என்னவாயிற்று மாநில கல்விக் கொள்கை?
தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தனித்துவ கல்விக் கொள்கை தேவை
பொதுக்கல்வி உருவாக்கம் என்பது சமூகத்தின் நிலைகள் மற்றும் கல்வியின் செயல்பாடுகள் தொடர்பான கருத்துகளை உள்ளடக்கியது. தமிழக கல்விக் கொள்கை என்பது தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தனியான தனித்துவமான கல்விக் கொள்கையாக உருவாக்கப்படும் என்று அறிவித்த தற்போதைய தமிழக அரசு, ஆண்டுகள் பல கடந்தும் தமிழக கல்விக் கொள்கையை அறிவிக்காமல் காலம் கடத்துவதும் நீதியரசர் முருகேசன் அவர்களைத் தலைவராக கொண்டு இயங்கிய குழுவிலிருந்து மூத்த கல்வியாளர் பேராசிரியர் ஜவஹர் நேசன் அவர்களது விலகலும் தமிழ்நாட்டு கல்வி வடிவமைப்புக் குழுவின் மீது சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன.
இது ஒருபுறம் எனில், தமிழ்நாட்டுக்குத் தேவையான தனித்துவக் கல்விக் கொள்கை, மாநிலத்தின் வரலாற்று மரபு, தற்போதைய கல்விச் சூழல், கற்றல், கற்பித்தல், பொருளாதார நிலைமைகள், வாழ்வாதாரம், சமூக மாற்றம், கலாச்சாரம் மற்றும் மனிதப் பரிணாமம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளி வருமா என்பதே கல்வியாளர்கள் முன் நிற்கும் கேள்வி.
1949இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் என அழைக்கப்படும் உயர்கல்வி ஆணையம் முதல், தேசிய கல்விக் கொள்கை 2020 வரை பல கல்விக் கொள்கைகளை இந்தியா கண்டுள்ளது. இதில் 1964இல் ஜவஹர்லால் நேரு இந்தியாவிற்குத் தேவையான நவீன கல்வியை உருவாக்குவதற்கு டி.எஸ்.கோத்தாரி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார்.
கோத்தாரி அவர்கள் தலைமையிலான குழு அரசிற்கு அளித்த பரிந்துரைகளில் அனைவருக்குமான கல்வி, பேதமற்ற பொதுக் கல்வி, அறிவியல் மனோபாவம் உள்ள கல்வி, சமூக சேவை என்று பல இடங்களிலும் இதனை மேற்கோள் காட்டியிருந்தது. ஆனால் கஸ்தூரிரங்கனின் தேசிய கல்விக் கொள்கை 2020 மேற்கோள்களை கவனமாகத் தவிர்த்துள்ளது.
அறிவுசார் பண்புகள், அறிவியல் மனப்பான்மை என்பதற்கு பதிலாக பண்டைய இந்தியப் பெருமை (Indian Knowledge System) பற்றிப் பேசுவது என்பது கண்மூடித்தனமான தேச வெறித்தனத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய கல்விக் கொள்கை 2020இல் குறிப்பிடப்பட்டுள்ளது ஆபத்தான போக்காகும். அறிவியல் பூர்வமாகச் சிந்திக்கும் ஆற்றல் இல்லாமல் மாணவர்களை வளர்த்தெடுப்பது, கண்மூடித்தனமாக ஆதரிப்பது அல்லஅது எதிர்ப்பது என்ற மனநிலையையே மாணவர்களிடத்திலே உருவாக்கும்.
இவற்றின் நீட்சியாக தமிழக அரசு மாற்றுப்பெயர்களில் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ நடைமுறைப்படுத்துவதைக் காணும்போது, தமிழ்நாட்டிற்கெனத் தனித்துவக் கல்விக் கொள்கை என்பது வெற்றுச் சொல்லாடலா? விவாதங்களின்றி ஒரு நாடகத்தைத் தமிழக அரசு அரங்கேற்றுகிறதா? என்பன போன்ற ஐயங்கள் எழுகின்றன.
