ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதை
நூல் அறிமுகம்: அக்களூர் இரவி
மாயவரம் செல்லும்போதெல்லாம், பேருந்து நிலையத்திலிருந்து வெளிவருகையில், இயல்பாகவே கண், நான் முன்பு வேலை செய்த அலுவலகம் நோக்கித்தான் செல்லும். விட்டல்ராவ் சாரும் அதைத்தான் சொன்னார். ‘அன்னைக்கு செயிண்ட் தாமஸ் எக்ஸேஞ்ச் வழியாகச் செல்லும்போது, என் மகள் என்னைப் பார்த்து, அப்பா உங்க ஆஃபிஸ், என்றாள்.’
மாயவரம் அலுவலகம் முன்பு போல் இல்லை. ஒரு மெடிக்கல் ஷாப் இருக்கிறது. வெளியில் செருப்புக்கடை வைத்திருந்த சேகர் இப்போதில்லை. அவர் பையன்தான் தெரிகிறார். தலைமுறை மாறிவிட்டது.
கூத்து முடிந்தபிறகு காலியாகக் கிடக்கும் இடம் போல் வெறிச்சோடி இருள் கவிந்து கிடக்கும் அந்த அலுவலகத்தின் முன்முற்றம், ஒரு பத்தாண்டுகள் முன்பு வரையிலும், பழுது பார்க்கக் கிளம்பும் போன் மெக்கானிக்குகளால், ஜே.டி.ஓக்களால், டெக்னீஷியன்களால், சந்தாதாரர்களால் நிரம்பியிருக்கும்.
இப்போதோ, விதிக்கப்பட்ட பணியெல்லாம் முடித்துவிட்டேன். இருந்ததெல்லாம், அள்ளிக் கொடுத்துவிட்டேன் அல்லது எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுவிட்டார்கள் என்று ஒருவிதமான திருப்தியுடன் அல்லது சோகம் ததும்பும் முகத்துடன் வீற்றிருக்கும் பெற்றோர்போல் தோன்றுகிறது.
‘ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம் வீழ்ந்து போனது. அதன் வீழ்ச்சி எனக்குப் புரிகிறது. ஆனால், அந்த வீழ்ச்சி தரும் மனவலியும் துயரமும் பொறுக்க முடியாததுதான்.’ தொலைபேசி நாட்கள் நூலில் விட்டல்ராவ் எழுதியிருக்கும் இறுதிவரிகள், எனது எண்ண அலைகளுடன் இணைந்து போயின. நினைவேக்கம் தரும் நாட்கள் அவை.
பௌத்த இந்தியாவின் இறுதி அத்தியாயத்தில் ரீஸ்டேவிட்ஸ் எழுதியிருப்பார்: ’பௌத்தம் கோலோச்சிய மண்ணிலிருந்து பௌத்தர் என்று ஒருவர்கூட இல்லாமல் விரட்டியடிக்கப்பட்ட பரிதாபமான கதை இது.’
அதே கதைதான் தொலைத்தொடர்புத் துறையினுடையதும், BSNL என்ற பொதுத்துறையின் கதையும். ஒரு பெரும் சாம்ராஜ்யத்தின் சரிவும் வீழ்ச்சியுமான கதை.
இந்தியாவின் வளர்ச்சிக்கு, அதன் கட்டமைப்பிற்கு இத்துறையின் மகத்தான, பிரும்மாண்டமான பங்களிப்பை எடுத்துரைக்கச் சொற்கள் போதா. எத்தனை லட்சம் குடும்பங்கள் பலனடைந்தன! ஆயிரமாயிரம் விழுதுகளுடன் பரந்து நின்ற இந்த ஆலமரம் வளர்ந்த கதையை, இந்தச் சாம்ராஜ்ஜியம் ஒவ்வொரு கல்லாக, எப்படிக் கட்டி உருவாக்கப்பட்டது என்பதை சுவாரஸ்யமாகக் கூறுகிறார், விட்டல்ராவ்.
இது ஒரு dry subject. ஆனால், பகடி பொதிந்த வரிகளில் விவரிப்பு விறுவிறுப்பாக நகர்கிறது. நூலாசிரியருக்கு, நகைச்சுவை மிகமிக எளிதாக வருகிறது. இந்தியாவில், மெட்ராசில் தொலைபேசியின் வளர்ச்சியை, கால வரிசையில் எதையும் விட்டுவிடாமல், பதிவு செய்கிறார் ஆசிரியர். இந்தத் துறையில் டெக்னீஷியனாக வேலை செய்த அனுபவம் அவருக்குக் கைகொடுக்கிறது. அபார ஞாபகசக்தி!
