வந்தியத்தேவனும் கந்தமாறனும் வெளியே வந்த பிறகு, உள்ளிருந்து கந்தமாறனின் அன்னை அவனை மட்டும் அழைக்க, பின்னால் கேலிச் சிரிப்புகளுடன் கூடிய ஒலிகள் கேட்டன. தன்னைத்தான் கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்ட வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். கந்தமாறன் வந்து அரண்மனையைச் சுற்றிக் காட்டியபோதும், மனம் அதில் லயிக்காமல், ‘தன்னைப் பற்றிப் பேசி அனைவரும் சிரித்தனரா?’ என சந்தேகமாய்க் கேட்டான்.  மறுத்த கந்தமாறன், ‘பழுவேட்டரையரைப் பற்றி’ என விரிவாகச் சொல்லத் தொடங்கினான்.

வந்தியத்தேவனும் கந்தமாறனும் வெளியே வந்த பிறகு, உள்ளிருந்து கந்தமாறனின் அன்னை அவனை மட்டும் அழைக்க, பின்னால் கேலிச் சிரிப்புகளுடன் கூடிய ஒலிகள் கேட்டன. தன்னைத்தான் கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்ட வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். கந்தமாறன் வந்து அரண்மனையைச் சுற்றிக் காட்டியபோதும், மனம் அதில் லயிக்காமல், ‘தன்னைப் பற்றிப் பேசி அனைவரும் சிரித்தனரா?’ என சந்தேகமாய்க் கேட்டான்.  மறுத்த கந்தமாறன், ‘பழுவேட்டரையரைப் பற்றி’ என விரிவாகச் சொல்லத் தொடங்கினான்.

பழுவேட்டரையர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மர்மமான பெண்ணை மணந்து கொண்டதாகவும், எங்கு போனாலும் அவளை மூடு பல்லக்கில் வைத்துத் தன்னுடனேயே அழைத்துச் செல்வதாகவும் கூறினான். மேலும், அந்தப் பெண்ணை அந்தப்புரத்துக்குக்கூட அனுப்பாமல், தன்னுடனேயே தங்க வைத்திருப்பதையும், அதை ஒரு தாதிப்பெண் பார்த்துவிட்டு வந்து விவரித்ததை அன்னையும் மற்ற பெண்களும் சொல்லிச் சிரித்ததாகக் கூறினான். இந்த முதிய வயதில் இப்படி அவர் நடந்துகொள்வதே அனைவரின் சிரிப்புக்கும் காரணம் என விளக்க, வந்தியத்தேவன் மறுத்தான். ‘அது மட்டுமல்ல; அந்தப் பெண் அழகாக இருப்பதற்காகவும் உன் வீட்டுப் பெண்கள் சிரித்திருக்கலாம்’ என்றதும், ‘நீ எப்போது பார்த்தாய்?’ எனக் கேட்டான் கந்தமாறன். வரும் வழியில் பார்த்ததையும் இப்போதுதான் அது யாரெனத் தெரிந்து கொண்டதாகவும் வந்தியத்தேவன் கூறியபோது வாத்தியங்களின் முழக்கம் கேட்டது.

அது குரவைக் கூத்துக்கான ஆரம்ப முழக்கம் எனக் கந்தமாறன் கூறியதும், ஆழ்வார்க்கடியான் நம்பி அதைக் குறிப்பிட்டது நினைவுக்கு வந்து, தனக்கும் அதைப் பார்க்க ஆவல் என வந்தியத்தேவன் சொல்ல, இருவரும் அங்கு சென்றனர். முற்றத்தில் மேடை அமைக்கப்பட்டு, மயில், அன்னம், கோழி போன்ற சித்திரங்களை வரைந்திருந்தனர். அகில் புகை, மலர் மணம், தீபங்களின் ஒளி எல்லாம் வந்தியத்தேவனின் மனதை மயக்கின. அந்தச் செந்நிறம் ஒருவிதமான உணர்வை எழுப்பியது. முக்கிய விருந்தாளிகள் வந்து அமர்ந்ததும் குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மலர்மாலையுடன் பிணைத்துக் கொண்டு முருகன் பற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டே ஆடினார்கள். பின் வேலாட்டம் தொடங்கியது. தேவராளன், தேவராட்டி என ஆண், பெண் இருவரும் வந்து சிவப்பு வண்ண ஆடைகளையும் மலர்களையும் அணிந்து ஆடியது அச்சத்தை ஊட்டியது. பின் தேவராளன் வெறியாட்டம் ஆட, அனைவரும் சந்நதம் வந்துவிட்டதாகப் பதைத்தனர்.

மழை பொழியுமா, நாடு செழிக்குமா, என்றெல்லாம் ஒவ்வொருவராகக் கேட்க, தேவராளன் ஆடிக்கொண்டே, மன்னர் குலத்து, ஆயிரங்கால அரசர் குலத்து ரத்தம் வேண்டும், பலி வேண்டும்; கொடுப்பீர்களா? என உக்கிரமாகக்  கேட்டான். மேடைக்கு முன்னால் வீற்றிருந்த பழுவேட்டரையர், மழவரையர், சம்புவரையர் எல்லாரும் திகைத்தபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பூசாரியை நிறுத்தச் சொல்ல, தேவராளன் மயங்கி வீழ்ந்தான். சபை மெளனமாகக் கலைய, நரிகள் ஊளையிடும் சப்தம் கேட்டது. வந்தியத்தேவன் அந்தத் திசையில் திரும்பிப் பார்த்தான். மதில் சுவற்றின் மேல் ஆழ்வார்க்கடியானின் தலை மட்டும் வெட்டி வைத்திருந்ததைப் போலத் தெரிந்தது. அதிர்ந்துபோன வந்தியத்தேவன் மறுபடியும் பார்க்க, அங்கு எதுவுமே இல்லை. அவன் உள்ளம் எதையோ நினைத்துக் கலங்கிற்று.

