ஜார்ஜ் ஃப்ளாய்ட்டு நாள்

அமெரிக்க வரலாற்றின் முக்கியத் திருப்பம்!

அமெரிக்கா சற்றே அடங்கி இருக்கிறது. பற்றி எரிந்த கூக்குரல்கள் சற்றே ஆசுவாசம் அடைந்திருக்கின்றன. மக்களுக்குள் ஓர் ஒழுங்கு வந்திருக்கிறது. போராட்டங்களில் தற்போது கூர் நோக்கு வந்திருக்கிறது. அமைதியாக, ஆனால் வலிமையாக மக்கள் போராடிக் கொண்டிருக் கிறார்கள்.. ஒரு மாபெரும் மாற்றத்துக்கான துவக்கமாக மக்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாமே கடந்த மே 25 ம் தேதி துவங்கியது. யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், ஒரு வேளை செய்தியைக் கவனிக்கத் தவறியவர்களுக்காக சிறு முன்னோட்டம்.

அந்த மே 25-ல் அமெரிக்காவின் மினியா போலிஸ் நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற நாற்பத்தாறு வயது கறுப்பு மனிதர் ஒருவர் இருபது டாலர் நோட்டைக் கொடுத்து ஒரு பாக்கெட் சிகரெட் வாங்குகிறார். அவர் போனதும் அந்த நோட்டைப் பரிசோதிக்கும் கடை ஊழியர் அது கள்ளநோட்டு என்று சந்தேகிக்கிறார். கோபமாக வெளியே போகிறார்.

சூப்பர் மார்க்கெட்டுக்கு எதிரில் சாலையில் பார்க் செய்த காரில் உட்கார்ந்து ஜார்ஜ் ஃப்ளாய்ட் இரு நண்பர்களோடு பேசியபடி சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் செல்லும் கடை ஊழியர் அந்த 20 டாலர் நோட்டு கள்ள நோட்டு என்றும் வேறு நோட்டு தருமாறும் விவாதம் செய்கிறார். ஆனால் ஃப்ளாய்டோ அது நல்ல நோட்டுதான், உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்று சொல்லி விடுகிறார்.

கோபத்தோடு உள்ளே செல்லும் ஊழியர் உடனடியாக அமெரிக்க எமர்ஜென்சி நம்பரான 911க்கு கால் செய்து போலீசின் உதவியை நாடுகிறார். உடனடியாக அங்கே போலீசார் வந்துவிடுகிறார்கள். அங்கே நடந்ததையும், ஃப்ளாய்டு நண்பர்களோடு இன்னும் கடை எதிரில் காரில் உட்கார்ந்திருப்பதாகவும் போலீசிடம் கடைக்காரர் தெரிவிக்கிறார். உடனே போலீசார் சென்று ஃப்ளாய்டை கைது செய்கிறார்கள். ஃப்ளாய்ட் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. ஆனால் போலீஸ் காரில் ஏற மறுக்கிறார்.. ஏனென்றால் அங்கே போலீஸ் காரில் கைது செய்தவர்களைப் பின் சீட்டில் ஏற்றுவார்கள். அந்த பின்சீட்டே ஒரு சிறை போல இருக்கும். உட்கார்ந்திருப்பவர் எதிர்த்துப் போராட முடியாது. தனக்கு க்ளாஸ்ட்ரோஃபோபியா இருப்பதாகக் கூறி, ஃப்ளாய்ட் அதில் ஏற மறுத்து பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்து விடுகிறார். உடன் போலீசாரும் இருக்கிறார்கள்.