காரணம், தேசிய கல்விக் கொள்கை 2020இல் உயர் கல்விப் பிரிவுகள் அனைத்தும் மத்திய அரசின் ஒற்றை அமைப்பிற்குக் கீழ் கொண்டுவரப்படுகின்றன. HECI (Higher Education Commission of India) என்ற சர்வ வல்லமை கொண்ட அமைப்பாக இது விளங்கும்.
இவற்றையெல்லாம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எவ்வித விவாதமும் இன்றி மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு, நடைமுறைப்படுத்துவதைக் குறித்துத் தமிழக அரசு கேள்வி எழுப்பாமல், பசப்பு வார்த்தைகளைக் கூறி TANSCHE (Tamilnadu State Council for Higher Education) என்று சொல்லக்கூடிய தமிழக உயர்கல்வி மன்றத்தின் வாயிலாக பொதுப் பாடத்திட்டத்தை தமிழக அரசு உயர் கல்வித் துறையில் அறிமுகப்படுத்தி அனைத்துக் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதோடு, அதனைக் கட்டாயமாகவும் ஆக்கியுள்ளது.
மேலும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பூகோள அமைப்பில் வரலாற்று நிலையில் அங்குள்ள சிறப்புக் காரணங்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவை. ஒவ்வொரு பல்கலைக்கழகமும், தான் எதை இன்றியமையாதது என்று கருதுகிறதோ அதைப் பாடத்திட்டமாக வைத்திருக்கின்றன.
அதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் அதைவிடுத்து, எங்களது பாடத்திட்டத்தினை 70 முதல் 80 சதவீதம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் கட்டாயப்படுத்துவது அரசின் அறியாமையையே காட்டுகிறது.
அதிலும் சில பல்கலைக்கழகங்கள், கல்வி ஆண்டு தொடங்கி பாடங்கள் நடத்தத்தொடங்கும் வரையிலும் பொதுப் பாடத்திட்டத்தில் என்ன Syllabus உள்ளது என்று திடமாக அறிவிக்காமல் சில பாடங்களுக்கு அகமதிப்பீட்டுத் தேர்வே (Internal test) நடத்தாமல் முதலாமாண்டு மாணவர்களுக்கு 100 (உதாரணம்: Foundation Course) மதிப்பெண்களையும் கல்லூரிகளில் பாடம் நடத்தாமலேயே வழங்கக் கட்டாயப்படுத்துவது அரசும் பல்கலைக்கழகங்களும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக நடத்தும் ஒருவகையான உளவியல் ரீதியான தாக்குதலே ஆகும்.
தற்போதைய சூழலில் புகழ்வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் போன்றவை பெரும் நிதி நெருக்கடியில் இருப்பதோடு அங்கு கற்பிக்கும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களது உயர்கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.
அதோடு, கல்வி என்பது 21ஆம் நூற்றாண்டு உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் நவீன அறிவியலை உள்ளடக்கியது. அறிவியல் பூர்வமான மனிதவளத்தை வளர்த்தெடுக்காமல் உயர்கல்வித்துறையில் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, தனியாரிடம் பல்கலைக்கழகங்களை ஒப்படைப்பு செய்ய முனைவது (உதாரணம்: பள்ளிக் கல்வித்துறையில் தனியார் பங்களிப்பான நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்) தமிழக அரசு உயர்கல்வித் துறையை ஒட்டுமொத்தமாகக் கைகழுவும் முயற்சியாகவும், தனியார் மயப்படுத்தும் போக்காகவும் இருக்கக்கூடும் என்று கல்வியாளர்களால் கவலையோடு பார்க்கப்படுகிறது. எதிர்காலம் குறித்த அச்ச உணர்வு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் ஏற்பட்டு இருப்பதால் விரைவில் தமிழகத்திற்கான தனித்துவமான கல்விக் கொள்கையை, தமிழ்நாட்டு மரபு, வரலாறு மற்றும் வட்டார ரீதியான கலாச்சாரங்களை உள்ளடக்கிய கல்விக் கொள்கையை தமிழக அரசு விரைவில் வெளியிட்டு கல்வியாளர்களின் உளவியல் ரீதியான அச்ச உணர்வை போக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

கட்டுரையாளர்: பேராசிரியர் தி. மருதநாயகம், அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி
Comments (0)