மேக்னட்டோ டெலிபோனில் தொடங்கி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட முன்னேற்றம் வரையிலும், ‘லோ..! ந..லிஸ்’ (ஹலோ நம்பர் ப்ளீஸ்) எக்ஸ்சேஞ்ச் தொடங்கி ஸ்ட்ரவுஜர், க்ராஸ்பார், எலக்ட்ரானிக் எக்ஸ்சேஞ்ச் வரையிலும் தகவல்தொடர்பின் வளர்ச்சியைச் சிறப்பாக விவரிக்கிறார். ராஜீவ்காந்திக்கு வலதுகரமாக இந்தத் துறையை நவீனப்படுத்திய சாம் பிட்ரோடாவையும் அழகாகச் சுட்டியிருக்கிறார்.
ஓர் இணைப்பகம் எப்படி வேலை செய்கிறது என்பதை சாதாரண மனிதரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியிருக்கிறார். டெலிபோன் ரிங்டோன் எப்படி வருகிறது, இணைப்பகத்தில் ‘ரிங்கர்’ வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது…
எளிமையாக எழுதுவது எவ்வளவு சிரமம் என்பது அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும். ஏறத்தாழ, துறையில் வேலை செய்யும் ‘கேடர்கள்’ அத்தனை பேரையும் விவரிப்பில் கொண்டுவந்துவிட்டார்.
நான் சொன்னதுபோல், சிறுசிறு சம்பவங்களையும், கையூட்டு வாங்குவது உட்பட, நகைச்சுவையுடன் விவரிக்கிறார், விட்டல்ராவ். அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்த கதை… உருமால் தலைப்பாகைத் தைக்க வாங்கிய துணியை மிச்சம் பிடித்து, தையல் வேலை தெரிந்தநபர், பெண்களுக்கு உள்ளாடை தைத்துக் கொடுத்து மாட்டிய கதை… சிரிப்பும் சுவாரஸ்யமும் நிறைந்தது. அதுபோல் வாட்ச்மேனையும் கூட்டிக்கொண்டு, நள்ளிரவில் சினிமாவில் நடிக்கப் போனது… இப்படிச் சில நிகழ்வுகள்…
புகழ்பெற்ற நடிகை வீட்டில் விதிகளை மீறி வைக்கப்பட்ட பிளான் 102 வசதியைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் நேர்மையான ஊழியரும் வருகிறார், சகஊழியரை ஏமாற்றிக் காசு பார்க்கும் ஊழியரும் கதையில் வருகிறார். டூட்டியில் இருப்பவரை ரிலீவ் பண்ண உரியநேரத்தில் வர முடியவில்லை என்று வருத்தத்துடன் இரவு பதினோரு மணிக்கு மேல் வரும்போதும் உணவுப் பொட்டலத்துடன் வரும் கரிசனமும் மனிதாபிமானம் மிக்க நண்பரும் வருகிறார்.
அமெரிக்காவிலிருந்து வரும் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்படும் வரவேற்புக்குப் பாதுகாப்பிற்கு வெளியூரிலிருந்து வந்த போலிஸ்காரர், எம்.ஜி.ஆரின் தயாள குணத்தால் தனக்கு மீண்டும் வேலை கிடைத்ததை விவரிக்கும் கதையொன்றும் (’கண்டிப்பா சாப்பிட்டு விட்டு போங்க’) இடையில் வருகிறது.
மெட்ராசின், பல்வேறு இடங்களையும் அழகாக, நினைவோடு விவரிக்கும் விட்டல், செயிண்ட் தாமஸ் மவுண்ட் இணைப்பகத்திற்கு எதிரில் இருக்கும் சர்ச்சில் (மொஹித்தே ஸ்டேடியத்திற்கு அருகில் இருப்பது) அவர் வரைந்த ஓவியத்தையும் குறிப்பிட்டு, தான் பன்முகத்திறன் படைத்தவர் என்பதையும் வெளிப்படுத்துகிறார். துறையில் சிறந்து விளங்கிய நாடக ஆளுமைகளைத் தவறாமல் குறிப்பிடும் அவர், தொலைபேசியில் எழுத்துத்துறையில் பிரகாசிக்கும் பாவண்ணன் உட்பட சில படைப்பாளர்களையும் அறிமுகப்படுத்துகிறார்.
