WHERE ARE WE?
நடக்கலாம் வாங்க – பகுதி 3
உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை எவை என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். கட்டுரைக்குள் செல்லும் முன்பாக அவற்றை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.
* உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?
* நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?
* நடக்கும் நேரத்தில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
* நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு?
இத்தனைக் கெடுபிடிகளுடன் அல்லது கணக்குகளுடன் நடக்க வேண்டுமா என்றால் ஆம், அப்படித்தான். எல்லாமே அப்படித்தான்.
ஒரு தங்க நகை வாங்கச் செல்கிறீர்கள். மில்லிகிராம் கூட அங்கு காசுதான். கடைக்காரர் பணம் வாங்கிவிட்டு, நகையைக் கையில் தரும்பொழுது மூன்று மில்லி கிராம் குறைந்திருக்கிறது என்று சொன்னால் ஒத்துக்கொள்வோமா? மாட்டோம் அல்லவா? அதைப்போல எல்லாமே ஒரு கணக்குத்தான். 
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதலில், தான் தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதைக் கணக்கில் வைத்துக்கொள்ளவேண்டும். தாங்கள் நடக்கும் தூரத்தைக் கணக்கில் வைத்தால்தான் ‘சரியான அளவில் நடக்கிறோமா’ என்று தெரியும்.
உதாரணத்திற்கு நீங்கள் தினமும் நடைப்பயிற்சி என்ற பெயரில் நடப்பது, உங்கள் வீட்டிலிருந்து தெரு முனை வரை என்று எடுத்துகொள்வோம். அதன் தொலைவு 100 மீ என்றால், போக வர 200 மீட்டர். இதைத்தான் வழக்கமாகச் செய்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். இதை எப்படி அதிகப்படுத்தலாம் என்று யோசிக்கவேண்டும். ஒரு தெருவினுள் நுழைந்து அடுத்த தெருவின் வழியாக வந்து பார்த்து தூரத்தை அதிகப்படுத்தலாம். 
அடுத்ததாக நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு. அதாவது, நீங்கள் வீட்டிலிருந்து தெருமுனை வரைதான் நடைப்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் திரும்பவும் வீடு திரும்பும் வரையான நேர அளவு கண்காணிக்கப்படவேண்டும். ஏனென்றால் நீங்கள் ஊர்ந்து செல்கிறீர்கள் என்றால் முந்தைய பகுதியில் சொன்னது போல் அதற்குப் பெயர் ‘உல்லாச உலா’. உதாரணத்திற்கு 200 மீ சென்று திரும்ப பத்து நிமிடங்கள் ஆகிறதென்றால் அது மோசமான நடை. உங்கள் இலக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனில், உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்படவேண்டும். அதற்கேற்றபடி நடக்க வேண்டும். உங்களது வேகம் துரிதப்படுத்தப்படவேண்டும்.
இதில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொன்று, நம் உடலில் ஏற்படும் மாற்றம். சிலருக்கு நடக்கையில் மூச்சு வாங்கலாம். சிலருக்கு நீரிழப்பு ஏற்பட்டு தாகம் ஏற்படலாம். சிலருக்கு முழங்கால் வலி வரலாம். ஒருவேளை நடக்க முடியாத அளவிற்கு உடல் தொந்தரவு செய்யும் என்றால் அன்றைய பயிற்சியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துவிட்டு தக்க ஆலோசனைகளுடன் மறு நாள் நடக்கலாமே தவிர, எதற்காகவும் பயிற்சியை நிறுத்தக்கூடாது. 
ஆதலால், நம் உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளைப் புரிந்துகொள்வதற்காக, அவற்றைக் கவனிக்கவேண்டும். உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்டு யாரும் கம்பெனியின் கேட்டை ஆட்டவேண்டாம். அது வேறு டிபார்ட்மெண்ட்.
இவற்றையெல்லாம் கவனித்து ஒருவாரம் நடக்கிறீர்கள் என்றால், அடுத்து நீங்கள் உங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலம் நீங்கள் நடக்கும் அடிகளைக் கணக்கிட வேண்டும். அதன் மூலம் ஒரு இலக்கு வைத்துக்கொண்டு அதனை அடைய முயற்சி செய்யவேண்டும்.
நடக்க ஆரம்பிக்கும் புதிதில் 5000 அடிகள் என்று இலக்கு வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுதுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நடைப்பயிற்சியின் நேரத்திலோ அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் தூரத்தை உத்தேசமாகக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். (இந்த விசயத்தில் என்னைச் சொல்லவேண்டும். ஒவ்வொரு அடியையும் எண்ணியிருக்கிறேன். நடப்பதில் தீவிரவாதம் வகை)

ஒரு வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் நடக்கும் தூரத்தை, நேரத்தை, அடிகளை மறு பரிசீலனை செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, நீங்கள் உங்களது தெருமுனை வரைதான் செல்கிறீர்கள் என்றால், 200 மீட்டர் தூரத்தை அடுத்த தெருவின் வழியாகச் சென்று திரும்புவதன் மூலம் 200 மீட்டரை 400 மீட்டராக உயர்த்தலாம். பத்து நிமிடத்தில் 200 மீட்டர் என்பதை பத்து நிமிடத்தில் 300 மீட்டராகவோ அல்லது 400 மீட்டராகவோ மாற்றலாம்.
நடக்கும் அடிகளை இன்னும் உயர்த்துவதன் மூலம் உங்களது உடல் உழைப்பு அதிகரித்து அதிகமான கலோரிகள் எரிக்கப்பெறும். இதன் மூலமாக உடல் எடை குறையவோ இலகுவாக மாறவோ செய்யலாம். உங்களது நடைப்பயிற்சியை இப்படி கவனிப்பதன் மூலம் உங்கள் உடல் எடை பற்றியும் கவனம் கொள்கிறீர்கள்.
இதில் அனைவருக்கும் வரும் ஒரு சந்தேகம், எந்த நிலையில் நான் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் அல்லது எந்த நிலையில் என் தூரத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பது. நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் உங்களால் அதில் ஒன்ற முடியாது. 
நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள்.
சொல்வது எல்லாம் சரி, அதை எப்படிச் செய்வது என்று சிலர் யோசிக்கலாம். சிலருக்கு அந்த யோசனையே இல்லாமல் செய்ததையே செய்துகொண்டிருப்பார்கள். செக்கில் மாடுகளைக் கட்டி ஆட்டுவார்கள். மாட்டை அங்கு நிறுத்திவிட்டால் போதும் அது சுற்றிக்கொண்டே இருக்கும். எண்ணெய் வருகிறதா இல்லையா என்ற கவலை மாட்டிற்கு இருக்காது. அதைத்தான் ‘செக்கு மாடு கணக்கா’ என்பார்கள். ஒரே விசயத்தை எந்தப் பலனையும் ஆராய்ந்து பார்க்காமல் செய்துகொண்டிருந்தால் நேர விரயம்தான் ஆகுமே தவிர பலன் கிடைக்காது. 
அவ்வப்போது நாம் என்ன நிலையில் இருக்கிறோம் [ WHERE ARE WE ]என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டும். அதை நீங்கள் நடந்து காட்டுவதிலும் சரி, வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதிலும் சரி. யோசியுங்கள் WHERE ARE WE?
இப்போதைக்குத் தொடர்ந்து நடக்கலாம் வாங்க.
கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை.
படங்கள்: இணையத்திலிருந்து
Comments (0)