இசையோடு சில இனிய நினைவுகள்
அன்பிற்கினிய சுவடு மின்னிதழ் வாசகப் பெருமக்களே வணக்கம்!
ஒரு படைப்பாளி வெகுஜன ஊடகங்களில் எழுதுவதே பெருமையென நினைத்து வாய்ப்புத்தேடி எழுதிய காலமொன்றிருந்தது. அவ்வகையான ஊடகங்கள் இலக்கியத்திற்கென் இணை ஏடுகள் நடத்தத் தொடங்கியதும் அதில் எழுதுவதை பெருமை யாகப் பார்க்கப்பட்டது. அதன் பின் வந்த கால மாற்றத்தில் எல்லாம் வணிக மயம் என்றான பின் படைப்பாளிகள் சிற்றிதழ்கள் பக்கம் திரும்பினர். தொடங்கிய திலிருந்தே வியாபார நோக்கமின்றி தரமானதைத் தேடி அச்சிட்டுத் தந்து கொண்டிருக்கும் சில பல சிற்றிதழ்களுக்கு மாற்ற மில்லாத மரியாதை இருந்து கொண் டேதான் இருக்கிறது. ஊடகத் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் அச்சிதழ்கள் மின்னிதழ்களாக மாறிவிட்டது. அதனோடு ஏற்பட் டுள்ள அசாதாரணச் சூழலில் இதைத்தான் செய்யமுடியுமென்ற நிலைக்கு இன்று எல்லாத் துறையும் வந்துவிட்ட நிலையில் ஒரு தரமான நடுத்தர நடுநிலை இதழாக சுவடு மின்னிதழ் வருகிறது. வாழ்த்துக்கள். இதில் எனது படைப்புகளையும் வழங்கி பங்கேற்பு செய்வதில் மகிழ்கிறேன்.
“இசையோடு சில இனிய நினைவுகள்” என்ற தலைப்பில் இவ்விதழில் மாதம் இருமுறை உங்களைச் சந்திக்க வருகிறேன்.
வாஞ்சையுடன்
உங்கள் வளநாடன்
அன்று அந்தக் கல்லூரியில் கலைவிழா நாள். மாலையில் மேடை நிகழ்வுகளும் காலையில் கலகலப்பான உள்ளரங்கு கேளிக்கை களும் நடந்து கொண்டிருந்தது. மாணவர்களின் கலை ஆர்வத்தை அறிந்து கொள்ளூம் விதமாக பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக மாணவர் களிடம் தங்களுக்குப்பிடித்த கவிஞர்கள், அவர்களைன் படைப்புகளைப் பற்றி ஒரு ஆசிரியர் மாணவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு மாணவன் எழுந்து பா.விஜய் என்றான். அவரின் பாடல் வரிகளில் உள்ள கவித்துவமான வரிகளை மேற்கோள் காட்டினான். ஒரு மாணவி எழுந்து நா.முத்துக்குமார் என்றவள் அதைப்போல ஒரு பாடலில் உள்ள ஒரு வரியை சற்று ராகத்தோடு பாடலாகவே பாடிக் காட்டினாள். அதற்குப் பின் மாணவர்களிடையே உற்சாகம் வந்து ஒட்டிக்கொள்ள கீழிலிருந்து மேல் வரிசையில் வைரமுத்து, வாலி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமென அவரவர்களுக்குப் பிடித்த கவிஞர்களையும், அவர்கள் எழுதிய பாடல்களில் அவர்களுக்குப் பிடித்த வரிகளையும் மேற்கோள் கட்டி சிலர் வாசித்துக் காட்டியும், சிலர் பாடிக்காட்டியும் அந்நிகழ்வை கலகலப்பாக்கிக் கொண்டிருந்த போது ஒரு மாணவி எழுந்து தனக்குப் பிடித்த கவிஞர் அவரென்றும், அவரடு கவிதையில் இந்தந்த வரிகளால் எனக்கு அவரைப் பிடிக்கும் என்றும் கூறினார். ஆட்டமும், பாட்டமும் கொஞ்சம் அடங்கி அறை சற்று அமைதியானது. அதற்குப் பின் சில முணுமுணுப்புகள் எழத்தொடங்கியது. இவரை யாரென்று தெரியாது. அவர் எழுதியதாகச் சொன்ன கவிதையும் எங்களுக்குத் தெரியாதே என்று சொல்ல, சிலர் முணுமுணுப்பைக் கடந்து சற்று கேலியாகவும், கிண்டலாகவும் சிரிக்கவும், பேசவும் தொடங்கியதும் அந்த மாணவி மீண்டும் எழுந்து