அப்போதுதான் மற்றொரு போலீசான டெரக் சாவின் வருகிறார். அவர் ஃப்ளாய்டை கீழே தள்ளி கடுமையாகக் கையாண்டு, இழுத்து வண்டியில் ஏற்ற முயல்கிறார். ஆனால் ஃப்ளாய்டு மறுபடி வண்டியில் ஏற மறுக்கிறார். உடனே அவரைக் கீழே தள்ளி அமெரிக்கப் போலீசாரின் வழக்கப்படி அவரது கழுத்தின் மீது தன் முழங்காலை அழுத்தி உட்காருகிறார். இதை அங்கே வேடிக்கை பார்த்தவர்கள் தங்கள் மொபைல்களில் வீடியோ எடுக்கத் துவங்குகிறார்கள்.

முதலில் அந்த நான்கு போலீசாரும் அவர்கள் வீடியோ எடுப்பதைத் தடுக்கிறார்கள். அதனால் முதலில் வீடியோ எடுத்தவர் வீடியோவை ஆஃப் செய்துவிடுகிறார்.. ஆனால் அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பதினேழு வயதான கறுப்பினப் பெண் ரகசியமாக வீடியோ எடுப்பதைத் தொடர்கிறார். கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள், சரியாக சொல்வதானால் எட்டு நிமிடம் நாற்பத்தாறு நொடிகள். ஃப்ளாய்டின் கழுத்தின் மீது தன் உடல் பலத்தை எல்லாம் திரட்டி டெரக் தன் முழங்காலால் அழுத்தியபடி உட்கார்ந்திருக்கிறார். ஃப்ளாய்டின் கழுத்து எலும்பு கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்குகிறது. அவரது மூச்சுக் குழல் உடைகிறது. அதற்கிடையிலும் அவர் முனகுகிறார். என்னால் சுவாசிக்க முடியவில்லை என்று பலவீனமாக சொல்ல முயல்கிறார். தண்ணீர் வேண்டும் என்கிறார். என்னைக் கொன்று விடாதீர்கள் என்று பலவீனமான குரலில் மன்றாடுகிறார். அம்மா… என்று அரற்றுகிறார். இத்தனையும் நடக்க நடக்க அவரது எலும்புகள் உடைந்து கொண்டே இருக்கின்றன.

வேடிக்கை பார்ப்பவர்கள் போலீசாரிடம் கெஞ்சுகிறார்கள். அவன் கழுத்தில் இருந்து காலை எடுங்கள் என்று மன்றாடுகிறார்கள். அவனுக்கு நாடித்துடிப்பு இருககிறதா என்று சோதிப்போம் என்று கெஞ்சுகிறார்கள். எதற்கும் அந்த நான்கு போலீசாரும் செவிசாய்க்கவே இல்லை. கடைசியில் எட்டு நிமிடம் நாற்பத்தாறு நொடிக்குள் கழுத்தெலும்பு உடைந்து மூச்சுக் குழல் நொறுங்கி ஃப்ளாய்ட் இறந்தே போகிறார்.

இத்தனையும் எதற்காக? வெறும் இருபது டாலர் நோட்டுக்காக. அவர் தந்த நோட்டு கள்ள நோட்டுதான் என்று இப்போது வரை நிரூபிக்கப்படவே இல்லை.

அவரது ஒன்பது நிமிட மரணப் போராட்டத்தை வீடியோ எடுத்த பெண் அதை வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங் களில் பதிவிடுகிறார். அதைப் பார்க்கும் நமக்கே குலை நடுங்குகிறது.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் இடத்தில் ஒரு வேளை ஒரு வெள்ளையன் இருந்திருந்தால் அந்த ஸ்டோர் ஊழியர் போலீசை அழைத்திருப்பாரா என்பதே சந்தேகம்தான். அப்படியே அழைத்து போலீஸ் வந்திருந்தாலும் அந்த போலீசார் ஃப்ளாய்டை நடத்தியது போல  அந்த வெள்ளை யனை நடத்தி இருப்பார்களா என்பதும் சந்தேகம்தான்.

