காட்சி 21

காலம் : 1930ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி
இடம் : ‘தி ஹிந்து’ பத்திரிகை அலுவலகம், சென்னை.
பாத்திரங்கள் : ஹிந்து ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசன், நீலகண்டர்

நீலகண்டர் : நமஸ்காரம். அடியேன் நீலகண்டன்.. நீலகண்ட பிரம்மச்சாரி. என்னை நீங்கள் அறிவீர்கள்.

சீனிவாசன் : நமஸ்காரம் நீலகண்டர். உம்மைத் தெரியுமே.. உமது சுடர் விடும் கண்களில் கனிவும் உமது முகப்பொலிவில் சாந்தமும் இப்போது காண்கிறேன். சிறைவாசம் உம்மை மாற்றியிருக்கிறது போலும். எப்போ வெளியில் வந்தீர்..?

நீலகண்டர் : ஒரு மாதம் ஆகிறது. ரங்கூனிலிருந்து சென்னைக்கு நேற்றுதான் வந்தேன் அண்ணா. வயிற்றுப் பாட்டுக்கு ஒரு வேலை வேண்டி வந்திருக்கேன். உங்கள் பத்திரிகையில் ஏதேனும் வேலை கொடுத்து உதவ வேண்டும்.

சீனிவாசன் : செய்யலாம் நீலகண்டர். உமது எழுத்தாற்றல் பற்றி எனக்குத் தெரியும். இப்போதைக்கு பத்திரிகையில் வியாசங்கள் எழுதுங்கள். தகுந்த சன்மானம் பெறறுக்கொள்ளுங்கள். சிறிது காலத்தில் பத்திரிகையில் வேலை தருகிறேன்.

நீலகண்டர் : சரி அண்ணா, எழுதுகிறேன்.

சீனிவாசன் : எதைப்பற்றி முதலில் எழுதப் போகிறீர்?

நீலகண்டர் : சீக்கிய குருமார்களைப் பற்றி எழுதுகிறேனே..

சீனிவாசன் : பேஷ் பேஷ்.. எழுதுங்கள். முதல் கட்டுரை எப்போது தருவீர்கள்?

நீலகண்டர் : நாளையே தருகிறேன்.

நீலகண்டர் : சபாஷ், நாளை மறுநாள் ஹிந்து வார இதழில் போட்டுவிடலாம்.

(மேடை ஓம்கார் ஆசிரமத்திற்கு மாறுகிறது)

சங்கர கிருஷ்ணன் : சிறை வாழ்க்கை முடிந்ததும் எழுத்தாளரா?

ஓம்கார் சுவாமிகள் : சீனிவாசன் வேலையில் ரொம்ப கெட்டி. வேலை வாங்குவதில் கறார் பேர்வழி. எழுதுகிறேன் என்ற உடனேயே நான் தயார் நிலையில் இருக்கிறேனா என்பதைத் தெரிந்துகொள்வது போலப் பேசினார் பாருங்கள். நாளை மறுநாள் போடவேண்டும் என்பதை எனக்கு விதித்துவிட்டார். உதவியது போலவும் உறுதிப்படுத்தியது போலவுமான பேச்சு.

என் தோற்றத்தில் ஏற்பட்டிருந்த மாற்றமும் பேச்சில் இருந்த நிதானமும் அவருக்கு என்மீது பிடிப்பைத் தந்திருக்க வேண்டும். அவர் பத்திரிகை வேலையில் சூரர். அவரிடம் வேலை பார்க்கத் தொடங்கினேன். அவர் கேட்பதற்கு முன்பு வியாசங்களைக் கொடுத்துவிடுவேன்.

சங்கர கிருஷ்ணன் : முதல் கட்டுரைத் தொடரில் என்ன எழுதினீர்கள்?

ஓம்கார் சுவாமிகள் : முதல் கட்டுரையில் ‘குருநானக்’ பற்றி எழுதினேன். அவர் சொன்னபடியே 1930ஆம் வருசம் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி வெளிவந்தது. தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை ஐந்து கட்டுரைகள் எழுதினேன்.
N.B. என்ற பெயரில் அந்த வியாசங்கள் வந்தன. ‘குருநானக்கின் மதக் கொள்கை’ என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு கட்டுரையை நேயர்கள் விரும்பி ரசித்தார்கள்.
இறுதிக் கட்டுரை, ‘குரு கோவிந்த சிங்’ குறித்து எழுதினேன். என் பழைய புரட்சிகர வாழ்க்கையின் இறுதி போலும், புதிய ஆன்மீகப் பாதையின் ஆரம்பம் போலும் அந்தக் கட்டுரைகள் அமைந்தன.

சங்கர கிருஷ்ணன் : தொடர்ந்து ஆன்மீகக் கட்டுரைகளுக்கே போய்விட்டீர்களா?

