இன்றைய சூழலில் கல்வி
இந்தியாவின் இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான துயரத்தின் ஒற்றை அடிப்படையாகக் கல்வியின்மை இருக்கிறது – தாகூர்
அவரது கூற்று 150 வருடங்கள் கடந்து இன்றும் இந்தியாவைப் பல வழிகளில் அழுத்திக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.
சமூக முன்னேற்றம் என்பது கல்வியை அடிப்படையாகக் கொண்டே நிகழும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஒரு மனிதன் இந்த சமூகத்தில் தனக்கான எல்லாவித சுதந்திரத்தையும் புரிந்து கொள்ள உதவுவது கல்வி தான். மடை திறந்த அறிவை வழங்குவதும் கூட கல்வியின் அடுத்தடுத்த விரி சிந்தனைகளே எனலாம். இத்தகைய அறிவின் வாயிலை அடைய அறியாமை என்ற சிறைக்கதவைத் தகர்ப்பதாக நமது கைகளில் தரப்படும் பலமான ஆயுதம் ஒன்று உண்டெனில் அது பள்ளிக் கல்வி தான்.
இன்றைய நாளில் பள்ளிக் கல்வியை ஆய்வு செய்தோமானால் நாடு முழுவதிலுமிருந்து கல்வி குறித்தான, பல பிரச்சனைகளை நம்மால் தொகுக்க முடியும். தமிழகப் பள்ளிக் கல்விக்கும் இவை அனைத்தும் பொருந்தும்.
இப்படியான பள்ளிக் கல்வியின் ஒரு முக்கிய தவிர்க்க முடியாத இடமாக, நம் அனைவராலும் பார்க்கப்படுவது பத்தாம் வகுப்பு . இதற்கான பொதுத் தேர்வு ரத்து என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, வரும் நாட்களின் கல்வி குறித்தும் நம்மை சிந்திக்க வைக்கிறது.
பொதுத் தேர்வு ரத்து…
அடுத்து செய்ய வேண்டியது என்ன?
தமிழகம் வேறெப்போதும் இல்லாத பேரிடர் காலத்தின் ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.
தொற்று பரவி வரும் இச்சமயத்தில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் குழந்தைகளின் உயிரைக் கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது அரசு. மாணவர் நலன் சார்ந்து எடுத்துள்ள அரசின் முடிவை மகிழ்ச்சியுடன் அனைவரும் வரவேற்கிறோம். அதே சமயத்தில் கல்வி முறையின் அடுத்த நகர்வு குறித்தும் பரிசீலிக்க வேண்டும் . தேர்வுக்கான மாற்று ஒன்றை நாம் கண்டறியத் தேவை எழுந்துள்ளது. நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் மதிப்பெண் சார்ந்த தேர்வு முறையை மாற்றும் காலகட்டமாக இந்தக் கொரோனா துயரக் காலம் பாடம் கற்றுக் கொடுக்கிறது.
மதிப்பீட்டின் இடைவெளி
தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பிடுவதும் அதன் அடிப்படையில் பள்ளிகளைக் கணிப்பதும் , பள்ளிக் கல்வியைச் சீரமைக்கும் போது சந்திக்கின்ற களப் பிரச்சனைகளில் முக்கியமானவை .தற்போது பள்ளிக்கல்வித் துறையில் நடைமுறையில் இருக்கும் மதிப்பீட்டு முறை குறித்து பார்ப்போம்.
கல்வி உரிமைச் சட்டத்தின் (2010) படி ஒரு குழந்தை ஒரு வகுப்பில் என்ன கற்றிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், மேல் வகுப்பிற்குத் தன்னிச்சையாக (automatic) செல்லலாம். அதோடு இச்சட்டம் 8 ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வைத் தடை செய்கிறது. ஆனால் பள்ளித் தேர்வுகளைத் (வாரியத் தேர்வு களுக்கு மாற்றாக) தடை செய்யவுமில்லை, அவற்றை ஊக்கப்படுத்தவுமில்லை. மாறாக ஒரு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டைப் (Continuous and Comprehensive Evaluation) பின்பற்ற வழி காட்டுகிறது.