”சார்… தங்களுக்குப் பிடித்த கவிஞர்கள், அவர்களின் கவிதை களையும் சொல்லவேண்டும் என்றுதானே நீங்கள் கேட்டீர்கள்? அதில் பிரபலமானவரின் பெயரைச் சொல்லுங்கள் என்று நீங்கள் கேட்க வில்லையே” பிரபலமாவது என்பது படைப்பின், கவிதையின் அடிப்படையில் மட்டும் எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை. அவரவர்களின் சந்தர்ப்பம், சூழல், அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு, அதைச் சரியாய் பயன்படுத்தி அவர்கள் அடைந்த வெற்றி அதனால் கிடைப்பதுதான் பிரபலம் என்பதே. இங்கே நான் குறிப்பிட்டுச் சொன்ன கவிஞரும் நல்ல கவிஞர்தான். இவரது கவிதைகளும் படைப்பும் சிறந்ததுதான். அவருக்கு அந்த பிரபலமாகும் வாய்ப்பு அமையவில்லையே தவிர அவரது எந்தக் கவிதையையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. மேலே இவர்களெல்லாம் குறிப்பிட்ட அந்தக் கவிஞர்களெல்லாம் சிறந்த கவிஞர்கள்தான். அதை நான் மறுக்கவில்லை, நானும் அவர்களத் விருப்பத்தை ஏற்று அவர்களின் பெயர்களைச் சொல்லும்போதெல்லாம் கைதட்டி வரவேற்றேன். அவர்களுக்கு விருப்பமான பிடித்த கவிஞர்கள் இருக்கும்போது எனக்குப் பிடித்த ஒரு கவிஞர் பெயரைச் சொன்னபோது ஏன் இவர்கள் கேலி பேசி கிண்டல் செய்கிறார்கள்? என்ற அந்த மாணவி இறுதியாய் அங்கே இன்னொன்றையும் சொன்னாள்.
”சார் இங்குளோர் குறிப்பிட்ட அந்தப் பெயர்கள் அனைவருமே பாடலாசிரியர்கள், இசைகோர்த்து இன்னொருவர் பாடி, திரைப்படத்தில் காட்சியாகி பட்டிதொட்டியெங்கும் பார்க்கப்பட்டுபேசப்பட்டு, ஒலிக்கப்பட்ட திரைப்படம் சார்ந்து எழுதியர்கள். நான் சொன்னவர் கவிதை மட்டுமே எழுதிய ஒரு கவிஞர்” என்றதும் மீண்டும் அந்த அறை அமைதியால் நிறைந்தது. ஆசிரியர் அந்த மாணவி சொல்வதும் சரிதானே? பிடித்த கவிஞர்கள் பெயரைத்தான் நான் கேட்டேனே தவிர பிரபலமான கவிஞர்கள் பெயரைச் சொல்லுங்கள் என்று எனது கேள்வியில் இல்லையே” என்றதும் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு கைதட்டு எழும்ப அனைத்து மாணவர்களும் கை தட்டிட மீண்டும் மாணவர்களிடையே உற்சாகம் ஓடிவந்து ஒட்டிக் கொண்டது. ஆசிரியர் அந்த மாணவியின் பக்கம் திரும்பி அவள் சொன்ன கவிஞரைப் பற்றிய மேலும் விவரம் கேட்டதும், அவள் சொன்னாள்
”சார்…. நான் குறிப்பிட்டுச் சொன்ன அந்தக் கவிஞர் வேறு யாருமில்லை எனது அப்பாதான். அவரும் நல்ல கவிஞர்தான். அவரது எளிமையான இனிய கவிதைகள் பல எனக்குப் பிடிக்கும். இது என் அப்பா எழுதிய கவிதையென நான் சொல்லி விட்டுத் தொடங்கி யிருந்தால் அந்தக் கவிதை கூட இந்த அறைக்குள் இருக்கும் இந்த மாணவ, மாணவி களிடம் சென்று சேர்ந்திருக்காது. அதனால் பிடித்தவர் என பெயர் சொல்லிவிட்டு அவரதுஒரு கவிதை யையும், இங்கு வாசித்துவிட்டு, அதற்கு இத்தனை விளக்கமும் சொல்ல வேண்டிய தாயிற்று. இதற்குப் பெயர் வாய்ப்பும், சூழலும் என்பது” என்றாள்.