ஓம்கார் சுவாமிகள் : அதுதான் இல்லை. கொஞ்சமேனும் லோகாயத விருப்பங்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. இறக்கை முளைத்துப் பறக்கும் முன்பு, கூட்டுக் குஞ்சு போல என் எழுத்து வாழ்க்கை அமைந்தது. எனக்கு மற்றவர்களைக் கவரும் பேச்சாற்றல் இருப்பதை முன்னரே அறிவேன். எழுதவும் முடிகிறது என்பதை அடையாளம் காட்டிய பருவம் அது.

சங்கர கிருஷ்ணன் : ஓ..! வேறென்ன எழுதினீர்கள்?

(மேடை ஹிந்து அலுவலகத்திற்கு மாறுகிறது)

சீனிவாசன் : நீலகண்டர், உமது கட்டுரைகள் ரொம்ப விரும்பப்பட்டன என்பது வாசகர் கடிதங்களால் தெரிய வருகிறது. சந்தோஷம் நீலகண்டர். அடுத்த வேலை என்ன செய்யலாம்? நீராக ஏதும் விருப்பமாய் எழுத ஆசை வைத்திருந்தால் சொல்லும்.

நீலகண்டர் : கம்பளித் தொழில் பற்றி எழுத விரும்புகிறேன்.

சீனிவாசன் : கம்பளித் தொழில் பற்றியா? அதைப்பற்றி உமக்கு என்ன தெரியும் நீலகண்டர்?

நீலகண்டர் : மூல்தான் சிறையில் கம்பளி ரோமம் பிரிக்கும் வேலையில் என்னைப் போட்டார்கள். ரொம்பக் கஷ்டமான வேலை. இந்த வேலை பல தோல் நோய்களை உருவாக்கக் கூடியது. இப்படியான வேலையைத்தான் சுப்ரமணிய சிவாவுக்குக் கொடுத்து, அவருக்குத் தொழுநோய் வந்தது.

இந்த வேலையின் கொடுமையைத் தாண்டி அதன் நுட்பங்களைக் கண்டறிந்தேன். சிறை அலுவர்களிடம் அந்தத் தொழில் பற்றிய நூல்களைக் கேட்டு வாங்கிப் படித்துக்கொண்டேன். இந்தத் தொழில் பற்றிய எனது புரிதல்களை எழுதலாம் என விரும்புகிறேன்.

சீனிவாசன் : சபாஷ் நீலகண்டர், எழுதிக் கொடும். பிரசுரித்து விடலாம்.

(மேடை ஓம்கார் ஆசிரமத்திற்கு மாறுகிறது)

ஓம்கார் சுவாமிகள் : ‘இந்தியாவின் கம்பளிக் கைத்தொழில்’ (Woolen Handcraft in India) என்ற தலைப்பில் அது வெளியாயிற்று.

சங்கர கிருஷ்ணன் : பிரமாதம் சுவாமிஜி.

ஓம்கார் சுவாமிகள் : அப்புறம், ‘நைல் நதியின் சர்ப்பம் கிளியோபாத்ரா’ (Cleopatra, the snake of River Nile) என்றொரு வியாசமும் ஹிண்டுவில் எழுதினேன். அதோடு ஹிண்டுவில் எழுதுவது நின்று போனது. ஆங்கிலத்தில் எழுதியது போதும் என்று என் மனது சொல்லிக்கொண்டது.

இதே காலத்தில், சுதேசமித்திரனிலும் எனக்கு எழுத வாய்ப்புத் தந்தார்கள். சுதேசமித்திரனில் பழைய சரித்திரங்களின் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு நான் எழுதி வந்தேன்.

சங்கர கிருஷ்ணன் : என்னென்ன எழுதினீர்கள் சுவாமிஜி?

ஓம்கார் சுவாமிகள் : நினைவில் இருப்பதைச் சொல்கிறேன்.. லோடி கான் ஒரு பட்டாணி வீரன், கருணாகரத் தொண்டைமான், ராஜா ரணமல், பல்லவர் அரசு, பாணிபட் யுத்தம், கரிகால் சோழர், கண்டி யுத்தம், இப்படிப் பல சரித்திரக் கட்டுரைகள் எழுதினேன்.
சி.நீ. என்ற பெயரிலும் ஸ்ரீமான் என்.கே. அய்யர் என்ற பெயரிலும் அவை பிரசுரமாயின.

சங்கர கிருஷ்ணன் : என்.கே. அய்யர் தெரிகிறது. சி.நீ. என்றால்?

ஓம்கார் சுவாமிகள் : சிவராம கிருஷ்ணன் நீலகண்டன். இவ்வளவோடு என் எழுத்தாளர் வாழ்க்கை முடிந்து போனது. என் பரதேசி வாழ்க்கை என்னை அழைத்தது.. 1931 ஆங்கிலப் புத்தாண்டு தொடங்கியதும் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நான் சென்னையைவிட்டு விலகிப் போனேன். ஓரிடத்தில் நிற்கப் போகிற கடைசி ஓட்டம் அது.

(திரை விழுகிறது)

  • இரா. கோமதிசங்கர் – திருநெல்வெலி

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *