இந்தியாவின் தேவை, சீனாவுடன் போரா? பொருளாதாரக் கட்டமைப்பா?
உ
னையாள்வதே பெரும்பாடம்மா… ஊராள்வது எனக்கேதம்மா…
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான பாடல் வரிகள் இவை. இது யாருக்கு ஒத்துப் போகிறதோ இல்லையோ, இன்றைய நிதர்சன அரசியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கனக்கச்சிதமாகப் பொருந்துகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளைத் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக வல்லரசு நாடான அமெரிக்காவே கதிகலங்கிப் போயுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, சுயசார்பு இந்தியா எனும் திட்ட வரைவு ஒன்றை அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. உள்நாட்டுப் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் சார்பில் கூறப்பட்டாலும், நடைமுறையில் இது சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
இந்திய சீன எல்லைப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் இந்தச் சூழலில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாராகும் உள்ளூர் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என பிரதமர் கூறியிருந்தார். இந்த அறிக்கை வெளிவந்த சில நாட்களில் நாட்டில் சிலர் சீனப் பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வணிக உலகத்தின் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டி ருக்கும் சீனாவை நம்பித்தான் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை மறந்து தற்போது சீனப் பொருட்களுக்கு எதிரான வர்த்தகப் போராட்டத்தைக் கையாண்டு வருகின்றனர்.
வரலாறு தெரியாதவர்களுக் காக…
சீனாவிடமிருந்து 2018-19 நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது. நாட்டின் மொத்த இறக்குமதி மதிப்பில் இது 17% ஆகும். சீனாவைப் பொறுத்தவரை அந்நாடு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் இது வெறும் 6% மட்டுமே. இதே காலகட்டத்தில் இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது சுமார் 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம் மட்டுமே. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 5 லட்சத்து 84 ஆயிரம் கோடிகள் என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் ஒட்டுமொத்த 2019-20 உள்நாட்டு உற்பத்தி 200 லட்சம் கோடியில் நேரடி அந்நிய முதலீடுகள் (FDI) மற்றும் வர்த்தக முதலீடுகளில் சீனாவின் பங்கு மட்டுமே சுமார் 1 லட்சம் கோடி என்று தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவிற்கான உலக வர்த்தகத் தொடர்பு நிறுவனமான கேட்வே ஹவுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள பேடிஎம் மால், ஸ்விகி, ட்ரீம்11 உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் சீன முதலீட்டாளர்கள் சுமார் 580 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 30 சதவீத ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் சீனாவிடமிருந்து வாங்கப்படுவதாக தெரிவிக்கின்றது இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு.
தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ள இன்றைய நவீன உலகில் மொபைல் போன்கள் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இந்தச் சூழலில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்றும் பயன்பாட்டில் உள்ள 90 சதவிகித போன்கள் சீன தயாரிப்புகள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை விட, சுமார் ஏழு மடங்கு இறக்குமதி செய்கிறது.
உணவுப் பொருட்கள் முதல் மின்னணுப் பொருட்கள், சைக்கிள், சூரிய மின்கலங்கள், காசநோய், தொழுநோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் வரை முழுவதுமாக நம் நாட்டு வணிகர்கள் சீனத்து வர்த்தகத்தையே நம்பி உள்ளனர். குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான முதலாளிகள் சீனாவில் தங்களது அலுவலகத்தை நிறுவி இந்தியாவிற்கான ஏற்றுமதி வர்த்தகத்தை வழி நடத்துகின்றனர். கடந்த 2017-18ல் மட்டுமே இந்தியாவின் மின்னணு உபகரணத் தேவையில் ஏறத்தாழ 60 சதவீதமும், விளையாட்டு பொம்மைகளில் 90 சதவீதமும் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக அதிகமாக விற்பனை செய்யப்படும் ஐந்து ஸ்மார்ட் போன் பிராண்டுகளில் முதல் நான்கு சீனாவைச் சேர்ந்தவை. இந்த நான்கு பிராண்டுகளும் இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் 70%ஐ ஆக்கிரமித்துள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாயில் சுமார் 40 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீடுகள் மூலமாக சீன நிறுவனங்களின் துணையோடு இந்தியப் பொருளாதாரம் இயங்கிவரும் இந்த வேளையில் சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று ஒரு குழுவினர் சுற்றி வருகின்றனர். அவர்களை நோக்கி தான் இந்தக் கட்டுரையின் முதல் வரியில் வரும் பாடலைப் பிரதமர் பாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்.. உங்களை ஆள்வதற்கே எனக்கு நேரம் போதவில்லையே! ஓட்டுப் போட்ட மக்களுக்குப் பணி செய்ய நேரம் எங்கே உள்ளது? எனப் பிரதமர் வருத்தம் கொள்ளும் அளவிற்கு ஆளுங்கட்சி ஆதரவாளர்களின் சமீபத்திய செயல்பாடுகள் உள்ளன.
அந்நிய நாட்டு வணிகப் பொருட்களை நிராகரிப்பதற்கான அறைகூவல் ஒன்றும் நமக்கு புதுமையோ தனித்துவமோ அல்ல. மேலும் இந்தியா ஒரு சுயசார்பு நாடாகத் திகழ வேண்டும் என்பது இன்றைய ஆட்சியாளர்களின் கண்டுபிடிப்பும் அல்ல. காந்தி காலத்திலிருந்தே இது பற்றி நாம் பேசி வருகிறோம். காந்தி காலத்தில் அறிவுறுத்தப்பட்ட அந்நியப் பொருட்கள் எதிர்ப்பு முழுக்கம் மற்றும் சுதேசிப் பொருட்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் பின்னணியில் ஒரு தெளிவான செயல்திட்டமும், தனிப்பட்ட உறுதியும் இருந்தது.
சுதந்திரம் அடைந்த கையோடு, காந்தியோடு அவருடைய கொள்கைகளையும் சேர்த்தே கழற்றிவிட்ட இந்தியாவினுடைய எந்த ஒரு கட்சியும் இன்றைய சுயசார்பு இந்தியாவிற்கான தனித்துவமான செயல்திட்டங்களை கொண்டிருப்பதாக சொல்லவில்லை. இப்படியான சூழலில் வெறும் சுயசார்பு தொடர்பிலான முழக்கத்தை எப்படிப் பார்ப்பது என்ற கேள்வியை வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரங்காச்சாரி.
உலகின் பல நாடுகளில் இது போல நடைபெற்ற சுயசார்பு வர்த்தகப் போராட்டங்கள் கடைசியில் தோல்வியில் முடிவடைந்ததாகவே வரலாறுகள் சான்றளிக்கின்றன. 1930களின் முற்பகுதியில் சீனா ஜப்பானியப் பொருட்களை நிராகரிக்க முயன்றதும். 9/11 சம்பவத்துக்குப் பிறகு ஈராக்கிற்குத் தனது துருப்புக்களை அனுப்ப பிரான்ஸ் மறுத்தபோது அமெரிக்கக் கூட்டு நாடுகள் 2003 வாக்கில் பிரான்சின் பொருட்களை நிராகரிக்க முயன்றதும். பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய, அமெரிக்க நிலைப்பாட்டின் காரணமாகப் பலமுறை ஆப்பிரிக்க தேசங்களும் அவற்றின் பொருட்களை நிராகரித்துள்ளதும் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்துள்ளது. இந்த போராட்டங்களில் பொதுவான அம்சம் என்னவெனில் மேற்கண்ட எந்த சுயசார்பு வர்த்தக போராட்டமும் வெற்றி பெறவில்லை என்பதுதான். மேலும் போராட்டம் ஆரம்பித்த சில வாரங்களிலேயே இந்தப் புறக்கணிப்புக் கோசங்கள் நீர்த்துப் போய்விட்டன. உணர்ச்சிகளாலும், தனி மனிதத் தூண்டுதல்களாலும் அந்நிய நாட்டின் பொருட்களைப் புறக்கணிப்பது என்பது வெறும் அறைகூவலாகத்தான் இருக்குமே தவிர, நமக்கு சுயசார்புப் பொருளாதாரத்தையோ ‘ஆத்மநிர்பார்’ பாரத்தையோ பெற்றுத் தந்து விடாது. இந்த நாட்டின் நிலைமைக்குத் தகுந்த செயல்திட்டம் முன்வைக்கப்படுவது அவசியம்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மக்களையும் நாட்டின் சுதந்திரத்திற்குப் போராட உணர்ச்சிப்பூர்வமாக ஒன்றிணைத்தது வந்தே மாதரம் எனும் சுதந்திர முழக்கம். இனம், மதம், மொழி, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி ஒட்டுமொத்த இந்தியர்களின் உணர்ச்சிகளையும் தீப்பிழம்பாக உசுப்பேற்றி நாட்டையே போராட்டக் களமாக மாற்றியது அன்றைய தேசிய ஒற்றுமை. ஆனால் இன்று காணப்படும் முரட்டு தேசபக்தியும், அதீதமான அரசியல் சித்தாந்தமும்தான் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்குப் பெரும் காரணமாக இருக்கின்றன.
உலகமயமாக்கல் பரிணாமத்தில் இயங்கி வரும் இந்தக் காலத்தில் உலக வர்த்தக நிறுவனங்களின் விதிகளாலேயே ஒட்டுமொத்த தேசங்களும் நிர்வகிக்கப்படுகின்றன. தேசங்களுக்கிடையே எளிதான வர்த்தக நடைமுறைகளை வெறும் மலிவான வார்த்தை ஜாலங்களால் தடை போட முயன்றால், அது இன்னொரு வழியில் எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்து விடுகிறார்கள் போலும்.
சீனா இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகப் பங்காளி என்பதையும் தாண்டி உலக வர்த்தகச் சந்தை சீனாவுக்கு ஆதரவாகவே இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் உற்பத்தித் திறன் வரம்புக்குட்பட்ட அளவிலேயே இருக்கும்போது, சுயசார்புப் பொருளாதாரம் எனத் தனிப்பட்ட முறையில் வர்த்தகப் போரில் இறங்குவது நமக்கு பலன் தராது. இந்த உலக வர்த்தக அசுரனுக்கு எதிராகப் பேசுவதற்கு முன் நாம் உள்நாட்டுத் தொழில் துறை வளர்ச்சியில் எந்த நிலையில் இருக்கிறோம் என்று சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
சமீபத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மருந்தாகக் கருதப்படும் ஹைட்ராக்சி குளோரோகுவினை அதிகப்படியாக நாம் ஏற்றுமதி செய்தாலும், அதனை உற்பத்தி செய்யத் தேவையான செயல்பாடுள்ள மருந்துப் பொருட்களை (Active Pharmacheutical Ingredients –API) உற்பத்தி செய்யும் கச்சாப் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளில் முதலிடத்தில் உள்ளது சீனா. சீனப் பொருட்களை நிராகரிப்பதற்கு முன்னதாக இதற்கு மாற்று ஏற்பாடு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை இதுவரை எவரும் எழுப்பாதது வியப்பாக உள்ளது. நிதர்சனமான உண்மை என்னவென்றால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் இந்தியாவில் இன்னும் தொடங்கப்படவில்லை என்றே கூற முடிகிறது. சீனப் பொருட்களுக்கு மாற்றாக அதன் தரம் மற்றும் விலையுடன் போட்டி போடும் விதமாக உள்ளூர் பொருட்களை உருவாக்கவும், இறக்குமதி செய்யவுமான வழிமுறைகள் இங்கு இன்னும் உருவாக்கப்படவில்லை.
ஆராய்ச்சிகள் மற்றும் அதன் வளர்ச்சிக்குச் செலவிடப்படும் குறைவான நிதி ஒதுக்கீடுகள் தான் இந்தியாவின் கண்டுபிடிப்புச் சூழலுக்குப் பெரும் சவாலாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ‘தேசிய அறிவியல் தொழில்நுட்ப நிர்வாகத் தகவல் அமைப்பு (NSTMIS)’ அளிக்கும் சமீபத்திய ஆராய்ச்சி வளர்ச்சி புள்ளி விவரத்தின்படி 2004-05 இலிருந்து 2014-15 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான செலவினம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. எனினும் இது ஜி.டி.பி.யில் வெறும் 0.7% மட்டுமே. இதுவே சீனா அதன் ஜி.டி.பி.யில் 2 சதவிகிதமும், பிரேசில் 1.2 சதவிகிதமும், இஸ்ரேல் தனது ஜி.டி.பி.யில் 4.3சதவிகிதமும் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு வளர்ச்சிகளுக்காக செல விடுகின்றன.
இந்தக் கொரோனா காலத்தில் சீனாவிலிருந்து இடம் பெயரும் அமெரிக்க நிறுவனங்களை இந்தியா தங்கள் பக்கம் இழுக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயரும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. ஏனெனில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க சீன வர்த்தகப் போர் தொடங்கிய பிறகு 5%க்கும் குறைவான நிறுவனங்கள்தான் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தன. அவை அப்படியே இடம் பெயர்ந்தால் கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அவை உறுதிப்படுத்தாது. ஏனெனில் உள்நாட்டு வர்த்தக சந்தையை புதிதாக தொடங்குவதால் அடுத்த சில ஆண்டுகளுக்குச் சர்வதேசச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பு இருக்காது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ரஷ்யாவுக்குச் சாதகமான அவரது ஆலோசகர் வி.கே.கிருஷ்ணமேனனை அதிகமாக நம்பியதால் அவர் செய்த பிழைகளை மீண்டும் மோடியும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மோடி தனது வெளியுறவுத் துறை ஜாம்பவானாக அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை நம்புகிறார்.
உள்நாட்டு விவகாரங்களில் ஒவ்வொரு முனையிலும் அவர் தோற்றுப் போனாலும், அவரது வெளியுறவுக் கொள்கையின் புகழ் வெற்றிகரமாக உள்ளதாக ஊடகங்கள் வாயிலாக ஊதிப் பெரிதாக்குகின்றார். உலகின் சக்திமிக்க தலைவர்களான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜீ ஜிங்பிங், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதைப்போலக் காட்டி வடக்கே உள்ள வாக்காளர்களைக் கவர்ந்து, உள்நாட்டுக் கொள்கையில் அவரது தோல்வியை மிகத்திறமையாக மறைத்து வருகிறார். கொரோனா விவகாரத்தில் உலக அரங்கிலிருந்து சீனாவைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் அமெரிக்கா மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. அதே வேளை சீனாவும் உலக நாடுகள் பலவற்றைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த இழுபறியில் இந்திய அரசு முழுமையாக அமெரிக்காவுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதுதான் இன்றைய பிரச்சினையின் மையக் காரணங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கொரோனா வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்ற காரணத்தை விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானம் 194உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய உலக சுகாதார அமைப்பில் முன்வைக்கப்பட்டது. இந்தியாவும் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்தது இங்கே கவனிக்கத்தக்கது.
சுயசார்பு இந்தியா திட்டம் வரவேற்க கூடிய ஒன்றாக இருந்தாலும் இங்கு கிடைக்கும் எந்தப் பொருளுக்கும் அதன் சேவைக்கும் நம் நாட்டு மக்கள் விலை கொடுக்க வேண்டுமென்கிறது பொருளாதாரக் கோட்பாடு. அதாவது யாரும் எதையும் இலவசமாகப் பெற முடியாது. இங்கு யாருக்கும் இலவச உணவு கிடையாது என்ற கருத்து சட்டப்பூர்வமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சர்வதேச நாடுகளைப் போல இந்தியாவில் உள்ள மக்களுக்கு சமமாகப் பொருந்தும்படியான உள்நாட்டுப் பொருட்களுக்கான விலை நிர்ணயச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்ட வேண்டும். உலக வர்த்தகத்தையும் தாண்டி உள்ளூர் பொருட்களுக்கான அங்கீகார நடைமுறைகளை இந்திய அரசு எளிமைப்படுத்த வேண்டும். சுயசார்பு இந்தியாவின் கோட்பாடுகள் இப்படி இருந்தால் தான் நடைமுறை சாத்தியமாகும். அந்நிய நாட்டு வர்த்தகங் களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் பாதியளவு உள்நாட்டு வர்த்தகத்திற்குக் கொடுக்கப்பட வேண்டும்.
உலக வர்த்தக சாராம்சங்களின்படி உலகத் தலைவர்களுடன் நடைபெறும் ஒவ்வொரு சந்திப்பிற்கும் சிறப்பான ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். இந்த விலைகள் சில சமயம் நிதி பற்றிய ஒப்பந்தமாகக் கூட வெளியிடப்படும். மோடி புடினுடன் கைகுலுக்கி யதன் மூலம் எஸ்400 ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்துக்கு 3 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாயை விலையாகக் கொடுத்தார். பிரெஞ்சு அதிபர் அறிக்கையின்படி ரஃபேல் ஒப்பந்தத் துக்கு 22 லட்சத்து 66ஆயிரம் கோடி விலை கொடுக்கப்பட்டுள்ளது. இவை வெறும் பண விலைகள் மட்டுமே. புடினையும், மக்ரோனையும் அணைத்துக் கொண்டது வர்த்தக உத்திக்கான விலை மட்டுமல்ல. அமெரிக்க டிரம்பையும், சீனாவின் ஜியையும் பொருத்தவரை மோடி மிகப்பெரும் வர்த்தக விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்று கணிக்க முடிகிறது.
சீனாவைப் பொறுத்தவரை இந்த 2020ஆம் ஆண்டு 13ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதி ஆண்டு என்பதாலும் விரிவான, வளமான சமுதாயம் என்ற இலக்கை அடைய அந்த அரசு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவைப் பொறுத்தவரை 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஆண்டாக இருப்பதால் மத்திய நிர்வாகத் தீர்வுகளை விரைவாக அடைவதற்கான அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. இந்த இரண்டு அரசுகளின் எதிர்வினைகளை இந்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது உச்சபட்சக் கேள்வியாக இருக்கிறது.
19ஆம் நூற்றாண்டின் ரஷ்ய வரலாற்றாசிரியர் வாசிலி க்ளிசேவ்ஸ்கி “வரலாறு நமக்கு எதையும் கற்பிப்பதில்லை. ஆனால் அதன் பாடங்களைப் படிக்காத தற்காகக் கடுமையாக தண்டித்துள்ளது” என்கிறார். தற்போதைய சுயசார்பு இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை நமக்கு படிப்பினையைக் கொடுக்குமா அல்லது தண்டனையைக் கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments (0)