பள்ளிக் கல்வியில் பஞ்ச கோஷ விகாஸ்
NCFFS ஆபத்து – AISEC உரையாடல் – பகுதி 3
இந்தியாவைப் பொறுத்தவரை உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருப்பதையும் கல்விக்கும் பொருளாதாரத்திற்கும் தொடர்பு உள்ளது என்பதையும் முந்தைய பகுதியில் பார்த்தோம். கல்வியில் நுழைக்கப்படும் காவிச் சிந்தனைகள் குறித்துப் பேராசிரியர் யோகராஜன் விளக்குவதை இந்தப் பகுதியின் காணலாம்.
பிறந்த குழந்தையிலிருந்து 8 வயது வரை என்பது மனிதனுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம். அந்த நேரத்தில்தான் அவர்களது எல்லா Facultyயும் வளர்ச்சியடையும். மூளையின் வளர்ச்சியும் 85% இந்தப் பருவத்தில்தான் வளர்கிறது என்று அறிவியல் கூறுகிறது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழியை நாம் அறிவோம். இந்தப் பருவத்தைத்தான் தேர்வு செய்து, அதில் புதிய கல்விக் கொள்கையைக் புகுத்துகின்றனர் ஆட்சியாளர்கள்.
NEP 2020இல் கூறியிருந்தபடி, முதலில் என்ன சொன்னார்கள் எனில், பிறந்த குழந்தையிலிருந்து 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு NCERTதான் பாடத்திட்டம் தயாரிக்கும், பாடப்புத்தகங்களை உருவாக்கும் என்றனர். அதற்கு அப்போதே நிறைய எதிர்ப்புகள் எழுந்தன. பிறந்த குழந்தைக்கு எப்படி NCERT சிலபஸ் தயாரிக்க முடியும்? எதற்காக syllabus உருவாக்க வேண்டும்? அப்படிப்பட்ட ஒன்றிய அரசின் கல்வித் திட்டம் எதற்கு? போன்ற கேள்விளைப் பலர் எழுப்பியிருந்தனர். ‘இராட்சச அரக்கன் ஹிரண்யன்தான், பிறக்கின்ற குழந்தைக்கே “ஹிரண்யஹசிபு நமஹ” என்று சொல்லித் தருவானாம். அதைப்போல இவர்கள் இந்தக் கல்விக் கொள்கையில் பிறக்கும் குழந்தைக்குப் பாடத்திட்டம் வடிவமைக்கின்றனர்’ என்றுகூடச் சிலர் வேடிக்கையாகச் சொன்னார்கள்.
முதலில் NCERTதான் பாடத்திட்டம் உருவாக்க வேண்டும் என்று சொன்னவர்கள், NCFஇல் சற்றே பின் வாங்கி, பிறந்த குழந்தையிலிருந்து மூன்று வயது வரை Ministry of Women & Children Development அதைச் செய்யட்டும் என்றும் மூன்று முதல் எட்டு வயது வரை NCERT செய்யும் என்று சொல்லியுள்ளனர்.
அவர்களுக்கான Institutional setting, மூன்று முதல் எட்டு வயது. அதில் 3 முதல் 6 வயது வரை முன் மழலையர் (Pre-Primary) கல்வி என்றும் 6 முதல் 8 வயது வரை தொடக்கக் கல்வி (Primary) எனவும் பிரித்துள்ளனர். இதில்தான் எண்ணறிவு, எழுத்தறிவு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகின்றனர். இந்தத் திட்டம்தான் எண்ணும் எழுத்தும் திட்டம் என்று நம் தமிழகத்தில் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது என்பதை இதை நாம் ஊன்றிக் கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். 2025க்குள் ECCEஐ முழுக்க நடைமுறைப்படுத்திவிட வேண்டும் என்பதே அவர்கள் இலட்சியம்.