அதற்குப் பின் பிரம்மாண்டமான விருந்து தொடங்கியது, கந்தமாறன் அங்கு வந்திருந்த அனைவரையும் யார் யாரென எடுத்துக் கூறிக்கொண்டிருந்தான். அங்கு வந்திருந்த பெரியமனிதர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள் அல்லர். அனைவரும் குறுநில மன்னர்கள்; அல்லது தன் வீரத்தினால் குறுநில மன்னர்களுக்கு இணையான பட்டத்தைப் பெற்றிருந்தவர்கள். அதாவது இன்றைய அமைச்சர்கள், அதிகாரிகள், பெருங்குழும முதலாளிகள் போன்றவர்கள். கந்தமாறன் சொல்லச் சொல்ல, ‘இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் எதற்காக இங்கு இணைந்து வந்திருக்கிறார்கள்?’ என்ற சந்தேகம் வந்தியத்தேவனுக்குள் வளரலாயிற்று. விருந்து முடிந்து, அரண்மனையின் மேல் மாடத்தின் ஒரு மூலையில் அவனுக்கென ஒதுக்கப்பட்ட திறந்த மண்டபத்தில் கந்தமாறன் விட்டுச் சென்ற பிறகும் கூட, அந்த சந்தேகம் மறையாதிருந்தது.

களைப்பினால் கண்ணயர்ந்த பின்னும் ஆழ்மனநிலையில் அந்த சந்தேகம் வலுத்தபடியே இருந்ததால், கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டுப் பாதியிலேயே விழித்துக் கொண்டான். கனவில் வெட்டுப்பட்ட ஆழ்வார்க்கடியான் தலையைக் கண்டிருந்த வந்தியத்தேவன், திடுக்கிட்டு விழித்தபோதும் அதையே பார்த்து வெருண்டான். ஆனால், இந்த முறை தலை மறையவில்லை. கடைசியில் உற்றுப் பார்த்தபொழுது, ஆழ்வார்க்கடியான் மாளிகையின் சுற்று மதிலுக்குப் பின்னாலிருந்து தலையை மட்டும் எட்டி உள்ளே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று துலங்கியது. ஏதோ ஓர் ஆபத்து என உள்மனம் சொல்ல, உடல் பதறி வாளுடன் அவனை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். ஆழ்வார்க்கடியான் தலை தெரிந்த இடத்திற்கும் இவன் படுத்திருந்த இடத்திற்கும் உண்டான தொலைவைக் கவனமாகக் கடந்தபோது பேச்சுக்குரல் கேட்கவே, வந்தியத்தேவன் குனிந்து பார்த்தான்.

கீழே குறுகலான முற்றத்தில் விருந்தில் பார்த்த அனைத்து முக்கியமானவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த நள்ளிரவில் பேசிக் கொள்வதானால் ஏதோ ஒரு முக்கிய விஷயமாக இருக்க வேண்டும் என ஊகித்த வந்தியத்தேவன், அதைப் பார்க்கத்தான் ஆழ்வார்க்கடியான் மதிலில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டான். இப்போது ஆழ்வார்க்கடியானைக் கையும் களவுமாகப் பிடிப்பதானாலும் கீழே அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் முடியாது. அப்போதும் அவன் தப்பிவிட்டான் என்றால், தன்னை சந்தேகப்பட வாய்ப்பு இருக்கிறது. கந்தமாறனும் அந்தக் கூட்டத்தில் இருப்பதைக் கண்டவுடன் காலையில் அவனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான். பக்கத்தில் இருந்த மூடு பல்லக்கைப் பார்த்ததும் ஆழ்வார்க்கடியான் அந்தப் பல்லக்கில் இருந்தவளைப் பார்க்கத்தான் வந்திருப்பான் எனப் புரிந்து கொண்டான். திரும்பி விடலாம் என யத்தனித்தபோது, தன் பெயர் அடிபடுவதைக் கண்டு உற்றுக் கேட்க ஆரம்பித்தான்.

‘உங்கள் மகனின் நண்பன் என ஒருவன் வந்துள்ளானே.. அவன் ஆதித்த கரிகாலனின் கீழ் பணிபுரியும் ஆள். நாம் பேசும் விஷயம் எதுவும் அவனுக்குத் தெரிந்துவிடக் கூடாது. தெரிந்தால் இந்தக் கோட்டையை விட்டு அவன் உயிருடன் போகக் கூடாது’ என்று சொல்லக் கேட்டதும் வந்தியத்தேவனுக்குப் பொறி கலங்கியது.

ஆனால், கந்தமாறன் தன் நண்பனுக்குப் பரிந்து பேசினான். அவன் நம்பிக்கைக்குரியவன் என்று கூறியதை ஏற்றுக்கொண்ட பழுவேட்டரையர், “இப்போது நாம் பேசப்போவது பெரிய சாம்ராஜ்யத்தைப் பற்றிய மிக முக்கியமான விஷயம். இது மட்டும் வெளியில் தெரிந்தால், பயங்கரமான பின்விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும்” என எச்சரித்துவிட்டு, மேலும் அதிர்ச்சி தரும் விஷயங்களைப் பேசத் தொடங்கினார். வந்தியத்தேவன் முதலில் பயந்தாலும், அவர்கள் பேசும் விஷயங்களை மறைந்திருந்து கேட்கலானான். அதைத் தொடர்ந்து நடக்கப்போகும் பல முக்கியமான திருப்பங்களுக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில், அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் வந்தியத்தேவனை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டே சென்றன.

தொடரும்.

  • சவிதா

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *