பொன்னியின் செல்வன் – முன்னுரை
பொன்னியின் செல்வன் – என்றைக்குமே சுவையூட்டும் ஒரு புதினம்தான். பல நடிகர்களும் இயக்குனர்களும் திரைப்படமாக எடுக்க விரும்பிய ஒரு கலைப் படைப்பு. எத்தனை விமர்சனங்கள் இருந்தபோதும், ‘படிக்க முடியவில்லை’ எனப் புலம்புவர்கள் அதிகம். வாசிப்புப் பழக்கமில்லாதவர்கள், நீண்ட நெடிய நாவலைச் சுவைக்க முடியாமல், அலமாரியில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வெளியாகிப் பல பத்தாண்டுகள் கடந்தும், இன்னமும் அதிகமான அளவில் விற்பனை ஆவது பொன்னியின் செல்வன்தான் என்பது வெளிப்படை.
பொன்னியின் செல்வனை வாசிக்கவும், ஒலி வடிவில் கேட்கவும் நிறைய செயலிகளும் ஒலிப் புத்தகங்களும் இருக்கின்றன. ஆனபோதும் பலருக்கு இது அடைய முடியாத ஆடம்பரம். படிக்க முயல்பவர்களில் சிலர், நீண்ட வர்ணனைகள், கிளைக்கதைகள், நாவலின் நீளம் போன்றவற்றால் அயர்ச்சியுற்று, பாதியில் விட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, நான் பொன்னியின் செல்வனை முப்பது முறைக்கு மேல் படித்திருக்கிறேன். எல்லாக் கதாபாத்திரங்களும் என் மனதில் அழுந்தப் பதிந்தவை. என் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு ஏற்றவாறு அவர்களுடைய மொழியில் தினமுமே படுக்கப் போகும் முன் கதையாகச் சொல்லியிருக்கிறேன். இருவரும் அதை ஒரு வரிகூடப் படித்ததில்லை என்றபின்னும், இன்னமும் கதாபாத்திரங்களை மேற்கொண்டு ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.
அதனால்தான் இந்த முயற்சியைத் தொடங்கி இருக்கிறேன். திரைப்படமாகப் பார்த்தால் இன்னமும் நன்றாகப் புரியக்கூடும்தான். ஆனால், எழுத்துலகத்துக்கே சம்பந்தப்பட்ட சில விவரணைகளைக் காட்சிப் படுத்துதல் மிகக் கடினம் அல்லது முடியாது. எனவே, வாசிக்க ஆசைப்பட்டும், நேரமோ பொறுமையோ வாய்க்காதவர்களுக்காக சுருக்கப்பட்ட வடிவில் பொன்னியின் செல்வன் புதினத்தைத் தருகிறேன்.
இயன்றவரை எல்லா நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறேன். சில சுவையான கட்டங்களைத் தற்காலத்துடன் பொருத்திச் சொல்லியிருக்கிறேன். கல்கியின் நகைச்சுவை உணர்வை அங்கங்கு சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. சுவை கெடாத வண்ணம் எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அறிமுகமாகக்கூட இதைக் கருதலாம். இதைப் படித்துவிட்டு மூலத்தைத் தேடிப் படிக்கும் எண்ணம் வர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
பொன்னியின் செல்வன், கல்கி இதழில் தொடராகத்தான் வெளிவந்தது. போலவே, இந்தச் சுருக்கப்பட்ட வடிவமும் சுவடு இதழில் தொடராகவே வெளியாகவுள்ளது. இந்தத் தொடர் குறித்தான அறிவிப்பு வெளியான உடனே, சுவடு வாசகர்கள் காட்டிய ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது.
கதையைத் தொடங்குவதற்கு முன் சில வரிகள்: பெரும்பாலானவருக்கு இந்தத் தலைப்பு, மன்னன் இராஜராஜ சோழனைக் குறிக்கிறது என்பதுகூடத் தெரியாது. இந்தக் கதை ஒரு மனிதனின் – மன்னனின் முழுமையான வாழ்நாள் வரலாறு அல்ல. மிக முக்கியமான அரசனாக வரலாற்றில் பதியப்பட்டவரின் வாழ்க்கைத் தொகுப்பு அல்ல. அவன் அரசனாவதற்கு முன்பான ஒரு சிறிய காலகட்டத்தை மட்டுமே இது விவரிக்கிறது. அதில் நடந்த துரோகங்கள், நம்பிக்கை, போர், இயற்கைச் சீற்றம், சோழ மண்ணின் பெருந்தன்மை, ராஜாங்க அலசல்கள், அரசியல், உயர்ந்த மனிதர்களின் அறம் என எல்லாவற்றையும் தொட்டுப் போகிறது. காலமும் இடமும் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. என்னதான் தலைப்பு இராஜராஜசோழனைச் சொல்லியிருந்தாலும், இந்தப் புதினத்தின் முக்கிய நாயகன் வந்தியத்தேவன்தான். அவனைச் சுற்றித்தான் கதைக்களம் நகரும்.
தஞ்சையையும் சுற்றுப்புறத்தையும் தெரிந்தவர்களுக்கு, இதில் இடம்பெறும் இடங்களும், நடந்த விஷயங்களையும் தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்வது எளிது. மற்றவர்கள் வரைபடத்தின் உதவியோடு அந்த ஊர்களைப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் இணையும் இடம், கதாபாத்திரங்கள் சந்திக்கும் நிகழ்வு, அனைத்தும் ஒரு நேர்கோடாய், தொய்வில்லாமல் போகக்கூடிய நாவல் இது. கல்கியின் வர்ணனைகள், விவரணைகள் நம்மை அந்தக் காலத்திற்கே கொண்டு போய் விடக்கூடியன. அந்த வசனங்களும், நகைச்சுவையும், நடையும் வெகு சுவாரசியம்தான். ஆனாலும் அவசர உலகமாகிவிட்ட காலத்தில், ஆர்வம் உள்ளவர்கள் சுருக்கமாகவேணும் வாசிக்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, சுவை கெடாமல் சுருக்க முயன்றிருக்கிறேன்.
மீண்டும் நினைவூட்டுகிறேன், வர்ணனைகளோ, மேலதிகமான விவரங்களோ, கல்கியின் பகடியும் எள்ளலுமான நடையோ இதில் வாய்க்காது. சுமார் பத்து அத்தியாயங்களோ அதற்கும் மேலோ ஒரே அமர்வில் படிக்கும் வண்ணம் சுருக்கி எழுதப்பட்டது.
- புது வெள்ளம்,
- சுழல் காற்று
- கொலைவாள்
- மணிமகுடம்
- தியாக சிகரம்.
என ஐந்து பாகங்கள் கொண்ட புதினத்தை, கிட்டதட்ட ஒரு பாக அளவில் சுருக்கப்பட்டுள்ளது.
ஆடி 18 முதல் புதுவெள்ளம் பொங்கிப் பெருக்கெடுக்க உள்ளது. வாசிக்கத் தயாராகுங்கள் – பொன்னியின் செல்வன் – சுருங்கிய வடிவில் – சுவடு இணைய இதழில்.
- சவிதா
Comments (0)