எந்த Review என்றாலும் 2025க்குப் பிறகுதான் பேச முடியும் என வரைவிலேயே சொல்கின்றனர். இது எந்த மாதிரியான ஜனநாயகம் என்று யாருக்கும் தெரியவில்லை. இவையெல்லாம் பரவலாகச் சுற்றுக்கு விடப்பட்டு, பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டுத்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது ஜனநாயக மாண்பு தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால், சட்டமாக நிறைவேற்றியதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்துதான் இது குறித்துப் பேச வேண்டும் என்கின்றனர்.
ஹார்டுவேர்டு பல்கலைக் கழகத்தின் ஆய்வு ஒன்று, ‘குழந்தைகளின் ஆரம்பக்கட்ட வயதில் கல்விக்காக அதிக செலவு செய்தால் அவர்களால் தேசத்திற்கு அதிக லாபம் உண்டு. ஆகவே சிறு வயதிலேயே குழந்தைகளுக்குச் செலவு செய்ய வேண்டும்’ என்று சொல்கிறது.

முக்கியப் பகுதிக்கு இனி வருவோம்.
Indian Vision of Education has been broad and deep including the idea that education must faster both inner and Enternal development என்கின்றனர். எனில் உலகின் மற்ற நாடுகளில் எல்லாம் Vision வேறு மாதிரியாகவா இருக்கும்? Inner and Ennternal development என்கின்றனர். இவை எல்லாம் என்ன என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
Learning about external World should be in consonance with learning about one’s Inner reality and self என்றும் கூறுகின்றனர். எனில், inner reality என்றால் என்ன? இவையெல்லாம் அறிவியல்பூர்வமான கருத்துகளா? இந்தக் கேள்விகளனைத்தையும் ஆரம்பக் காலங்களில் நமது நண்பர்களிடம் நான் எழுப்பினேன்.
இப்போது அவர்களுக்கான தத்துவக் கோட்பாடுகளைப் பேசுகின்றனர். இவை குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது பஞ்ச கோஷ விகாஸ் என்று ஒன்றைக் குறிப்பிடுகின்றனர். அப்படி ஒன்று எங்கே இருக்கிறது? பஞ்ச கோஷ விகாஸ் என்றால் என்னவென்று தேடிப் பார்த்தால், அது ஒரு உபநிடதம். எல்லா வேதங்களுக்கும் இறுதியில் இருக்கும் பகுதிக்குப் பெயர்தான் உபநிடதம். இது எதனுடைய அடிப்படை என்று கேட்டால், யஜூர் வேதத்தில் இருக்கக்கூடிய இறுதிப் பகுதியிலிருந்து இந்த உபநிடதம் வருகிறது. வருணனுக்கும் அவனது மகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்தான் இந்தப் பகுதி. வருணனுடைய மகன் கேட்கும் கேள்விகளாக, உலகம் என்றால் என்ன? சிந்தனை என்றால் என்ன? நான் யார்? இப்படிக் கேள்வி எழுப்பும்போது வருணன், “நீ தேடிக் கண்டுபிடி“ என்கிறான். மகன் தேடிக் கண்டுபிடித்ததுதான் இந்த பஞ்ச கோஷ விகாஸ்.

இது என்ன சொல்கிறது என்பதை, நாம் அப்படியே மொழி பெயர்த்துச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. உதாரணத்துக்கு, மனிதன் என்று எடுத்துக்கொண்டால், அவன் 5 அடுக்குகளைக் (Layer) கொண்டவன். அதில் கோஷா என்பது Layer அல்லது Sheath (maya என்றால் மயம், வாயு மயம், நீர் மயம் போன்று) என்று இருக்கிறது. முதலில் கோஷா என்ன? அன்ன மய கோஷா, அதாவது மனிதன் அடிப்படையில் உணவால் ஆக்கப்பட்டுள்ளான். சாப்பிடும் சாப்பாடு உணவாக மாறுகிறது.
