பிறப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

பலாத்காரப் புரட்சியில் நம்பிக்கை வைத்திருந்தவனாக என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நான் கடந்து வந்த பாதையில் வங்கப் புரட்சியாளர்கள் இருந்தார்கள்.. பாரதியார் இருந்தார்.. சிதம்பரம் பிள்ளை இருந்தார்.. அரவிந்தர் இருந்தார்.. வ.வே.சு.அய்யர் இருந்தார்.. சிங்காரவேலர் இருந்தார்.. கம்யூனிஸ்ட் பிரசாரகனாகவும் சிலநாட்கள் இருந்தேன். நான் ஒரு கலவை மனிதன். இந்தச் சாது வாழ்க்கைகூட முழுமையில்லை என்றே உணர்கிறேன்.”

சங்கர கிருஷ்ணன் : “மன்னிக்க வேண்டும் சுவாமிஜி.. உங்களை சினப்படுத்திவிட்டேன்..”

ஓம்கார் சுவாமிகள் : “பரவாயில்லை தம்பி.. இப்பவும், என் பழைய தோழன் சங்கர கிருஷ்ணன் கேட்டதாக எடுத்துக்கொள்கிறேன்..”

சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி.. காலையில் ஆஷ் கலெக்டர் கொலை பற்றிச் சொல்லத் தொடங்கினீர்கள்.. தொடர்ந்து சொல்லவேணும்..”

ஓம்கார் சுவாமிகள் : “ஆஷ் கொலை.. அது ஒரு குறைப் பிரசவம்.. ஆனாலும் அது, வெள்ளைக்காரர்களை ஒரு உலுக்கு உலுக்கியது. இந்தியாவில் மட்டுமல்ல; இங்கிலாந்தில்கூட அதன் எதிரொலிகள் இருந்தன. அந்தக் கொலையை வாஞ்சி ஐயர் செய்தபோது நான் காசியில் இருந்தேன் தெரியுமா தம்பி..? ஆனால், என்னைத்தான் முதல் குற்றவாளியா ஆக்கினாங்க.”

சங்கர கிருஷ்ணன் : ‘தெரிந்திருக்கிறேன் சுவாமிஜி.. ஆனால் உங்கள் வாக்கு மூலத்தில் நீங்கள் யாரையும் விட்டுக் கொடுக்கவில்லை.. குற்றத்தின் மோடிவிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முயலவில்லை..’

ஓம்கார் சுவாமிகள் : ‘அது எப்படிச் செய்வேன்.. அந்த செயலின் சூத்திரதாரி நானில்லை.. அது வ.வே.சு.ஐயர்.. ஆனால் அந்தத் தோழர்கள் என் வார்ப்புகள்.. கொஞ்சம் அவசரப் பட்டு விட்டார்கள்.. அவர்கள் அவசரத்தின் காரணம் சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கலெக்டர் இழைத்த கொடுமைகள்தான்..

சங்கர கிருஷ்ணன் : “விவரமாகச் சொல்ல வேண்டும்.”

ஓம்கார் சுவாமிகள் : “சொல்கிறேன். அதைச் சிதம்பரம்பிள்ளையிடம் இருந்து தொடங்கவேண்டும். அப்போது, நான் பாரதியாரின் இந்தியா பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்தேன். பாரதியாரைப் பார்க்க வந்த சிதம்பரம்பிள்ளையிடம் பாரதியார் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அது 1907ஆம் வருசமாயிருக்கும்.

(சுவாமிகள் கண்களை மூடி நினைவுகளில் மூழ்குகிறார். ஒளி மங்கித் திரை விழுகிறது.)

  • இரா.கோமதிசங்கர் – திருநெல்வேலி

Comments (6)


ஹமீது சிராஜூதீன்
ஹமீது சிராஜூதீன்
August 17, 2023

சூடு பிடிக்கின்றது. இருந்தாலும் மிக சின்னதாக இருந்து, சீகிரமே முடிந்து, எங்கள் ஆர்வத்தில் தண்ணீர் ஊற்றுகிறீர்கள் சார்….

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 17, 2023

நன்றி ஹமீது.. தொடர் என்றால் நிற்க வேண்டிய இடத்தில் நின்று விடுமே..

Anita Srikanth
Anita Srikanth
August 17, 2023

பாரதியார்.. சிதம்பரம் பிள்ளை இவுங்க கூட நட்பா இருந்து போராடி சாமியார் ஆன ஓம்கார ஸ்வாமிகள் ரொம்ப புதுசா தெரியுரார் அண்ணா….
இதுவரை நிஜமாவே இவரை பத்தி எனக்கு தெரியலை…
செமையா இருக்குண்ணா…
சீக்கிரம் திரை விலகி அடுத்த காட்சி ஆரம்பம் ஆகட்டும்…

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 17, 2023

நன்றி அனிதா.. உங்கள் ஆர்வம் உற்சாகமூட்டுகிறது.

உமாமகேஸ்வரி.சு
உமாமகேஸ்வரி.சு
August 22, 2023

ஓம்கார சுவாமிகள் குறித்து இப்போதுதான் அறிந்து கொள்கிறேன்.. ஆசிரமம், சேவை..
சிறப்பு தொடருங்கள்

Vimaladevi

ஓம்கார் என்று எங்கள் வட்டத்தில் ஒரு கடல்சார் நிறுவனம் இருக்கிறது. ஆனால் அப்பெயரில் இப்பொழுது ஒரு புது மனிதரை படிக்கின்றேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *