அற்புத விளக்கே கிடைத்தாலும்…

நடக்கலாம் வாங்க – பகுதி 4

சுவாரஸ்யங்களுடன்தான் நடக்கிறீர்களா? 

நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் அதில் ஒன்ற முடியாது. நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள்.

சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள்.

சுவாரஸ்யங்களை எப்படியெல்லாம் புகுத்தலாம் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். சுவாரஸ்யங்களுக்கு  நீங்களே சில கேள்விகளைக் கேட்கலாம். உதாரணத்திற்கு, 

* நடப்பதற்காக ஒதுக்கும் நேரத்தில் நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா?

* வாக்கிங் நேரத்திற்கு என்று உங்களது தனிமையையோ அல்லது உடன் நடப்பதற்கென்று சில நடக்கும் நண்பர்களையோ வைத்திருக்கிறீர்களா?

* நீங்கள் நடப்பதன் காரணத்தை அறிந்திருக்கிறீர்களா?

* அப்படி அறிந்திருந்தால் அந்தக் காரணத்தை நோக்கி நீங்கள் எவ்வளவு நகர்ந்திருக்கிறீர்கள் என்று கவனிக்கிறீர்களா?

*உங்களுடைய நடையின் வேகம், நடக்கும் தூரம் இவற்றைக் கணித்து வாரத்திற்கு ஒரு முறை உங்களுடைய உச்சபட்ச வேகம் எது, அதிகபட்ச தூரம் எது  என்று கணக்கிட்டிருக்கிறீர்களா?

* நீங்கள் நடக்கும் வேகம், தூரம் இவற்றிற்கும் உங்கள் உடல் நலத்திற்கும் நேரடித்தொடர்பு உள்ளதா என்று கவனித்திருக்கிறீர்களா? அதாவது, உங்கள் உடல் நலனுக்குத் தேவையான அளவு கலோரிகள் சரியான முறையில் எரிக்கப்படுகிறதா? அல்லது அது உங்களது comfort zone க்கு வெளியே இருக்கிறதா?

*நீங்கள் நடக்க ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நடையை முடிக்கும் நேரம் இவற்றுடன் உங்களது வேகத்தை ஒப்பிட்டு எத்தனை அடிகள் நடந்திருப்பீர்கள் என்று கணிக்க முடிகிறதா?

* ஒவ்வொருநாளும் நடைப்பயிற்சி முடிவில் உங்கள் உடலில் ஏற்படும் புத்துணர்வுகளையோ அல்லது அயற்சிகளையோ பிரித்தறிய முடிகிறதா?

* நீங்கள் புதிதாக நடக்க ஆரம்பித்த நேரத்தில் இருந்த தூர – நேர விகிதத்திற்கும் ,நடக்க ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இருக்கும் தூர நேர விகிதத்திற்கும் வேறுபாடு உள்ளதா? 

* நீங்கள் நடந்த தூரத்தையும் வேகத்தையும் உங்களுடன் நடப்பவர்களுடனோ, நடைப்பயிற்சி செய்யும் மற்றவர்களுடனோ கலந்துரையாடி அவர்களது தூரத்தையும் வேகத்தையும் ஒப்பிட்டு அறிந்திருக்கிறீர்களா? 

* உங்கள் உடல் எடையை எவ்வளவு குறைக்கவேண்டும் என்ற இலக்கோடு, நீங்கள் நடக்கும் வேகம் ஒத்துப்போகிறதா?

இது போன்ற கேள்விகள் மட்டுமல்லாது, உங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளும் உங்களுக்குள் எழலாம். 

நான் நடக்கும் வாக்கர்ஸ் க்ளப்பில் நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளான ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். அவரால் ஒரு அடியை எடுத்து வைக்கவே அவரது கணவரோ அல்லது அவரது மகனோ உடன் இருக்க வேண்டும். ஒரு கிலோமீட்டர் சுற்றி வர அவருக்கு ஒரு மணி நேரம்கூட ஆகும்.

ஆனால், அவர் தளராமல் தினம் நடந்தார். ஒரு மாதத்தில் தனியாக நடந்தார். அடுத்த மாதத்தில் அவரது வேகம் கூடியது. ஒரு வருடத்தில் அவர் தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார். அவரது உடல்நிலையால் எவ்வளவு முடியும் என்று அவரோ அவரது மருத்துவரோ கணித்து அதை நோக்கி நகர்கிறார். ‘நடந்தாக வேண்டும்’ என்ற கட்டாயம் வரும்பொழுது அவர் அதைச் செய்கிறார். 

இங்கு யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், இலக்கு உங்களைக் கட்டாயப்படுத்த வேண்டும். 

இத்தனைக் கேள்விகள் கேட்கவேண்டுமா? இப்படித்தான் சுவாரஸ்யங்கள் பிறக்குமா என்று யோசிப்பீர்கள்தானே?

எனக்குத் தெரிந்த ஓர் உறவினர் சங்கரன் கோவிலில் உண்டு. வயிறு பெரிதாகிக்கொண்டே போனது. “எடை கூடுது மாப்ள. வயிறு எனக்கு முன்னாடி போய்க்கிட்டு இருக்கு. என்ன பண்ணலாம்?” என்று கேட்டார். அவரது மன நிலைக்கு, நேரடியாக டயட் என்றால் தெறித்துவிடுவார் என்பதால் மெதுவாக “வாக்கிங் போறீங்களா?” என்றேன். 

“எப்பவாவது போவேன்” என்றார்.

“தினமும் போங்க” என்றேன். 

அதற்குச் சொன்னார், “மாப்ள, சங்கரன் கோயில்ல தண்ணி எப்ப விடுறான்னே தெரியாது. சமயத்துல பத்து நாளைக்கு ஒருவாட்டிதான் தண்ணி விடுவான். அப்ப ஆபிஸ்க்கு லீவு போட்டுலாம் தண்ணி எடுப்பாய்ங்க. வீட்ல தண்ணி வரப்ப லீவு போடலாட்டி டைவர்ஸ் வரக்கூட போயிரும் தம்பி. அப்ப எப்டி வாக்கிங் போறது?” என்றார். 

உங்களுக்கு உங்கள் comfort zone க்கு உள்ளேயே இருக்க வேண்டும். ஆனால் உடல்நிலையும் நன்றாக இருக்க வேண்டும். ஊதவும் கூடாது. சிக்ஸ் பேக் வச்ச  சல்மான் கான் மாதிரி இருக்க வேண்டும் போன்ற மந்திரத்தில் மாங்காய் விழ வைக்கும் ஆசைகள் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அற்புத விளக்கே கிடைத்தாலும் நீங்கள் அதைத் தேய்க்க வேண்டும். 

அது சரி, இத்தனை சுவாரஸ்யங்களைச் சொன்னால், ‘எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?’ என்று புதிதாய் நடக்க இருப்பவர்கள் யோசிக்க மாட்டார்களா?

யோசித்தபடியே நடக்கலாம் வாங்க.

கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை

படங்கள்: இணையத்திலிருந்து


Comments (2)


தஞ்சிகுமார்
தஞ்சிகுமார்
August 9, 2021

நடை பயிற்சி .. உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியமான ஒன்று..ஆக சுவாரஸ்யமாக நடைப் பயிலலாம்.

SURESHKUMAR KS
SURESHKUMAR KS
August 11, 2021

நடக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *