தாயே தாதியோ? இதுவே நீதியோ?
கவிதை
பெண்ணாய்ப் பிறத்தலே பெருமை
மண்ணில் உரைப்பார் உண்மை
உண்மை நிலையோ காண்கில்
உதிரம் உறையும் நெஞ்சில்
பிறந்த போதினில் கள்ளிப்பால்
அருந்தத் தருவார் அன்னையரே
பருவம் மலரும் பாவையரைப்
பருந்தாய் கொத்தியே சிதைப்பார்
விரும்பா உறவாய் விளைந்திடும்
கருவையும் சுமப்பார் கனிவுடனே
விதைத்தே எங்கோஓடி மறைந்தான்
விதையேற்றே விரும்பி வளர்த்தாள்
அப்பனில்லாப் பிள்ளை அழாதவாறே
கையுழைத்துக் கனிந்து வளர்த்தாள்
தன்மடி மெத்தையாக்கித் தாலாட்டியே
தானுறங்காது கனவுகள் வளர்த்தாள்
கல்வியில் சிறக்கக் கட்டெறும்பானாள்
வாழ்வில் உயர்த்தத் தேய்பிறையானாள்
தாயவள் தேய சேயவன் சிறந்தான்
சீர்மிகு பட்டம் சிறந்திட உயர்ந்தான்
தெய்வம் தானென்றறியாத் தாயவள்
தெய்வம் தொழுதே நன்றி உரைத்தாள்
முடிந்தது துயரென்று முகமலர்ந்தாள்
சிறந்தது வாழ்வென அகமகிழ்ந்தாள்
விதியவள் வாழ்வில் வேறு விளைத்தது
மகனவன் மனத்தில் சேறு விளைந்தது
மணந்தான் மாளிகை வாசம் வந்தது
குணந்தான் கெட்டிட நாசம் புகுந்தது
உச்சிமுகர்ந்து அள்ளி அணைத்த தாய்
எட்டி உதைக்கத் துள்ளி விழுந்தனளே
நான்பெத்த ராசா – ஈனமாய்க் குரலில்
துடித்தாள் உதிரம் உதிர்த்தாள் மனத்தில்
இதுதான் நான்பெத்த ராசாவா? ஊறிய
பாலெல்லாம் உதவாது போனதுவோ
மனத்தில் எண்ணங்கள் பலவிதமாயினும்
நான்பெத்த ராசா நல்லா வாழட்டும்
தாயுள்ளம் வாழ்த்தியது வலிகளில்
இருக்கஇடம் தேடியது வீதிகளில்
கையுழைத்துக் கஞ்சிவார்த்த கட்டுடல்
நைந்ததுணியாகித் தள்ளாடும் ஊசலானது
நொந்துடல் வெம்பி மனமதில் குறுகி
தள்ளாடி வந்தாள் தன்மகன் வாசல்
அழுகின்ற குழந்தைக்குத் தாதி தேவை
அணுகுங்கள் உள்ளே சம்பளம் ஆயிரம்
கண்டாள் ஓர் அறிவிப்பு அட்டைதனை
குமுறினாள் காலத்தின் கோலத்தால்
அழுகை மீறிட அடிமனத்தில் ஆயிரம்
நினைவுகள் தாலாட்டத் தாதியோ
நான்பெத்த ராசா நீயழப் பார்த்ததிலை
பேரன் அழநான் பார்த்திருப்பேனோ
கையிலெடுத்து வளர்த்த மகன்முன்னே
கையெடுத்து வணங்கித் தொழுதனளே
எதற்காக மீண்டுவந்தாய் என்முன்னே
தந்தையோ தாயோ எனக்கிலை போ
தாரையாய் வழிந்திடும் விழிகளில்
தாயவள் இழைத்தாள் கெஞ்சலை
நிந்தாய் இறந்தனள் நீ உதைத்தபோதே
நின்முன் நிற்பவள் நின்சேய் தாதியே
அனுபவம் நிறைய உண்டு பிள்ளை வளர்ப்பினில்
ஆசையாய் நான் வளர்த்த ராசா உலகிலுண்டு
தாலாட்டுப் பாடிடுவேன் தளிர்ப்பிஞ்சைத் தாங்கிடுவேன்
நீராட்டித் துடைத்திடுவேன் நெஞ்சினில் தாங்கிடுவேன்
உறங்கிடக் கதை சொல்வேன் உறங்காது பார்த்திருப்பேன்
நிலவினை நான்காட்டி நிலாச்சோறு ஊட்டிடுவேன்
மார்பினில் உதைத்தாலும் மகிழ்வோடு ஏற்றிடுவேன்
நான்பெத்த ராசாவாய்ப் பிள்ளைமுகம் பார்த்திருப்பேன்
பாசத்திற்கு விலையில்லை பணம்காசு வேண்டாமய்யா
தாயவள் இறந்துவிட்டாள் தாதியிவள் மண்டியிட்டாள்!
- வைகறையான்

Usha
September 14, 2023The sentimental lyrics are heart-warming.. feel the mother’s pain..