அடுத்து பிராண மய கோஷா, மனோமய கோஷா, விஞ்ஞான மய கோஷா, ஆனந்த மய கோஷா என்று பட்டியலிடுகின்றனர். இப்படி ஒரு தத்துவத்தைக் கூறுகின்றனர். இதனுடைய முழுக் கருத்து என்னவென்றால், உடல் என்றால் என்ன? மனம் என்றால் என்ன? இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? என்பதை விளக்குவதே இதன் அடிப்படை நோக்கமாக உள்ளது. இந்தப் பண்டைய கால அறிவே NCF இன் பார்வை அல்லது நோக்கம் எனவும் எடுத்துக்கொள்ளலாம். ஒட்டு மொத்தப் பள்ளிக் கல்வியைத் தீர்மானிக்கும் Curriculum frame work, இதை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் எதற்குச் செய்கிறார்கள் என்ற கேள்வியைத்தான் நான் நண்பர்களின் முன்வைக்கிறேன். அவர்கள் சொல்லும் புள்ளி விவரக் கணக்குகளின் அடிப்படையில், யஜூர் வேதம் என்பது, 2300 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அப்போது இருந்த அறிவு மட்டத்துக்கு, அன்று இது மிகப் பெரிய உயர்ந்த தத்துவம் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இன்றைக்கு அறிவியல் ஆய்வுகள் சொல்வது வேறு. உடல் என்றால் என்ன? மனம் என்றால் என்ன? அறிவு என்றால் என்ன? என்று வேறு விதமாக ஆய்வு மேற்கொண்டு, தகவல்கள் தருகிறது. அதன் பின்னர் ஏராளமான அற்புதமான அறிவியல் அறிஞர்கள் பணியாற்றியிருக்கின்றனர்.
குறிப்பாக 16,17ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு உருவான அறிவியல் மாற்றங்களும் அறிவியலின் தத்துவார்த்த அம்சங்களும் மிக மிக மிக உயர்ந்தவை. அதைப்பற்றி நாம் பேசினால் தனியாக ஏராளமானவற்றைப் பேசலாம். அதன்படி, உடல் என்பது எதைக் குறிக்கிறது? வாழ்க்கை (life) என்பது எதைக் குறிக்கிறது? மனம் (mind) என்பது எதைக் குறிக்கிறது? அறிவின் (Knowledge – Structure) அமைப்பு நிலை என்ன? அதை எந்தெந்த வழிகளில் அடைய முடியும்? இதையெல்லாம் நவீன அறிவியல் மிக நுட்பமாக ஆய்வு செய்கிறது. ஆரம்பக் காலகட்ட்த்திலிருந்து இதற்கு யார் யாரெல்லாம் பங்காற்றியிருக்கின்றனர் எனில், கலிலியோ, நியூட்டன், டெக்கார்ட், பேக்கன், தர்க்கத்துக்கு ஜான் ஸ்டூவர்ட் மில் போன்றவர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்தியாவில் எடுத்துக்கொண்டால், இதுபோன்ற விஷயங்களைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தவர்கள் சந்திர ரே, சி.வி.இராமன், மேகனத் சகா, எஸ்.என்.போஸ் ஆகியோரெல்லாம் ஏராளமான ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர்.
நவீன ஆராய்ச்சிகளோடு இவற்றை ஒப்பிடும்போது இவை அவற்றின் பக்கத்தில்கூடப் போக முடியாது. இப்படிப்பட்ட விஷயங்களைப் பொதுவாக யாரெல்லாம் பேசுவார்கள் என்றால், சாமியார் மடங்களில்தான் பேசுவார்கள். நமக்கு என்ன துயரமெனில், இதைத்தான் ஒட்டுமொத்தமாகக் கல்விக் கொள்கையின் உயிர்நாடியாக வைத்துள்ளனர். உதாரணத்துக்கு, கல்வி என்பது ஒரு பெரிய பானையில் திரண்டிருக்கக்கூடிய பால் என்று எடுத்துக்கொண்டால், அதில் ஒரு சொட்டு விஷம்தான் இது. இதை அடிப்படையாக வைத்துதான் அனைத்தும் இருக்கிறது. இதை அவர்கள் எதற்காகக் கூறுகிறார்கள் என்றால், ஒவ்வொரு குழந்தையும் இந்தப் பழம்பெருமை கொண்டிருக்கவேண்டும். ஒவ்வொரு குழந்தையும் நான் பண்டைய இந்தியப் பெருமையின் வாரிசு என்று நம்ப வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால், நவீன இந்தியா என்பது மிகப் பெரிய போராட்டத்தால் உருவானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அத்தனைப் பழமைவாதத்தையும் எதிர்த்து, ஏராளமான பேர் உயிர் நீத்து, கற்பனைக்கும் அப்பாற்பட்ட தியாகங்கள் செய்து, நாம் உருவாக்கியதுதான் நவீன இந்தியா. இந்த நவீன இந்தியாவில் ஏராளமான சிக்கல்கள் இருக்கலாம். ஆனால், நவீன இந்தியா குறைந்தபட்சம், அரசியலமைப்புச் சட்டத்தின்படி பழமைவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பண்டைய இந்திய நிலவுடமைப் பழமைவாதத்தின்படி மக்கள் வர்ணத்தாலும் ஜாதியாலும் என்னென்ன வகையிலோ பிரிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நவீன அரசியல் சட்டம் என்ன சொல்கின்றது என்றால், இந்தியாவில் நாம் அனைவருமே மனிதர்கள்தான். எல்லாருமே சகோதர சகோதரிகள்தான். எல்லாருக்குமே சம உரிமை உண்டு. அம்பேத்கர் எழுதிய நவீன அரசியலமைப்புச் சட்டம், முந்தைய கூற்றை எப்போதோ திருத்தி எழுதிவிட்டது, மெய்யான இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் உணர்வும் இது கிடையாது. ஆனால், இவர்கள் இதைச் சொல்கின்றனர்.
இதில் என்ன சிக்கல் என்றால், இதை எப்போதெல்லாம் நாம் எதிர்க்கிறோமோ, அதாவது பண்டைய இந்தியாவின் கொள்கையைத் தவறு என்று நாம் விளக்கிக்கூறினால், அவர்கள் தரும் உடனடி பதில், நீங்கள் இந்தியாவின் எதிரி, தேச விரோதிகள் என்பதுதான். இப்படி வண்ணம் பூசுபவர்களை என்னவென்று சொல்வது?
கல்வியில், அறிவியலில் மிக அடிப்படையாக இருக்கக்கூடிய “விவாதத்தை” இந்தக் கோட்பாடு அழித்துவிடுகிறது. இந்தக் கோட்பாட்டைத் தர்க்க ரீதியாக எதிர்த்து நாம் வென்றுவிடலாம். இது ஒரு விஷயமே அல்ல. ஆனால் பச்சைக் குழந்தைகளுக்கு இத்தகைய நஞ்சு புகட்டப்பட்டுவிட்டால் எத்தகைய விபரீதம் நேரும்? எனவேதான் அவர்கள் உருவாக்கும் அந்தப் பண்டைய பெருமைவாதத்தைக் குறித்து நாம் கவலைகொள்ள வேண்டியுள்ளது.
இதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம், For example, the physical dimension are developed through a forces on a balanced diet, traditional games and adequate exercise, as well as yogasanas. நாம் கேட்பது, அது என்ன ‘physical dimension?’ Physique என்று குறிப்பிடலாமே! யோகா என்பது அறிவியல்பூர்வமாக இன்னும் பரிசோதிக்கப்படவேண்டிய ஒரு முறை. ஏனெனில் யோகாசனம் மட்டுமே உடலுக்கு மிக ஆரோக்கியமான பயிற்சியில்லை. பல விதமான பயிற்சிகள் உள்ளன. பண்டைய பயிற்சிகள் இருக்கின்றன; நவீன பயிற்சிகளும் இருக்கின்றன.
Learning to breathe in a way that provide necessary oxygen for the entire body is important, it trains the voice and provide directions for increased self-awareness. இது போன்று தொடர்ந்து எழுதியிருக்கின்றனர். குரல் பயிற்சி செய்ய எவ்வளவு நவீன முறைகளை இன்றைய மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர் என்பதை இணையத்தில் நீங்கள் சென்று பார்த்தால் தெரியும்.
தொடர்ச்சி நாளை வெளியாகும்.
- தொகுப்பு: உமா மகேஸ்வரி, கல்விச் செயற்பாட்டாளர்
Comments (0)