ஆனால் இம்முறையின் விவரங்களில் தெளிவு இல்லை. மதிப்பீட்டிற்கான இப்புதிய அணுகுமுறை நடைமுறையில், மதிப்பீடே இல்லாமல் போகிறது என சில மாநிலங்களில் கருத்துகள் உள்ளன. இவற்றில் உள்ள குறை களைக் களைந்து இந்த முறையை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும், அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியத் தேவை மிக அவசரமாக நமக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் தேர்வு முறை பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்பதும் உண்மை. பல நேரங் களில் தேர்வுகள் என்பவை குழந்தைகள் மீதான அதிகப்படியான அழுத்தத்தைத் தருவதுடன், மனப்பாடமுறையை வலுவாக்கு கிறது. ஆனால் தேர்வுகளை முற்றிலும் அகற்றி விடுதல் என்பதும் ஏற்புடையதாக இருக்காது. ஆகவே தேர்வுக்கான மாற்றை உருவாக்கும் தேவையுடன் இந்த மதிப்பீட்டு முறையை சீரமைப்பதும் இன்றியமையாததாகப் பார்க்கலாம்.
மாணவர்களின் அடைவு குறித்த விவரங்கள் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் உடனடியாகத் தெரிய வேண்டியது தேவை தான். ஆனால் அதே சமயம் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கூட அவை அவசிய மானவை. ஆனால் பள்ளிகளின் நடைமுறை மதிப்பீட்டு முறைகளோ தேர்வு முறைகளோ பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. பள்ளிக் கல்வி முறையின் பொறுப்புணர்வின்மையை இதற்கானக் காரணமாகக் குறிப்பிடலாம். ஏனெனில் தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் என்ன படித்திருக்கிறார்கள் , என்ன படிக்கப் போகிறார்கள் என்பது பற்றிய புரிதலோ பெற்றோர்களுக்கு இல்லாமல் இருப்பதும் இந்த மதிப்பீட்டு முறைகளின் விமர்சனங்களாக உள்ளன . மதிப்பீட்டு இடைவெளி தான் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே தேர்வுக்கு மாற்று முறைகளை வடிவமைக்கும் தேர்வு சீர்திருத்தம் தேவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்
தேர்வுக்கு மாற்று முறை
கடந்த 8 ஆண்டுகளாக நமது பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வரும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை வலுவாக்கப்பட வேண்டும். திறன்கள் அடிப்படையில் மாணவரை மதிப்பீடு செய்யும் நடைமுறையான இந்த CCE முறை தான் மதிப்பெண்கள் சார்ந்த தேர்வுகளுக் கான சிறந்த மாற்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த CCE எனப்படும் (Continuous and Comprehensive Evaluation) தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை

ஏற்கனவே 9ஆம் வகுப்பு வரை நடைமுறையில் பின்பற்றப்படுகிறது. இதே முறையை 10 ஆம் வகுப்பிற்கும் இனி வரும் காலங்களில் நீட்டிக்கலாம். அப்படிச் செய்வது, பொதுத் தேர்வு என்ற இறுக்க மனநிலையை உடைத்து மாணவர்களின் சுதந்திரமான மகிழ்ச்சியான கற்றலுக்கு வழி வகுக்கும்.
அதே போல தேர்வுகளின் உள்ளடக்கம் மற்றும் இயல்பு குறித்த ஆழ்ந்த சிந்தனை ஆசிரியர்களுக்கும் துறை சார்ந்த வல்லுநர் களுக்கும் தேவைப்படுகிறது. உதாரணமாக குழந்தைகளின் மனப்பாடம் செய்வதல்லாத பிற திறன்களையும் மதிப்பிடும் வகையில் தரமான தேர்வுகளை வடிவமைப்பது சாத்தியம்.அவ்வாறே மனப்பாடத்திலிருந்து திறன் அல்லது புரிந்து கொள்வதை நோக்கித் தேர்வுகளின் கவனத்தைத் திருப்புவதற்கு திறந்த புத்தகத் (Open Book) தேர்வுகள் உதவும்.
உடனடித் தேவை
மேற்கூறிய மதிப்பீட்டு முறைகளும் தேர்வுக்கு மாற்று என்ற கருத்தும் சார்ந்த சீர்திருத்தங்கள் ஒரு பக்கம் நடக்கட்டும். ஆனால் பள்ளி திறக்கும் நாட்கள் நம் கண்களுக்குத் தெரிய வில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட ஆக வாய்ப்புள்ளது.
மாணவர்களுக்கு வீடுகள் அவ்வளவு மகிழ்ச்சியைத் தராது என்பது கண்கூடு. ஏனெனில் இது ஒரு அசாதாரண காலம். விடுமுறை தினங்களில் மட்டும் வீடுகளில் இருந்து பழகிய குழந்தைகள் மாதக் கணக்கில் வீட்டுக்குள் முடங்குவதை உளவியல் அழுத்தம் என்ற வார்த்தைகளால் கடந்து போக முடியாது.
பள்ளிகள் சில, குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையவழிக் கல்வியைக் (Online Teaching) கையிலெடுத்துள்ளன. ஆனால் அது குழந்தை களுக்கு எவ்விதத்திலும் வகுப்பறைக் கற்றலைப் போன்று நிறைவு செய்யாது என்பது யதார்த்தம். அப்படியே இணைய வழியை முறைப்படுத்தினால் அரசுப் பள்ளிகளின் 20% குழந்தைகள் மட்டுமே பயன் பெற முடியும். சமவாய்ப்பற்ற பொருளாதார சூழல் இதற்கு ஒரு முக்கியக் காரணம் .
நோய்த் தொற்று பரவலாக இருக்கும் பகுதிகளைத் தவிர்த்து அதிகப் பரவல் இல்லாத மாவட்டங்களில் அங்குள்ள கிராமங்களில் தகுந்த பாதுகாப்புகளுடன் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து ஆசிரியர்கள் உளவியல் சார்ந்த கலந்துரை யாடல்களை மேற்கொள்ளலாம்.
பள்ளி திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ள ஊர்களில் உள்ள பள்ளிகளில் குறைவான எண்ணிக்கையில், பகுதி பகுதியாக முறை வைத்து ( Alternative days – Shift) மாணவரை வரவழைத்து அதே போல ஆசிரியர்களையும் வரவழைத்து உரையாடல்கள் மேற்கொள்ளலாம்.
தேவைப்படின் எளிய வகைப் பாடங்களை மாணவர் மனநிலைக்கேற்ப அறிமுகப்படுத்தலாம்.
எல்லாவற்றையும் விட மதிய சத்துணவை நம்பி அரசுப் பள்ளிக்கு வரும் லட்சக்கணக்கான மாணவர்கள் இருக்கின்றனர் .அவர்களுக்கான அத்தனை நிதி ஒதுக்கீடுகளும் இருக்கும். பள்ளி சமையலறையில் உணவு சமைத்து மாணவருக்கு வழங்கி வந்த நடைமுறையைத் தொடர வேண்டியது பள்ளிகளின் உடனடிக் கடமைகளுள் ஒன்று.
இன்றைய சூழலில் பள்ளி கிடையாது, குழந்தைகளுக்கு வீடு மட்டும் போதாது, ஜான் ஹோல்ட் அழுத்தமாய் வலியுறுத்திய ‘குழந்தை களுக்கான மூன்றாம் இடம்’ (Third place) நினைவுக்கு வருகிறது. வீடும் பள்ளியும் போக குழந்தைகளுக்கான மூன்றாம் இடம்! என்கிறார்.
பேரா ச.மாடசாமி, இதயங்களை மலர வைக்கும் மூன்றாம் இடம். சக்கையாய்ப் பிழிந்து இதுதான் என்று இலக்கணம் வகுத்து வடிவமைக்கப்படாத மூன்றாம் இடம். புதுப் புது வடிவங்களில், புதுப் புதுக் கற்பனைகளுக்கு இடங்கொடுத்து மலரும் மூன்றாம் இடம்! இன்றைய தேவை என்கிறார் .
இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தொடர்ந்து உரையாடுவோம்.!
Comments (0)