நம் நாட்டில் தலித்துகளின் உயிருக்கு மதிப்பில்லை. இந்த மதவாத ஆட்சியில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் எப்போதும் தம் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலேயே வாழ்கிறார்கள். அமெரிக்கா வளர்ந்த தேசம். மிகப் பரந்த மனப்பான்மை உடையவர்களின் தேசம். அங்கே கறுப்பு வெள்ளை என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது என்றே நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அங்கே இந்தப் பாகுபாடு இருக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபடும் வெள்ளையர்களை விட, கறுப்பர்களே அதிகமாகக் கொல்லப் படுகிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்காக வெல்லாம் அமெரிக்க வெள்ளைப் போலீசார் கறுப்பர்களை சுட்டுக் கொல்வார்கள். ஒவ்வொரு முறையும் இந்தக் கொலைகள் பெரும் சர்ச்சை யாகும். ஆனாலும் பின்னால் அடங்கிவிடும்.

ஆனால் ஃப்ளாய்ட் படுகொலை ஒவ்வொரு நியாயமான அமெரிக்கனின் மனத்தையும் உலுக்கிப் போட்டிருக்கிறது. அந்த வீடியோவில் தெறித்த வன்முறையின் வன்மம் தாங்காமல் மனதுக்குள் அறவுணர்வு இருக்கிற ஒவ்வொரு அமெரிக்கனும் போராட வீதிக்கு வந்தான். அதில் வெள்ளையன் கறுப்பன் என்ற பேதம் இல்லை. பழுப்பு, மஞ்சள், சிவப்பு என்ற நிற வேறுபாடே இல்லை. கிட்டத்தட்ட முக்கால்வாசி அமெரிக்கர்கள் இந்தப் படுகொலையைக் கண்டித்தார்கள்.

அமெரிக்க சமூகம் என்பது கொண்டாட்டமான சமூகம்தான். அவர்களது சமூக ஒழுக்கம் என்பது நிறைய விலக்குகளும் விதிவிலக்குகளும் கொண்டது. ஆனாலும் அவர்களிடம் இருக்கும் சமூக அறம் சார்ந்த மனநிலை மிக மிக உயர்வானது.

மினியாபோலிஸ் நகரவாசி கறுப்பர்கள் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு கலவரத்தில் இறங்கினார்கள். கார்கள் எரிக்கப்பட்டன. மினியாபோலிஸ் நகர போலீஸ் ஸ்டேஷன் கொளுத்தப்பட்டது.  தற்போது இந்த போலீஸ் ஸ்டேஷன் தீ வைக்கப்பட்டது தொடர்பாக 23 வயது கறுப்பின இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். என்றாலும் அவர்களது போராட்டம் முதலில் ஆக்ரோஷமாகத்தான் இருந்தது. இது பல நகரங்களுக்கும் பரவியது.

இந்த கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் ஒன்று கூடி போராட்டங்களிலும் கலவரங்களிலும் ஈடுபட்டார்கள் என்பது ஆச்சரியமான உண்மைதான். ஆனாலும் போராட்டம் பரவியது. நாடு முழுக்க போலீசுக்கு எதிரான போர்க்குரல்கள் எழுந்தன.

ட்ரம்ப் அரசாங்கம் இதை, வழக்கமான ஓர் எதிர்ப்புக் குரல் என்றும் எளிதில் அடக்கி விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டது. அதனாலேயே மினியாபொலிசுக்குத் துணை ராணுவப் படையை அனுப்பி அடக்கப் பார்த்தது. அதைப் பொய்யாக்கி இன்று வரை அணையாச் சுடராக இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