மேலே நான் குறிப்பிட்டுள்ள நிகழ்வு கற்பனையல்ல. ஒரு கல்லூரியில் கலைவிழா அன்று நடந்த உண்மை நிகழ்வுதான். அந்த மாணவி எனது மகள். அவள் குறிப்பிட்ட கவிஞர் நானேதான். என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள வேண்டுமென இந்நிகழ்வை இங்கே குறிப்பிடவில்லை. ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் இணைத்துச் சொல்ல ஒருவாய்ப்புதான் அது.
ஒரு இசைக்குழு ஒன்றில் நான் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது மேடையில் நாமும் ஒரு பாடலைப் பாடிவிட வேண்டுமென ஆசைப்பட்டு இசைக்குழு ஒருங்கிணைப் பாளரிடம் வாய்ப்புக் கேட்டேன். யாருடைய குரல் உனக்கு ஒத்துவருமோ அவரோட குரலில் பிரபலமான ஒரு பாடலைத் தேர்வு செய்து நல்ல பயிற்சி எடுத்துக்கொண்டு வா என ஒப்புதல் அளித் தார். அப்போது எனக்கு ஏகப்பட்ட பாடகர்களை எனக்குப் பிடிக்கும். அதில் டி.எம்.எஸின் கம்பீரமான குரலில் மயங்கிப்போனேன். ஆனால் அவரது எந்தப்பாடலும் எனக்கு அதாவது எனது குரலுக்கு ஒத்துவராதபோது, பல்கலை வித்தகர் சந்திரபாபுவின் குரல்தான் அவர் பாடிய பாடல்தான் சரியாக இருக்குமென நாம் பாடிடக் கேட்ட நண்பர்கள் சொன்னதால் அவருடைய பாடலொன்றைத் தேர்வு செய்து பாடிப்பாடி பயிற்சி செய்துகொண்டு இரு நிகழ்ச்சியில் ஒரு வாய்ப்பு பாடுவதற்கு எனக்கு வந்தது. அப்போதும் டி.எம்.எஸ்.குரல்மீது உள்ள ஈர்ப்புக் குறையாத காரணத்தால் ரொம்ப மென்மையாய் அவர் பாடிய பாடலொன்றைத் தேடிப்பிடித்து தேர்வு செய்தேன். பயிற்சியெடுத்து குழுவினர் முன் பாடிக்காட்டி அடுத்த நிகழ்ச்சியொன்றில் பாடுவதென முடிவானபின் பாடலின் வரிகளைப் பாடப்பாட எளிமையும் அந்தப் பாடலில் தன் காதலையை வர்ணிக்க கவிஞர் எடுத்தாளும் உவமை மேற்கோளும் அந்தப் பாடலை எழுதியவர் மேல் எனக்கொரு அன்பும், மரியாதையும் என்னையுறியாமல் வந்துவிட்டது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, உடுமலைப் பேட்டையார், ஆலங்குடி சோமு, வாலி, இவர்கள் வரிசையில் இன்னொரு கவிஞரே அவர். (கண்ணதாசனை ஏன் இவர்களில் சேர்க்கவில்லை என ஒரு கேள்வி எழலாம். அவர் எங்க ஊர்க்காரர் என்பதோடு எல்லாருக்கும் மேல் என் இதயத்தில் இடம்பிடித்தமர்ந்தவர். ஏன் என்பதற்கு என்னிடம் நிறையப்பதில் உள்ளது) கண்ணதாசனை விடுத்த கவிஞர்கள் பட்டியலில் இன்னொருவர் இருந்தார் என்றேனே அந்தக் கவிஞர் எழுதி, டி.எம்.எஸ் அவர்கள் மிக மென்மையாகப் பாடிய அந்தக் காதல் பாடலைத்தான் நான் இசைக்குழுவில் பாடுவதற்காக நான் தேர்வு செய்திருதேன். அந்தக் கவிஞர்தான் கவிஞர் கா.மு.ஷெரிப். அவர் எழுதிய அற்புதமான மேற்கோளுடன் தன் காதலியை வர்ணித்துப்பாடும் மிக எளிமையான அதே நேரம் மிக இனிமையான பாடல்தான் நான் பாடிக் கைதட்டல்கள் வாங்கினேன். அது என்ன பாடலாக இருக்குமென யோசித்துக் கொண்டிருங்கள்.
அடுத்த இதழில் அதைப்பற்றிச் சொல்கிறேன்.
Comments (0)