மிகமுக்கியமாக, ஊழியர்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட இருபெரும் தொழிற்சங்கங்களையும், சீனிவாசராவ், ஜெகன் போன்ற முக்கிய முன்னோடித் தலைவர்களையும் மறக்கவில்லை. குறிப்பாக ஜெகன் சிரிப்பு.
நண்பனோடு fault பார்க்கச் சென்று போஸ்ட் மேலேறி உயிரைத் துறந்த, சேவையின் மேல் அக்கறைகொண்ட அடிமட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பை எழுதி நெஞ்சம் கனக்க வைக்கிறார். இதைப்போன்ற லட்சக்கணக்கான மஸ்தூர்களின் இரவு பகல் பாராத உழைப்பால் உருவானதுதானே இந்தத்துறை என்று யோசிக்கும்போது…
டை கட்டிக் கொண்டு டைரக்டரி கொடுத்த கதையைப் படிக்கும்போது தொடர்பான சில செய்திகள் நினைவுக்கு வருகின்றன.
தொலைபேசி கிடைக்காமல்அவதிப்பட்ட கதையை இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி Better India Batter worldஇல் எழுதியிருப்பார்.
OYT என்ற முன்னுரிமை இணைப்பு..
முதன்முதலில் மொபைல் சேவை வந்தபோது, மொபைல் ஒரு காலுக்கு எட்டு ரூபாய்க்கு மேல் தனியார் நிறுவனங்கள் நிர்ணயித்த சமயத்தில், Value added Serviceஐ BSNL கொடுக்க முடியாமல் தடுக்கப்பட்டபோது, சுஜாதாவின் சகோதரர் ராஜகோபால் முற்சியில் BSNL அதை 2 ரூபாய்க்குக் கொடுத்தது.
அதன்பின்னர் தெருவுக்குதெரு STD PCO.. குமரியிலிருந்து காஷ்மீருக்கு ஒரு ரூபாயில் பேச முடிந்தது… BSNL SIM card வாங்க மக்கள் வரிசையில் நின்றது… மலைகளிலும் காடுகளிலும் BSNL லைன்தான் கிடைக்கும் என்று மக்கள் நம்பிக்கையோடு பேசியது…
இதெல்லாம்சரி… இந்தச் சாம்ராஜ்யத்தின் சரிவுக்கு யார் காரணம்… நிச்சயம் ஊழியர்கள் இல்லை…
ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் ஆறுமுகசாமியின் உதவியோடு, கத்திப்பாரா ஜனார்த்தனன் அவர்களிடமிருந்து பல ஆண்டுகளாக வராமல் இருந்த 35000 ரூபாய் தொகையை வசூல் செய்தது… 2015 வெள்ளத்தில் கிண்டி இணைப்பகமும் அலுவலகமும் மூழ்கியபோது நீந்திச்சென்று அதை மீட்டெடுத்த ஊழியர்களும் நண்பர்களும் நினைவுக்கு வருகிறார்கள்…
அம்ருதா இதழில் தொடராக விட்டல்ராவ் எழுதிய இந்த முக்கியமான பதிவை, அந்த இதழே நூலாக வெளியிட்டுள்ளது. அழகான அறிமுகவுரை எழுதியிருக்கும் நண்பர் சந்தியா நடராஜன் கூறுவதுபோல், தொலைபேசியின் கதையுடன், மெட்ராசின் வரலாற்றையும் இந்த நூல் கூறுகிறது.
தொலைபேசியின் கதை என்னைப்போன்ற லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. நன்றி, விட்டல்ராவ் சார்…!
- அக்களூர் இரவி, மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்

Govindaraj R
January 6, 2024மாயவரம், தாமஸ் மலை என்று என் வாழ்வில் மிகப்பெரும்பாலான நாட்களை மட்டுமல்ல தன்னலமற்றத் தலைவர்கள் ஜெகன் மற்றும் சீனிவாச ராவ் ஆகியோரை நினைவூட்டியமைக்கு ஆசிரியருக்கு நன்றி. சீருடைத் துணியில் உள்பாவாடை தைத்து தந்த ஊழியரின் கதையும் வந்தது சிறப்பு.ஏவிசி கல்லூரியில் பயின்றபோது பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வேலை பார்த்த பெண்ணிடம் தொலைபேசியில் பேசி காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட எங்கள் கதையும் ஞாபகம் வந்தது.நன்றி தோழர்.