அமெரிக்க வரலாறே கறுப்பினத்தவரின் அடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்டது. உண்மையில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் உட்பட உலகமெங்கும் புதுப் புது தேசங்களைக் கண்டு பிடித்தவர்கள் எல்லாரும் அடிமை வணிகத்தில் ஈடுபட்டவர்கள்தான். அடிமை வணிகம் என்றால் என்ன என்பது உங்களுக்கு முதலில் புரிய வேண்டும். கொலம்பஸ் மாதிரியான ஆட்கள் எல்லாம் ஒரு கப்பலில் ஆட்களையும் துப்பாக்கிகளையும் வெடி மருந்துகளையும் ஏற்றிக் கொண்டு கிளம்புவார்கள். ஆப்பிரிக்க தேசத்தில் சென்று இறங்குவார்கள். அங்கே மிருக வேட்டையாடுவது மாதிரி ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவரைச் சுற்றி வளைத்து வேட்டையாடுவார்கள். அவர்கள் கை கால்களில் சங்கிலி கட்டிக் கப்பலில் ஏற்றி வருவார்கள்.

அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் புதுப்புது குடியிருப்புகள் உருவாகிக் கொண்டிருந்த நேரம். அவரவர் தங்களால் முடிந்த அளவுக்கு நிலங்களை வளைத்துப் போட்டிருந்தார்கள். ஆனால் அந்த நிலங்களில் வேலை பார்க்க வேலையாட்கள் இல்லை. ஏனெனில் வெள்ளையர்கள் அனைவருமே நில உடைமையாளர்கள். அவர்கள் வளைத்துப் போட்ட நிலத்தைப் பண்படுத்தி விவசாய வேலைகள் செய்ய ஆட்கள் தேவை. இந்த நேரத்தில்தான் கொலம்பஸ் மாதிரியான மாலுமிகள் கப்பல் கப்பலாக கறுப்பினத்தவரைக் கொண்டு வந்து இறக்குகிறார்கள். வேலையாட்கள் தேவைப்படும் வெள்ளை முதலாளிகள் அங்கே வந்து கறுப்பினத்தவரை ஏலத்தில் எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட கறுப்பினத்தவரைத் தத்தம் ஆக்கிரமிப்பு நிலங்களுக்குக் கொண்டு சென்று வேலை பார்க்க வைத்து லாபம் பார்த்து கொழுப்பார்கள். ஆக இந்த அடிமை வியாபாரம்தான் கொலம்பஸ் போன்ற ஆட்களுக்கு மூலதனம். இப்படி அடிமைகளாக வந்த கறுப்பினத்தவர்கள்தான் பிற்காலங்களில் பல போராட்டங்களுக்குப் பிறகு அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாக ஆனார்கள்.

ஆனாலும் இன்று வரை கறுப்பினத்தவர் மீதான துவேஷம் அமெரிக்காவின் குறிப்பிட்ட சதவீதம் வெள்ளையர்கள் மனதில் கனன்று கொண்டுதான் இருக்கிறது. இன்னும் அவர்கள் வெள்ளையர்கள்தான் உயர்வானவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கறுப்பினத்தவர் அனைவரும் அடிமையாக வந்தவர்கள், அவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கூட்டம் அமெரிக்காவில் மிக அதிகமாக உள்ளது. இதைத்தான் ஒயிட் சுப்ரீமசி – white supremacy – என்கிறார்கள். இந்த மன நிலை இன்றுவரை உள்ளதால்தான் வெள்ளை போலீசார் கறுப்பினத்தவரைக் கொடூரமாக நடத்துகிறார்கள். இந்த வெள்ளை போலீசாரின் கடுமை காரணமாக இன்றுவரை அமெரிக்காவில் உயிரிழந்திருக்கும் கறுப்பர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.. அதன் அண்மைக்கால  களப்பலிதான் ஜார்ஜ் ஃப்ளாய்ட்.

இப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பைப்பற்றிப் பார்ப்போம். வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் இந்த வொயிட் சுப்ரீமசி என்னும் கருதுகோளை முதன்மையாகக் கொண்டவர்தான் ட்ரம்ப். அதனாலேயே ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலையை வெளிப்படையாகக் கண்டிக்காமல் அதை எதிர்த்துப் போராடுபவர்களை ஒடுக்க நினைக்கிறார். இதுதான் பெரும்பான்மை அமெரிக்க மக்களின் கோபத்துக்குக் காரணம்.

மொத்த நாடும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வெள்ளை மாளிகை முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் போராடிக்  கொண்டிருக்கிறார்கள். அந்தத் தருணத்தில் ஒரு அதிபராக ட்ரம்ப்  என்ன செய்ய வேண்டும்.? அந்த மக்களுடன் பேச வேண்டும், அவர்களது கோரிக்கை என்ன என்பதைக் கேட்க வேண்டுமல்லவா? ஆனால் ட்ரம்ப் அதைச் செய்யவில்லை. வெள்ளை மாளிகை முன்பு மக்கள் போராடிக் கொண்டிருக்க அவர் சர்ச்சுக்குப் போக விரும்புகிறார். உடனே ராணுவமும் சீக்ரெட் சர்வீஸ் ஏஜன்சியும் வெள்ளை மாளிகை முன்பு போராடும் மக்களை அடித்துத் துரத்துகிறார்கள். ரப்பர் புல்லட்களால் மக்களைத் தாக்குகிறார்கள். பெப்பர் ஸ்பிரே எனப்படும் மிளகாய்க் கரைசலை மக்களின் கண்களில் தூவி அவர்களை அலற வைக்கிறார்கள். மக்கள் கலைந்து சென்றபின் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் அருகில் இருக்கும் சர்ச்சுக்குச் செல்கிறார். அங்கே தன் கையில் இருக்கும் பைபிளை உயர்த்திக் காட்டுகிறார். அதாவது அவர் கிறித்தவத்துக்கு கட்டுப்பட்டவர் மற்றும் பழமைவாதி என்பதை மக்களுக்குக் குறிப்பால் உணர்த்துகிறார். இதுதான் வலது சாரிகளின் சமிக்ஞை.

ஆனால் இதில்தான் ஒரு மிகப்பெரிய  திருப்பம் நடந்தது. அது என்னவென்றால், அமெரிக்க ராணுவத்தின் தலைமை அதிகாரி மில்லிதான் அன்று டொனால்டு ட்ரம்ப்புடன் இருந்து அவரைப் பாதுகாப்பாக அந்த சர்ச்சுக்கு அழைத்துச் சென்றவர். பின்பு அவரே, நான் செய்தது மிகப் பெரிய தவறு, போராடும் மக்களை ஒடுக்கிவிட்டு ட்ரம்ப்பை சர்ச்சுக்கு அழைத்துச் சென்றது மிகப் பெரிய தவறு. அதிலும் ட்ரம்ப்போடு நான் புகைப்படம் எடுத்துக் கொண்டது நான் போராடும் மக்களுக்கு எதிரானவன் என்பது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. ட்ரம்ப்போடு புகைப்படம் எடுத்துக் கொண்ட எனது செய்கைக்காக நான் மனதார மன்னிப்புக் கேட்கிறேன் என்றார் மில்லி. ட்ரம்ப்பால் எதுவும் சொல்ல முடியவில்லை.

ட்ரம்ப் பைபிளைத் தனது கேடயம் போல எடுத்துச்  சென்றார். எதற்காக..?

ஏனென்றால், அதன் பெயர்தான் மதவாதம். பைபிளை நம்பும் வெள்ளையர்கள் கறுப்பர்களின் உரிமைகளை மதிக்க முடியாது என்ற பிடிவாதம். உலகம் முழுக்க வலது சாரிகள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.

அதென்ன வலது சாரிகள்..?

வலதுசாரிகள் என்பவர்கள் பழமை விரும்பிகள். சாதியச் சமூகம் இருக்கிறதா..? அப்படியென்றால் அந்தச் சாதிய படிநிலை அப்படியே இருக்க வேண்டும். கறுப்பு வெள்ளை என்ற வித்தியாசம் இருக்கிறதா.? அது அப்படியேதான் இருக்க வேண்டும். கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள். தலித்துகளை விட, தேவர்கள், பிள்ளைகள், முதலியார்கள், ரெட்டியார்களைவிட பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள். இந்தப் படிநிலை அப்படியே தொடர வேண்டும் என்று சொல்வது தான் வலதுசாரி மன நிலை. ட்ரம்ப்பும் அப்படிப்பட்டவர்தான். இந்த வலதுசாரி மனநிலை தற்போது அமெரிக்காவில் எடுபடவில்லை.

அமெரிக்காவில் கொரோனா  ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இந்த கட்டுரையை நான் எழுதும் இந்த நிமிடம் ஒரு லட்சத்துப் பதினெட்டாயிரத்துக்கு மேல் அமெரிக்க உயிர்கள் கொரோனா வைரசுக்குப் பலியாகியுள்ளன. ஆயினும் இந்த பயத்தைத் தாண்டி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அழுத்தம் தாங்காமல் மினியாபோலிஸ் நிர்வாகம் தனது போலீஸ் துறையையே கலைத்துவிடத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

நாடு முழுக்க கன்ஃபெடரேட் எனப்படும் அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பழைய தலைவர்களின் சிலைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்றைய தேதியில் கொலம்பசின் சிலை கெண்டகியின் ஓர் ஏரிக்குள் வீசப்பட்டு இருக்கிறது.

ஒரு பக்கம் Black Lives Matter என்ற கூக்குரல் கொண்ட பேரணியின் வலு அதிகமாகிக் கொண்டே வருகிறது. இன்னொருபுறம் கறுப்பர்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று விரும்பும் வெள்ளைப் பேரினவாதிகள் இந்த பேரணிகளுக்கு தத்தம் எதிர்ப்பைத் தெரிவித்தபடியேதான் இருக்கிறார்கள்.

ட்ரம்ப்பின் செல்வாக்கு பயங்கரமாக சரிந்து வருகிறது. ஒரு வாரம் முன்பு பைடனை விட 14 புள்ளிகள் குறைவாக இருந்த ட்ரம்ப் தற்போது 18 புள்ளிகளுக்கும் மேல் பின்தங்கி இருக்கிறார். இதை எல்லாம் நாங்கள் எளிதாகக் கடந்து வந்து வெற்றிபெறுவோம் என ட்ரம்ப் தரப்பினர் வீராப்பு பேசினாலும், தற்போது அந்த தரப்பு பதறிப் போயிருப்பதுதான் உண்மை. அமெரிக்கா பெரும் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது போலத்தான் தெரிகிறது.

மே 25 என்பது அமெரிக்காவின் மெமோரியல் டே. அதாவது இன்று வரை அமெரிக்காவுக்கான போர்களில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் தியாகத்தைக் கொண்டாடும் ஒரு நாள். ஆனால் இனி வரும் காலங்களில் இந்த மே 25 ஜார்ஜ் ஃப்ளாய்டு டேயாக கொண்டாடப் படும் என்பதே உண்மை. சொல்லப் போனால் அமெரிக்க விடுதலைப் போர்களில் உயிர்த் தியாகம் செய்த அமெரிக்க வெள்ளை கறுப்பின வீரர்களை விட ஜார்ஜ் ஃப்ளாய்டின் தியாகம் மிக மிக முக்கியமானது. ஏனென்றால் மற்றவர்களாவது அமெரிக்க  மேலாண்மைக்காக உயிர் துறந்தார்கள். ஆனால் ஜார்ஜ் ஃப்ளாய்டு.. சமூக நீதிக்காக உயிர் துறந்தார்.

இனி அமெரிக்க போர்த் தியாகிகளின் நாள் என்பது ஜார்ஜ் ஃப்ளாய்டு நாள் என்றே அழைக்கப்படும். இதுவே வரலாற்றின் முக்கியத் திருப்பம்.


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *